கோஷ்டி பூசல் அனுபவங்களில் இன்னுமா பாடம் கற்கவில்லை? காங்கிரஸ் இந்த தவறுகளை மீண்டும் செய்யவே கூடாது!

காங்கிரஸ் மீண்டும் உயிர்ப்புடன் துளிர்விடுவதற்கு கர்நாடகத் தேர்தல் வெற்றியும் ஒரு காரணமாக அமைந்திருக்கிறது.
காங்கிரஸ் தலைவர்கள்
காங்கிரஸ் தலைவர்கள்twitter image

கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் வெற்றியால் காங்கிரஸ் அதிகளவில் கொண்டாட்டத்தில் உள்ளது. இந்த வெற்றி, காங்கிரஸ் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை நிரூபித்துக் காட்டியிருப்பதாகப் பேசப்படுகிறது. அதேநேரத்தில், இந்த வெற்றி காங்கிரஸுக்கு எளிதாக அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். காங்கிரஸின் வெற்றிக்குப் பின்னால் பல காரணங்கள் சொல்லப்படுகிறது.

காங்கிரஸ் வெற்றிக்கு இதெல்லாம் காரணங்கள்!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம், பிரசாரம், எம்.பி. பதவி பறிப்பின் அனுதாப அலை, மாநில அளவிலான தலைவர்களின் ஒற்றுமை, பாஜகவின் ஊழல், தேர்தல் அறிக்கை, இடஒதுக்கீடு விவகாரம் உள்ளிட்டவை காங்கிரஸுக்கு வெற்றி வாக்குகளாகத் திரும்பின. இப்படிப்பட்ட வெற்றிதான் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. என்றாலும், மக்களவைத் தேர்தலில் இந்த வெற்றி சாத்தியமாக வேண்டுமானால், அடுத்து நடக்கவிருக்கும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களிலும் சாதித்துக் காட்ட வேண்டிய அவசியம் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது.

காங்கிரஸ் கட்சிக்கு என்னதான் பிரச்னை.. பாஜகவை ஏன் அதனால் வீழ்த்த முடியவில்லை?

ஏனென்றால், கடந்த சில ஆண்டுகளாகவே நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியால் பாஜகவை வீழ்த்த முடியவில்லை. அப்படி, மீறியும் வெற்றிபெற்ற ஒருசில மாநிலங்களில்கூட ஆட்சியைத் தக்கவைக்க முடியவில்லை. மேலும், காங்கிரஸ் மற்றும் பாஜக நேரடியாக மோதிய 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பாஜகதான் வென்றிருந்தது. இன்னும் ஒரு சில மாநிலங்களில், பாஜகவின் வெற்றியைத் தடுத்து நிறுத்தியது மாநிலக் கட்சிகள்தானே தவிர, காங்கிரஸ் இல்லை. இதே நிலைதான் அடுத்துவந்த தேர்தல்களிலும்கூட எதிரொலித்தது. தலைவர்கள் இடம் மாறியதும், வேட்பாளர்கள் விலை போனதும் அக்கட்சிக்கு பெரிய தலைவிதியாக அமைந்தது.

இதன் விளைவாக, காங்கிரஸில் பயணித்த 20க்கும் மேற்பட்ட மூத்த தலைவர்கள் வேறு கட்சிக்குத் தாவினர். குறிப்பாக, பாஜகவுக்குள் நுழைந்தனர். அதுபோல், எம்.எல்.ஏக்களும் பாஜகவுக்குள் நுழைந்தனர். மூத்த தலைவர்கள் 23 பேர் அதிருப்தி முகாம் ஆக மாறினர். அதில் குலாம் நபி ஆசாத் போன்றோர் கட்சியைவிட்டே வெளியேறினர்.

ஆனால் திமுக உள்ளிட்ட வலிமையான மாநில கட்சிகளில் உள்ள எம்.எல்.ஏக்கள் திடீரென வேறு கட்சிக்குத் தாவ முடியாது. மேலும், கட்சி மேலிடத்தின் உத்தரவை எதிர்த்து மூத்த தலைவர்களாலோ அல்லது பொறுப்பாளர்களாலோ அவ்வளவு எளிதில் எதுவும் செய்ய முடியாது. ஆனால், இவையெல்லாம் காங்கிரஸில் குறைவு. அதனாலேயே கடந்த காலங்களில் அது பலத்த அடியைச் சந்தித்தது.

கோஷ்டி பூசலுக்கு ஒரு முடிவே இல்லையா?

