இராமநாதபுரத்தில் போட்டியிடுகிறாரா பிரதமர் மோடி?.. கள நிலவரம் எப்படி?

இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியின் களநிலவரம் என்ன, பிரதமர் மோடி அங்கு போட்டியிட்டால் அவரின் வெற்றிவாய்ப்புகள் எப்படி இருக்கும் உள்ளிட்ட விஷயங்களைப் பார்ப்போம்.
PM Modi
PM Modi Twitter

“மோடி இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். உங்கள் அன்பை பிரதமருக்கு கொண்டு செல்வது எங்கள் பொறுப்பு, நீங்கள் விரும்பியதுபோல நடக்க வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். ஆனால், அது உங்கள் கையில்தான் இருக்கிறது. நீங்கள்தான் எங்கள் பாதயாத்திரைக்கு வலுசேர்க்க வேண்டும். அதைப்பார்த்து மோடி இங்கே போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

அவர் மட்டுமல்ல, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்புவும், “ஒருவேளை இராமநாதபுரத்திலேயே பிரதமர் மோடி போட்டியிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரை எதிர்த்து போட்டியிடும் துணிச்சல் தி.மு.க.வுக்கு உண்டா?’’ என சவால் விடுக்கும் வகையில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியின் களநிலவரம் என்ன, பிரதமர் மோடி அங்கு போட்டியிட்டால் அவரின வெற்றிவாய்ப்புகள் எப்படி இருக்கும் உள்ளிட்ட விஷயங்களைப் பார்ப்போம்..

பிரதமர் மோடி இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவது குறித்த தகவல்கள் கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக உலா வருகின்றன. குறிப்பாக, காசி தமிழ் சங்கமம் நிகழ்வுக்குப் பிறகு அதுபோன்ற தகவல்கள் வெளியாக ஆரம்பித்துவிட்டன. தற்போது, என் மண், என் மக்கள் என்கிற பெயரில் பாதயாத்திரையைத் தொடங்கியிருக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இராமநாதபுரத்தில் நடந்த கூட்டத்தில் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமல்ல, தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், கடந்த மாதம் ஒன்பதாம் தேதி, மண்டல அளவிலான பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், 11 மாநிலங்களை சேர்ந்த பாஜக தலைவர்கள், தேசிய பொதுச் செயலாளர்கள் பங்கேற்றனர். அந்தக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தின் இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று பெரும்பாலான நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்தனர். தென் மாநிலங்களில் இருந்து 50 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்பது பாஜகவின் இலக்காக உள்ளது.

Modi & Amit shah
Modi & Amit shah

அதற்கு ஏதுவாக, பாஜகவின் தலைமை முடிவெடுக்கும் பட்சத்தில், பிரதமர் மோடி வரும் 2024 மக்களவை தேர்தலில் தமிழகத்தின் இராமநாதபுரம் தொகுதியில் இருந்து போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக அப்போது தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அதை உறுதி செய்யும் விதத்தில், “வறட்சி மாவட்டமாக உள்ள இராமநாதபுரத்தின் குறைகளைத் தீர்க்க பிரதமர் மோடி இங்கு போட்டியிட மக்கள் விரும்புகின்றனர். வரும் மக்களவைத் தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் இருந்து பாஜக வேட்பாளர் மக்களவைக்கு செல்ல வேண்டும்’’ என்று பேசியிருக்கிறார்.

இராமநாதபுரம் தொகுதியின் களநிலவரம் என்ன?

இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில், அறந்தாங்கி (புதுக்கோட்டை), திருச்சுழி (விருதுநகர்), பரமக்குடி (இராமநாதபுரம்), திருவாடானை (இராமநாதபுரம்), இராமநாதபுரம், முதுகுளத்தூர் (இராமநாதபுரம்) ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன.

