கர்நாடகாவில் பாஜகவின் தோல்விக்கு இந்த 10 விஷயங்கள்தான் முக்கிய காரணம்!

கர்நாட மாநில சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி 135க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. இதில் பல்வேறு தொகுதிகளில் வெற்றி குறித்த முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதே நேரத்தில் ஆளும் பாஜக, இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.
மோடி, பசவராஜ் பொம்மை
மோடி, பசவராஜ் பொம்மைtwitter pages

கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில், ஆளும் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் அசுரபலத்துடன் வெற்றி பெற்றிருப்பது, நாடு முழுவதும் பேசுபொருளாகி வருகிறது. அதுவும், ஆட்சியில் இருந்த பாஜகவுக்கு இந்த தோல்வி, பெருத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளது என்கின்றனர், அரசியல் ஆர்வலர்கள்.

User

தோல்விக்கான 10 காரணங்களையும் விரிவாக இனி பார்க்கலாம்.

1. பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் தடை

கர்நாடகாவில் பாஜக தோல்வியுறுவதற்கு முதல் காரணமாக ஹிஜாப் விவாகாரம்தான் கூறப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரி வகுப்பறைக்குள் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. இதற்கு அம்மாநிலம் மட்டுமல்லாது, நாடு முழுவதும் எதிர்ப்பலை கிளம்பியது. அப்படி, ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிகளுக்கும் வகுப்புகளில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. கடந்த ஆண்டில் விஸ்வரூபமாகக் கிளம்பிய பிரச்னை, தற்போதைய தேர்தலில் அச்சமூகத்தினத்தினரின் இளம் வாக்குகள் பாஜகவுக்கு எதிராகத் திரும்பியதாகக் கூறப்படுகிறது.

2. இஸ்லாமியர் இடஒதுக்கீடு ரத்து

கர்நாடக பாஜக அரசு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பிரிவின்கீழ் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவிகித இடஒதுக்கீட்டை ரத்து செய்தது. இந்த சதவிகித இடஒதுக்கீடு தலா 2 ஆகப் பிரிக்கப்பட்டு, ஒக்கலிகா மற்றும் லிங்காயத் ஆகிய சமூக மக்களுக்கு வழங்கப்பட இருப்பதாகக் கூறப்பட்டது. கர்நாடத் தேர்தலில் இவ்விரு இன மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காகவே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இதன் காரணமாகவும் இஸ்லாமியரின் வாக்குச் சதவிகிதத்தைப் பெற பாஜக தவறிவிட்டது.

3. ராகுல் காந்தியின் நடைபயணமும் பதவி பறிப்பு ஏற்படுத்திய அலை

ராகுல் காந்தியின் நடைப்பயணமும் இந்தத் தேர்தலில் எதிரொலித்துள்ளது. தவிர, அவருடைய பிரசாரமும் கர்நாடக மக்களுக்குப் புத்துணர்வைத் தந்ததாகக் கூறப்படுகிறது. முக்கியக் காரணம், ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது கர்நாடகாவுக்கு பலத்த அடியைத் தந்திருப்பதாகக் கூறப்படுகிறது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல், அவதூறு வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டதால் அவரது பதவி பறிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தன்னுடைய எம்.பி. பதவி பறிப்புக்குக் காரணமான அவதூறு பேச்சை எங்கே தொடங்கினாரோ, அங்கேயே கர்நாடக மாநில தேர்தல் பிரசாரத்தையும் ராகுல் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

4. பாஜகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல்

கர்நாடகாவில் பாஜகவுக்கு உள்ளேயே உட்கட்சி பூசல் எழுந்ததும் தேர்தல் தோல்விக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. முன்னாள் எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் பலருக்கு இந்தத் தேர்தலில் சீட் வழங்காததும், அதன் காரணமாக அவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி, வேறு கட்சிக்குத் தாவியதும் சிலர் சுயேட்சையாக நின்றதும் பாஜகவின் தோல்விக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. புதுமுகங்களை வேட்பாளர்களாகக் களமிறக்கியிருக்கிய பா.ஜ.க. தேர்தலுக்கு முன்னரே சலசலப்பை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில மூத்த தலைவர்களுக்குள் நீடித்த உட்கட்சி பிரச்னை தொண்டர்கள் வரை நீண்டது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை இந்த தேர்தல் களத்தில் முன்னிலைப்படுத்தாதும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. அவரை ஒதுக்கியது அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆக, இதுவும் தேர்தலில் எதிரொலித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

5. விலைவாசி உயர்வு, வேலையின்மையால் எதிர்ப்பலை

பாஜகவின் தோல்விக்கு அம்மாநிலத்தில் நிலவிய வேலையின்மை, விலைவாசி உயர்வு, ஊழல் போன்ற முக்கியமான பிரச்னைகளும் காரணம். குறிப்பாக பொதுமக்களின் அடிப்படை பிரச்னையான சமையல் எரிவாயு விலையில் பாஜக அரசு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரங்களை காங்கிரஸ் அரசு சரியாக கையாண்டு மக்களிடையே கொண்டு சென்று சேர்த்தது.

6. நந்தினி பால் கொள்முதலுக்கு மாற்றாக அமுல்?

கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தின் அதிகாரப்பூர்வ பிராண்டாக ’நந்தினி’ பால் கொள்முதல் உள்ளது. கர்நாடக மக்கள் பலரும் 'நந்தினி’யை விரும்புவதாகச் சொல்லப்படும் வேளையில், குஜராத் தயாரிப்பான ‘அமுல்’ பால் பிராண்டை, கர்நாடகாவுக்குள் நுழைய பாஜக அரசு அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டி அதனை மிகப்பெரிய பிரசார வியூகமாக மாற்றியது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் தலைவர்கள் பலரும் நந்தினி ஸ்டோருக்கு சென்று ஐஸ்க்ரீம் உள்ளிட்டவற்றை சாப்பிட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ராகுல் காந்தியும் இவ்வாறு செய்திருந்தார். , பிரசாரத்தில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

7. காங்கிரஸ் குற்றஞ்சாட்டிய 40 சதவிகித ஊழல்

பாஜகவின் தோல்விக்கு மற்றொரு காரணமாக, காங்கிரஸ் முன்னிறுத்திய ஊழல் புகார்களும் அடக்கமாகப் பார்க்கப்படுகிறது. பிட்காயின் முறைகேடு, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேடு, கல்லூரி ஆசிரியர் நியமன தேர்வு முறைகேடு, அரசு திட்ட ஒப்பந்ததாரர்களின் 40 சதவீத கமிஷன் முறைகேடு என பல்வேறு ஊழல் புகார்களைக் காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.

கடந்த 4 ஆண்டுகளில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து 40 சதவிகித கமிஷன் உள்பட 1,50,000 கோடி பாஜகவால் சுருட்டப்பட்டிருப்பதாகவும், முதல்வர் பதவிக்கு ரூ.2,500 கோடியும், அமைச்சர் பதவிகளுக்கு ரூ.500 கோடியும் பெறப்பட்டிருப்பதாகவும் காங்கிரஸ் தன்னுடைய அறிக்கையில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

8. காங்கிரஸின் கட்சியின் பலமான தேர்தல் அறிக்கை

காங்கிரஸ் கட்சி, இந்த தேர்தலில் பல முக்கியமான வாக்குறுதிகளை அள்ளித் தெளித்திருந்தது. அதில் முதன்மையானதாக பஜ்ரங் தள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் பிற அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தது. அதேநேரத்தில் பாஜக, ’ஜெய் பஜ்ரங் பலி’ என்ற முழக்கத்தை எழுப்பி வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியது. இதுவும், பாஜகவின் தோல்விகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. மேலும், காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 10 கிலோ அரிசியும், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் நிதியுதவியும், வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் டிப்ளமா படிப்பு படித்தவர்களுக்கு, 2 ஆண்டுகளுக்கு ’வேலையில்லா படிப்பணமும்’ வழங்கும் ஜனரஞ்சக அறிவிப்புகளை காங்கிரஸ் வெளியிட்டு மக்களை வளைத்திருந்தது. ஆக, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையும் பாஜக வீழ்த்துவதற்கு ஒரு காரணமாக இருந்துள்ளது.

9. காங்கிரஸ் கட்சியின் PayCM பிரசாரம்

காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்களின் பிரசாரமும் கை கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக பாஜகவுக்கு எதிராக, பிரபலமான பணம் செலுத்தும் செயலியின் பிரசார இயக்கத்தின் உதவியுடன் மாநிலத்தில் முதலமைச்சரை சுற்றி வளைக்க காங்கிரஸ் 'PayCM' பிரசாரத்தைத் தொடங்கியது. மேலும் ஊழல் குற்றச்சாட்டுகளையும் எடுத்துக் காட்டியது. இவை எதற்கும் பாஜக தரப்பில் இருந்து பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், இந்த மதத்தினரின் வாக்குகளை மட்டும் அறுவடை செய்ய நினைத்த பாஜக, இஸ்லாம் மதத்திற்கு எதிராகச் செயல்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இது, தேர்தல் பிரசாரத்தில் நன்கு எதிரொலித்தது. முன்னாள் அமைச்சர் ஈசுவரப்பா, ”சிவமொக்காவில் 56 ஆயிரம் முஸ்லிம்கள் வசிப்பதாகச் சொல்கிறார்கள். அவர்களின் ஒரு ஓட்டுக்கூட எங்களுக்கு தேவையில்லை” எனப் பேசியிருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுவும், பாஜவுக்கு எதிராக வாக்கு வங்கியைத் திருப்பியுள்ளது எனக் கூறப்படுகிறது.

10. சித்தராமையா - டி.கே.சிவக்குமார் கூட்டணி

கர்நாடகாவில், முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கு இடையே மறைமுக பனிப்போர் இருந்தாலும், இந்த தேர்தலில் அதை இருவரும் தவிர்த்துவிட்டு ஒன்றாகக் களப் பணியாற்றினர். மக்கள் செல்வாக்கு படைத்த சித்தராமையாவும், பா.ஜ.கவின் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு காங்கிரஸ் கட்சியை மிக தீவிரமாக பலப்படுத்தி வரும் டி.கே.சிவக்குமாரும், இணைந்து பணியாற்றினால் மட்டுமே காங்கிரஸ் வெற்றிக் கனியை பறிக்க முடியும் என்ற நிலை இருந்தது. இதை இருவரும் சரியாகப் புரிந்துகொண்டு காய் நகர்த்தியிருப்பதாகவும், அதுவும், பாஜகவை வீழ்த்துவதற்கு கை கொடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com