“ஜல்லிக்கட்டு” களத்திற்குப் பின்னணியில் நடப்பதென்ன?
பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டது. சென்னையிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் சாலைகள் பேருந்துகளின் நெருக்கடியால் அலைமோதத் தொடங்கிவிட்டன. பொங்கல் என்றால் அனைவருமே தங்கள் சொந்த ஊருக்கு சென்றுவிடுகின்றனர். சென்னை அல்லது வெளிமாநிலங்கள், ஏன் ? வெளிநாடுகளில் இருப்பவர்கள் கூட, பொங்கலுக்கு ஊர் திரும்புவது வழக்கம். இதற்கு காரணம் தொடர் விடுமுறை மட்டுமல்ல. பாரம்பரியக் கொண்டாட்டங்களும் தான். குறிப்பாக கிராமப் புறங்களில் மட்டும் சிறப்பாக நடைபெறும் ஜல்லிக்கட்டு.
ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக மட்டுமல்லாமல், உணர்வோடு கலந்த ஒன்றாக இருக்கிறது. ஜல்லிக்கட்டு தடையான போது, மெரினா புரட்சி உட்பட தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட இளைஞர்களின் போராட்டத்தை அதற்கு உதாரணமாக கூறலாம். 6 மாத குழந்தை முதல் 60 வயது கடந்த முதியவர்கள் வரை களத்தில் இறங்கி, ஜாதி, மத பேதமின்றி போராடிய அனைவரின் ஒட்டு மொத்த குரலாக ஒலித்தது ‘ஜல்லிக்கட்டு’. ஜல்லிக்கட்டு போட்டிகள் என்பது விளையாட்டிற்காக மட்டும் நடத்தப்படாமல், மாடுகளின் பாரம்பரியத்தை கட்டிக்காக்க முன்னோர்கள் வகுத்த வழியாக பார்க்கப்படுகிறது.
கிராமப்புரங்களை பொருத்தவரையில் ஜல்லிக்கட்டு என்பது மானம் சார்ந்த விளையாட்டாக கருதப்படுகிறது. அதில் மாடுகள் வெற்றி பெறுவதும், மாடுகளை பிடிப்பதையும் கெளரவமாக மக்கள் நினைக்கின்றனர். அதேசமயம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளும், வீரர்களும் எத்தனை மாதங்கள் பயிற்சியும், கடின கட்டுப்பாடுகளையும் பின்பற்றுகின்றனர் என்பது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.
ஜல்லிக்கட்டில் களம் காணும் காளைகளுக்கு நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, வீரர்களுடன் விளையாட செய்வது உள்ளிட்ட பயிற்சிகளும், இவற்றுடன் நாள்தோறும் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் நடை பயிற்சியும் அளிக்கப்படுகிறது. பயிற்சிகள் மட்டுமின்றி காளைகளின் உடல் கட்டுமஸ்த்தாக இருக்க வேண்டும் என்பதற்காக, அவைகள் வழக்கமாக உண்ணும் உணவுகளுக்கு பதிலாக போட்டிகளில் பங்கேற்கும் காலங்களில் பேரிச்சம்பழம், பருத்தி விதை தலா 2 கிலோ, பாதம் பருப்பு, நாட்டு கோழி முட்டை போன்ற ஊட்டசத்தான உணவுகள் மட்டுமே வழங்கப்படுகிறது. ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வீரர்களைப் போல ஒவ்வொரு காளையும், காளையை அடக்கும் வீரரும் தங்களை தயார் படுத்தினால் மட்டுமே களத்தில் வெற்றியை வீரத்துடன் பெற முடியும் என்பதே சாத்தியம்.
எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமென்றால் பாடிபில்டிங் போட்டிகளில் பங்கேற்கும் ஆண்களை போல காளைகளுக்கும் முறையான, கடுமையான பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது. காளைகளைப் போலவே அவற்றின் கொம்புகளும் ஜல்லிக்கட்டுக்காக கூர்மையாகவும், வலிமையாகவும் மெருகேற்றப்படுகின்றன. கொம்புகளை தயார் செய்யும் போது, காளைகள் கொம்புகளால் மண்ணை குத்தி விசுறுவது தனி அழகுதான். இவ்வாறு தயார் ஆகும் காளைகள் ஜல்லிக்கட்டு களத்தில் சுமார் 100 கி.மீ வேகத்தில் பாய்ந்து ஓடுகின்றன. காளைகளின் வேகத்தை பார்க்கும் போதே களத்தில் பல வீரர்கள் மிரண்டு விடுவது உண்டு. இந்த அதிவேக ஓட்டத்தினால் அவற்றின் காலில் சுளுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், மூச்சு வாங்கி காளைகள் சோர்ந்து விடக்கூடாது என்பதற்காகவும் தான் நீச்சல் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டு காளைகளை அடக்க தயாராகும் வீரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி, காளைகளின் பயிற்சிக்கு சற்றும் குறைந்ததல்ல. ஜல்லிக்கட்டுக்காக தயாரகும் அவர்கள் செயற்கையாக வாடி வாசல் உருவாக்கி காளைகளை அடக்க பயிற்சி மேற்கொள்கின்றனர். முறையாக தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே ஜல்லிக்கட்டு களத்தில் காளையுடன் விளையாட முடியும். ஜல்லிக்கட்டுக்கு செல்லும் வீரர்கள் அதற்கான உடல் நலத்தை பெற உணவுகளில் மாற்றம் மற்றும் முழுஉடல் பயிற்சி உட்பட காளைகள் மேற்கொள்ளும் அதே பயிற்சிகளை பின்பற்ற வேண்டியுள்ளது.
அத்துடன் பயமின்றி காளைகளை அடக்க மனதை ஒருநிலைப்படுத்தும் யோகாசனம் மிக முக்கியமானது. புதிதாக களம் காணும் இளைய வீரர்கள், ஜல்லிக்கட்டு போட்டிகளில் நீண்ட காலமாக பங்கேற்கும் வீரர்களை கொண்டு காளைகளை அடக்குவதற்கான நுணுக்கங்களையும், செயல் முறைகளையும் கேட்டு தெரிந்துகொள்கின்றனர். காளைகளின் தலை அசைவு மூலம் அடுத்து நடக்கப்போவதை உணர்வது, எந்த நேரத்தில் மதில் மீது பாய வேண்டும் என கணிப்பது, எந்த நேரங்களில் விலக வேண்டும் போன்ற நுணுக்கங்கள் களத்தில் கைகொடுக்கும்.
பயிற்சிகளே இல்லாமல் காளைகள் மற்றும் வீரர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்கின்றன என்கிற குற்றச்சாட்டுக்கு நேர் எதிர்மறையாக, முற்றிலும் முறையான பயிற்சியை மேற்கொண்ட பின்னரே, காளைகளும் வீரர்களும் களத்தில் இறங்குகின்றனர் என்பதே மாற்றுக்கருத்தில்லாத உண்மை. ஜல்லிக்கட்டு என்றாலே நினைவுக்கு வருவதில் மதுரையும் ஒன்று. அதிலும் அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு என்றாலே அதைக்காண பெருங்கூட்டம் வருகை தரும். ஆனால் இத்தகைய ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகள் இருப்பது வருத்தத்திற்குரிய ஒன்று தான். அதிலும் குறிப்பிட்ட சமூகத்தினர் தான் மாடுகளை பிடிக்க வேண்டும், ஒரு சமூகத்தினர் மாட்டை மற்றொரு சமூகத்தினர் பிடிக்கக்கூடாது, களத்தில் விளையாட சமூகத்தை முன்னிலை படுத்துவது இதெல்லாம் ஜல்லிக்கட்டு என்ற பாரம்பரியத்திற்கே சங்கடமான ஒன்றாகும்.
இதனால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த ஒய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் மூன்று வழக்கறிஞர்களைக் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அமைத்திருப்பது, ஜல்லிக்கட்டு என்ற புரட்சி வார்த்தைக்கு தலைகுனிவான ஒன்று. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சாதி, மத பேதமின்றி போராடிய மக்கள் தற்போது ஏன்? அந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சாதி என்ற குறுகிய வட்டத்தில் முடங்கிக்கிடங்கின்றனர் என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வியாகவும், வருத்தமாகவும் உள்ளது.