25 ஆண்டுகளில் நடந்த மத மாற்றத்தை கண்டறிய ஆய்வு: கர்நாடக அரசு திட்டத்தின் பின்னணி என்ன?!
கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை அமல்படுத்த முயன்று வரும் கர்நாடக அரசு, இப்போது சர்ச்சைக்குரிய ஓர் ஆய்வையும் மேற்கொள்ளவிருக்கிறது. இது தொடர்பாக சற்றே விரிவாகப் பார்ப்போம்.
கடந்த 25 ஆண்டுகளில் ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு மாறியவர்கள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று கர்நாடக சிறுபான்மையினர் நலத்துறைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. சிறுபான்மையினர் நலத்துறைக்கு இது தொடர்பாக அம்மாநில சட்டமன்ற இணை செயலாளர் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், ``சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, காவல்துறை, வருவாய் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், மாவட்ட ஆணையர்கள் மற்றும் தலைமைச் செயல் அலுவலர்களுடன் இணைந்து மத மாற்றம் குறித்த தகவல்களை திரட்ட வேண்டும்.
மத மாற்றம் தொடர்பான தகவல்களைப் பெறும்போது அங்கீகரிக்கப்பட்ட தேவாலயங்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சட்டத் துறைகளில் இருந்து கூடுதல் தகவல்களை சேகரித்து 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்கலாம். 2016 மற்றும் 2021-க்கு இடையில் 36 கட்டாய மதமாற்ற வழக்குகளின் விசாரணை குறித்த தகவல்களும் தேவை" என்று கூறப்பட்டுள்ளது. மத மாற்றங்களைக் கண்டறிய கர்நாடக அரசு ஆய்வு குறித்த இந்தக் கடிதம் விவாதங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இதன் பின்னணி என்ன?
கடந்த சில ஆண்டுகளாக பாஜக ஆளும் மாநிலங்களில் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் இந்த தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில்தான் கர்நாடகாவிலும் இந்த தடைச் சட்டம் அமல்படுத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. எடியூரப்பா முதல்வராக இருந்த போதே இதற்கான கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தாலும், கடந்த மாதம் முன்னாள் அமைச்சரும் ஹோசதுர்கா தொகுதியின் பாஜக எம்எல்ஏவுமான கூலிஹட்டி சேகர் சட்டப்பேரவையில் பேசிய பேச்சுக்கு பின்பு மதமாற்ற தடைச் சட்டம் தொடர்பாக தீவிரமாக இயங்கி வருகிறது.
கடந்த மாதம் கர்நாடக சட்டப்பேரவையில் பேசிய பாஜக எம்எல்ஏ கூலிஹட்டி சேகர், ``நமது மாநிலத்தில் இந்துக்கள் அதிகளவில் மதம் மாற்றப்பட்டு வருகிறார்கள். திருமணத்திற்காகவும் இத்தகைய மதமாற்றம் நடைபெற்று வருகின்றன. எனது சொந்த தொகுதியில் பட்டியலின மக்களும் பழங்குடி மக்களும் இந்த மத மாற்றங்களுக்கு இரையாகி வருகின்றனர். ஏன் எனது தாயே கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டார். ஆசை வார்த்தைகளை மூளைச் சலவை செய்து அவரை கிறிஸ்தவர்கள் மதம் மாற்றியுள்ளனர்.
அதனால்தான் எனது தாய் இப்போதெல்லாம் எந்த ஆபரணங்களையும் அணிவதில்லை. ஏன் நெற்றியில் பொட்டு கூட வைப்பதில்லை. தனது செல்போனின் ரிங் டோனில் கூட கிறிஸ்தவ பாடலைத்தான் வைத்துள்ளார். எனவே உடனடியாக மத மாற்றத்தை கர்நாடக அரசு தடுக்க வேண்டும்" என்று பேசினார். இவரின் பேச்சுக்கு பின் பிரச்னை பெரிதாக வெடித்தது. அந்த கூட்டத் தொடரிலேயே பேசிய முதல்வர் பசவராஜ் பொம்மை, ``மாநிலத்தில் கட்டாய மதமாற்றத்தை தடுப்பதற்கு விரைவில் தனிச் சட்டம் கொண்டு வர அரசு சிந்தித்து வருகிறது. ஆசை வார்த்தைகளை கூறி மதமாற்றம் செய்யப்படுவது தடுக்கப்பட வேண்டும்" என்றார்.
இதேபோல் கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, ``மாநில அரசு சட்டம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் தங்கள் மதத்தவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக அதிகளவில் மதமாற்றத்தில் ஈடுபடுகின்றனர்" என்று பேசினார். இதனை தொடர்ந்துதான் மதமாற்ற தடைச் சட்டத்துக்கான அனைத்து பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடக அரசு. அதன் தொடர்ச்சியாகவே தற்போது கடந்த 25 ஆண்டுகளில் நடந்த மத மாற்றங்களைக் கண்டறியும் ஆய்வையும் மாநில அரசு நடத்த தொடங்கியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா மாநில அரசின் இந்த நடவடிக்கையாக கடுமையாக எதிர்த்துள்ளார். ``கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்படுவதை காங்கிரஸும் கடுமையாக எதிர்க்கிறது. என்றாலும் ஒருவர் விரும்பி மதமாற்றம் செய்திருந்தால் அவரை யாரும் தடுக்க முடியாது. ஆனால் இப்போதைய அரசு அதுபோன்ற நடவடிக்கைகளில்தான் இறங்கியுள்ளது போல் தெரிகிறது" என்று பேசியுள்ளார்.
கிறிஸ்தவ அமைப்புகளும் அரசின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், கர்நாடக கத்தோலிக்க கிறிஸ்தவ ஆயர்கள் சில நாட்கள் முன் முதல்வர் பசவராஜ் பொம்மையை சந்தித்து கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டாம் என கோரிக்கை விடுத்தனர்.
- மலையரசு