காவிரி தீர்ப்பில் நியாயம் முக்கியமா? வாதம் முக்கியமா?
உச்சநீதிமன்றம் காவிரி வழக்கில் கர்நாடகத்துக்கு சாதகமாக தீர்ப்பளித்ததற்கு அந்த மாநிலத்தின் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர்களின் வாதத் திறமையும் ஒரு காரணம். ஃபால் எஸ்.நாரிமன், எஸ்.எஸ்.ஜவாலி, மோகன் வி.கடார்கி, ஷ்யாம் திவான் ஆகிய நான்கு மூத்த வழக்கறிஞர்கள் கர்நாடகாவுக்காக ஆஜரானார்கள். அவர்கள் முன்வைத்த வாதங்களை இங்கே பார்ப்போம்:
வழக்கறிஞர் ஃபாலி எஸ். நாரிமனின் வாதம் : “1974ஆம் ஆண்டுக்கு முன்பு தமிழ்நாட்டில் 28.20 இலட்சம் ஏக்கர்தான் பயிரிடப்பட்டது என நடுவர் மன்றம் கூறியிருந்தது. ஆனால் அதன் இறுதித் தீர்ப்பில் 21.38 இலட்சம் ஏக்கர் விவசாயம் செய்ய அனுமதி அளித்துள்ளது. இருந்தபோதிலும் நடுவர் மன்றமானது எந்தவித நியாயமுமின்றி சமத்துவத்தை மீறும் வகையில் தமிழ்நாடு மேலும் 3.32 லட்சம் ஏக்கர் நிலங்களில் சாகுபடி செய்ய அனுமதித்துள்ளது. அது 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தத்துக்கு அப்பாற்பட்டதாகும். இது, சமத்துவ கோட்பாட்டிற்கு எதிரானதாகும்.”
“தண்ணீரைப் பகிர்ந்தளிக்கும்போது ஒரு நதிக்கு ஒவ்வொரு மாநிலமும் எவ்வளவு தண்ணீரை வழங்குகின்றன. அந்த மாநிலத்தின் மக்கள் தொகை எவ்வளவு? பாசனப் பரப்பு எவ்வளவு? அங்கே பயிர் செய்வதற்கு தேவைப்படும் தண்ணீர் அளவு எவ்வளவு என்பவை கணக்கிடப்படவேண்டும்.
1977ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட ஸல்டான்ஹா அறிக்கை தற்போது செலவிடப்படும் தண்ணீரில் பெரும் பகுதியை சேமிக்க முடியும் எனக் கூறியிருந்தது. தமிழ்நாட்டிற்கு 393 டிஎம்சி தண்ணீர் வழங்கினால் போதும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
1966 ஆம் வருடத்தைய ஹெல்ஸின்கி விதிகள் எல்லா தரப்பையும் சமமாகப் பாவித்து நடுநிலையை முன்மொழிந்துள்ளது. சமத்துவமே நியாயமானது என்ற பழமொழிக்கேற்ப எல்லா மாநிலங்களுக்கும் பகிர்ந்ததுபோக மீதமுள்ள தண்ணீரைத் தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்கும் இடையே சமமாகப் பகிர்ந்தளிக்கவேண்டும். இரண்டு மாநிலங்களையும் சமமாகப் பாவிக்கவேண்டும். கர்நாடாகவிற்கும் தமிழ்நாட்டிற்கும் தலா 339.5 டிஎம்சி தண்ணீர் வழங்கப்படவேண்டும்.”
வழக்கறிஞர் எஸ்.எஸ்.ஜவாலியின் வாதம்: “நடுவர் மன்றம் ஆதாரங்களின் அடிப்படையில் முடிவெடுக்காமல் யூகங்களின் அடிப்படையில் முடிவெடுத்துள்ளது. நடுவர்மன்றத்தில் சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு தமிழ்நாடு மட்டும் புதியதாக ஒரு பிரமாண வாக்குமூலத்தை தாக்கல் செய்வதற்கு நடுவர் மன்றம் அனுமதித்தது. அந்தப் பிரமாண வாக்குமூலத்தின் மீது குறுக்கு விசாரணை செய்வதற்குக்கூட கர்நாடாக தரப்பிற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதன்மூலம் கர்நாடகத்தைக் காட்டிலும் தமிழ்நாட்டுக்கு நியாயமற்ற சலுகை வழங்கப்பட்டது. கர்நாடகாவின் நடவடிக்கையால் தாம் எப்படி பாதிக்கப்பட்டோம் என்பதைத் தமிழ்நாடு நிறுவவில்லை. நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு இயற்கை நீதிக்கு முரணானது என வாதிட்ட அவர் தனது வாதங்களுக்கு ஆதரவாக துள்சிராம் பட்டேல்; சத்யவீர் சிங் உள்ளிட்ட 14 வழக்குகளின் தீர்ப்புகளை சுட்டிக்காட்டினார்.”
வழக்கறிஞர் மோகன் வி. கடார்க்கியின் வாதம் : “தண்ணீரின் தேவையைத் தீர்மானித்ததற்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தோடு கலந்தாலோசிக்கப்பட்டதாகத் தமிழக அரசு தனது பிரமாண வாக்குமூலத்தில் தெரிவித்தது. அந்த ஆலோசனை அறிக்கை எதுவும் கொடுக்கப்படவில்லை.
