ஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்

ஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்

ஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்
Published on

பணிமூப்பு அடிப்படையில் உச்சநீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியாகவும், வயது அடிப்படையில் மிக மூத்த உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் இருந்த ஜஸ்தி செலமேஸ்வர் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். உச்சநீதிமன்றத்தின் நிர்வாகத்தில் குறைபாடுகள் உள்ளதாக வெளிப்படையாகவே குற்றம்சாட்டியபோது தேசத்தால் அதிர்ச்சியோடு கவனிக்கப்பட்ட நீதிபதி செல்லமேஸ்வரின் பின்னணி என்ன? பார்ப்போம்…

ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் 1953ல் பிறந்த செலமேஸ்வர், சென்னை இலயோலா கல்லூரியில் இயற்பியல் இளங்கலைப்பட்டம் பெற்றவர். தமிழ் நன்றாகப் பேசக் கூடியவர். 1976ஆம் ஆண்டில் விசாகப்பட்டினம் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்தார்.

ஆந்திர நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த அவர், 1995ல் மூத்த வழக்கறிஞராகத் தகுதி உயர்வு பெற்றார். அந்த ஆண்டே ஆந்திர அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். பின்னர் ஆந்திர உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியானார்.

2007ஆம் ஆண்டில் குவஹாத்தி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டு, 2010ல் கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிடமாற்றம் பெற்றார்.

2011 அக்டோபர் 11ஆம் தேதி முதல் 7 ஆண்டுகளாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த அவர், இன்று தனது 65ஆவது பிறந்தநாளில் ஓய்வு பெறுகிறார்.

’கொலீஜியம் முறையானது வேண்டியவர்களுக்குப் பதவி தரும் முறை’ என்று 2015ல் நீதிபதி செலமேஸ்வர் தனது தீர்ப்பில் கூறினார். இந்தக் கருத்து பிற பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்துகளுடன் மாறுபட்டிருந்தது.

தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66ஏ-வின்படி இணையத்தில் விமர்சனங்களை வெளியிடுபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை – என்ற நிலையை மாற்றி, அந்தச் சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பு வழங்கிய, இரு நபர் குழுவில் ஒருவராக செலமேஸ்வர் இருந்தார்.

அந்தரங்க உரிமை என்பது அடிப்படை உரிமை, அதில் தலையிட அரசுக்கும் அதிகாரம் இல்லை – என்று ஆதாருக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கிய 9 நீதிபதிகள் குழுவில் செலமேஸ்வர் ஒருவர்.

கடந்த ஜனவரி 12ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து புகார் தெரிவிக்க செய்தியாளர் சந்திப்பை கூட்டி சர்ச்சையை ஏற்படுத்தினார். அப்போது செல்லமேஸ்வரர் உட்பட 4 உச்சநீதிமன்ற நீதிபதிகள் தலைமை நீதிபதிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.

இந்திய நீதித்துறையின் வரலாற்றில் பத்திரிகையாளர் சந்திப்பைக் கூட்டிய ஒரே நீதிபதி செலமேஸ்வர், இவரது செயல் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது.

கடந்த மார்ச் 18 அன்று இவர் கடைசி நாளாக நீதிபதியாகப் பணியாற்றினார். பின்னர் உச்சநீதிமன்றத்துக்கு விடுமுறை தொடங்கியது.

ஆந்திர உயர்நீதிமன்றம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பிரிவு உபசார விழாவில் பங்கேற்க மறுத்த செலமேஸ்வர், ஓய்வுக்குப் பின்னர் எந்த அரசுப் பணியையும் எடுத்துக் கொள்ள மாட்டேன் என அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com