இடுக்கியின் 3 தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் தமிழர்கள்... களமிறங்கிய அதிமுக!

இடுக்கியின் 3 தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் தமிழர்கள்... களமிறங்கிய அதிமுக!
இடுக்கியின் 3 தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் தமிழர்கள்... களமிறங்கிய அதிமுக!

கேரளத்தின் இடுக்கி மாவட்டம், தமிழகத்தில் தேனி மாவட்டத்தை ஒட்டி அமைந்திருக்கும் பகுதி. இயல்பாகவே தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியும் கூட. தோட்டத் தொழிலாளர்களாக, பிற வேலை செய்பவர்களாக பல்வேறு பகுதிகளில் வசித்து வருகிறார்கள். இந்த மாவட்டத்தில் தேவிகுளம், உடும்பன் சோலை, பீா்மேடு ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. மூன்று தொகுதிகளிலும் அதிகம் வசிப்பது தமிழர்கள்தான்.

தேவிகுளம் தொகுதியில் 65 சதவீதம், உடும்பன் சோலை தொகுதியில் 22 சதவீதம், பீா்மேடு தொகுதியில் 35 சதவீதம் என தமிழர்கள் வசிக்கின்றனர். இதனால், கேரள அரசியல் கட்சிகள் இந்தப் பகுதிகளில் தமிழர்களை அதிகமாக களமிறக்குவது வழக்கம். எனவே, இந்தப் பகுதியில் அரசியல் அதிகாரத்திலும் தமிழர்கள் கோலோச்சுகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலிலும் தமிழர்களே அதிகம் வெற்றிவாகை சூடினர்.

இதைவிட, தமிழக கட்சிகளான திமுக, அதிமுக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம் என அனைத்து தமிழக கட்சிகளுக்கும் இங்கு நிர்வாகிகள் உள்ளனா். அவ்வளவு ஏன், நடைபெற உள்ள கேரள சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அதிமுக இந்தப் பகுதியில் இரண்டு பெண் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

தேவிகுளம் தொகுதியின் தற்போதைய சிட்டிங் எம்எல்ஏ தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்தான். இதனால்தான் எப்போது தேர்தல் வந்தாலும், இந்தத் தொகுதியில் போட்டியிடும் கேரள அரசியல் கட்சியான மார்க்சிஸ்ட் ஆக இருந்தாலும் சரி, காங்கிரஸாக இருந்தாலும் சரி மூணாறு, தேவிகுளம், மறையூா், காந்தலூா், வட்டவடா, வண்டிப் பெரியார், பள்ளிவாசல், சாந்தம்பாறை, பீா்மேடு, குமுளி, நெடுங்கண்டம் ஆகிய பகுதிகளில் தமிழ் மொழியில் வாக்கு சேகரிப்பர்.

தேவிகுளம் தொகுதி:

இடுக்கி மாவட்டத்தின் முக்கிய தொகுதி இது. காரணம், இந்தத் தொகுதிக்குள்பட்ட சின்னாறு, முதல் காந்தலூா், மறையூா், மூணாறு, வட்டவடா, சின்னகானல் என அனைத்துமே தமிழக எல்லைகளை ஒட்டியுள்ள பகுதிகள். இங்குள்ள தமிழ் மக்கள் பலரும், தேயிலை தோட்டத் தொழிலாளா்களாக வேலை செய்து வருகின்றனர். அதேநேரத்தில், அரசியலிலும் தமிழர்கள் இந்தப் பகுதியில் உள்ளனர். இந்த தொகுதியில் அதிமுக குறிப்பிட்ட அளவு வாக்கு வங்கி வைத்துள்ளது.

கடந்த முறை அதிமுக வேட்பாளராக தனலட்சுமி என்பவர் போட்டியிட்டு 11,613 வாக்குகள் வாங்கி மூன்றாம் இடம் பிடித்தார். இந்த முறையும் இவரே போட்டியிடுகிறார். எனினும், கடந்த இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரும், தமிழருமான எஸ்.ராஜேந்திரன், தனலட்சுமியை வீழ்த்தினார். கடந்த இண்டு முறையாக இவர்தான் தேவிகுளம் எம்எல்ஏவாக இருந்து வருகிறார். ஆனால், இந்த முறை இவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இரண்டு முறைக்கு மேல் சட்டப்பேரவை உறுப்பினராக செயல்பட்டவர்களை, போட்டியிலிருந்து விலக்கி இளம் தலைமுறைக்கு வாய்ப்பளிக்கும் விதமாக ராஜா என்பவர் மார்க்சிஸ்ட் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராஜா, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். இவருடைய தாத்தா இளம்வயதில் திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரிலிருந்து இடுக்கி மாவட்டம் மூணார் பகுதியில் தோட்டத் தொழிலாளியாக புலம் பெயர்ந்து குடியேறியவர் ஆவார். இந்த முறை தேவிகுளம் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ள பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவருமே தமிழர்கள்தான்.

உடும்பன்சோலை தொகுதி:

இந்தத் தொகுதியில் வசிக்கும் தமிழர்களின் பிரதான தொழில் ஏலக்காய்த் தோட்டம் மற்றும் தேயிலை தோட்ட பணிதான். இந்த தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ என்றால், அது கேரள மாநிலத்தின் மின்துறை அமைச்சராக இருக்கும் எம்.எம். மணி என்பவர்தான். இந்த முறையும் இவரே களத்தில் பிரதான வேட்பாளராக இருக்கிறார். இவர் மலையாளி என்றாலும், கடந்த முறை இவர் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு உதவியது பெரும்பாலும் தமிழர்களே.

கடந்த முறை யுடிஎஃப் கூட்டணி வேட்பாளர் கடுமையான போட்டியாக விளங்க இந்தத் தொகுதியில் 22 சதவிகிதம் வசிக்கும் தமிழர்கள் பெரும்பாலோனோர் மணியை ஆதரித்து வாக்களிக்க அவர் வெற்றிபெற்றார். இந்த முறை தேசிய ஜனநாயகக் கூட்டணியும் இங்கு வேட்பாளரை நிறுத்தியுள்ளது. பெரும்பாலும் மலையாளிகள் வேட்பாளா்கள் களமிறக்கப்பட்டாலும் இங்கு வெற்றியைத் தீா்மானிப்பது தமிழர்களே. இந்தத் தொகுதியிலும் ஒரு பெண் வேட்பாளரை அதிமுக களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பீா்மேடு தொகுதி:

இந்தத் தொகுதியில் 33 சதவீதம் தமிழர்கள் பெரும்பாலும் தோட்டத் தொழிலாளா்களாக வேலை பார்க்கின்றனர். இவர்களே வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறார்கள். இந்தப் பகுதி தொழிற்சங்களில் தமிழர்கள் அதிகம் இருப்பதால், அதை வைத்து ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணி இங்கு வாக்குகளை அறுவடை செய்து வருகிறது. கடந்த இரண்டு முறையாக பிஜிமோல் என்பவர் இங்கு எம்எல்ஏவாக இருந்து வருகிறார். இந்தப் பகுதியில் செல்வாக்கு மிக்க தலைவராக இருக்கும் இவரே இந்த முறையும் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் உட்பட மற்ற கட்சிகளை காட்டிலும் இடுக்கி மாவட்டத்தில் வசிக்கும் தமிழர்கள் மத்தியில் கம்யூனிஸ்ட் கட்சிகளே அதிக தாக்கம் செலுத்தி வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளில், சங்கங்களில் தமிழர்கள் அதிக அளவில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com