ஐபிஎல் 2018: விசில் போட வரும் இங்கிலாந்து ஸ்பீட்!

ஐபிஎல் 2018: விசில் போட வரும் இங்கிலாந்து ஸ்பீட்!

ஐபிஎல் 2018: விசில் போட வரும் இங்கிலாந்து ஸ்பீட்!
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியை, சீனியர் கிங்ஸ் என கலாய்த்தாலும் ’நாங்களும் இருக்கோம் பாஸ், தெரியலையா?’ என்று விசில் போடுகிறார் மார்க் வுட். இங்கிலாந்தின் இளம் வேகம். 

இந்த ஐபிஎல்-லில், ஏலத்தில் விலை போகாத இங்கிலாந்து வீரர்கள், 16. ஏலம் போனது வெறும் 8 வீரர்கள்தான். அதில் எட்டில் ஒருவர் இந்த மார்க் வுட்! இவரை சிஎஸ்கே,  ஒன்றரை கோடிக்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது. 

யார் இந்த வுட்?
இங்கிலாந்தின் நார்தாம்டன்ஷைர் அணிக்காக ஆடிக்கொண்டிருந்த வுட், தனது வேகத்தில் விக்கெட்டுகளை அள்ள, இங்கிலாந்தின் ஏ அணிக்கு தேர்வானது 2011-ல். இந்தப் போட்டிகளில் கவனிக்கப்பட்டதும், இங்கிலாந்து அணியில் இடம் கிடைத்தது வுட்டுக்கு. 

2015-ல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்குத் தேர்வான அவுட், அந்தத் தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. அதற்கான வாய்ப்பு வரவில்லை. டெஸ்ட் அறிமுகம் அவருக்கு எந்த டெஸ்ட்டையும் வைக்காமல் போய்விட, அதே வருடம் அயர்லாந்துக்கு எதிரான ஒரு நாள் அணியில் இடம்பிடித்தார் வுட். மழையால் இந்தப் போட்டியில் ரிசல்ட் கிடைக்கவில்லை என்றாலும் வுட்டுக்கு கிடைத்தது முதல் விக்கெட்!

இதற்கடுத்து வந்த நியூசிலாந்து தொடரில், ’வேகத்’தில் வுட் அதிரடி காட்ட, அவர் மீது நம்பிக்கை வந்தது அணிக்கு. பின்னர் நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியிலும் அறிமுகப்படுத்தப்பட்டார். முதல் போட்டியிலேயே 3 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார். இப்போது இவர், இங்கிலாந்தின் டி20 ஸ்பெஷலிஸ்ட்!

இதற்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடர். இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்றாலும் வுட்டின் நேர்த்தியான பந்துவீச்சு, பேசப்பட்டது. பிறகு காயம் காரணமாக அணியில் இருந்து விலகினார். காயத்துக்கும் வுட்டுக்கும் ஏதோ முன்ஜென்ம பந்தம் போல. அடிக்கடி காயத்தில் விழுந்தார். இதனால் அணிக்குள் வருவதும் போவதுமாக இருந்த வுட், இப்போது அந்த அணியின் முக்கியமான வேகப்பந்துவீச்சாளர். 

சென்னை அணிக்கு வரும் மார்க் வுட் பற்றி கேட்டபோது, ’சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருப்பதில் மகிழ்ச்சி. ஏன்னா, இங்க ஏகப்பட்ட அனுபவத்தோட தோனி இருக்கார். களத்துக்குள்ள அவரோட அனுபவம் பெரிசு. அவர் கூட ஆடப் போற சந்தோஷமே அலாதியா இருக்கு. இதே அணியிலதான் வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் பிராவோ இருக்கார். அவர் ஸ்லோ பால் போட்டா கண்டிப்பா விக்கெட்தான். அவர் வீசுற ஸ்லோபாலுக்கு மட்டும் அப்படியொரு புதிர். அதை அவர்கிட்ட இருந்து கத்துக்கணும்’ என்கிறார்.

ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தென்னாப்பிரிக்காவின் லுங்கி நிகிடி, உள்ளூர் ஷர்துல் தாகுர் ஆகிய வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கும்போது, வாய்ப்புக் கிடைப்பதில் நெருக்கடி இருக்காதா?

‘இருக்கத்தான் செய்யும். எல்லா போட்டியிலும் அது உண்டு. அதைபற்றி எல்லாம் கவலை இல்லை. நல்லா பெர்பாம் பண்ணினா கண்டிப்பா வாய்ப்புக் கிடைக்கும். எல்லாரும் நல்லா விளையாடினா அணிக்கு நல்லது தானே?’ என்று கேட்கிறார் வுட்.

சரிதான். அப்படின்னா ஒரு விசிலை போடுவோம்!
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com