’பிரஷாந்த் பூஷன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தவறானது’ - நீதிபதி கர்ணன் சிறப்பு பேட்டி

’பிரஷாந்த் பூஷன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தவறானது’ - நீதிபதி கர்ணன் சிறப்பு பேட்டி
’பிரஷாந்த் பூஷன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தவறானது’ - நீதிபதி கர்ணன் சிறப்பு பேட்டி

நீதிபதிகள் மீது ஊழல் குற்றம் சாட்டி நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டப்போது, அதனை வரவேற்று கர்ணனை தொடர்ச்சியாக விமர்சித்து வந்தவர் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன். தற்போது, அதே பிரஷாந்த் பூஷன்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே பா.ஜ.க பிரமுகரின் விலையுயர்ந்த பைக்கில் அமர்ந்திருந்ததை விமர்சித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ’குற்றவாளி’ என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார். நாளை  தண்டனைக்கான தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இந்நிலையில், நீதிபதிகளின் ஊழல்களை தொடர்ச்சியாக அம்பலப்படுத்திய முன்னாள் நீதிபதி கர்ணன் பிரஷாந்த் பூஷன் பிரச்சனையில் என்ன நிலைப்பாடு எடுத்திருக்கிறார், என்பதை அறிய அவரிடம் பேசினோம்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரஷாந்த் பூஷன் குற்றவாளி என்று தீர்ப்பு வெளியானதும் ’ஜஸ்டிஸ் ஃபார் கர்ணன்’ என்று ட்விட்டர் முழுக்க உங்களுக்கான ஆதரவுக் குரல்கள் ஒலித்ததை எப்படி பார்க்கிறீர்கள்?

உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று கடந்த 23.1.2017 அன்று பிரதமருக்கு கடிதம் எழுதினேன். அதனை, அவர் விசாரணை செய்ய உச்சநீதிமன்றத்திற்கு மாற்றினார். ஆனால், நீதிபதிகளின் ஊழல் வெளிவந்துவிடும் என்று பயந்து என்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தார்கள்.  மனநல சிகிச்சை எல்லாம் அளிக்கச் சொல்லி சிறையில் தள்ளினார்கள் என்பதை நாடே அறியும். அந்த சமயத்தில், நான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு சாட்டியது  மக்களுக்கு புரியவில்லை. நான்தான்  தவறு செய்துவிட்டதுபோல்  நினைத்துக்கொண்டார்கள். அதேமக்கள், இப்போது நீதிபதிகள் மீது ஊழல் குற்றம் சாட்டியதை புரிந்துகொண்டு என்பக்கம் உள்ள நியாயத்திற்காக குரல் எழுப்புகிறார்கள். நான் நீதிபதிகளின் ஊழலை வெளிக்கொண்டு வந்தபிறகுதான் ’நீதித்துறை ஊழலால் நிறைந்துள்ளது’ என்பதை எல்லோரும் வெளிப்படையாகவும் துணிச்சலோடும் பேசுகிறார்கள். நீதிபதிகள் ஊழல் செய்வதை துணிந்து அம்பலப்படுத்துவதற்கும், நான் துவக்கிவைத்தப் பாதைதான் காரணம் என்கிறார்கள். அதில், எனக்கு பெருமைதான். இப்போதும், கூறுகிறேன். நீதிபதிகள் லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. விசாரணை செய்தால் நிச்சயம் நிரூபிப்பேன்.

மற்றபடி, மக்கள் என்னை புரிந்துகொண்டு ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்வது சந்தோஷமான செய்திதான். இருந்தாலும்கூட நீதித்துறையில் இன்னும் லஞ்சம் வாங்குவது தொடர்ந்துகொண்டே இருப்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் குற்றம் சாட்டியபோதும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உங்கள் மீது பாய்ந்தபோதும் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் உங்களை கடுமையாக விமர்சித்திருந்ததை எப்படி பார்க்கிறீர்கள்?

