மகப்பேறுக்கு மருத்துவ காப்பீடு உண்டா? காப்பீடு ஆலோசகர் விளக்கம்

மகப்பேறுக்கு மருத்துவ காப்பீடு உண்டா? காப்பீடு ஆலோசகர் விளக்கம்
மகப்பேறுக்கு மருத்துவ காப்பீடு உண்டா? காப்பீடு ஆலோசகர் விளக்கம்

மகப்பேறுக்கு மருத்துவ காப்பீடு உண்டா? என்பது குறித்து விளக்குகிறார் காப்பீட்டு ஆலோசகர் சங்கர் நீதிமாணிக்கம்.

‘’காப்பீடு என்பது எதிர்பாராத நிகழ்வு ஏதாவது நமக்கு நடக்கையில் அதில் இருந்து மீளவும், சமாளிக்கவும் தரப்படும் இழப்பு ஆகும். முக்கியமாக எதிர்பாராத விபத்து மூலம் ஏற்படும் மருத்துவ செலவினம், மரணம், எதிர்பாராமல் நோய்வாய்ப்படுவதால் வரும் செலவினங்கள் போன்றவற்றிக்கு காப்பீடு நிறுவனங்கள் காப்பீடு அளிக்கின்றன.

 ஆனால், மகப்பேறு என்பது எதிர்பாராமல் நடப்பது அல்லவே, மேலும் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டவுடனேயே குழந்தை பிறப்பு நாளும் சொல்லிவிடும் வசதி இன்றைய மருத்துவத்தில் இருக்கிறது. எனவே மகப்பேறு என்பது எதிபாராத நிகழ்வு இல்லை. அதாவது காப்பீடு மொழியில் இது ஒரு முன்கூடியே இருக்கும் நிலை (Pre-existing illness or condition).

இப்படி pre-existing நோய்களுக்கு எல்லா காப்பீடு நிறுவனங்களும் மருத்துவக் காப்பீடு அளித்தாலும் அதற்கு என்று ஒரு காத்திருப்பு காலம் (Waiting period) நிர்ணயிக்கிறார்கள்.

இன்றைய சூழலில் மகப்பேறு மருத்துவ செலவுகள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. மேலும் சிசேரியன் சிகிச்சையும் மிக அதிக அளவில் நடக்கும் ஒன்றாக இருக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு சில காப்பீடு நிறுவனங்கள் மகபேறுக்கும் மருத்துவக் காப்பீடு அளிக்கிறது. அந்தந்த நிறுவனங்கள் நிர்ணயித்திருக்கும் காத்திருப்புக் காலத்திற்கு பிறகு மகப்பேறு மருத்துவ பாதுகாப்பு வழங்குகின்றன. (Coverage will start after waiting period). இந்த காத்திருப்புக்காலம் இரண்டு ஆண்டுகள், நான்கு ஆண்டுகள் மற்றும் ஆறு ஆண்டுகள் என நிறுவனங்களை பொறுத்து மாறுகிறது.

பெரும்பாலான நிறுவனங்கள் இந்த காப்பீட்டில் இழப்பீடாக ரூபாய் 15000/- முதல் 50000/- வரை இழப்பீடு (claim) பெறும் வகையில் தங்களின் காப்பீட்டுத்திட்டங்களை வடிவமைத்து இருக்கிறார்கள்.

ஒரு சில நிறுவனங்கள் குறைந்ததாக ஒரு கோடிக்கு மருத்துவக் காப்பீடு எடுப்பவர்களுக்கு சுமார் இரண்டு லட்சம் வரை மகப்பேறு மருத்துவ காப்பீடு தருகிறது. ஒரு சில நிறுவனங்கள் வெளிநோயாளி (OPD) செலவினம் அளவிற்கு மட்டுமே இழப்பீடு வழங்குகிறது. முக்கியமாக எந்த நிறுவனமும் IVF சிகிச்சை பெற காப்பீடு அளிப்பது இல்லை.

மாற்றங்கள் எல்லா இடத்திலும் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது. வரும்காலங்களில் இந்த மகப்பேறு மருத்துவக் காப்பீட்டுத்திட்டங்களிலும் மாற்றம் வரலாம். அப்போது IVF சிகிச்சைக்கும் காப்பீடு கிடைக்கும் வகையில் திட்டம் வரலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com