நிறம் மாறும் சினிமா 14 : சாதிய சினிமாக்கள் : ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் மற்றும் இளையராஜா
80-90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களாக இருந்த நால்வரின் கிராம சினிமாக்கள் குறித்து காண்போம்.
ரஜினிகாந்த் நடித்த ‘எஜமான்’
கொங்கு மண்டலத்தின் நிலப்பிரபு வானவராயன் (ரஜினி). அவர் மீது பகைமை கொள்ளும் இன்னொரு ஆதிக்கச்சாதி நிலப்பிரபு வல்லவராயன் (நெப்போலியன்). மக்களால் மதிக்கப்படும் வானவராயனுக்கு எதிராக வல்லவராயன் ஏராளமான சதி செய்கிறார். வானவராயன் மனைவியால் குழந்தை பெற முடியாத சூழல். தன் கணவர் ‘ஆண்மையற்றவர்’ என்ற பழிச்சொல்லுக்கு ஆளாகக்கூடாது என்று வானவராயனின் மனைவி தற்கொலை செய்துகொள்கிறார். வழக்கம்போல் வில்லனுடன் மோதல் என்று படம் முடிகிறது.
கமல்ஹாசன் நடித்த ‘தேவர் மகன்’
தென்மாவட்டத்தின் நிலப்பிரபு பெரியசாமி தேவரின் (சிவாஜி கணேசன்) மகன் சக்திவேல் (கமல்ஹாசன்) வெளிநாட்டில் படித்து கிராமத்துக்குத் திரும்புகிறார். தன்னுடன் படித்த, தெலுங்கு பேசும் பிறசாதிப்பெண்ணைக் காதலிக்கிறார். சக்திவேலின் குடும்பத்துக்கும் அவர் பங்காளியான மாயன் (நாசர்) குடும்பத்துக்கும் தீராப்பகை. பெரிய தேவர் இறந்தபிறகு அந்த பொறுப்பை ஏற்று ‘தேவர் மகன்’ - ஆகும் சக்திவேல், சந்தர்ப்பவசத்தால் உள்ளூர்ப் பெண்ணை மணம் முடிக்க நேரிடுகிறது. மாயன் குடும்பத்துடனான பகையையும் வன்முறையையும் சக்திவேல் தவிர்க்க நினைத்தாலும், தவிர்க்க முடியாமல் அது கொலையில் முடிகிறது.
விஜயகாந்த் நடித்த ‘சின்னக்கவுண்டர்’ :
பரம்பரை பரம்பரையாக 18 பட்டி கிராமங்களுக்கு பஞ்சாயத்து தீர்ப்பு வழங்கும் குடும்பத்தில் பிறந்தவர் சின்னக்கவுண்டர் (விஜயகாந்த்). இவர் வழங்கும் தீர்ப்பை, நீதிபதியே பாராட்டுகிறார். சின்னக்கவுண்டருடன் பகைமை கொண்டுள்ள, அவரது உறவினரான, இன்னொரு நிலப்பிரபு சக்கரை கவுண்டர் பல சதித்திட்டங்களைத் தீட்டுகிறார். அதை எப்படி இறுதியில் சின்னக்கவுண்டர் முறியடிக்கிறார் என்பதுதான் கதை.
சரத்குமார் நடித்த ‘நாட்டாமை’ :
பரம்பரை பரம்பரையாக பஞ்சாயத்து தீர்ப்பு சொல்லும் நாட்டாமை குடும்பத்துக்கு, இன்னொரு நிலப்பிரபு வில்லன் நெருக்கடிகளை ஏற்படுத்துவதும் அதை முறியடிப்பதும்தான் கதை.
இந்த நான்கு நிலப்பிரபுத்துவ சினிமாக்களுக்கும் உள்ள பொதுத்தன்மை, அரசியல் சட்டத்துக்கு விரோதமாக, ஆதிக்கசாதி நிலப்பிரபுக்கள் தலைமை தாங்கும் கிராமப் பஞ்சாயத்துகளை முதன்மைப்படுத்துவது. ‘சின்னக்கவுண்டர்’ திரைப்படத்தில் நீதிபதியே இந்த பஞ்சாயத்து தீர்ப்பை பாராட்டுகிறார்.