இந்தத் தொகுதிகளில் சுதந்திரத்துக்குப் பிறகு, அதாவது, 1951 முதல் 2019 வரை 17 நாடாளுமன்றத் தேர்தல் நடந்திருக்கிறது. அதில் காங்கிரஸ் ஆறு முறையும், அதிமுக நான்கு முறையும், திமுக மூன்று முறையும், தமாகா, பார்வர்டு ப்ளாக், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், சுயேட்சை ஒருமுறையும் வெற்றி பெற்றிருக்கின்றனர். பாஜகவைப் பொறுத்தவரை, 1998 தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் அதிமுக போட்டியிட்டு, சத்தியமூர்த்தி எம்.பியாகியிருக்கிறார். 1999-ல் தேசிய ஜனநாயக் கூட்டணியில், திமுக சார்பில் போட்டியிட்ட பவானி ராஜேந்திரன் தோல்வியைத் தழுவுகிறார்.

Karnataka Elections
Karnataka ElectionsPTI

அடுத்ததாக, 2004 தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில், அதிமுக சார்பில் போட்டியிட்ட செ.முருகேசன் தோல்வியைத் தழுவுகிறார். தொடர்ந்து, 2009 தேர்தலில் பாஜக அந்தத் தொகுதியில் தனித்துப் போட்டியிடுகிறது. அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட திருநாவுக்கரசு 1 லட்சத்து 28 ஆயிரம் பெற்று தோல்வியைத் தழுவுகிறார். தொடர்ந்து, 2014 தேர்தலிலும், பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. அந்தத் தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் குப்புராமு, 1 லட்சத்து 71 ஆயிரம் வாக்குகள் பெறுகிறார். தொடர்ந்து, 2019 தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இடம் பெறுகிறது. பாஜக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன், 3,42,821 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவுகிறார். கடந்த மூன்று தேர்தல்களில், பாஜக சார்பில் அந்தத் தொகுதியில் வேட்பாளர்கள் நின்றும் வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியைப் பொறுத்தவரை, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் உ.பி.யின், வாரணாசியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2019 மக்களவைத் தேர்தலில், வாரணாசியுடன் குஜராத்தின் வதோதராவிலும் போட்டியிட்டு இரண்டிலும் வென்றார். பின்னர் வதோதரா எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் 2024 மக்களவைத் தேர்தலில் வாரணாசியுடன் தமிழகத்தின் இராமநாதபுரம் தொகுதியிலும் அவர் போட்டியிட பாஜக வியூகம் அமைப்பதாகத் தெரிகிறது.

தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்ததும்கூட இதனடிப்படையில்தான் என்று சொல்லப்படுகிறது.
bjp
bjp

இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் மொத்த வாக்காளர்கள், 15,52,761, அதில் 7,79,643 பேர் பெண்கள். கணிசமான இஸ்லாமிய சமூக வாக்குகள் நிறைந்த தொகுதி இது. கடந்தமுறை, திமுக கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் சார்பாகப் போட்டியிட்ட நவாஸ்கனி வெற்றிபெற்று எம்.பியாக இருக்கிறார். ஆனால், 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இந்தத் தொகுதியைக் குறிவைத்து மத்திய அரசின் வாயிலாக பாஜக பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்துவருவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இந்தநிலையில் பிரதமர் மோடி ஒருவேளை இங்கு போட்டியிட்டால் அவரின் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கும்?

மூத்த பத்திரிகையாளர் பிரியனிடம் பேசினோம்..

`இராமநாதபுரம் தொகுதியை பாஜக கையிலெடுக்க, அங்கு இராமேஸ்வரம் இருப்பதுதான் பிரதான காரணம். காசி, ராமேஸ்வரம் இரண்டு இடங்களும் இந்துக்களால் போற்றப்படக்கூடிய இடங்கள். அதில் வாரணாசியில் ஏற்கெனவே பிரதமர் மோடி வெற்றிபெற்றுவிட்டார். தற்போது ராமேஸ்வரத்தை உள்ள்டக்கிய இராமநாதபுரத்தில் போட்டியிட விரும்புகிறார். அதுமட்டுமல்ல, ராகுல் காந்தி அமேதி மற்றும் வயநாடு தொகுதியில் போட்டியிட்டார்.

