ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வழங்கக் கோரி இன்று தமிழகம் முழுவதும் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது.
மெரினா பேரணியில் ஆரம்பித்த போராட்டம்
ஜல்லிக்கட்டை பாதுகாக்க வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் ஜனவரி 8-ஆம் தேதி பிரமாண்ட பேரணி நடைபெற்றது. கட்சி சார்பில்லாமல் சமூக வலைதளம் மூலம் ஒன்று திரண்ட இளைஞர்கள் இந்த பேரணியை நடத்தினர். கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், ஐடி நிறுவன பணியாளர்கள் என சுமார் 5 ஆயிரம் பேர் இந்த பேரணியில் பங்கேற்றனர். இதனால் மெரினாவே ஸ்தம்பித்தது. மெரினாவில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனையடுத்து பொங்கல் நெருங்கிய நிலையில், மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்றி எப்படியாவது ஜல்லிக்கட்டிற்கு அனுமதி கொடுத்து விடும் என்று நினைத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்து. இதனால் தடையை மீறி ஆங்காங்கே ஜல்லிக்கட்டு நடந்தது.
தடையை மீறி ஜல்லிக்கட்டு
பொங்கலுக்கு மறுதினத்தில் தான் பாலமேட்டில் ஜல்லிக்கட்டி போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு முறையான அனுமதி இல்லையென்றாலும், தடையை மீறி, மக்கள் காளைகளை அவிழ்த்து விட்டு ஜல்லிக்கட்டை நடத்தினர். போலீசார் அவர்களை லேசான தடியடி நடத்தி கலைத்தனர். பாலமேடு மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அன்றைய தினம் (ஜனவரி 15) தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தது.
உலகப் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூரில் காணும் பொங்கல் தினமான நேற்று தான் (ஜனவரி 16) ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் தடை காரணமாக ஜல்லிக்கட்டு நடைபெறா முடியாமல் போராட்டக் களமானது அலங்காநல்லூர். 21 மணி நேரம் தொடர்ச்சியாக போராட்டத்தை நடத்தினார்கள் இளைஞர்கள்..
ஜனவரி 16, காலை 6 மணி: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் ஒருங்கிணையத் தொடங்கினர்.
காலை 7.30 மணி: வாடிவாசல் அருகே அமர்ந்து இளைஞர்களும் மாடுபிடி வீரர்களும் போராட்டம் தொடங்கினர்
காலை 9 மணி: இளைஞர்கள், பெண்களின் கூட்டம் அதிகரித்து போராட்டம் தீவிரம்
காலை 11.30 மணி: அமீர், ஹிப் ஹாப் ஆதி, ராஜசேகர் ஆகியோர் போராட்டத்தில் இணைந்தனர்
பகல் 12 மணி: அலங்காநல்லூர் சாலையில் இளைஞர்கள் சிலர் பேரணியாகச் சென்றனர்.
பிற்பகல் 3 மணி: போராட்டக் களத்தில் இணைய முயன்ற சில இளைஞர்கள் கைது.
மாலை 6 மணி: பாதுகாப்பு பணிக்கு காவல்துறையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
ஜனவரி 16: ஊர்மக்களின் ஆதரவோடு இரவு முழுவதும் வாடிவாசல் அருகில் அமர்ந்து போராட்டம்
ஜனவரி 17, காலை 6.30 மணி: அனைவரும் கலைந்து செல்ல 10 நிமிடங்கள் அவகாசம் அளித்தது காவல்துறை
காலை 6.45 மணி: போராட்டக் களத்திலிருந்த 240 பேரும் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டனர்.
கிராம மக்கள் சாலைமறியல்
கொட்டும் பனியிலும் விடிய விடிய 21 மணி நேரமாக தொடர்ச்சியாக போராட்டம் நடத்திய போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த காவல்துறையினருக்கு எதிர்ப்பு தெரிவித்து அலங்காநல்லூர் கிராம மக்கள் பேரணியாக சென்று சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இதனை ஏற்காத கிராம மக்கள், போராட்டக்காரர்களை விடுதலை செய்யக் கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும் தொடர் கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் அதிகமான பெண்களும் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளும் களத்தில் உள்ளனர்.
மெரினாவில் போராட்டம்
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டிற்காக போராடியவர்களை கைது செய்தததற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் சென்னையிலும் போராட்டம் வெடித்தது. சென்னை மெரினாவில் ஒன்றுதிரண்ட இளைஞர்கள், போராட்டக்காரர்களை உடனடியாக விடுவிக்ககக் கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் தங்களது போராட்டங்களை தொடர்ந்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் போராட்டம்
அலங்காநல்லூர், மெரினா போராட்டங்கள் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது. அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வலியுறுத்தி கோபிசெட்டிபாளையம் பெரியார் திடலில் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மேலும் சேலத்திலும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம் தொடங்கியது.
38 பேர் விடுவிப்பு
இதனிடையே, அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட 240 பேரில் 38 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி தெரிவித்துள்ளார்.