எதிர்பாராத வாய்ப்பு முதல் 'ஜெய் பீம்' வரை... செங்கேணியாக வாழ்ந்த லிஜோமோள் பின்புலம்!

எதிர்பாராத வாய்ப்பு முதல் 'ஜெய் பீம்' வரை... செங்கேணியாக வாழ்ந்த லிஜோமோள் பின்புலம்!
எதிர்பாராத வாய்ப்பு முதல் 'ஜெய் பீம்' வரை... செங்கேணியாக வாழ்ந்த லிஜோமோள் பின்புலம்!

'ஜெய் பீம்' படத்தில் 'செங்கேணி' என்ற முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் லிஜோமோள் ஜோஸ். தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் இவரது திரைப் பயணம் குறித்து பார்ப்போம்.

சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள சினிமா 'ஜெய் பீம்'. பழங்குடியின மக்கள் காவல்துறையால் அனுபவித்த கொடுமைகளை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இந்தப் படம் தமிழகத்தில் நிறைவான பாராட்டுகளைப் பெற்று வருகிறது. குறிப்பாக, இதில் நடிகர் சூர்யாவுக்கு இணையான புகழையும் பாராட்டையும் பெற்றிருப்பவர் செங்கேணியாய் வாழ்ந்திருக்கும் லிஜோமோள் ஜோஸ்தான்.

இருளர் பழங்குடிப் பெண்ணாக விஷம் முறிக்கும் மருந்து கொடுப்பதாக இருக்கட்டும், கர்ப்பிணியாக இருந்தும் காவல்துறையால் கொடுமைப்படுத்தப்படும் காட்சியாக இருக்கட்டும், வேதனையில் துடிக்கும் கணவனின் நிலையை கண்டு நீதி கேட்டு போராடும் காட்சி என ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களின் மனதை உலுக்கும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் லிஜோமோள். இந்த நடிப்பால் தமிழக ரசிகர்கள் மனதில் இப்போது செங்கேணியாக நிலைத்துள்ளார்.

ஃபஹத் ஃபாசிலின் `மஹேஷிண்டே பிரதிகாரம்' படத்தை பார்த்திருப்பவர்கள், அதில் நடித்திருக்கும் சோனியா கேரக்டரை மறந்திருக்க மாட்டார்கள். சோனியா கதாபாத்திரம் சிறியது என்றாலும், கனகச்சித்தமாக செய்திருப்பார் லிஜிமோள். இந்தப் படத்தில் இடுக்கி பெண்ணாக நடித்திருப்பார். உண்மையில் இவரின் பூர்விகமும் இடுக்கிதான். மலையாள கலைஞரான லிஜோமோளுக்கும் தமிழுக்கும் ஆரம்பம் முதலே ஒரு நெருக்கம் இருந்துவருகிறது. கேரளாவில் தமிழர்கள் அதிகம் வாழும் இடுக்கி மாவட்டம் பீர்மேடு பகுதிதான் லிஜிக்கும் சொந்த ஊர். இந்தப் பகுதியில் பள்ளிப்படிப்பை முடித்தவர், அடுத்து கொச்சியில் கல்லூரிப் படிப்பை முடித்தார்.

பின்பு புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பு படித்தபோதுதான் `மஹேஷிண்டே பிரதிகாரம்' பட வாய்ப்பு வந்துள்ளது. இதில் ஒரு சுவாரஸ்யம். முதலில் இந்தப் படத்துக்கான ஆடிஷன் தனது தோழி மூலமாகவே அறிந்துகொண்ட லிஜிமோள், அவரின் வற்புறுத்தலாலே ஆடிஷனுக்கு போட்டோ அனுப்பியுள்ளார். எதிர்பாராத நிலையில் ஆடிஷனுக்கான அழைப்பு வருகிறது. அதுவரை சினிமாவை நினைத்து பார்க்காத, ஏன் அதுவரை ஒரு மேடையில் கூட நடிக்காத லிஜிமோள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள நினைத்து குடும்பத்தில் அனுமதி கேட்டுள்ளார். குடும்பத்தினர் அவரின் முதலில் ஆசைக்கு எதிராக இருந்ததால் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் தோன்றி இரண்டு நாள் கூட நிலைக்காத சினிமா கனவை துறந்தார் லிஜி.