முக்கியமாக, தேசிய அளவிலான காங்கிரஸின் சரிவுக்கு ஒவ்வொரு மாநில காங்கிரஸ் கமிட்டிகளே உதாரணமாக இருந்தன. ஒவ்வொரு தலைவர்களுக்கும் தனித்தனி கோஷ்டிகளும், ஆதரவாளர்ளும் உள்ளனர். தலைவராக இருப்பவர்களை மூத்த தலைவர்களே மதிக்கவில்லை என்ற பேச்சும் அடிப்பட்டது. இதனால் சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் காங்கிரஸ் தலைவர் பதவியையே ஏற்கத் தயங்கினர். இன்னும் ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் கோஷ்டிப் பூசல் நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கிறது.

ஆனால், கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் அனைத்தையும் மாற்றிக்கொண்டு, திட்டமிட்டு காய் நகர்த்தியது. அதிலும், காங்கிரஸின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட மண்ணின் மைந்தன் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கர்நாடக தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. அதன் முதற்கட்டமாக கட்சியை ஒருங்கிணைக்கத் தொடங்கியதுடன் கோஷ்டிப் பூசலைத் தவிர்க்கத் தொடங்கியது.

bjp, congress
bjp, congressfile image

மாறாக, எதிர்க்கட்சிகளின் பலவீனங்களைக் கையில் எடுக்கும் பாஜகவுக்கு, இந்த முறை காங்கிரஸ் அக்கட்சியின் பலவீனங்களைக் கையில் எடுத்தது. அதுதான், அக்கட்சிக்கும் வெற்றியைத் தந்தது. மாநிலத் தலைவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது; அதுபோல், வேட்பாளர் தேர்வு முதல் பிரசார உத்தி வரை அனைத்து விஷயத்திலும் தேசிய தலைவருக்கு முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது.

முக்கியமாக, சித்தராமையா - டி.கே.சிவக்குமார் இருவருக்கும் இடையில் நீடித்த பனிப்போர் அடக்கி வைக்கப்பட்டிருந்தது. ஆக, இவையெல்லாம் வெற்றியின் சாத்தியங்களாகப் பார்க்கப்படுகின்றன. மேலும் காங்கிரஸ், இதுவரை எதனால் வீழ்த்தப்பட்டதோ, அதாவது கோஷ்டிப் பூசலால் பந்தாடப்பட்டு வந்த நிலையில், இன்று பாஜக அதே நிலைக்குச் சென்றுள்ளது. இதனால், இந்த தேர்தலில் மறக்க முடியாத பாடத்தைக் கற்றுக்கொண்டிருக்கிறது பாஜக.

சித்தராமையா - டி.கே.சிவக்குமார்
சித்தராமையா - டி.கே.சிவக்குமார்file image

கர்நாடகா வெற்றியால் காங்கிரஸ் மீது துளிர்க்கும் நம்பிக்கை

அதனால், இனிவரும் காலங்களில் பாஜக மட்டுமல்ல, காங்கிரஸும் பல்வேறு விஷயங்களில் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியிருக்கிறது. ஆக, நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றிக் கனியைப் பறிக்க வேண்டுமானால், கர்நாடக பாணி தேர்தல் உத்தியையே அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த வேண்டும். மேலும், அந்தந்த மாநிலச் சூழல்களை உணர்ந்து அதற்கேற்ப உத்திகளை வகுப்பதில்தான் காங்கிரஸின் எதிர்கால வெற்றி அடங்கியிருக்கிறது என்கின்றனர், அரசியல் வல்லுநர்கள்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜிfile image

இது ஒருபுறமிருக்க மறுபுறம், ”எங்கெல்லாம் காங்கிரஸ் வலுவாக இருக்கிறதோ, அங்கெல்லாம் அக்கட்சியை ஆதரிப்போம்” என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருப்பதும் அக்கட்சிக்கு சற்று ஆறுதலைத் தந்துள்ளது என்றே சொல்லலாம். இதனால், எதிர்க்கட்சிகளைத் தங்கள் தலைமையில் ஒருங்கிணைப்பதிலும் காங்கிரஸ் முன்பைவிட அதிக முனைப்புக் காட்டி வருகிறது. ஆக, காங்கிரஸ் மீண்டும் உயிர்ப்புடன் துளிர்விடுவதற்கு கர்நாடகத் தேர்தல் வெற்றியும் ஒரு காரணமாக அமைந்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com