தண்ணீர் ஆவியாவது குறித்த அளவைத் தீர்மானிக்க இந்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைத் தாங்கள் பின்பற்றியதாகவும் கர்நாடகாவோ ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் விதிகளைப் பின்பற்றியதாகவும் தமிழக அரசு கூறியது. இதில் எந்த வேறுபாடும் கிடையாது. மேட்டூரில் தமிழ்நாட்டிற்காக கர்நாடகம் வழங்கவேண்டிய தண்ணீர் 137 டிஎம்சி மட்டுமே.
காவிரி உண்மை அறியும் குழுவிடம் சம்பா சாகுபடி வடகிழக்குப் பருவ மழையால்தான் செய்யப்படுகிறது எனத் தமிழகத் தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையில் ஓடும் நதியின் மீது எந்த மாநிலத்துக்கும் தனிப்பட்ட உரிமை கிடையாது.
கர்நாடகா தரப்பில் 27.29 இலட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்படுவதாகக் கூறப்பட்டபோதும் 18.85 இலட்சம் ஏக்கர் நிலத்திற்கு மட்டுமே நடுவர் மன்றம் தண்ணீர் ஒதுக்கியுள்ளது. கர்நாடகத் தரப்பின் கணக்கீட்டின்படி தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய தண்ணீர் 311.6 டிஎம்சி மட்டும்தான். நடுவர் மன்றம் கூறியுள்ளது போல 390.85 டிஎம்சி அல்ல.
28.2 இலட்சம் ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்வதற்குத் தண்ணீர் தேவையெனத் தமிழ்நாடு சொல்வதை ஏற்கமுடியாது. கர்நாடகத்தின் பாசனத் தேவைக்கான தண்ணீரின் அளவை எந்த மாநிலமும் கேள்விக்குட்படுத்தவில்லை. கர்நாடகத்தினுடைய மண் வளம், நெல்சாகுபடிக்கு ஏற்றதல்ல என்ற தமிழகத் தரப்பின் வாதம் தவறானது. மண் வளத்தையோ தன்மையையோ ஹெல்ஸின்கி விதிகள் அங்கீகரிக்கவில்லை. ஒரு மாநிலம் தண்ணீரை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்திறது இல்லையா என்பதை வைத்து இன்னொரு மாநிலத்தின் தண்ணீர் உரிமையை மறுக்கமுடியாது.
கர்நாடகத்தின் நெல் பயிரிடும் காலத்தை 145 நாட்களிலிருந்து 120 நாட்களாகக் குறைக்கவேண்டும் என்று தமிழ்நாடு சொல்வது சரியல்ல. தமிழ்நாடு குறுவை சாகுபடி செய்வதைத் தடுத்து சம்பா சாகுபடி செய்வதை மட்டுமே அனுமதிக்கவேண்டும். அதுவே இதில் நியாயமான நடவடிக்கையாக இருக்கும்.”
வழக்கறிஞர் ஷ்யாம் திவானின் வாதம்: “நிலத்தடி நீர் என்பது புதுப்பிக்கப்படக்கூடிய நீர் ஆதாரமாகும். அதைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தாமல் போனால் அது நிலத்தின் உறிஞ்சக்கூடிய தன்மையைக் குறைத்து மழை நீரும், ஆற்று நீரும் வீணாவதற்கு வழிவகுத்துவிடும்.
காவிரி நடுவர் மன்றம் தமிழகத்தின் டெல்டா பகுதியில் 20 டிஎம்சி நிலத்தடி நீர் இருப்பதாக அங்கீகரித்த பின்னரும் அதை தமிழ்நாட்டின் பங்கில் குறைக்காமல் பெரும் தவறிழைத்துவிட்டது” என்று கூறிய அவர், அதை தமிழ்நாட்டுக்கான கூடுதல் நீர் ஆதாரமாகக் கருதவேண்டும். வேளாண் தேவைக்கு என தமிழ்நாட்டின் கணக்கில் காட்டப்பட்டிருக்கும் நீரின் அளவிலிருந்து நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் சேர்க்கப்பட்டுள்ள தமிழக அரசின் பதிலுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலத்தடி நீரான 47 டிஎம்சியையோ, அல்லது தமிழ்நாட்டின் முறையீட்டில் குறிப்பிடப்பட்ட 30 டிஎம்சியையோ, அல்லது குறைந்தபட்சம் நடுவர் மன்றமே கண்டறிந்த 20 டிஎம்சி நிலத்தடி நீரையோ கழிக்கவேண்டும். அதற்கேற்ப கர்நாடகம் வழங்கவேண்டிய நீரின் அளவைக் குறைக்கவேண்டும்.”
இந்த நான்கு வழக்கறிஞர்களின் வாதத்தைத்தான் உச்சநீதிமன்றம் ஏற்றுகொண்டுள்ளது. ஒரு வழக்கில் என்ன வாதம் முன் வைக்கப்படுகிறது என்பதைவிட அந்த வாதத்தை முன்வைப்பவர்கள் யார் என்பதற்கு நீதிமன்றங்கள் முக்கியத்துவம் தந்துவிடுவது நமது துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். அந்தவிதத்தில் தமிழ்நாடு பிரபலமான வழக்கறிஞர்களை அமர்த்தாத துரதிர்ஷ்டத்துக்கு ஆளாகிவிட்டது.