பிரஷாந்த் பூஷன் ஒரு உயர்ந்த சாதி. உச்சநீதிமன்றம் உயர்ந்த சமூகத்தினரின் ஆதிக்கமாக உள்ளது. சாதி அடிப்படையில்  பிரஷாந்த் பூஷன், என்னை எதிர்த்தார். ஒரு பட்டியலின சமூத்தைச் சேர்ந்தவர் உச்சநீதிமன்றத்தை கேள்வியெழுப்பலாமா? என்பதுதான் அவரது எண்ணம்; நோக்கம் எல்லாமே. அன்று, அவர் நீதியை பார்க்கவில்லை. சாதியைத்தான் பார்த்தார். ஒரு நீதிபதிமீது குற்றம் சுமத்தினால் பாராளுமன்றத்திற்குதான் பரிந்துரைப்பார்கள். நீதிமன்றமே தண்டனை கொடுக்கக்கூடாது. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதிதான் நியமிக்கிறார். நீதிபதிகளை விசாரணை செய்யும் உரிமையும் தண்டனை கொடுக்கும் உரிமையும் உச்சநீதிமன்றத்திற்கு  கிடையாது. அதேபோல, மனநல பரிசோதனைக்கும் உத்தரவிட்டிருந்தார்கள். ஒரு சாதாரண நோயாளிக்கு மனநலப் பரிசோதனை என்றால்கூட, அவரின் மனைவியோ கணவரோ பெற்றோரிடமோ அனுமதியும் கடிதமும் வாங்கிய பிறகுதான் பரிசோதனை செய்யவேண்டும். ஆனால், எனக்கு அப்படி எதையும் கடைபிடிக்கவில்லை. சட்டத்திற்கே எதிரானது. எனக்கு சிறைதண்டனை விதித்ததே தவறு. அந்த சமயத்தில், எல்லோரும் ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டார்கள். பிரஷாந்த் பூஷன் என்னை விமர்சித்தபோது அதனை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எல்லோரும் அறிவாளிகளாக இருக்க முடியாது.

இப்போது, பிரஷாந்த் பூஷனே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கியிருக்கிறாரே? உங்கள் நிலைப்பாடு என்ன?

நான் ஒரு நீதிபதி. நீதியின் வழியே இதனைப் பார்க்கிறேன். பிரஷாந்த் பூஷன்மீது போடப்பட்டுள்ள அவமதிப்பு வழக்கு தவறானது. அன்று எனக்கு எதிராக பிரஷாந்த் பூஷன் பேசினார், என்பதற்காக நானும் அவருக்கு எதிராக பேசுவது அறமற்றது. நீதிபதிகள் செய்யும் தவறை சுட்டிக்காட்ட எல்லோருக்கும் உரிமை உண்டு. இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 14 அடிப்படை உரிமையை வழங்குகிறது. அதேபோல, சட்டப்பிரிவு 19(1) சி பேச்சுரிமை மற்றும் எழுத்துரிமை சுதந்திரத்தை வழங்குகிறது. அதனால், பிரஷாந்த் பூஷன்  தலைமை நீதிபதி பாப்டே குறித்து எழுதியது தவறே இல்லை. பாராளுமன்றம் எந்த சட்டத்தை இயற்றினாலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக ஒரு சட்டத்தை இயற்ற முடியாது. பிரஷாந்த் பூஷன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருப்பது இந்திய தாய்ச் சட்டத்திற்கே எதிரானது. நீதித்துறையில் நடக்கும் அநீதிகளை வெளிப்படுத்தத் தவறிவிடுவதால்தான் நீதித்துறை தவறான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது. வெளிப்படுத்த வெளிப்படுத்தத்தான் அநீதிகள் குறையும்.

இதுகுறித்து, பிரஷாந்த் பூஷனிடம் பேசினீர்களா?

நான் ஒரு நீதிபதி. நான் எதற்கு அவரிடம் போய் பேசவேண்டும்?

