இயக்குநர் ஷேவ் செய்ய 4 ஆயிரம்: அப்ப சினிமாவில் கந்துவட்டி வளர யார் காரணம்?

இயக்குநர் ஷேவ் செய்ய 4 ஆயிரம்: அப்ப சினிமாவில் கந்துவட்டி வளர யார் காரணம்?
இயக்குநர் ஷேவ் செய்ய 4 ஆயிரம்: அப்ப சினிமாவில் கந்துவட்டி வளர யார் காரணம்?

சமீபகாலமாக அதிகமாக அடிப்படும் பெயர் கந்துவட்டி. அடுத்து அசோக்குமார். இந்த இரு விஷயங்களையும் இணைக்கும் புள்ளி சினிமா. ஒருவர் ’கந்து வட்டியைவிட ஜி.எஸ்.டி. பெரிய கொடுமை’ என்கிறார். அதை கந்துவட்டி என்றே சொல்லாதீர்கள். அதிக வட்டி என்று சொல்லுங்கள் என்கிறார். மார்வாடி கொடுத்தால் பைனான்ஸ். தமிழன் கொடுத்தால் கந்து வட்டியா என்கிற அளவுக்கு கேள்வி கேட்கிறார்கள். 

அதுவா பிரச்னை? கொடுத்த பணத்தை தாண்டி கொள்ளை வட்டி பிடுங்குகிறானா? என்பதுதானே பிரச்னை. பணத்தை வாங்கி கொண்டான் என்ற ஒரே குற்றத்திற்காக அவனது குலத்தையே வேரோடு அழித்து விடலாம் என கணக்குப்போடுவதை எப்படி நியாயப்படுத்த முடியும்? நியாயப்படுத்த முடியாதுதான் ஆனால் அதே சமயத்தில் கந்து வட்டி எந்த அளவுக்கு கொடுமையோ அதே அளவுக்கு கடன் வாங்கியவன் காசை கண்ணியமாக செலவு செய்வதிலும் ஒரு நியாயம் இருக்க வேண்டும். இன்று வாங்கிவிட்டோம் திரும்ப கொடுக்கும் போது பார்த்து கொள்ளலாம் என பணத்தை பந்தாவாக செலவு செய்யக் கூடாது. ஆனால் இதுதான் சினிமாவில் நடக்கிறது.

சினிமா என்பது மனசாட்சிக்கு அப்பாற்பட்ட தொழில். ஒரு இயக்குநர் நான்கு வருடமாக படமே இல்லாமல் இருப்பார். அவருக்கு ஒரு பெரிய நடிகர் கால்ஷீட் கொடுத்துவிட்டால் போதும் அடுத்த நாள் அவர் ‘ஹயாத்’ ஹோட்டலில் உட்கார்ந்திருப்பார். காலை காஃபியில் தொடங்கி மாலை மயக்கம் வரை அங்குதான் நடக்கும். அந்தளவுக்கு புரொடியூசர் அவருக்கு கொட்டிக் கொடுக்க வேண்டும். இன்பமாக சினிமா உலகத்திற்குள் வந்த அந்தத் தயாரிப்பாளரின் கப்பல் படம் வெளியாவதற்கு முன்பே தரைத்தட்டி கொண்டு நிற்கும். 

சண்டைப்படங்களில் பெரிய இயக்குநர் ஒருவர். பண மதிப்பிழப்பு விவகாரத்திற்கு பிறகு அவரை சந்திக்க நேர்ந்தது. அந்த நேரம் தான் அவரது பார்ட்2 படம் வெளியாகியிருந்தது. சினிமா புரமோஷன் விஷங்களில் மும்முரமாக இருந்த அவரிடம் பணமதிப்புக்கு பிறகு சினிமா தொழில் எப்படி என்று கேட்டோம். அதற்கு அவர் கொடுத்த பதிலை சொன்னால் அதிர்ச்சியாயிருக்கும். ‘காப்பி நாற்பது ரூபாயா சார் விற்குறது?’ என்று எதுவும் தெரியாத அப்பாவியாகக் கேட்டார். "எனக்கு நாலு ரூபாய்க்கு டீ சாப்பிட்ட ஞாபகம். அசிஸ்டெண்ட் டைரக்டர்கள்தான் சொன்னாங்க. இப்ப காப்பி நாற்பது ரூபாய் என்று. நான் என் பாக்கெட்ல இருந்து பணம் எடுத்து கொடுத்து பல வருஷம் ஆகிடுச்சு சார். என்ன தேவையோ அத சொன்னா வாங்கிக் கொண்டு வந்துவிடுவார்கள். நான் விலை விசாரித்ததே இல்லை. அப்புறம் படம் கமீட் ஆன நாளில் இருந்து கம்பெனிதான் முழு செலவை கவனிக்கும். அதனால எனக்கு விலைவாசி பற்றி ஒன்றும் தெரியாது” என்றார்.