‘சாட்சிகளை செட்டப் பண்ணும் வேலை இங்கு இல்லை இல்லை
வக்கீலு பொய்ய சொல்லுற வாதம் இங்கு வந்ததில்லே
ஏடெடுத்து படிச்சதிலே எவருக்குமே குறஞ்சதிலே
வாக்கெடுப்பும் நடந்திலே எதிலும் எப்பவும் தோத்ததில்லே
வீதியிலே ஒரு வீரன் மனு நீதியிலே நல்ல சோழன்’ என்று சின்னக்கவுண்டரை இளையராஜா குரலில் பின்னணிப்பாடல் புகழ்கிறது.
இந்த நிலப்பிரபுத்துவ சினிமாக்களின் இன்னொரு பொதுவான ஒற்றுமை, நிலப்பிரபுக்களின் குடும்பங்களுக்கும் ஆளுமைக்கும் சவால் விடுவது, அதே சாதி, வர்க்கத்தைச் சேர்ந்த இன்னொரு நிலப்பிரபுதான்.
எது சாதிய சினிமா?
2000ல் தலித் சினிமா அலை உருவானபோது அதை விமர்சித்தவர்கள் ‘இவைதான் சாதிய சினிமாக்கள்’ என்று முத்திரை குத்தினர். ‘பிதுக்கப்பட்டவன், ஒதுக்கப்பட்டவன்’ என்று சாதி ஆணவத்தில் இந்த சினிமாக்களை எள்ளி நகையாடியவர்கள், ‘முந்தைய படங்களில் ஹீரோவும் ஆதிக்கச்சாதி; வில்லனும் ஆதிக்கச்சாதி. ஆனால் பட்டியலின சினிமாக்கள் வில்லன்களாக ஆதிக்கச்சாதியினரை சித்தரித்தன’ என்று குற்றம் சாட்டினர்.
இந்த திரைப்படங்களில் பட்டியல் இனத்தவர்கள் மற்றும் சேவைச்சாதிகளான வண்ணார், நாவிதர் போன்றோரின் நிலைதான் என்ன? இவர்கள் பெரும்பாலும் எந்த முக்கியத்துவமும் இல்லாமல் மௌனப்படுத்தப்பட்டிருப்பார்கள். ஆதிக்கச்சாதி நிலப்பிரபுகளுக்கு குடை பிடிப்பது, காலடி மண்ணைத் திருநீறாக இட்டுக்கொள்வது, கக்கத்தில் துண்டை இடுக்கி குனிந்து வணங்குவது, ‘நல்லநாள் பெரியநாள்’களில் தானம் பெற்றுக்கொள்வது – இவைதான் இந்தப் படங்களில் இவர்களின் இடங்கள், பணிகள். மேலும் நிலப்பிரபுக்களுக்கு மாய்ந்து மாய்ந்து விசுவாசம் காட்டுவதும் புகழ்பாடுவதும் இவர்களின் கூடுதல் பணிகள்.
ஒப்பீட்டளவில் மற்ற திரைப்படங்களைவிட கலைநேர்த்தியுடன் உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘தேவர்மகன்’. திரைக்கதை, நடிப்பு, இசை, வசனம், ஒளிப்பதிவு என எல்லா அழகியல் அம்சங்களும் நிறைவாக அமைந்த திரைப்படம். மேலும் முக்குலத்தோர் சாதியின் வன்முறை குறித்து சிறியளவில் விமர்சனத்தை முன்வைத்த படமும்கூட.
