எப்படி இருக்கும் மீனவர்களுக்கான வழிக்காட்டி கருவி?
இஸ்ரோ மீனவர்களுக்கென பிரத்யேக வழிக்காட்டி கருவியை தயாரித்துள்ளது. மேலும் அந்தக் கருவியின் புகைப்படத்தை இப்போது வெளியிட்டுள்ளது. இதனையடுத்து இந்தக் கருவியை தயாரிக்க விரும்பும் நிறுவனங்கள் இஸ்ரோவை தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. இது தொடர்பாக புதன்கிழமை கூறிய இஸ்ரோ தலைவர் சிவன், "முதல் கட்டமாக இந்த வழிக்காட்டி கருவியை 500 மீனவர்களுக்கு தரவுள்ளதாக" தெரிவித்தார்.
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1 ஏ முதல் ஜி வழிக்காட்டி செயற்கைகோள்கள் (Navic Satellites) பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் தொடர்ந்து விண்ணில் வெற்றிகரமாக நிலை நிறுத்தியுள்ளது இஸ்ரோ.
24 மணி நேரம் இயக்கம்:
விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ள ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசயைிலான 7 செயற்கைகோள்களும் நாள் ஒன்றுக்கு 24 மணி நேரம் வேலை செய்யும் திறன் கொண்டது. இந்தச் செயற்கைகோள்கள் 1,500 கி.மீ. சதுர பரப்பளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாகக் கண்காணித்து தகவல்களை அனுப்பும். மேலும் தரையிலும், வான்வெளியிலும் செல்லும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்க முடியும். ஆக மொத்தம் இந்தச் செயற்கோள்கள் இந்தியாவுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வழிக்காட்டியாகும்.
வழிகாட்டி செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியதன் மூலம், இந்தியா முழுவதும் மற்றும் பாகிஸ்தான், இலங்கை நாடுகளின் கடல், சாலை நிலப்பரப்புகளையும் கண்காணிக்க முடியும்.
இனி ஜி.பி.எஸ் இல்லை எஸ்.பி.எஸ்:
இந்தியாவின் பிரத்யேக செயற்கைகோள் வழிகாட்டியாக அறிமுகப்படுத்தப்படவுள்ள எஸ்.பி.எஸ். (Standard Positioning System) விரைவில் செல்போன் பயன்பாட்டுக்கும் வரும் என்றும் கூறப்படுகிறது. மேலும், எஸ்.பி.எஸ். வழிக்காட்டியை இந்தியாவின் கூகுள் தேடுதளத்திலும் பயன்படுத்த அந்நிறுவனத்தின் இந்திய தலைமயகத்திலும் கலந்தாலோசிக்கப்பட்டதாக இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் அமெரிக்காவின் ஜி.பி.எஸ். (Global Positioning System) வழிக்காட்டியை நாம் பயன்படுத்தாமல், நம் நாட்டின் பிரத்யேக எஸ்.பி.எஸ். வழிக்காட்டியை பொது மக்கள் பயன்படுத்தும் சூழ்நிலை விரைவில் உருவாகும்.
அமெரிக்காவுக்கு "குட் பை":
எஸ்.பி.எஸ் உருவாக்கப்பட்டதன் நோக்கமே நம் நாட்டின் தகவல்கள் வழிக்காட்டிகளை அமெரிக்கா ஜிபிஎஸ் மூலம் தருவதை நிறுத்துவதற்காகவே.
படகுகளில் பொருத்தம்:
இஸ்ரோவின் பிரத்யேக எஸ்.பி.எஸ். கருவி மீனவர்களின் படகுகளில் பொருத்தப்படும். பின்பு, அந்தக் கருவியுடன் ரிசீவரும், பவர் பேங்கும் இணைக்கப்பட்டிருக்கும். இந்த பவர் பேங்குகள் சூரிய ஒளி சக்தி மூலம், எஸ்.பி.எஸ். வழிக்காட்டி கருவியை இயக்கும். இதனால் எத்தனை நாள் மீனவர்கள் கடலில் இருந்தாலும், வழிக்காட்டி கருவி இயங்கிக்கொண்டே இருக்கும். அவை, இந்திய எல்லையில் மீனவர்கள் இருக்கிறார்களா? அல்லது இலங்கை எல்லையில் இருக்கிறார்களா என சுட்டிக் காட்டிவிடும். இதே எச்சரிக்கை கடலோர காவல் படைக்கும் தெரிவிக்கப்படும். இதன் மூலம் எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்.