நேர்மையின் சிகரம் கக்கனின் நினைவு தினம் இன்று
நேர்மையான அரசியல்வாதிகள் பற்றி பேச்சு எழும் போதெல்லாம் அனைவரது நினைவுக்கும் வருபவர்கள் காமராஜரும், கக்கனும் மட்டுமே. காமராஜரின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த கக்கனின் நினைவுநாள் இன்று.
மதுரை மாவட்டம் தும்பைப்பட்டியில் பிறந்த கக்கன் தனது இளம்பருவத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்று 18 மாதங்கள் சிறை சென்றுள்ளார். 1946-ல் சட்டப்பேரவை உறுப்பினராகவும், 1952ல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். காமராஜர் ஆட்சி காலத்தில் 1957 முதல் 1967 வரை பொதுப்பணித்துறை, காவல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அமைச்சராக பணியாற்றியுள்ளார். அவர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் தான் வைகை அணை கட்டப்பட்டது. கக்கனின் இந்த தொண்டினை நினைவு கூறும் தும்பைபட்டி மக்கள் அவர் வாழ்ந்த மண்ணில் பிறந்தமைக்காக பெருமிதம் கொள்கின்றனர்.
நாட்டு மக்களுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த கக்கன், தனிப்பட்ட முறையில் எந்த வகையிலும் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி சொந்த பந்தங்களுக்கு உதவ கூடாது என்பதில் கடைசி வரை உறுதியாக இருந்தார். அவருடைய உறவினர்கள் இன்றைய நிலையை பார்க்கும் யாருக்கும் அவருடைய நேர்மை புரியும்.
தனது தம்பி விஸ்வநாதனுக்கு காவல்துறையில் கிடைத்த வேலையில் சேரக்கூடாது என்று கூறிவிட்டார் கக்கன். நேர்மையாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், காவல்துறைக்கு அமைச்சராகத் தான் இருப்பதால், சிபாரிசில் வந்ததாகக் கூறுவார்கள் என்ற கக்கன், தனது தம்பிக்கு வழங்கப்படவிருந்த பணி ஆணையையும் நீக்கம் செய்ய உத்தரவிட்டார். கக்கனின் நினைவு நாளில் அவரை நினைவு கூர்வது மட்டுமல்லாது அவரை போன்ற தூய்மையான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வாக்காளர்கள் முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.