பெரியதேவரின் மகன் சக்திவேல், வெளிநாட்டில் படித்த, பங்க் ஸ்டைல் முடி வைத்த, பிறசாதிப்பெண்ணை மணம் முடிக்க நினைக்கும் நாகரிக இளைஞன். ஆனால் அவனையும் நிலப்பிரபுத்துவமும் சாதியமும் விழுங்கிவிடுகின்றன. ‘தேவர் மகனாக’ மாறும் சக்திவேலுக்கு ‘தேவர் பாவனைகள்’ குறித்தும் ‘பஞ்சாயத்து தீர்ப்புகள்’ குறித்தும் பெரிதாக எந்த விமர்சனமோ நெருடலோ இல்லை. ஆனால் அவன் பங்காளிச்சண்டை பகைமையையும் வன்முறையையும் தவிர்க்க நினைக்கிறான். ஆனாலும் அந்த முயற்சிகள், பாலாய் ஓடும் ரத்தத்தில் நனைந்தே முடிகிறது. ‘புள்ளை குட்டிகளைப் படிக்கவைங்கடா’ என்னும் அறிவுரையுடன் படம் நிறைவடைகிறது.
முக்குலத்தோர் சாதிகள் வன்முறையுடன் இருப்பது குறித்தும் வெற்றுப்பெருமிதம் குறித்தும் திரைப்படம் விமர்சனத்தை முன்வைக்கிறது. ஆனால் கமல்ஹாசனும் ‘தேவர் மகன்’ இயக்குநர் பரதனும் பார்வையாளர்களுக்கு எதைக் கடத்த விரும்பினார்களோ அதற்கு எதிரான விளைவையே ‘தேவர் மகன்’ திரைப்படம் உருவாக்கியது. மீசையும் அரிவாளும் தேவர் சாதியின் அடையாளங்களாக கொண்டாடப்பட்டன. தென்மாவட்ட விழாக்களில் ‘போற்றிப்பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே’ பாடல் பட்டியலினத்தை சேர்ந்தவர்களைச் சீண்டும்வகையில் இசைக்கப்பட்டு மோதல்கள் வெடித்தன. தொடர்ந்து பல்வேறு சாதிப்படங்களுக்கு வித்திட்டது ’தேவர்மகன்’.
தீவிரமாக பேசிய காதல் படம்!
இதேபோன்ற இன்னொரு விபத்தைச் சந்தித்த திரைப்படம் பாலாஜி சக்திவேலின் ‘காதல்’. 2004ல் வெளியான ‘காதல்’ திரைப்படம் சாதியம் குறித்த விமர்சனபூர்வமான உரையாடலைத் தொடங்கிவைத்த திரைப்படம். இன்னும் சொல்லப்போனால் அதற்கு ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான பட்டியலின சினிமாக்களுக்கான ஒரு திறப்பைத் தொடங்கிவைத்த திரைப்படம் என்றும் சொல்லலாம்.
வெள்ளந்தி மனிதர்களின் நகரமாக சித்திரிக்கப்பட்ட மதுரை, எப்படி சாதிய வன்மத்தால் ஊறிப்போயிருக்கிறது என்பதையும் சாதிய அடையாளம் பற்றி பொருட்படுத்தாமல் காதலர்களை நகரம் எப்படி அரவணைக்கிறது என்பதையும் ‘காதல்’ சித்திரித்தது.
குறிப்பாக மாற்றுத்திறனாளியாக வரும் நாயகியின் சித்தப்பா, வெளிப்படையாக அதிர்ந்து பேசுவதில்லை. நைச்சியமான குரலில் பேசி திருமணமான காதலர்களை அழைத்துவரும்போது அவர் காட்டும் முகமும் பெண்களிடம் உறைந்துபோயுள்ள சாதியமும் பார்வையாளர்களை அதிரவைத்தது.
துயரம் என்னவென்றால் ‘காதல்’ திரைப்படம் முன்வைத்த சாதி எதிர்ப்பு உரையாடலைப் புறம்தள்ளி, தென்மாவட்டம் என்றாலே தேவர் என்று திரைப்படங்கள் வெளியாகத் தொடங்கின. இந்த விபத்துக்கு ஆளான இன்னொரு திரைப்படம் அமீரின் ‘பருத்தி வீரன்’.
பருத்திவீரன் படத்தில் சொல்லப்பட்டது என்ன?
