6 வருட இடைவெளிக்குப்பின் நாவல் வெளியிட்ட எழுத்தாளர்... வரிசைகட்டிய வாசகர்கள்! யார் இந்த முரகாமி?

“உங்களுக்கு எது பிடிக்கும் என்பதை நீங்கள் தெரிந்து வைத்திருக்கவேண்டும். இல்லையென்றால் நீங்கள் உங்களை இழந்துவிட்டீர்கள் என்றே பொருள்” - எழுத்தாளர் ஹருகி முரகாமி
haruki murakami - The City and Its Uncertain Walls
haruki murakami - The City and Its Uncertain WallsTwitter

பிரபல ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முரகாமி (Haruki Murakami) எழுதிய “The City and Its Uncertain Walls” என்ற நாவல் நேற்று முன் தினம்தான் (ஏப்ரல் 13) அச்சு மற்றும் டிஜிட்டல் வடிவங்களில் ஷின்சோஷா பப்ளிஷிங் கோ என்ற பதிப்பீட்டின் மூலம் அந்நாட்டில் வெளியானது. வெளிவந்த ஒரு சில நாட்களிலேயே 3 லட்சம் பிரதிகள் விற்று தீர்த்து சாதனையை இந்நாவல் புரிந்துள்ளதாக சொல்லப்படுகிறது! இதன் அடுத்த பிரதிகள் இன்னும் சில நாட்களில் வெளிவந்துவிடும் என்று எதிர்பார்கின்றனர் இவரது வாசகர்கள்.

The City and Its Uncertain Walls
The City and Its Uncertain Walls

இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால், இப்புத்தகத்துக்கு டிஜிட்டல் வெர்ஷன் வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லையாம். அச்சில் படிக்கவே அலைமோதுகிறார்கள். இதற்காக அம்மக்கள் ஒரு இடத்தில் குழுமிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் வியப்புக்குள்ளாக்கியது!

யார் இந்த ஹருகி முரகாமி? அப்படி அந்த The City and Its Uncertain Walls நாவலில் என்னதான் இருக்கிறது? இந்த அளவுக்கு அது விற்றுத்தீர்க்க என்ன காரணம்? சுவாரஸ்ய பின்புலத்தை பார்ப்போம்...!

haruki murakami
haruki murakaminewyorker

முரகாமி இதற்கு முன் "Norwegian Wood" "Kafka on the Shore" "1Q84" "Killing Commendatore" உட்பட டஜன் கணக்கிலான பல நாவல்கள், சிறுகதைகள் அடங்கிய தொகுப்புகள் மற்றும் புனைகதைகள், கட்டுரைகளை எழுதி குவித்தவர். இவை அனைத்துமே ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு பல பிரதிகள் விற்கப்பட்டுள்ளன.

haruki murakami - The City and Its Uncertain Walls
haruki murakami - The City and Its Uncertain Walls

மேற்கூறிய இவரது படைப்புகளில், 1Q84 என்ற நாவல் 1000 பக்கங்கள் கொண்ட மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டது. இதை எழுதுவதற்கு மூன்று வருடங்கள் எடுத்துக்கொண்டாராம் முரகாமி. இது வெளியான முதல் மாதத்திலேயே ஜப்பானில் ஒரு மில்லியன் பிரதிகள் விற்று தீர்த்தது குறிப்பிடத்தக்கது.

ஹருகி முரகாமி தான் ஒரு அறிமுக எழுத்தாளராக இருந்தபொழுது (1980 களில் என சொல்லப்படுகிறது) ”walled city” என்ற தலைப்பில் 'The City and Its Uncertain Walls' என்ற தலைப்பில் இப்போது எழுதிய நாவலின் முன்கதையை எழுதியுள்ளார். அக்கதை ஏனோ அவருக்கு திருப்தி அளிக்காமல் இருந்துள்ளது. அதனால் அப்போதே அதை புத்தகமாக மாற்றும் எண்ணத்தை கைவிட்டிருக்கிறார். இருந்தபோதிலும், அதில் சில மாற்றங்களை கொண்டுவந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தவர், நாற்பது ஆண்டுகள் கழித்து தற்போது (கொரோனா காலகட்டத்தில்) இக்கதையை புதுப்பிக்க ஆரம்பித்திருக்கிறார்.

அதன்படி கடந்த ஜனவரி 2020ல் எழுதத் தொடங்கி டிசம்பர் 2022 ல் காலகட்டத்தில் இதை எழுதி முடித்துள்ளார். “The City and Its Uncertain Walls” என்று பெயர்மாற்றம் செய்யப்பட்ட இந் நாவலை மூன்று தொகுப்பாக வெளியிட்டுள்ளார். இதன் ஆங்கில வடிவாக்கம் இன்னும் எழுதப்படவில்லை. கடைசியாக இவருக்கு, கடந்த 2017 ஆம் ஆண்டு "Killing Commendatore" என்ற நாவல் வெளியாகி, சிறந்த விற்பனையை பெற்றிருந்து குறிப்பிடத்தக்கது!