அவர் சினிமாவை பற்றிய நினைப்பை கைவிட்டாலும், `மஹேஷிண்டே பிரதிகாரம்' ஆடிஷனை நடத்திய, எழுத்தாளர் ஷியாம் புஸ்கரனின் மனைவி உன்னிமாயா லிஜியை விடவில்லை. லிஜோமோள் போட்டோவை பார்த்த உன்னிமாயா, சோனியா கேரக்டருக்கு அவர்தான் சரியான தேர்வாக இருப்பார் என்பதை உணர்ந்து அவரை ஆடிஷனில் கலந்துகொள்ள வற்புறுத்தியுள்ளார். இதனால் இந்தமுறை வீட்டில் ஆடிஷனுக்கு செல்வது குறித்து அழுத்தமாக பேசிய லிஜிக்கு அனுமதி கிடைக்க, அப்படியாக படத்தில் சோனியாவாக தோன்றினார்.

முதல் படம் நினைத்ததைவிட நல்ல வரவேற்பைப் பெற்றது. அதுவே அவருக்கு இரண்டாம் வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்தது. மம்மூட்டி உள்ளிட்ட சில நடிகர்களின் படங்களில் மலையாளத்தில் சில படங்களில் நடித்திருந்தாலும் மலையாளத்தைவிட, தமிழே அவரை நாயகியாக்கியது. சித்தார்த், ஜிவி பிரகாஷ் நடித்த 'சிவப்பு மஞ்சள் பச்சை' படம் தமிழில் லிஜிக்கு அறிமுகம் கொடுத்தது. ஒரு சகோதரிக்கும் அவரது தம்பிக்கும் இடையேயான பந்தத்தை பேசும் `சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தில் போக்குவரத்து ஆய்வாளரான சித்தார்த்துக்கும், பைக் ரேஸரான ஜிவி பிரகாஷ்க்கும் இடையேயான ஈகோவை சமாளிக்கும் ராஜியாக அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

இந்தப் படத்தை பார்த்தே இயக்குநர் த.செ.ஞானவேல்ம் லிஜிமோள் ஜோஸை 'ஜெய் பீம்' படத்துக்கான ஆடிஷனுக்கு அழைத்துள்ளார். இப்படியாக 'ஜெய் பீம்' படத்தில் இணைந்தவர், இந்தப் படத்தால் தற்போது வெகுவான பாராட்டுகளை பெற்றுவருகிறார். இந்தப் பாராட்டுகளுக்கு லிஜி கொடுத்த உழைப்பு அபாரமானது. படப்பிடிப்புக்கு முன்னதாகவே, இருளர் மக்கள் வசிக்கும் கிராமங்களில் அவர்களுடன் சில நாட்கள் தங்கி அவர்கள் உண்ணும் உணவை உண்டு, அவர்களின் பழக்கவழக்கத்தை கற்றுக்கொண்டே வந்துள்ளார். அதற்கான பலன்தான் இப்போது கிடைக்கத் தொடங்கியுள்ளது.

'ஜெய் பீம்' லிஜியின் சினிமா கரியருக்கு எவ்வளோ ஸ்பெஷலோ, அவரின் வாழ்க்கையிலும் அவ்வளவு ஸ்பெஷல். இந்தப் படம் ஆரம்பிக்கும்போதுதான் அவரின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்தப் படம் வெளியாகும் முன்பு இல்லற வாழ்க்கையில் இணைந்துள்ளார்.

நயன்தாரா, அசின், சாய் பல்லவி என பல மலையாள நடிகைகளின் நடிப்பை தமிழ் சினிமா பார்த்துள்ளது. இதில் லேட்டஸ்ட் வரவு லிஜிமோள் ஜோஸ்.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com