குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்

குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்

2024 பொதுத் தேர்தலுக்காக சந்திரசேகர ராவ் எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்கிறார் என சொல்லப்படும் சூழலில், விரைவில் நடைபெறவுள்ள குடியரசு தலைவர் தேர்தலுக்கான முன்னெடுப்பாகவும் இது இருக்கலாம் என யூகங்கள் எழுந்துள்ளன.

குடியரசு தலைவர் தேர்தல் வியூகம் - ஒன்றிணையுமா எதிர்க்கட்சிகள்:

தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், 2024 நாடாளுமன்ற  தேர்தலுக்கு முன்னதாக நாடு முழுவதும் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளின்  தலைவர்களை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக ஜூலை மாதம் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் இணைந்து வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இதற்காக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை சந்தித்து ஜனாதிபதி தேர்தலுக்கான வியூகம் குறித்து அவர் விவாதித்ததாக கூறப்படுகிறது.



குடியரசு தலைவர் தேர்தலுக்காக காங்கிரஸை அணுகும் முயற்சி எதுவும் சந்திரசேகர ராவிடம் இல்லை என்று தெரிகிறது. ஆனாலும் பாஜக வேட்பாளருக்கு சவால் விடும் வகையில் மற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து நிறுத்தும் வேட்பாளரை காங்கிரஸ் ஆதரிக்க வாய்ப்பு உள்ளதாக தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் மூத்த தலைவர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் கேசிஆர் சந்திக்கும் சிவசேனா, திமுக, ஆர்ஜேடி, என்சிபி போன்ற கட்சிகள் தற்போது காங்கிரஸ் கூட்டணியில் உள்ளன.

இந்த சூழலில் மே 26 அன்று பெங்களூருவில் முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி ஆகியோரை கேசிஆர் சந்திக்கிறார். மேலும், இந்த மாத இறுதியில் அவர் மேற்கு வங்காளத்திற்குச் சென்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியைச் சந்திக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் பீகார் செல்லவும் திட்டமிட்டுள்ளார். பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகிய இருவரையும் சந்திக்க கேசிஆர் திட்டமிட்டுள்ளார்.



ஏற்கனவே ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை கேசிஆர் சந்தித்திருந்தார். அதேபோல கடந்த மாதம் மும்பைக்கு சென்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் என்சிபி தலைவர் சரத் பவார் ஆகிய இருவரையும் அவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். முன்னதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும் அவர் சந்தித்துள்ளார். ஆனால் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை கேசிஆர் அணுகுவதற்கான எந்த அறிகுறியும் இதுவரையில் இல்லை.

ஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் பலம் என்ன? - கேசிஆரின் திட்டம் என்ன?

குடியரசுத் தலைவர் தேர்தலில் தனித்து வெற்றி பெற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 9,194 வாக்குகள் குறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகிய இரண்டும் இந்த வெற்றிக்கு முக்கியமானதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.



2017 இல், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தளம் மட்டுமின்றி தெலங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் தெலுங்கு தேசம் கட்சி ஆகியவை பாஜக வேட்பாளரை ஆதரித்தன, இதன் காரணமாகவே தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் எளிதாக வென்றார்.

இத்தகைய சூழலில் தற்போது பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பொது வேட்பாளரை நிறுத்தினால் இந்த அனைத்துக் கட்சிகளின் ஆதரவும் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பாஜகவுக்கு எதிரான மனநிலையில் இருக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைத்து குடியரசு தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு கடும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதே தற்போது சந்திரசேகர ராவின் திட்டமாக உள்ளது. எனவே வரும் நாட்களில் இதற்காக தீவிரமாக முன்னெடுப்புகள் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com