பணம் பண்ண ப்ளான் B -20: மியூச்சுவல் ஃபண்டில் அடமானக் கடன் வாங்குவது நல்லதா?
முதலீட்டாளர்கள் அடமானம் என்னும் வாய்ப்பை சரியான பயன்படுத்திக்கொண்டால் அவசர காலத்துக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். அதே சமயம் சந்தையையும் சரியாக பயன்படுத்தி பெரிய வருமானமும் அடையலாம்.
நிதி ஆலோசகர்களுடன் அவ்வப்போது உரையாடுவது என்னுடைய வழக்கம். கொரோனா காரணமாக பெரும்பாலான உரையாடல்கள் தொலைபேசி அல்லது ஏதேனும் ஒரு வீடியோ வடிவத்தில்தான் நடைபெற்றன. இந்த நிலையில் பல வாரங்களுக்கு பிறகு நிதி ஆலோசகர் பத்மநாபனை சந்தித்தேன். தற்போதைய மியூச்சுவல் பண்ட்கள் செயல்பாடுகள், துறையின் வளர்ச்சி, புதிய நிறுவனங்களின் வருகை என பல தலைப்புகள் குறித்து உரையாடினேன். அப்போது எங்களுடைய உரையாடல் எமர்ஜென்ஸி அல்லது அவசர கால நிதி குறித்து சென்றது.
பொதுவாக அனைத்து நிதி ஆலோசகர்களும் ஆறு மாத செலவுகளுக்கு ஏற்ற நிதியை வைத்திருப்பது அவசியம். அதனை வங்கியிலோ அல்லது லிக்விட் மியூச்சுவல் பண்ட்களிலோ வைத்திருக்க வேண்டும் என ஆலோசனை சொல்லுவார்கள். இந்த ஆலோசனை சரியான ஆலோசனைதான். அதில் தவறு இல்லை. ஆனால் இது அனைவருக்கும் ஏற்ற ஆலோசனை இல்லை. சிலர் மாற்று வழியை பின்பற்றலாம், அதற்கான சாத்தியம் இருக்கிறது என தன்னுடைய மாற்றுக்கருத்தை முன்வைத்தார் பத்மநாபன். எங்களுடைய உரையாடலின் முக்கியமான வடிவம் இதோ.
தற்போதைய தலைமுறைனருக்கு ஓரளவுக்கு நல்ல வருமானம் இருக்கிறது. ஓரளவுக்கு நல்ல சேமிப்பை வைத்திருக்கிறார்கள். சில பல லட்ச ரூபாய்களை பங்குச்சந்தை சார்ந்த மியுச்சுவல் பண்டில் வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் எமர்ஜென்சி பண்ட்கள் என்னும் பெயரில் கணிசமான தொகையை பிக்சட் டெபாசிட் அல்லது லிக்விட் பண்ட்களில் வைத்திருந்து பெரும் வாய்ப்பினை இழக்கிறார்கள்.
எமர்ஜென்ஸி என்பது என்பது 10 சதவீத நபர்களுக்கு வரும். பெரும்பாலும் எமர்ஜென்ஸி என்பது மருத்துவம் சார்ந்தே இருக்கும். அதற்கும் அவர்கள் மருத்துவ காப்பீடு வைத்திருப்பார்கள். இருந்தாலும் கணிசமான தொகை நிரந்தர வருமானம் கொடுக்கும் திட்டங்களில் வைத்திருப்பார்கள். மற்ற முதலீட்டு திட்டங்களில் 12 சதவீதத்துக்கு மேல் வருமானம் கிடைக்கும் என்றால் இதுபோன்ற திட்டங்களில் சராசரியாக 6 சதவீதம் கிடைத்தாலே அதிகம். இதுபோல நீண்ட காலத்துக்கு நிரந்தர வருமானம் கொடுக்கும் திட்டங்களில் முதலீடு செய்வது சரியான முதலீட்டு முடிவாக இருக்காது.
இந்த இடத்தில் ஒரு கேள்வி எழக்கூடும். அசாதாரண சூழலில் வேலை இழப்பு ஏற்படலாம், நண்பருக்கு தேவைப்படலாம், ஏதாவது ஒரு காரணத்துக்காக பணம் தேவைப்பட்டால் அப்போது மியூச்சுவல் பண்டில் இருந்து எடுக்க முடியாதே என தோன்றும். மேலோட்டமாக பார்த்தால் சந்தை சார்ந்த ரிஸ்க் இருப்பது போல தோன்றும். ஆனால் அதற்கு மாற்று வழி இருக்கிறது. அதனை யாரும் கவனிப்பதில்லை.
அடமானம்
உதாரணத்துக்கு ஒருவர் ரூ. 20 லட்சம் வரை பங்குச்சந்தை மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்திருக்கிறார். தவிர கூடுதலாக 5 லட்ச ரூபாய் அவசரகால நிதியாக வைத்திருக்கிறார் என வைத்துக்கொள்வோம். இந்த ஐந்து லட்ச ரூபாய் அவருக்கு எப்போதாவதுதான் தேவைப்படும். ஆனால் ஆண்டுக்கணக்கில் அதனை நிரந்தர வருமானம் கொடுக்கும் திட்டங்களில்தான் வைத்திருப்பார்கள்.
அவசர கால நிதியை பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்தால் தேவைப்படும் நேரத்தில் எடுக்க முடியாது என்பதுதான் முதலீட்டாளர்களின் பயம். அந்த பயத்திலும் உண்மை இருக்கிறது. ஆனால் அதற்கு மாற்று வழி இருக்கிறது. அந்த வழியை பயன்படுத்த நம்மில் பலரும் தயங்குகிறோம். அது அடமானம்.
ஒட்டுமொத்த 25 லட்ச ரூபாயையும் பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்திருக்கிறார் என வைத்துகொள்வோம். ஒரு வேளை அவசர தேவை என்றால் போர்ட்போலியோவின் மதிப்பில் அதிகபட்சம் 50 சதவீதம் வரை கடன் வாங்கிக்கொள்ள முடியும். சுமார் 12 லட்ச ரூபாய் வரை கடன் வாங்கலாம்.
இதையும் படிக்கலாம்: பணம் பண்ண ப்ளான் B -18: கான்ட்ரா ