“இது திராவிட நாடு. கமல்ஹாசன் தோல்விக்கு சாதியும்தான் காரணம்” - சாருஹாசன் சிறப்பு பேட்டி

“இது திராவிட நாடு. கமல்ஹாசன் தோல்விக்கு சாதியும்தான் காரணம்” - சாருஹாசன் சிறப்பு பேட்டி

“இது திராவிட நாடு. கமல்ஹாசன் தோல்விக்கு சாதியும்தான் காரணம்” - சாருஹாசன் சிறப்பு பேட்டி
Published on

”கமல்ஹாசனை மக்கள் தேர்வு செய்யாததை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். அதேநேரம், அவரது தோல்வி மட்டுமே பெரிய தோல்வி. மற்றவர்களுடையது சின்ன தோல்வி அல்ல. அதேபோல், வெற்றி முக்கியமில்லை. மக்கள் பிரச்சனைகளில் இருப்பதுதான் முக்கியம். கமல்ஹாசன் மக்கள் பக்கம் நிற்பார்” என்று அழுத்தமாக பேசுகிறார், கமல்ஹாசனின் அண்ணனும் நடிகருமான சாருஹாசன். சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசன் தோல்வி, கட்சி நிர்வாகிகளின் விலகல் குறித்தெல்லாம் சாருஹாசனிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நிதானமாக பேசுகிறார்...

கமல்ஹாசன் தோல்வியை எப்படி பார்க்கிறீர்கள்?

   “தோல்வி எல்லோருக்கும் ஏற்படும். அது, தற்போது கமல்ஹாசனுக்கும் ஏற்பட்டுள்ளது. மக்கள் தேவையில்லை என்று நினைத்தால் யாரையும் வலுக்கட்டாயமாகத் திணிக்க முடியாது. ஒரு சிலர் கமல்ஹாசனை திணிக்க முயன்றார்கள். மக்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இது கமல்ஹாசன் தலைவராக வரவேண்டும் என்று நினைத்தவர்களின் தவறே தவிர, கமல்ஹாசன் மீதான தவறல்ல. என்னுடைய காலத்தில் கமல்ஹாசனை சிறந்த நடிகராகவே தமிழகம் ஒப்புக்கொள்ளவில்லை. மற்ற நடிகர் படங்களின் வசூலோடு, கமல்ஹாசன் படங்களின் வசூலைப் பார்த்தால் கமல்ஹாசன் இரண்டாது மூன்றாவது இடத்தில்தான் இருப்பார். உதாரணமாக, கமல்ஹாசன் சம்பளத்தைவிட ரஜினிகாந்த்துக்கு 5 மடங்கு சம்பளம் அதிகம். அவரது படங்களும் 5 மடங்கு வசூல் செய்தது. கமல்ஹாசனை முதலில் முதல்தர நடிகராக தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டார்களா? சிறந்த நடிகர் என்று சொன்னார்களா? அவரது நடிப்பையே தமிழகம் ஒப்புக்கொள்ளாதபோது, அரசியலில் எப்படி ஒப்புக்கொள்வார்கள்? இதற்கு முன்பு, இதேமாதிரி தோல்வி அடைந்த பெரிய நடிகர் சிவாஜி கணேசன். அதனால், சிவாஜியின் தோல்வியை விட இது பெரிய தோல்வி இல்லை. கடந்த பாராளுமன்றத் தேர்தலில்  5 சதவீத வாக்குகள் வாங்கினார். இம்முறையும், அதே அளவிலேயே தாண்டாமல் நிற்கிறது”.

அப்படியென்றால், இனி  கமல்ஹாசனின் அரசியல் எதிர்காலம்?

 “பிராமணர் சமூகத்திற்கு தமிழக அரசியலில் எதிர்காலம் கிடையாது. ஒரு கலெக்டர் ஆகிட்டு போய்ட்டே இருக்கணும். அதைத்தாண்டி அரசியலுக்கு வரக்கூடாது. இது திராவிட நாடு. கமல்ஹாசன் தோல்விக்கு பாதி காரணம் சாதியும்தான். மற்றொருக் காரணம், அவர் சிவாஜி கணேசன் போன்ற நடிகர்”.

உங்கள் குடும்பத்தினர் கமல்ஹாசனுக்காக தேர்தல் பிரச்சாரம் எல்லாம் செய்தார்களே?

  “தோல்வியடைந்துவிட்டார் என்ற வருத்தம் எங்க எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கிறது.  வெற்றி, தோல்வி சகஜம் என்பதால் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை”.

கமல்ஹாசன் தோல்வி மூலம் சினிமா நடிகர்களுக்கு முன்புபோல் அரசியலில் எதிர்காலமில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?  

”இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்காமல் அதிமுகவில் இணைந்திருந்தால், அமைச்சராகி ஜெயலலிதா மறைவிற்குப்பின், இந்நேரம் முதல்வர் ஆகியிருக்கலாம். தமிழகத்தில் தனிக்கட்சியாக தொடங்கி எம்.ஜி.ஆர்தான் அரசியலில் வெற்றி பெற்றார். அதனால், அவரைப்போலவே சினிமாவில் அபார வெற்றி அடைந்ததால் ரஜினியும் அரசியலுக்கு வந்திருந்தால் வெற்றி அடைந்திருக்கலாம். தமிழகத்தில் தமிழை தாய்மொழியாக கொண்டவர்தான் தலைவராகவேண்டும் என்பது கிடையாது. ரஜினி வந்திருந்தால் ஒருவேளை வெற்றி அடைந்திருப்பார். எம்.ஜி.ஆருக்கு அடுத்து வேறு யாரையும் என்னால் சொல்ல முடியவில்லை.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கமல்ஹாசனிடம் பேசினீர்களா?

”இன்னும் பேசவில்லை. நாங்கள் அந்த காலத்திலிருந்தே அதிகம் பேசிக்கொள்ளமாட்டோம். தேவை இருக்கும்போது மட்டுமே பேசிக்கொள்வோம். அதற்காக, எங்களுக்குள் விரோதம் உண்டு என்று அர்த்தம் கிடையாது. எந்த மன வருத்தங்களும் இல்லை. நான் சொல்வதை அவர் கேட்கவேண்டும். அவர் சொல்வதை நான் கேட்கவேண்டும் என்று அவசியமில்லை. எம்.ஜி.ஆருடன் அவரது அண்ணன் சக்கரபாணி எப்படி போட்டிப்போட முடியாதோ அப்படித்தான் கமல்ஹாசனுடன் சாருஹாசன் போட்டிப்போட முடியாது.

ஒரு அண்ணனாக கமல்ஹாசனுக்கு சொல்லக்கூடிய ஆலோசனை என்ன?

   “அது தெரிந்திருந்தால் நான் முதல்வர் ஆகியிருப்பேன். நான் எதற்கு கமலிடம் சொல்லவேண்டும். தலைவராக வரவேண்டும் என்று எனக்கே ஆசை உண்டு. ஆனால்,வரமுடியாதுன்னு எனக்குத் தெரியும்”.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நிர்வாகிகள் தொடர் விலகல்… டாக்டர் மகேந்திரன் அதிக செலவுகள் செய்ததாகக் கூறியுள்ளது குறித்தெல்லாம் என்ன நினைக்கிறீர்கள்?

  “காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய வி.பி சிங் பிரதமாராக வந்தார். அதனால், கமல்ஹாசன் கட்சியில் இருந்து விலகியவர்கள் வேறு கட்சியில் இருந்து முன்னுக்கு வரலாம். மற்றபடி, டாக்டர் மகேந்திரன் கமல்ஹாசனை குறை சொல்வதும் தவறு. மகேந்திரன் துரோகம் செய்துவிட்டார் என்று கமல்ஹாசன் சொல்வதும் தவறு. மகேந்திரன் செலவு செய்தாக சொன்னப் பணத்தை கமல்ஹாசன் வாங்கி என்ன செய்துவிட்டார்? மகேந்திரன் கட்சி வளர்ச்சிக்காக செலவு செய்திருப்பார். கமல்ஹாசன் யாரிடமாவது பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டார் என்று யாராவது இதுவரை சொல்லியிருக்கிறார்களா?

இந்தப் பிரச்சனை இருவருக்குமான மனவருத்தம். அதில், யார் உண்மை யார் பொய் என்று நான் சொல்ல முடியாது. என்னுடைய கணக்குப்படி கமல்ஹாசனுக்கு கடன்தான் அதிகமாக உள்ளது. ஏற்கனவே, அவர்மீது வழக்கு வந்தது.  ’நான் நாட்டை விட்டுப் போகிறேன்’ என்று சொன்னதெல்லாம் தமிழக மக்களுக்கு நினைவிருக்கும். அதிலிருந்து மீண்டு வந்தாலும், இப்போது அரசியல் கட்சி ஆரம்பித்திருப்பதால் அவருக்கு கடன் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதையெல்லாம் கமல்ஹாசனின் தியாகமாக பார்க்கிறேன். மக்களுக்கு எதவது நல்லது செய்யலாம் என்றுதான் அரசியலுக்கு வந்தார்”.  

கமல்ஹாசன் தேர்தல் வியூகம் அமைத்துக்கொடுத்தவர்களின் பேச்சையே கேட்கிறார் என்று குற்றம் சாட்டியிருக்கிறாரே டாக்டர் மகேந்திரன்?

 ” மகேந்திரன் பேட்டியை பார்த்தேன். கமல் அறிவாளின்னும் சொல்கிறார். என் பேச்சை கேட்கவில்லை என்றும் சொல்கிறார். கமல் அடுத்தவர் பேச்சை கேட்பாரா என்று தெரியவில்லை. ஆனால், கமல்ஹாசனின் திறமைகளில் எனக்கு ஒரு சந்தேகமும் இல்லை”.

- வினி சர்பனா 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com