Annamalai
Annamalai

அதாவது, வட இந்தியாவில் ஒரு தொகுதி. தென்னிந்தியாவில் ஒரு தொகுதி. அமேதியில் தோல்வியடைந்தாலும், வயநாட்டில் வெற்றிபெற்றார். அதேபோல, மோடியும் தென்னிந்தியாவிலும் தான் பிரபலமான, வலிமையான தலைவர் என காட்டிக்கொள்ள விரும்புகிறார். அதனால், இராமநாதபுரத்தில் போட்டியிட விரும்புகிறார்.

மூத்த பத்திரிகையாளர் பிரியன்
மூத்த பத்திரிகையாளர் பிரியன்

ஆனால், திட்டமிட்டு சில வேலைகளைச் செய்யாவிட்டால், அங்கு வெற்றிபெறுவது கடினம். உதாரணமாக, டிடிவி மற்றும் ஓ.பி.எஸ்ஸின் ஆதரவு அவர்களுக்குத் தேவை. காரணம், 2019 நாடாளுமன்றத் தேர்தலில், இராமநாதரபும் தொகுதியில் வெற்றிபெற்ற தி.மு.க கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனிக்கும், அ.தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 1,27,122.

ஆனால், அந்தத் தொகுதியில் அ.ம.மு.க சார்பில் போட்டியிட்ட வ.து.ந.ஆனந்த் பெற்ற வாக்குகள் 1,41,806. டிடிவிக்கு அதே வாக்குகள் இப்போதும் விழும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது. ஆனால், பாதி வாக்குகளாவது விழும். தவிர, ஓ.பி.எஸ்ஸும் இப்போது அவருடன் கைகோர்த்திருப்பதையும் கவனிக்க வேண்டும். அவர்கள் பாஜக கூட்டணியில் இல்லாமல் தனியாகப் போட்டியிட்டால், அது பாஜக கூட்டணிக்குப் பின்னடைவை உண்டாக்கும். அந்தத் தொகுதியில் இஸ்லாமிய சமூக வாக்குகள் அதிகம். தவிர, எடப்பாடி பழனிசாமியுடன் மட்டும் கூட்டணி என்றால் முக்குலத்தோர் சமூக வாக்குகள் பாஜகவுக்கு விழுவதில் சிக்கல் இருக்கிறது.

PM Modi
PM Modi

தவிர, தேவேந்திரகுல வேளாள சமூக வாக்குகள் ஆறு சதவிகிதமும் அப்படியே பாஜகவுக்கு விழுமா என்பதுதும் சந்தேகம்தான். அதனால், பிரதமர் அங்கு போட்டியிட்டால் ஜாக்கிரதையாக கூட்டணியை அங்கே கட்டமைக்கவேண்டும். இல்லாவிட்டால், கடுமையான போட்டியைச் சந்திக்ககூடிய, ஏன் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்பதற்குக் கூட வாய்ப்பிருக்கிறது’’ என்றார் அவர்.

இந்தநிலையில், இதுகுறித்து பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜனிடம் பேசினோம்..

``பிரதமர் மோடி ராமேஸ்வரம் பகுதியை உள்ளடக்கிய ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டால் தமிழக மக்களுக்கு அது இன்ப அதிர்ச்சியாக இருக்கும். அவர் போட்டியிட்டால் வெற்றி உறுதியாக இருக்கும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. யாருடனும் கூட்டணி அமைத்தாலும் அமைக்காவிட்டாலும் மோடி வெற்றிபெறுவார். வழக்கமான அரசியல் கணக்குகள் எல்லாம் மோடி போட்டியிடும்போது எடுபடாது.

முத்தலாக் சட்டத்தைக் கொண்டுவந்ததால், இஸ்லாமிய சகோதரர், சகோதரிகளும் பிரதமரை ஆதரிப்பார்கள்.
பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன்
pm modi
pm modi

இந்தியாவின் வளர்ச்சியை மனதில் வைத்து, அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவு பெற்ற வேட்பாளராக பிரதமர் மோடி இருப்பார். அவர் அங்கே நிற்கவேண்டும் என்பது எங்களின் ஆசை என ஏற்கெனவே எங்கள் மாநிலத் தலைவரும் சொல்லியிருக்கிறார். தமிழகத்தில் அவர் போட்டியிடுவதை தமிழக மக்கள் அனைவருமே வரவேற்பார்கள்’’ என்றார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com