தண்ணீர் தராமல் கைவிரித்த கர்நாடகம் - காய்ந்து தவிக்கும் டெல்டா.. விரக்தியில் விவசாயிகள்

தண்ணீர் தராமல் கைவிரித்த கர்நாடகம் - காய்ந்து தவிக்கும் டெல்டா.. விரக்தியில் விவசாயிகள்
தண்ணீர் தராமல் கைவிரித்த கர்நாடகம் - காய்ந்து தவிக்கும் டெல்டா.. விரக்தியில் விவசாயிகள்

கர்நாடகா உரிய மாதந்திர நீர்பங்கீட்டை வழங்காததால் காவிரி டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் குறுவை சாகுபடி காய்ந்துவருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம்  நாளை கூடுகிறது.

இந்த பாசன ஆண்டு விவசாயிகளுக்கு மகிழ்ச்சிகரமான ஆண்டாகவே தொடங்கியது, ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் காவிரிப்பாசன மாவட்டங்களில் உற்சாகத்துடன் குறுவை சாகுபடி தொடங்கியது. அணை திறப்பின்போது 90 அடிகளுக்கு மேல் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இருந்ததால், அதன்பின்னர் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களுக்கு தமிழகத்திற்கான நீர்ப்பங்கீட்டை கர்நாடகத்திடமிருந்து பெற்று குறுவையை வெற்றிகரமாக அறுவடை செய்யலாம் என்றே தமிழக அரசும் திட்டமிட்டது. ஆனால், கார்நாடக அரசோ மேகதாது பிரச்னையை வைத்தே மேலும் மேலும் சிக்கலை உருவாக்கிக்கொண்டு, தமிழகத்துக்கு உரிய நீர்பங்கீட்டை வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர் விவசாயிகள்.

ஏற்கனவே 192 டிஎம்சி தண்ணீரை மாதவாரியாக எவ்வளவு பிரித்தளிக்க வேண்டும் என்றும் நடுவர் மன்றம் வரையறுத்தது. அதனடிப்படையில் ஜூன் மாதத்தில் 10 டிஎம்சி, ஜூலையில் 34 டிஎம்சி, ஆகஸ்டில் 50 டிஎம்சி, செப்டம்பரில் 40 டிஎம்சி, அக்டோபரில் 22 டிஎம்சி, நவம்பரில் 15 டிஎம்சி, டிசம்பரில் 8 டிஎம்சி, ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் தலா 2.5 டிஎம்சி என நீர்ப் பங்கீடு வரையறுக்கப்பட்டது.

அதன்பின்னர் 2018 ஆம்  உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பின்படி தமிழகத்துக்கான நீர்பங்கீடு 177.25 டிஎம்சியாக குறைக்கப்பட்டது, அப்போது மாதாந்திர பங்கீடு குறித்து தெளிவாக விளக்கப்படவில்லை. என்றாலும் முந்தைய தீர்ப்பின் அடிப்படையில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய மூன்று மாதங்களுக்கு சுமார் 94 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா தமிழகத்துக்கு வழங்கவேண்டும். ஆனால், இதுவரை போதிய தண்ணீர் வராததால் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 66 அடியாக உள்ளது. இந்த சூழலில் காவிரி டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் பாசன தண்ணீர் இல்லாமல் வயல்கள் காய்ந்துவருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த சூழலில் டெல்லியில் செவ்வாயன்று (31.08.2021) காலை நடைபெற உள்ள காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்த உள்ளது. மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பையும் பதிவு செய்ய உள்ளது.