தேவர் சாதியைச் சேர்ந்த அப்பாவுக்கும் பன்றி மேய்க்கும் குறவர் சாதியைச் சேர்ந்த அம்மாவுக்கும் பிறந்த பருத்திவீரனை, அப்பா வழியில் முறைப்பெண்ணான முத்தழகு காதலிக்கிறாள். இந்த காதலை முத்தழகுவின் அப்பா ஏற்கவில்லை. சாதிமறுப்பை முன்வைத்த இந்த திரைப்படத்தின் முக்கியமான பிரச்சினை, பருத்திவீரனைப் பொறுப்பற்ற போக்கிரியாக சித்திரித்தது. வழக்கம்போல் ‘பருத்திவீரன்’ திரைப்படத்தில் பேசப்பட்ட சாதிய முரண் பின்னுக்குத் தள்ளப்பட்டு, பொறுப்பற்று அலையும் இளைஞனைப் பெண்கள் விரும்புவதான திரைப்படங்கள் அதிகம் உருவாக்கப்பட்டன.
முக்குலத்தோர் மற்றும் கவுண்டர் ஆகிய இரு பெரும்பான்மை ஆதிக்கச்சாதிகளை அடிப்படையாக கொண்ட திரைப்படங்களே அதிகம் உருவாக்கப்பட்டன. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சசிகலா அதிகார மையமாக உருவாகி, முக்குலத்தோர் ஆதிக்கம் அதிகரித்தது ஒரு காரணம். தமிழ்த்திரைப்படத் தயாரிப்பில் கொங்கு மூலதனம் அதிகரித்தது இன்னொரு காரணம்.
இங்கே பிரச்சினைகள் எங்கே எழுகின்றன என்றால் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சாதிகளின் வாழ்வியலைச் சித்திரிக்கும் திரைப்படங்கள் உருவானால் இந்த கேள்விக்கே இடமில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் முக்குலத்தோர் மற்றும் கவுண்டர் சாதிகளின் வாழ்வியலைச் சித்திரிக்கும் திரைப்படங்கள், அதிலும் பெருமிதங்களை முன்வைக்கும் திரைப்படங்கள் மட்டும் ஏன் உருவாகின்றன என்ற கேள்வி எழுகிறது.
‘தேவர் மகன்’, ‘மதயானைக்கூட்டம்’ போன்ற திரைப்படங்கள் முக்குலத்தோர் சமூகத்தில் நிலவும் வன்முறையை விமர்சிப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், அதேநேரம் இது ஒரே சாதிக்குள், பங்காளிகளுக்குள், சமநிலை கொண்ட நிலப்பிரபுக்களுக்குள் நிலவும் வன்முறையை விமர்சித்தனவே தவிர, சாதியப்படிநிலையில் தங்களுக்கு கீழ் உள்ள ஒடுக்கப்பட்ட சாதிகள்மீது முக்குலத்தோர் நிகழ்த்திய வன்முறை குறித்து பேசவில்லை என்பது கவனத்துக்குரியது.
உதாரணத்துக்கு 2012ல் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் வெளியான ‘சுந்தரபாண்டியன்’ திரைப்படத்தின் தொடக்கக்காட்சியே தங்கள் சாதிப்பெண்ணைக் காதலிக்கும் பிறசாதி இளைஞனை, ஆளரவமற்ற இடத்தில் ஆணவக்கொலை செய்வதில்தான் தொடங்குகிறது.
படத்தின் இறுதிக்காட்சியில் நண்பர்களின் கொலைமுயற்சியில் இருந்து தப்பிக்கும், முக்குலத்தோர் சாதி நாயகன், ‘’குத்துனாலும் நண்பனா இருந்தா வெளியே சொல்லக்கூடாது’’ என்கிறான். இங்கே ‘நண்பன்’ என்பதை ‘சொந்த சாதிக்காரன்’ என்றுதான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
சாதிய, நிலப்பிரபுத்துவ சினிமாக்களில் இளையராஜாவின் பங்களிப்பு குறித்தும் சுட்டிக்காட்ட வேண்டும்.
