பார்வை குறைபாடுடைய மாணவர்கள் இத்தனை இன்னல்களுக்கு மத்தியில்தான் கல்வி கற்கிறார்கள்- தீர்வுதான் என்ன?

தமிழ்நாட்டில் மட்டும் பார்வை திறன் குறைபாடு உடைய மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் 22 செயல்படுகிறது. இதில் தனியார் பள்ளிகளும் அடக்கம்.
braille
braillePT

கிண்டி அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா அரங்கில் நடைபெற்ற சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மாணவர்களுக்கு விருதினை வழங்கி கௌரவித்தார். இதில் கலந்துக்கொண்ட பார்வை திறன் குறைபாடுடைய மாணவர்கள் தங்களின் உயர்கல்வி குறித்து சில இன்னல்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து பார்வைத்திறன் குறைபாடுடைய மாணவர்கள் சந்தித்து வரும் இன்னல்கள் என்ன என்பதை தெரிந்துக் கொள்வதற்காக, பார்வையற்ற மாணவர்களுக்கு கல்வி உதவி புரிந்துவரும் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஒருவரிடம் இது குறித்து பேசினோம். அவர் கூறியவற்றை பின்வருமாறு பார்க்கலாம்..

“தமிழ்நாட்டில் மட்டும் பார்வை திறன் குறைபாடு உடைய மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் 22 செயல்படுகிறது. இதில் தனியார் பள்ளிகளும் அடக்கம்.”

”இதில் படிக்கும் மாணவர்களுக்கு ப்ரைலி braille, மற்றும் டாக்டெயில் (Tactile) தொட்டுணர்வு என்ற மொழியில் தான் பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஆனாலும், பத்தாம் வகுப்புவரை மாணவர்கள் அனைவரும் all pass என்று அரசாங்கம் ஆணைப்பிறப்பித்திருப்பதால், இவர்களுக்கு நடத்தும் ஆசிரியர்கள் மாணவர்கள் மீது அதிக அக்கறை காட்டுவதில்லை, மாணவர்களும் தங்களின் குறைபாட்டினைக் கருத்தில் கொண்டு, மேற்படிப்பிற்கு முயலுவதில்லை. சொல்லப்போனால், இவர்கள் எழுதி பழகுவதில்லை. ஆசிரியர் கூறுவதை காதில் கேட்டு, பதில் கூறுவதால், எழுதுவது என்பது இத்தகைய மாணவர்களிடம் வழக்கத்தில் இல்லை என்றே சொல்லலாம்”

“ஆகையால் பத்தாம் வகுப்பிற்கு மேல் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையானது குறைகிறது. பதினொன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் பெரும்பாலும் வரலாறு, புவியியல், தமிழ், என்ற கலைப்பிரிவு படிப்பிலேயே படிக்க முற்படுகின்றனர். ஏனெனில், அறிவியல் மற்றும் கணக்கு பாடங்களை இவர்களுக்கு சொல்லிதருவதில் அதிக சிரமம் இருப்பதாக ஆசிரியர்கள் கருதுவதாலும், இதற்கான போதுமான பாடதிட்ட அமைப்பானது ப்ரைலியில் இல்லாததாலும் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்”

“அப்படியே பன்னிரெண்டாவது வரை மாணவர்கள் படித்து முடித்து கல்லூரியில் சேர முற்படும் பொழுது இவர்கள் விரும்பும் பாடமானது இவர்களுக்கு கிடைப்பதில்லை. மற்ற மாணவர்களைப்போல் எழுதத்தெரியாததால் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை ரெக்காடிங் செய்தோ அல்லது, கம்பியூட்டரில் உரையாடல்கள் மூலமாகவோ புரிந்து கொண்டே படித்து வருகிறார்கள். தேர்வு சமயங்களில் இவர்களுக்காக ஸ்ரைப் (scribe) எழுதுபவர்களின் துணையுடன் இவர்கள் தேர்வை எழுதி வருகின்றனர். இதில் ஸ்ரைப் எழுதுபவர்கள் சரியான கேள்வியைப்படித்தால் மட்டுமே, மாணவர்களால் சரியான பதிலை கேட்டு எழுதமுடியும், கேள்வியை புரிதல் இல்லாமல் தவறாக் கேட்டாலோ அல்லது பதிலை தவறாகப்புரிந்துக் கொண்டு எழுதினாலோ மாணவர்களின் மதிப்பெண்ணானது குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. அதே போல் scribe எழுதுவதற்கான ஆட்கள் பற்றாக்குறையும் உள்ளது” என்று கூறினார்.

இத்தனை இடர்பாடுகளை சந்தித்து மாணவர்கள் வெற்றி பெறுவது என்பது அத்தனை சுலபமில்லை. இந்த இடர்பாடுகளை களைய அரசு ஆவண செய்யவேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com