சமூக பிரச்னை. போதை பொருள் கடத்தல். அரிவாள் கலாச்சரம். அடிதடி என வன்முறையை மட்டுமே ஞாபகத்தில் வைத்திருக்கும் அவருக்கு விலைவாசி என்பதை பற்றி கவலையே இல்லை. கேட்ட பொருளை வாங்கி கொடுக்க தயாரிப்பாளர் இருக்கிறார். அப்புறம் அவருக்கு என்ன கவலை? இந்த இயக்குநருக்கு தமிழ் சினிமா உலகில் ஒரு அஃமார்க் பெயர் உண்டு. அதான் ‘தயாரிப்பாளரின் இயக்குநர்’.  தயாரிப்பாளரின் இயக்குநர் என்றால் பணத்தை பார்த்து பார்த்து செலவழிப்பவர். பட்ஜெட்டை மீறி ஒரு ரூபாய் செலவு செய்யாதவர். அதில்தான் முரண்பாடு முட்டிக் கொண்டு நிற்கிறது. பார்த்து பார்த்து செலவு செய்யும் இந்த இயக்குநருக்கு காஃபி நாற்பது ரூபாய் விற்கிறது என்றே தெரியவில்லை. இருபது வருஷமாக அவர் நாலு ரூபாய்க்கு காப்பி விற்கிறது என நினைத்து கொண்டே வாழ்கிறார். இவருக்கே பட்ஜெட் இயக்குனர் என்று பெயர் என்றால், அதிக செலவு வைக்கும் இயக்குனர் என்பவர்கள் எப்படி இருப்பார்கள் என்று கற்பனை செய்யவே முடியவில்லை.

இன்னொரு இயக்குநர் இருக்கிறார். பல நாள் கழித்து அவரை சந்தித்த போது தாடியும் மீசையுமாக இருந்தார். என்ன சார் தாடி? என்றோம். அவர் ‘ஒர்க் ஒண்ணும் இல்ல. அதான் அப்படியே விட்டுட்டேன்’ என்றார். ஒர்க் இல்லை என்றால் தானே நேரம் கிடைக்கும். நேரம் அதிகமாக இருந்தால் தாடி, மீசையை எடுத்துவிடலாமே? என அவரது பதில் ஏதோ உறுத்தலாக இருந்தது. 

கொஞ்சம் உள்ளே புகுந்து விசாரித்தால் “தாடி, மீசை எடுக்கணும்னா நாலாயிரம் ஆகும் சார்” என்றார். நாலாயிரமா? “எஸ்! பொதுவா நான் லீலா பேலஸ்லதான் ஷேவிங் பண்ணுவேன். அங்க போனா நாலாயிரம் தேவை” என்றார். கிராமத்து வாழ்க்கையை தோண்டித் தோண்டி சினிமாவில் காட்டும் அவர் லீலா பேலஸ் போனால் தான் ஷேவிங் செய்ய முடியும் என நினைப்பது குற்றமில்லை. அதற்காக ஒரு படம் கிடைக்க வேண்டும். அந்தத் தயாரிப்பாளர் தரும் பணத்தை எடுத்து கொண்டு போய்தான் ஷேவ் செய்ய வேண்டும் என நினைக்கிறாரே அதான் கொடுமை.

இன்னொரு இயக்குனர் இருக்கிறார். அவர் சினிமா கனவில் சென்னைக்கு வந்து குறைந்தது 30 வருடங்கள் ஆகிவிட்டது. அவர் பட பூஜைபோட்டு 20 வருஷங்களாகிறது. அந்தப் படத்திற்காக அவருக்கு தி.நகரில் ஒரு அலுவலகம் போட்டுக் கொடுத்தார் அவரது தயாரிப்பாளர். அந்தப் படம் வெளியே வரவே இல்லை. அந்தப் படத்திற்கு கதாநாயகியாக கமீட் ஆனவர் வேறு படங்களில் நடித்து மாபெரும் நடிகையாக மாறி அவரும் கல்யாணமாகி செட்டில் ஆகிவிட்டார். ஆனால் முதல்படம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் படத்திற்காக போட்ட அலுவலகத்திற்கு 20 வருஷமாக அந்தத் தயாரிப்பாளர் வாடகை கொடுத்துக் கொண்டிருந்தார். 