நீதி வழங்கும் பொறுப்பில் இருந்துவிட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது எப்படி இருந்தது உங்கள் மனநிலை?

சிறையில் அடைக்கப்பட்ட இரண்டு, மூன்று நாட்கள் மட்டும் மிகுந்த மனவேதனை அடைந்தேன். நாம் எவ்வளவுப் பெரிய பொறுப்பில் இருந்தோம். ஊழலை வெளிப்படுத்தியதற்காக சிறையில் அடைத்துவிட்டார்களே? என்று வருத்தப்பட்டேன். ஆனால்,  வெளியில் சென்றும் ஊழலை வெளிப்படுத்தவேண்டும் என்பதில் மட்டும் உறுதியோடு இருந்தேன். நான்  1330 திருக்குறளையும் பள்ளியில் படிக்கும்போது மனப்பாடமாகச் சொல்லி பரிசு வாங்கியவன். சிறையில் இருந்தபோது எல்லா குறளையும்விட, ”பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது” இந்த ஒரேக் குறளை அடிக்கடி சொல்லிக்கொள்வேன். அதாவது, ஆந்தையும் காக்கையும் இரவில் மரத்தில் தங்கிவிடும். ஆந்தைக்கு இரவில் மட்டும்தான் கண் தெரியும். ஆந்தை காக்கையைவிட பலமானது. அதனால், இரவு முழுக்க காக்கையை அடித்துக்கொண்டே இருக்கும். அதனால், காக்கை அந்தக் கிளைக்கும், இந்தக் கிளைக்கும் மாறி மாறி தன்னை தற்காத்து எப்போது பகல் விடியும் காத்திருக்கும். பகல் விடிந்ததும் ஆந்தைக்கு கண் தெரியாது. அப்போது, காக்கை ஆந்தையை தாக்கிவிட்டுத்தான் உணவைத்தேடிப் போகும். இறுதியில் வெல்வது காக்கைதான். அதேமாதிரி, சிறையில் துன்பத்தை அனுபவித்து வந்துவிட்டு, இப்போதும் தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்திக்கொண்டு வருகிறேன்.

உங்கள் கட்சி செயல்பாடுகள் எப்படி போய்க்கொண்டிருக்கிறது?

என்னுடையக் கட்சிக்கு  மறைமுகமான சப்போர்ட் கிடைத்துகொண்டிருக்கிறது. ஆனால், இதுவரைக்கும் ஒரு பொதுக்கூட்டமும் போடவில்லை. கடந்த வருடம் பிப்ரவரி மாதம்தான் கட்சி பதிவு ஆகியது. மார்ச் மாதம் சின்னமும் கிடைத்தது. ஆனால், அதற்குள் தேர்தல் அறிவித்துவிட்டார்கள். அந்தச் சூழலிலும் கட்சி சார்பாக 19 பேரை நிறுத்தியிருந்தேன். நானும் மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறனை எதிர்த்து போட்டியிட்டு 6 ஆயிரம் வாக்குகளுக்குமேல் வாங்கினேன். நான் நிற்கும் முதல் தேர்தல் என்பதால் 100 ஓட்டுகள் வரைதான் கிடக்கும் என்று நினைத்தேன். ஆனால், 6 ஆயிரம் வாக்குகளுக்குமேல் அளித்து அரசியலுக்கு வருவதை வரவேற்கிறார்கள் என்பதை உணர்த்திவிட்டார்கள். மேலும், எங்கள் கட்சியின் இன்னொரு வேட்பாளர் 17 ஆயிரம் வாக்குகளையும் மற்றொருவர் 8 ஆயிரம் வாக்குகளையும் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. என் கட்சி வளர்கிறது.

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?

234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த தயாராகி வருகிறேன். எனது முக்கிய நோக்கம் நீதித்துறையை சரிப்படுத்துவதுதான். நீதிதுறை சரியாக இருந்தால் மக்கள் நலன் பெறுவார்கள்.