இதுகுறித்து பேசும் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுந்தர விமல்நாதன், “ மேட்டூர் அணையிலிருந்து குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்படுவதால் கடைமடை மாவட்டங்களான திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு தண்ணீர் செல்லவில்லை. தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் தண்ணீர் செல்லாமல் தற்போது குறுவை பயிர்கள் காய்ந்து வருகிறது. காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி இந்த ஆண்டு  நான்கரை முதல் ஐந்து இலட்சம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணையில் 66 அடிதான் தண்ணீர் உள்ளது, இதனைக்கொண்டு விவசாயிகளுக்கு முழுவதுமாக இனி தண்ணீர் வழங்க முடியுமா என தெரியவில்லை. வழக்கமாக ஆண்டுதோறும் சம்பா சாகுபடி டெல்டா மாவட்டங்களில் சுமார் 11 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் செய்யப்படும், தற்போது மேட்டூர் அணையில் நீர்மட்டம் இருக்கும் சூழலில் சம்பா, தாளடியுமே கேள்விக்குறியாக உள்ளது.

இப்போது கர்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய மாதாந்திர நீர் பங்கீட்டை தராததால் ஏற்பட்ட பயிர்கள் மற்றும் விவசாயிகளுக்கான உரிய இழப்பீட்டை வழங்க வேண்டி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவேண்டும். ஏற்கனவே 2013 ஆம் ஆண்டில் ஜெயலலிதா இதுபோல வழக்கு தொடுத்திருக்கிறார், அதுபோல தமிழக அரசு இப்போது செய்யவேண்டும். வழக்குகளுக்கு உடனே தீர்வு கிடைக்காது என்றாலும்கூட நமது சட்டப்பூர்வமான எதிர்ப்பினை நாம் தொடர்ந்து பதிவு செய்தால் அது மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் அழுத்தம் கொடுப்பதாக அமையும்.

கர்நாடக அரசு தண்ணீர் தராததால், தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதித்தால் அந்த ஆண்டை, “ குறுவை வறட்சி பாதித்த ஆண்டு” என தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அப்போது இந்த பிரச்னை தேசிய அளவில் கவனம் பெறும், நமக்கு உரிய நீதியும் கிடைக்கும். எனவே நாளை நடக்கவுள்ள காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசு உரிய நீரை பெற்றுத்தர வலியுறுத்த வேண்டும். மேகதாது குறித்த எதிர்ப்பையும் பதிவு செய்யவேண்டும். காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை மதித்து ஒருபோதும் கர்நாடகா நமக்கு உரிய தண்ணீரை இதுவரை வழங்கவில்லை, இந்த சூழலில் மேகதாது அணையும் கட்டப்பட்டால் எப்படி நமக்கு தண்ணீர் வழங்குவார்கள் என தமிழக அரசு அழுத்தமாக வாதிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இது குறித்து பேசும் தமிழக காவிரி விவசாயிகள் சங்க துணைத் தலைவர் ஜி.வரதராஜன், “ கர்நாடகம் நமக்கு உரிய நீர்பங்கீட்டினை இந்த ஆண்டு வழங்காத காரணத்தால் இப்போது ஆற்று நீரை நம்பி பாசனம் செய்த லட்சக்கணக்கான விவசாயிகள் கவலையில் உள்ளனர். இப்போது பயிர்செய்யப்பட்ட குறுவை சாகுபடியே காயும் நிலையில், சம்பா பணிகளை தொடங்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.  காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டால் நமக்கு உரிய நீர் கிடைக்கும் என மத்திய அரசு அப்போது கூறியது. ஆனால் அந்த ஆணையம் முறையாக கூடுவதில்லை, அதுபோல நீர்ப்பங்கீடு குறித்தும் அந்த ஆணையம் எந்த உத்தரவும் இடுவதில்லை, இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. 

எனவே மத்திய அரசு இனியும் நமக்கு தொடர்ந்து துரோகம் செய்யாமல், தமிழகத்துக்கு உரிய மாதாந்திர நீர்பங்கீட்டினை கர்நாடகத்திடம் கட்டளையிட்டு பெற்றுத்தர வேண்டும். உடனடியாக தமிழக அரசும் மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து தண்ணீரை பெற்றுத்தரவேண்டும். இல்லையெனில் இந்த ஆண்டு குறுவையும் காய்ந்துபோகும், சம்பா, தாளடியும் இல்லாமல் போகும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் அழிந்துபோகும்” என எச்சரிக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com