சில மாதங்களுக்கு முன் கோவையில் இருந்து ஒரு நகைக் கடைக்காரர் சினிமா எடுக்க வந்தார். அவர் படமும் எடுத்தார். படம் முடிந்துவிட்டது. ஆனால் வியாபாரம் ஆகவில்லை. இடையில் அவர் தன் கோவை நகைக்கடையை விற்றே விட்டார். அந்தளவுக்கு லாபகரமான தொழில் சினிமா. இன்றைக்கு சின்னதாக ஒரு பட்டியல் போட்டால் கூட எப்படியும் சின்ன பட்ஜெட் படம், கொஞ்சம் பெரிய பட்ஜெட் படம் என்று 200 படங்களுக்கு மேல் வெளியே வராமல் முடங்கிக் கிடக்கிறது. 

விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் பொறுப்புக்கு வந்த பிறகு இந்தப் படங்களை மெல்ல மெல்ல வெளியிட நடவடிக்கை எடுப்போம் என்றார். ஆனால் வெளியே வரும் அளவுக்கு பல படங்களில் தரமே இல்லை என்பது பிறகுதான் புரிந்தது. எல்லாம் சின்னப்பிள்ளை தனமாக எடுக்கப்பட்ட சினிமாக்கள். இந்தப் படங்களை தியேட்டருக்கு வந்து மக்கள் பார்த்தால் அடுத்த மகாமகம் வரை வெறுத்து போய் தியேட்டர் பக்கமே திரும்ப மாட்டார்கள். படம் நல்லா வராதற்கு கொஞ்சம் தயாரிப்பாளர் காரணம். ஆனால் முழு காரணம் இயக்குநர்கள். சினிமாவை எப்படி எடுக்க வேண்டும் என்ற அரிச்சுவடி கூட அறியாமல் படம் எடுத்தால் எப்படி ரிலீஸ் ஆகும்? 

இன்றைக்கு கந்துவட்டியை பற்றி கருத்து கூறும் இயக்குநர் ஒருவர் ஐந்து வருடமாக படமே எடுக்காமல் ரூம் போட்டு கதை டிஸ்கஷன் செய்து கொண்டிருந்தவர். அவருக்கு மதிய சாப்பாடு தயாரிப்பாளர் கணக்கிலிருந்து வரும். அந்த சாப்பாட்டு கேரியரில் கறி, மீன்,முட்டை, இறால், கோழி, காடை என பெரிய மெரினா கடலே உள்ளே இருக்கும். மதிய சாப்பாடுக்கு மட்டுமே ஐந்தாயிரமாகும். அதுவும் பத்து பேருக்கு சாப்பாடு. இந்தப் போராட்டத்தை எல்லாம் மீறிதான் அவர் சினிமா எடுத்தாக வேண்டும். இறுதியில் அவர் சினிமாவை விட்டு வேறு வேலை பார்க்கப் போய்விட்டார்.

சினிமா உலகத்தில் நல்ல சம்பாத்தியத்தை கொண்டு வந்து கொட்டவே முடியாது. அப்படி ஆக்கிவிட்டார்கள் சினிமாவை. இதை எல்லாம் தாண்டி சி.வி.குமார் போல ஒரு சிலர் தமிழ் சினிமாவுக்கு ஆக்ஸிஜன் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். இவரது பல படங்கள் சின்ன பட்ஜெட்டில் பயணப்பட்டவை. அமோக வசூலை வாரிக் குவித்தவை. வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பார்கள். ஆனால் இவர் வெட்டாமலே வெற்றியை பார்த்தவர். அந்தக் காலத்தில் ஆர்.பி.செளத்ரி இருந்தார். கதையை கேட்கும்போதே கண் முன்னால் கணக்கு போட்டுக் கழித்துவிடுவார். இனிப்பான வியபாரி அவர். பிரமாண்டம் என்பது செய்யும் செலவில் இல்லை. சொல்லும் கதையில் இருக்கிறது என கவனித்து கவனித்து படம் பண்ணியவர். 

இன்று மெர்சல் மெகா பட்ஜெட். ஆனால் இராமநாராணன் இருக்கும் வரை மினி பட்ஜெட்தான். ஆடி மாதத்தில் குடும்ப பெண்கள் எல்லாம் கோயிலுக்கு போய் கொண்டிருந்தார்கள். அவர்களை சினிமா தியேட்டர் பக்கம் கொண்டு வந்து கோயிலாக மாற்றியவர் ராமநாராயணன். அவர் எடுத்த படங்கள் தரமா? தரமில்லையா என்பது வேறு கதை. ஆனால் எந்தத் தயாரிப்பாளரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. போட்ட முதலை மீறி சம்பாதித்தார்கள் என்று சொல்ல முடியாது. கோடி கோடியாக கொட்டியது என்றுதான் சொல்ல வேண்டும். அவர் ஆவி படத்தையும் எடுத்தார். காவி படத்தையும் எடுத்தார். 