பா.ஜ.க ஆட்சியில் நீதித்துறை எப்படி இருப்பதாக நினைக்கிறீர்கள்?

என் வழக்கே ஒரு உதாரணம். உலகத்திலேயே நான்தான் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு முதன்முறையாக தண்டனை கொடுத்தேன். ஆனால், எனது தண்டனையை ஏற்காமல், அந்த ஏழு நீதிபதிகளின் கோரிக்கையையும் ஏற்றது மத்திய அரசு. நான் கொடுத்த ஐந்து வருட தண்டனைப்படி அவர்கள்  நீதிபதியாக அமரக்கூடாது. எப்படி அமர்ந்தார்கள்? என்னை கைது செய்தால் மத்திய அரசுக்கு சாதகமாக செயல்படுவோம் என்று ஏழு நீதிபதிகளும் சரணடையவேதான்  கைது செய்யப்பட்டேன். பட்டியலினத்தவருக்கு ஒரு நீதி? உயர்ந்த சாதியினருக்கு ஒரு நீதியா?

அதேபோல, கர்ணன் ஓடிவிட்டார், வெளிநாட்டில் மறைந்துவிட்டார், தலைமறைவாகிவிட்டார் என்றெல்லாம் செய்திகள் வந்ததே அதெல்லாம் பொய் செய்திகள். நான் ஊழல் குற்றம் சாட்டிய ஏழு நீதிபதிகளும் உருவாக்கிய பொய் அது. ஆனால், நான் எப்போதும்போல வீட்டில் இருந்துகொண்டு வாக்கிங் போனேன். ஷாப்பிங் போனேன். சாலையில் இருக்கும் கடையில் கூழ் வாங்கிக்குடித்தேன். போலீஸ்காரர்களே வணக்கம் வைத்தார்கள். அப்படி இருக்கும்போது, எப்படி நான் தலைமறைவு என்று சொல்லமுடியும்? என் குடும்ப உறுப்பினர்களின் அனைத்து தொலைபேசி அழைப்புகளையும் ரெக்கார்ட் செய்தார்கள். நான் எங்கு இருந்தேன் என்பதும் அவர்களுக்குத் தெரியும். ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியை இவர்களால் கைதா செய்ய முடியாது? 43 நாட்கள் ஏன் காத்திருந்தார்கள்? தலைமறைவு என்பது என் துணிச்சலுக்கே இழிக்கு.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே குறித்து உங்கள் கருத்து என்ன?

தலைமை நீதிபதி பாப்டே நண்பரின் பைக்கில்கூட அமர்ந்திருக்கலாம். ஆனால், அது நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை குறைக்க வாய்ப்பிருக்கிறது. அவர், பைக்கில் அமர்ந்திருந்தது சரியா? தவறா என்ற கருத்துக்கு நான் வரவில்லை. ஆனால், பிரஷாந்த் பூஷன் ட்விட்டில், அதுகுறித்து எழுதியது தவறில்லை. அது மனிதனின் அடிப்படை உரிமை. நீதிபதி குறித்து பேசக்கூடாது என்றால், இது என்ன சர்வாதிகார நாடா? ஜனநாயக நாடு. பிரஷாந்த் பூஷன் நடந்த சம்பவத்தைத்தானே சொன்னார்?

ஊரடங்கு சூழல் எப்படி போகிறது?

நான் ஓய்வுபெற்றபிறகு சென்னை நுங்கம்பாக்கத்தில்தான் வசித்து வருகிறேன். கொரோனா என்பதால் அதிகம் வெளியில் செல்வதில்லை. மக்கள் எல்லோருக்கும் கொரோனா சவாலானது.  கொரோனா இல்லை என்று பலர் சொல்கிறார்கள். அதனையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இத்தனை பேர் இறக்கிறார்கள்.

- வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com