சரி, விஷயத்துக்கு வருவோம்... The City and Its Uncertain Walls நாவலில் அப்படி என்னதான் இருக்கிறது? இதன் கதையம்சம்தான் என்ன? இதோ...

The City and Its Uncertain Walls நாவலின் கதை சுருக்கம்:

(ஜப்பானிய மொழியில் மட்டுமே இந்நாவல் வந்திருப்பதால், கதைச்சுருக்கம் குறித்து அந்நாட்டவர்கள் ஆங்கிலத்தில் கூறுவதன் பிரதியே இங்கு உள்ளது)

1980-களில் இக்கதையின் தொடக்கமாக இவர் எழுதிய முன்கதையில் சொல்லப்படும் விஷயங்களென இரண்டு சொல்லப்படுகிறது. அதன்படி ஒருசாரார் அதை ‘கதாநாயகர்கள் சுவர், கிணறு அல்லது குகை வழியாக வேறொரு உலகத்துக்கு பயணிக்கின்றனர். அதாவது ஒரு சுவர் வழியாக சறுக்கி, உலகின் மறுபக்கத்திற்குச் சென்று அங்கிருந்து திரும்பி வருவதை உள்ளடக்கியது அக்கதை’ என சொல்கின்றனர். மற்றொரு தரப்பில், அந்த முதல் பகுதியில் ‘கதை சொல்லி உயரமான மதில்களை கொண்ட நகரத்துக்கு வருகிறான். அவனது பால்ய கால சகி, தனது சுயம் இந்த புதிர்வட்ட பாதை கொண்ட சுவர்களில் வாசம் செய்வதாக தெரிவித்திருப்பாள்’ என்று சொல்கின்றனர்.

தனது முதல் கதையை இவர் மறுசீரமைத்து எழுதியன் பின்னனியில், முதல் பகுதில் அவருக்கு முழுதிருப்தி ஏற்படவில்லை என சொல்லப்படுகிறது. (முரகாமியின் சொற்களில் Half Backed).

இப்போது எழுதிய இந்த நாவலின் முதல் பாகம் (முன்னெழுதிய கதையிலிருந்து) திருத்தியெழுத்தப்பட்டும் இரண்டாம் பாகத்தில், கதாநாயகனுக்கு ஃபுகுஷிமா என்ற பகுதியில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் ஒரு நூலகத்தின் தலைவராக வேலை கிடைக்கிறது என்று இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இதில் இரண்டாம் பாகத்தில் அவர் கதைசொல்லி சில அமானுஷ்ய விஷயங்களை சந்திக்கிறார். அதன் பின் நடக்கும் சம்பவங்கள் என்ன என்று கதை இறுதிப் பகுதிக்கு செல்கிறது.

இந்தக் நாவலை முரகாமி எழுதும் போது, தன்னை சுற்றியுள்ள சுவர்களின் அர்த்தத்தைப் பற்றி தான் யோசித்துக்கொண்டே இருந்ததாகவும், அதனுள் செல்பவர்கள் (கற்பனையாக) மற்றும் உள்ளே இருப்பவர்களைப் பொறுத்து சுவர்கள் வெவ்வேறு அர்த்தங்களையும் நோக்கங்களையும் கொண்டு செல்கிறது என்று யோசித்ததாக பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

எனது கதைகளில் பல விநோதமான விஷயங்கள் இருக்கும். மேலும் இருண்ட பக்கங்கள் இருக்கும். ஆனாலும் எனது கதைகள் எப்பொழுதும் நேர்மறையாகவே இருக்கும். எந்தவிதத்திலும் வாசகருக்கு அவநம்பிக்கையை தராது

முரகாமி

முரகாமியின் கடந்தகாலம்:

இவரது நாவல்களில் வரும் குழந்தை கதாபாத்திரங்கள் பெரும்பாலும் மகிழ்ச்சியற்ற குழந்தை பருவங்களை கொண்டிருப்பதாகவே இருக்கும். இதற்கு அவர் கூறும் காரணம், “இக்குழந்தை பருவம் எனது பிரதிபலிப்பே ஆகும்... குழந்தை பருவத்தில் நான் ஒருவித மன அழுத்தத்துக்கு ஆளானேன். என் பெற்றோர்கள் ‘நான் இப்படி தான் இருக்கவேண்டும்’ என்று எனக்கு சில கட்டுப்பாடுகள் விதித்திருந்தார்கள். அதனாலேயோ என்னவோ... நான் அவர்கள் நினைத்தது போல வளரவில்லை. பள்ளியில் நான் நன்றாக படிக்கவில்லை, ஆசிரியர் சொல்வதை கேட்கமாட்டேன். நான் என்ன செய்ய விரும்புகிறேனோ அதை தான் செய்தேன். நான் வளர்ந்ததும், சுதந்திரமாக இருக்க விரும்பினேன். அதனால் ஒரு ஜாஸ் கிளப்பை திறந்தேன்” என்கிறார். இவரது மனைவி யோகோ தகாஹஷி தான் இவரது முதல் வாசகியாம்! அவர் சொல்லும் அனைத்து கருத்தைகளையும் தான் வரவேற்பேன் என்றும், தன் மனைவி என்றும் தன் தோழியே என்றும் தன் பேட்டிகளில் கூறியிருக்கிறார் முரகாமி.