அவர் படங்களில் கண்டினியூட்டி பார்க்க முடியது. ஒரு பிரேமில் குரங்கு பச்சை சட்டையில் வரும். அடுத்த ஷாட்டில் மஞ்சள் சட்டையில் வரும். அதை அவரிடம் கேட்டால் ‘எவன் இதை ஞாபகம் வைத்திருக்க போறான்’ என்பார். அந்த ஆடியன்ஸ் இன்று இல்லை. அப்படி செய்தால் ஆன் லைனில் அள்ளி வைத்து கும்மியடித்து விடுவார்கள். நாம் சொல்ல வருவது இதைதான். நியாயமான சம்பளம். நியாயமான வருமானம். அதைதான் சினிமா எதிர்பார்க்க வேண்டும். ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்த நடிகரின் படம் ஏழு கோடி ரூபாய் வசூல் செய்துவிட்டது என்பதற்காக அந்த ஹீரோ அடுத்த படத்தில் தனக்கு சம்பளம் ஏழு கோடி என்று கூட்டிக் கொள்கிறார். அவரை வைத்துப் படம் பண்ணினால் கன்பாஃர்ம் லாபம் என்ற கணக்கில் தயாரிப்பாளர்கள் அவரை மொய்ப்பார்கள். அந்தக் கணக்கில் தயாரிப்பாளர்களுக்கு லாபமும் கிடைக்கலாம். நஷ்டமும் வரலாம். 

ஹீரோவால் ஆகும் செலவு ஒருபுறம். சில நேரங்களில் கதைக்குச் செலவு செய்வதே தேவைக்கு அதிகமாக இருக்கும். ஒரு படத்தின் பட்ஜெட்டை அந்தப் படத்தின் கதைதான் தீர்மானிக்கிறது. ஏழை குடிசையில் ஹீரோ வாழ்கிறார் என்று கதையில் வருகிறது. அந்த ஏழைக்குடிசைக்கு என்ன செலவாகும். அதை செய்தால் நியாயமான செலவு. ஆனால் ஹீரோ குடிசை பக்கம் வந்தால் பிரச்னை வந்துவிடும். அதனால் ஏழு கோடியில் செட் போட்டுதான் எடுக்க வேண்டும் என்றால் அது அநியாய செலவு மட்டுமல்ல; அகம்பாவ செலவு. அப்படிதான் சினிமாவில் நடக்கிறது. நியாயமான ஒரு கதைக்கு 50 லட்சம் போட்டு எடுக்கிறோம். அந்தப் படம் மக்களுக்கு பிடித்து போய் 5 கோடி லாபம் வந்தால் அது லாபம். கொள்ளை லாபம். ஆனால் கதையே 5 கோடி கேட்கிறது. அதற்கு 100 கோடி வரை செலவு செய்துவிட்டு அது 500 கோடி சம்பாதித்துவிடும் என்று எதிர்பார்த்தால் அது சினிமா அல்ல. அதுவே கந்துவட்டிதான். அப்படி ஒரு கந்து வட்டி கிடைத்து விடும் என்ற நப்பாசையில்தான் பலர் கந்துவட்டிக் குழியில் போய் விழுகின்றனர். அந்தக் கொள்ளை லாபத்திற்கு தோண்டப்படும் குழியில் மக்கள் வந்து விழவேண்டும் என யோசிப்பதே குற்றம். அது சினிமாவை வளர்க்காது. முழுக்க அது சினிமாவை குழித்தோண்டி புதைத்துவிடும். இயக்குனரோ நடிகரோ வேலை செய்துவிட்டு சம்பளம் வாங்கினால் அது நடைமுறை. வேலை கொடுத்தவன் வேட்டியையே உருவினால் அது வன்முறை.

தயாரிப்பாளர்களும் ஒரு ஹீரோ கிடைத்துவிட்டார் இவரை வைத்து ஒரு பத்து வருடங்களுக்கு வருமானம் பார்த்துவிடலாம். ரசிகர்களின் ரத்தத்தை எல்லாம் உறிஞ்சி காசாக்கிவிடலாம் என உட்கார்ந்து யோசிக்க தொடங்கிவிட கூடாது. கடன் வாங்குபவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையில் வேலை செய்து சம்பாத்தித்து வட்டி கட்டலாம். வட்டிக்காக வாழ்க்கையை கழுத்தில் கல்லாக கட்டிக் கொள்ள கூடாது. ஆக கந்து வட்டி வரமா? சாபமா? என்று கேட்டால், நிச்சயமாக வரமே அல்ல. சாபம்தான். அந்த சாபத்தில் மாட்டாமல் இருப்பதும் தயாரிப்பாளர்களின் துல்லியக்கணக்கில்தான் இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com