'தலையில் கனம் இல்லை, இனி பயேமே இல்லை' களத்தில் பாய காத்திருக்கும் தோனி, கோலி! #IPL2022

'தலையில் கனம் இல்லை, இனி பயேமே இல்லை' களத்தில் பாய காத்திருக்கும் தோனி, கோலி! #IPL2022
'தலையில் கனம் இல்லை, இனி பயேமே இல்லை' களத்தில் பாய காத்திருக்கும் தோனி, கோலி! #IPL2022

ஐபிஎல் வரலாற்றில் கேப்டனாக இல்லாமல் சக வீரர்களாக, ஒரே நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனியும், பெங்களூரு ராயல் சேல்ஞ்சர்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியும் களமிறங்குவது இதுதான் முதல்முறை. ஏகப்பட்ட மாற்றங்களுடன் இந்தாண்டு ஐபிஎல் நாளை மும்பை வான்கடே மைதானத்தில் துவங்குகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக முழுமையாக ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெறாமல், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் பார்வையாளர்கள் இல்லாமல், நேரடி ஒளிப்பரப்பு மட்டுமே செய்யப்பட்டநிலையில், இந்தாண்டு 25 சதவிகித பார்வையாளர்களுக்கு பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருந்து வந்தநிலையில்தான், நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி, அந்த பதவியிலிருந்து விலகி, ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்துள்ளார். இது அந்த அணியின் ரசிகர்களிடையே மட்டுமில்லாமல், மற்ற அணி ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஏற்கனவே, பெங்களூரு ராயல் சேல்ஞ்சர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த விராட் கோலியும், பதவி விலகியுள்ளார். தோனி, கோலி கேப்டன்களாக இல்லாமல் இந்திய மண்ணில் இந்த ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது. இதில் ஒற்றுமை என்னவெனில், ஐபிஎல் போட்டி துவங்கிய 2008-ம் ஆண்டு முதல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனியும், கடந்த 2013 முதல் பெங்களூரு ராயல் சேல்ஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக விராட் கோலியும் இருந்துள்ளனர். இந்த இரண்டு ஆளுமைகளுமே, ஒரே ஐபிஎல் போட்டியில் கேப்டனாக இல்லை என்பது, ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் தான்.

4 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற தோனியும் கேப்டனாக இல்லை, ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லாத விராட் கோலியும் கேப்டனாக இல்லை. கூல் கேப்டன் என்று அழைக்கப்பட்ட தோனி, ஐபிஎல் போட்டிகளிலாவது கேப்டனாக இருந்து வந்தார். ஆனால், தற்போது அந்த பொறுப்பும் இல்லாததால், ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தாலும், தோனி விளையாடுவதே மாஸ்தான் என்று கூறிவருகின்றனர்.

கேப்டனாக இல்லை என்றாலும், தோனி, விராட் இருவருமே அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதால், இவர்கள் கொடுக்கும் அறிவுரை நிச்சயம், புதிய கேப்டன்களுக்கு உதவியாகத் தான் இருக்கும். இதுவரை 204 ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக தலைமையேற்று விளையாடி 121 போட்டிகளில் தோனி வெற்றிபெற்றுள்ளார். 5 முறை கோப்பையை வென்ற ரோகித் சர்மாவிற்குப் பிறகு, ஐபிஎல் கோப்பையை வென்ற அடுத்த கேப்டனாக இருந்தவர் தோனி தான்.

அதேபோல், பிளேஃஆப் சுற்றுகளில் அதிகளவில் பங்குபெற்ற அணியும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் என்ற பெருமையும் உண்டு. இதேபோல் 104 ஐபிஎல் போட்டிகளில் தலைமை தாங்கிய விராட் கோலி, 66 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளார். திறமையான வீரர்கள் இருந்தும் ஒருமுறை கூட கோப்பையை வெற்றிபெறாததாலே அதிகமாக விமர்சிக்கப்பட்டவர்.

எனினும் ரன் மெஷின் என்ற பெயருக்கு ஏற்ப, 139 போட்டிகளில், 5 சதங்களையும் சேர்த்து 4871 ரன்கள் குவித்துள்ளார் விராட் கோலி. இந்த இரண்டு பேருமே முதல் முறையாக வீரர்களாக களமிறங்குவதால், கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, இந்த ஐபிஎல் போட்டி எப்படி இருக்கும் என்று மற்ற அணிகளும் ஆவலுடனே காத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com