பறிக்கப்பட்ட குழந்தை... கேரளாவில் 11 மாத போராட்டத்துக்கு பின் மீட்ட அனுபமா - அஜித் தம்பதி!

பறிக்கப்பட்ட குழந்தை... கேரளாவில் 11 மாத போராட்டத்துக்கு பின் மீட்ட அனுபமா - அஜித் தம்பதி!
பறிக்கப்பட்ட குழந்தை... கேரளாவில் 11 மாத போராட்டத்துக்கு பின் மீட்ட அனுபமா - அஜித் தம்பதி!

கேரளாவில் கடந்த சில மாதங்களாக கவனம் ஈர்த்த அனுபமா - அஜித் தம்பதியின் 11 மாத காலப் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. பிறந்து 3 நாட்களே ஆன நிலையில், தன்னிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தையை சட்டப்போராட்டத்துக்கிடையே மீட்டுள்ளார். இதுகுறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ள பேரூர் கடைப் பகுதியில் ஆளும் கட்சியான சி.பி.எம். கட்சியின் ஏரியா கமிட்டி உறுப்பினராக இருக்கும் பி.எஸ்.ஜெயச்சந்திரன் என்பவரின் மகள் அனுபமா. இவர் அப்பகுதியில் சி.பி.எம் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ தலைவராக இருந்தவர். ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்து அனுபமாவும் அவரின் கட்சியின் சக உறுப்பினரான அஜித் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். அஜித் பட்டியலினத்தவரை சேர்ந்த நபராக இருந்திருக்கிறார். மேலும், ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்துக்கும் அவர் விண்ணப்பித்திருந்தார்.

இதனால், அனுபமா வீட்டில் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்ப்பையும் மீறி அஜித்துடன் பழகிய அனுபமா கர்ப்பமாகி இருக்கிறார். இதன்பின் அஜித்தை திருமணம் செய்து வைக்கவும் குழந்தைக்கு பாதுகாப்பு கொடுக்கவும் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் சம்மதிப்பதாக கூறி அனுபமாவை தங்களுடனே தங்க வைத்துள்ளனர். பெற்றோர் வீட்டில் வசித்து வந்த அனுபமாவுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், குழந்தை பிறந்த மூன்றாவது நாளே அனுபமாவிடம் இருந்து பிரிக்கப்பட்டிருந்தது. ஜெயச்சந்திரன் குடும்பத்தினர் மற்றொருவருக்கு குழந்தையை தத்து கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

முதலில் இதுபற்றி அறியாத அனுபமாவுக்கு, ஆறு மாதங்களுக்குப் பிறகே அனைத்தும் தெரிந்துள்ளது. இதைத்தொடர்ந்து, தனது குழந்தையைத் தேடி, தான் ஆறு மாதங்களாக அலைவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து கேரள சட்டசபைக்கு வெளியே போராட்டம் நடத்தினார். குழந்தையை மீட்க கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக அரசு அமைப்புகளில் முறையிட்டு போராடியவர், சில நாட்கள் முன் ஊடகங்களை சந்தித்து விஷயத்தை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்தினார்.

அதன் பிறகு கடந்த அக்டோபர் 19-ம் தேதி குழந்தை காணாமல் போனதாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டது. விவகாரம் நீதிமன்ற படியேற, கேரள அரசு குழந்தையை மீட்கும் முயற்சியில் இறங்கியது.

இதனிடையே, கடந்த ஞாயிறு அன்று கேரளாவில் இருந்து ஆந்திர தம்பதிக்குத் தத்துக்கொடுக்கப்பட்ட, அனுபமாவின் குழந்தை என சந்தேகிக்கப்பட்ட குழந்தையை திருவனந்தபுரத்துக்கு அழைத்து வரப்பட்டது.

பின்னர், நேற்று குழந்தை மற்றும் அனுபமா, அஜித் ஆகியோரது டி.என்.ஏ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் டி.என்.ஏ பரிசோதனை முடிவில், அந்தக் குழந்தை அனுபமா மற்றும் அஜித்தின் குழந்தை என்பது உறுதியானது.

டிஎன்ஏ பரிசோதனைக்கு பிறகு இன்று குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக குழந்தைகள் நலக் குழு நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதன்படி, குழந்தை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் அனுபமா மற்றும் அஜித்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்மூலம் அனுபமா - அஜித்தின் 11 மாத கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

அதேநேரத்தில், குழந்தையை தத்தெடுப்பது - தத்துக் கொடுப்பது தொடர்பான அரசின் நடைமுறைகள் மற்றும் அரசியல் அழுத்தங்கள் தொடர்பான விவாதம் இப்போது கேரளாவில் தீவிரமாகத் தொடங்கியிருக்கிறது.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com