‘காலா’வை எல்லா கன்னட அமைப்புகளும் எதிர்க்கின்றனவா? - கள நிலவரம் என்ன?
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘காலா’படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் சில கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. காவிரி விவகாரத்தில் ரஜினிகாந்த கர்நாடக மக்களின் உணர்வுகளுக்கு எதிராகப் பேசியதாக கூறி, ‘காலா’ படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்கின்றனர்.
ஆனால், கர்நாடகாவில் காலாவுக்கு எல்லா கன்னட அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றே கள நிலவரம் தெரிவிக்கின்றது. ‘காலா’ படத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர உள்ளது. வாட்டாள் நாகராஜின் கன்னட சலுவாளி வாட்டாள் பக்ஷா, கர்நாடகா ரக்ஷானா வேதிகா உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. கர்நாடகாவில் ‘காலா’ படத்தை வெளியிடுவது நல்லதல்ல என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை முதலமைச்சர் குமாரசாமியை சந்தித்து முறையிட்டது. ‘காலா’ தடைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
“காலா படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. வர்த்தக சங்கம்தான் இந்த முடிவை எடுத்தது” என்று கர்நாடக திரைப்பட விநியோகஸ்தர்கள் அசோஷியேஷன் கூறுகிறது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் குமார் கூறுகையில், “முறையான காரணம் இல்லாமல் எந்தப் படத்திற்கும் நாங்கள் தடை கோருவதில்லை. இந்தப் படத்திற்கு யார்? எதற்காக தடை கோருகிறார்கள் என்று புரியவில்லை. விநியோகஸ்தர்களை சிலர் மிரட்டி இருக்கலாம். முக்கியமான விஷயங்களை தவிர இதுபோன்ற பெரிய முடிவுகளை எந்த விநியோகஸ்தர்களும் எடுக்கமாட்டார்கள்” என்றார்.
‘காலா’படத்திற்கான விநியோகஸ்தரும், கோல்டி பில்ம்ஸ் உறுப்பினருமான ஒருவர் கூறுகையில், “காலா படத்தை வெளியிட வேண்டாம் என சில கன்னட அமைப்புகள் வற்புறுத்துகின்றனர். மீறி திரையிட்டால் திரையரங்குகளை அடித்து நொறுக்குவோம் என்று மிரட்டுகிறார்கள். நாங்கள் ஏன் பிரச்னையை எங்கள் தலைமேல் போட்டுக் கொள்ள வேண்டும். அதனால் எங்களுக்கு தான் வணிகம் பாதிக்கப்படும். பணம் சம்பாதிக்கவே இந்தத் தொழிலை செய்கிறோம். சுமூகமான தீர்வு எட்டப்படும் வரை எதற்காக ரிஸ்க் எடுக்க வேண்டும். நாங்கள் எந்தவொரு தடையையும் கேட்கவில்லை” என்றார்.
‘காலா’தடைக்கு கர்நாடக கிரஹகாரா கூடா அமைப்பின் உறுப்பினரும், கன்னட ஆதரவாளருமான கணேஷ் சேட்டன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ‘காலா’விவகாரம் குறித்து அவர் பேசுகையில், “தடை விதிக்க வாட்டாள் நாகராஜ் யார்? அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இந்த முடிவை எடுப்பதற்கு அரசின் எந்த அமைப்பிலாவது அவர்கள் இருக்கிறார்களா? எதுவுமே இல்லை. அப்படி இருக்கையில் அவர்கள் எப்படி படத்திற்கு தடை விதிக்க முடியும்? காவிரி மேலாண்மை ஆணையம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்திற்கு எதிராக யாரும் செயல்பட முடியாது. அப்படி இருக்கையில், இந்தப் போராட்டத்திற்கு அர்த்தமே இல்லை. ஒரு சிலரை தவிர பெரும்பாலானோர் தடையை ஆதரிக்கவில்லை” என்றார்.
‘காலா’ படத்திற்கு எதிராக எவ்வித போராட்டத்தையும் அறிவிக்கவில்லை என்றும் அதனால் காவிரி பிரச்னையில் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை என்றும் கர்நாடகா ரக்ஷானா வேதிகா அமைப்பின் தலைவர் நாராயண கௌடா நேற்று கூறினார். ஆனால், கர்நாடகா ரக்ஷானா வேதிகா அமைப்பைச் சேர்ந்த சிலர் இன்று ‘காலா’படத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். ரஜினி தனது கருத்தினை வாபஸ் பெற்றால் போராட்டங்களை நிறுத்துவதை குறித்து ஆலோசிக்கப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகின்றனர்.
‘காலா’ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு அரசுப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று
அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், யாரையும் படத்தை வெளியிடுமாறு கட்டாயப்படுத்த முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் கர்நாடக அரசு இதுவரை வெளிப்படையாக எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.