இவரின் முதல் நாவலான ”Hear the wind sing” என்ற நாவல் (1979ம் ஆண்டு வெளியானது) ஜப்பானில் புதிய எழுத்தாளர்களுக்கான பரிசை அப்போதே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல இவரின் ”Norwegian Wood” என்ற நாவல் ஜப்பானில் 3 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றிருந்ததாம்.

முரகாமி தன்னைப்பற்றி ஒருபேட்டியில் கூறுகையில் ”நான் எழுத்தாளராக மாறியதற்கு இதுதான் காரணம் என்று குறிப்பிட்டு சொல்ல எதுவும் இல்லை. ஏதோ நடந்தது, ஏதோ எழுதினேன்... அவ்வளவு தான். ஆனால் இப்போது நான் ஒரு வெற்றிகரமான எழுத்தாளன்தான்” என்றிருக்கிறார். இவருக்கு புத்தகம் படிக்கவும், இசை கேட்கவும் மிகவும் பிடிக்குமாம். அதே போல் செல்லப்பிராணியாக பூனை வளர்க்க பிடிக்குமாம்.

என்னை போலவே, உங்களுக்கு எது பிடிக்கும் என்பதை நீங்கள் தெரிந்து வைத்திருக்கவேண்டும். இல்லையென்றால் நீங்கள் உங்களை இழந்துவிட்டீர்கள் என்றே அர்த்தம்
முரகாமி

ஜப்பானில் இவரது நாவல்களை போலவே இவரது கருத்துகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் தனது எழுத்துக்கள் மூலம் தேசிய விவாதங்களிலும் இவர் ஈடுபடுகிறார். டோக்கியோ சுரங்கப்பாதையில் 1995 ஆம் ஆண்டு சாரின் வாயு தாக்குதல் (Tokyo Sarin Gas Attack) ஏற்பட்டதையடுத்து அதன் பின்னணிகுறித்து பத்திரிகைகளின் கட்டுரை தொகுப்பு எழுதினார். அது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

இவர் பல மேற்கத்திய நாவல்களை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்திருந்தாலும் - அவருக்கு பிடித்த நாவலாசிரியர் Raymond Chandler-ன் படைப்புகள் தான் என்றுள்ளார்.

செப்டம்பர் 11ல் அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதலை, ஒரு நாவலாசிரியரின் கண்ணோட்டத்தில் இவர் பேசியது சற்றே அவரை விமர்சனத்துக்குள்ளாக்கியது. அதன்படி அவர், அந்நிகழ்வை "வாவ்... இது ஒரு அதிசய நிகழ்வு... இரண்டு விமானங்கள் கட்டிடங்கள் மீது மோதிய அந்த வீடியோக்களை பார்க்கும் போது எனக்கு ஒரு அதிசயம் போல் தெரிந்தது. அழகாகவும் இருக்கிறது” என்றார். பின் அதையே அவர் “ஆனால் இது அரசியல் ரீதியாக சரியானது இல்லைதான். என்றாலும், பரிதாபங்கள், சோகங்களையும் தாண்டி இதில் ஒருவித அழகு இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்” என்றார்.

ஒரு நல்ல எழுத்தாளன் நல்ல படைப்பை எப்படி கொண்டு வரவேண்டும்?

“நான் ஒரு நாவல் எழுதுவதற்கு முன், எனது மனக்கதவு திறக்க எனக்கு அதீத வலிமை வேண்டும். ஒவ்வொரு நாளும் நாவல் எழுதுவதற்கு மேசையில் உட்கார்ந்து கணினியை வைத்து மனக்கதவை நான் திறந்தேன் என்றால், என்னுடன் நீங்களும் (வாசகர்) பயணித்து அந்த பெரிய, கனமான கதவை தாண்டி மற்றொரு அறைக்குள் செல்ல வேண்டும். உருவகமாக, நிதர்சனமாக, நிச்சயமாக நீங்கள் அறையின் இந்தப் பக்கம் திரும்பி வர வேண்டும். பிறகு நீங்கள் கதவை மூட வேண்டும். எனவே கதவைத் திறப்பதும் மூடுவதும் உண்மையில் உடல் வலிமை சார்ந்தது. அதனால் அந்த வலிமையை நான் இழந்தால், என்னால் ஒரு நாவலை எழுத முடியாது. சில சிறுகதைகளை தான் எழுத முடியும். அதே போல் நான் எழுதும் நாவல் மக்கள் விரும்பும் நாவலாக இருக்கவேண்டும். இல்லை என்றால் அவர்கள் சலிப்படைவார்கள். ஆக ஒரு நல்ல எழுத்தாளனாக, நான் வாசகருடன் எழுதும்போதே இப்படி பயணிக்க வேண்டும்” என்றிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com