இந்தியா வந்தார் மகாராஜா ஜஸ்டின் பீபர்...

இந்தியா வந்தார் மகாராஜா ஜஸ்டின் பீபர்...
இந்தியா வந்தார் மகாராஜா ஜஸ்டின் பீபர்...

கனடாவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் இசை நிகழ்ச்சிக்காக இன்று இந்தியா வந்தார். 23 வயதாகும் இவர் உலகின் மிக பிரபலமான பாப் பாடகர். இந்தியா வர ஜஸ்டின் முன்வைத்த நிபந்தனைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

இசை நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்திற்கு செல்ல தனி விமானம், மற்ற இடங்களுக்கு பயணிக்க ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார், அவரது குழுவிற்கு 2 சொகுசு வோல்வோ பேருந்துகள் வேண்டும் என பீபர் நிபந்தனை விதித்துள்ளார்.

இது மட்டுமல்ல...அவர் பாடும் மேடைக்குப் பின்புறம், சிறப்பாக தயாரிக்கப்பட்ட டேபிள் டென்னிஸ் மேஜை, பிளே ஸ்டேஷன், ஐ.ஓ.ஹாக் எனப்படும் ஸ்கேட்போர்டு, சோஃபா செட், வாஷிங் மெஷின், பிரிட்ஜ், ஆடை வைக்கும் அலமாரி, மசாஜ் மேஜை, ஜக்குஸி எனப்படும் சொகுசு குளியல்தொட்டி அத்தனையும் இருக்க வேண்டுமாம்.

ஜஸ்டின் பீபர் மற்றும் அவரது குழுவிற்காக மட்டும் 2 பெரிய நட்சத்திர ஹோட்டல்கள் முழுவதுமாக புக் செய்யப்பட்டுள்ளன. ஜஸ்டின் பீபருக்காக சமைக்க சமையல் வல்லுனர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். இவருக்கு நாள் ஒன்றுக்கு 5 உணவுகள் வேண்டும் என கேட்டுள்ளார். அவை அனைத்தும் அவரது பிரபல பாடல்களின் பெயர்களை கொண்டுள்ளது. . இது போல அவரது குழுவிற்கான உணவு பட்டியலும் நீள்கிறது. ஜஸ்டினுக்கு பிடித்த நிறம் ஊதா என்பதால், அவரது ஆடை அலமாரியில் ஊதா நிற ஆடைகள் நிறைய அடுக்கப்பட்டுள்ளன.

யோகா மீது அதிக பிரியம் உள்ள ஜஸ்டினுக்காக காஸ்கெட் ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் மல்லிகை, மாக்ரா, ரோஜா உள்ளிட்டவை அடங்கிய நறுமண பொருட்கள், யோக ஆசனங்களைப் பற்றிய புத்தகங்கள் ஆகியவை அடங்கும். ஜஸ்டின் பீபருக்கு என தனியாக கேரளாவைச் சேர்ந்த பயிற்சி பெற்ற மசாஜ் செய்யும் பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜஸ்டினின் தாகத்தைத் தணிக்க, 24 தண்ணீர் பாட்டில்கள், 24 அல்கலைன் தண்ணீர் பாட்டில்கள், 4 எனர்ஜி பானங்கள், 6 வைட்டமின் நீர் பாட்டில்கள், 6 கிரீம் சோடாக்கள் மற்றும் வகைப்படுத்தப்பட்ட பழச்சாறுகள், 4 இயற்கை சாறுகள், 4 வெண்ணிலா புரத பானங்கள் மற்றும் பாதாம் பால் வேண்டுமென கேட்டுள்ளார். மேலும், அவருக்கு அருகில் குவளை பூக்கள் இருக்க கூடாது எனவும் கட்டளை இட்டுள்ளார்.

ஜஸ்டின் பீபரின் இசை நிகழ்ச்சி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த இசை நிகழ்ச்சியின் ஆரம்பநிலை டிக்கெட் 4,000 ரூபாய். அதிகபட்ச விலை ரூ 80000 வரை செல்கிறது. இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கியுள்ள பல பீபர் ரசிகர்களும் அவரை பின்பற்றி, நிகழ்ச்சிக்கு செல்ல தனியார் விமானங்களை பதிவு செய்துள்ளனர் எனவும் தெரிகிறது. இசை நிகழ்ச்சி நடைபெறப்போகும் இடத்தில் 500 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஜஸ்டினின் இந்த இசை நிகழ்ச்சிக்காக, 4 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளதாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்ஜூன் ஜெயின் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் நம்பிக்கைக்குரிய பாதுகாவலர் ஷெரா தான் தற்போது ஜஸ்டின் பீபரின் அதிகாரப்பூர்வ பாதுகாப்புப் பொறுப்பாளராக உள்ளார். இவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மும்பை இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் ஆக்ரா என இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

ஜஸ்டீன் வைத்த அதிரவைக்கும் நிபந்தனைகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவரது ரசிகர்கள், இவை எல்லாம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஜஸ்டின் பீபருக்காக ஏற்பாடு செய்தது என்றும் பீபர் அதையெல்லாம் கேட்கவில்லை என்றும் கூறுகின்றனர். பீபரின் ரசிகர்கள் பிலீபர் என்று தங்களைத் தாங்களே செல்லமாக அழைத்துக் கொள்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com