90களில் உருவான பட்டியலின எழுச்சியின்போது பட்டியலினத்தவர்கள் கலையின் அடையாளமாக, பட்டியலின ஆளுமையாக கொண்டாடப்பட்டவர் இசைஞானி இளையராஜா. பண்ணைபுரம் என்னும் ஒரு கிராமத்தில் பிறந்த இளையராஜா என்னும் பட்டியலினத்தவர், உலக அரங்குகளில் கொண்டாடப்படும் இசை ஆளுமையாக வளர்ந்ததை பட்டியலின மக்கள் தங்களுக்கான பெருமிதமாக உணர்கின்றனர். இசைஞானி இளையராஜா ஒரு தன்னிகரற்ற இசைமேதை. தமிழர்களின் அன்றாட வாழ்க்கையிலும் உணர்விலும் இரண்டறக் கலந்து, இசையால் ஆள்பவர். திரையிசையில் பறை உள்ளிட்ட இசைக்கருவிகளைக் கொண்டுவந்தவர். பின்னணியிசையிலும் பாடல்களிலும் மரபுகளை உடைத்து அவர் நிகழ்த்திய கலகத்தை, பலரும் மிக நுட்பமாக விளக்கியுள்ளனர்.
பட்டியலினத்தவர்களின் பெருமிதமாக கொண்டாடப்படும் இளையராஜா என்னும் மேதையின் இசை, சாதிய, நிலப்பிரபுத்துவ திரைப்படங்கள் பார்வையாளர்களிடம் ஏற்பைப் பெற உதவின என்பது ஒரு முரண்தான். தேவர், கவுண்டர் புகழ் பாடும் இனிய பாடல்களைத் தன் இசை மேதமையால் அவர் உருவாக்கித் தந்தார். பட்டியலினத்தவர்களைச் சீண்டும்வகையில் இசைக்கப்பட்ட ‘தேவர் காலடி மண்ணே’ அவர் இசையால் உருவான பாடல்தான்.
தனிப்பட்ட முறையில் இளையராஜா, பட்டியலின அடையாளத்தில் தன்னை முன்னிலைப்படுத்துவதை விரும்புவதில்லை. தன்னை பட்டியலினத்தவராக அடையாளப்படுத்தியதற்காக, பேராசிரியர் கே.ஏ.குணசேகரனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். தனிப்பட்ட முறையில் இந்து மத சம்பிரதாயங்களின் மீது நம்பிக்கை கொண்டவராகவே தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார். அது அவரது தனிப்பட்ட நம்பிக்கை என்றே கொள்ளவேண்டும்.
ஆனால் அதைத்தாண்டி அவர் இந்துத்துவச் சாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அது விமர்சனத்துக்குள்ளாகிறது. அம்பேத்கர் குறித்து பேசவே பேசாத இளையராஜா, மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்ட புத்தகத்துக்கு முன்னுரை எழுதுவது, மோடியைப் புகழ்ந்து பேசுவது, பா.ஜ.கவால் இளையராஜாவுக்கு ராஜ்யசபா எம்.பி பதவி வழங்கப்பட்டது, இளையராஜாவின் இசை பயிற்சிமையத்தை மோடி திறந்துவைப்பது ஆகியவை விமர்சிக்கப்படுகின்றன.
இளையராஜா மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படும்போது சில பட்டியலின எழுத்தாளர்கள் ‘பிறப்பின் அடிப்படையில் ஒரு பட்டியலினத்தவர் என்பதால்தான் இளையராஜா மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒரு பட்டியலினத்தவர் என்றால் அவர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நிர்ப்பந்திக்கின்றனர்’ என்றெல்லாம் சொன்னாலும், அவர்களும் இளையராஜாவை பட்டியலினத்தவர் என்ற பார்வையில் இருந்துதான் ஆதரிக்கின்றனர்.
மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு இளையராஜா எழுதிய முன்னுரைக்கு விமர்சனங்கள் வந்தபோது, இயக்குநர் பா.இரஞ்சித், இளையராஜா குறித்து தலித் சுப்பையா எழுதிய பாடலை, பாடகர் அறிவைக் கொண்டு பாடவைத்து காணொலி உருவாக்கினார். (தலித் சுப்பையா தன் இறுதிக்காலத்தில் மார்க்சிய அரசியலை ஏற்றுக்கொண்டு தன் பெயரை ’லெனின் சுப்பையா’ என்று மாற்றிக்கொண்டார் என்பது வேறு விஷயம்)

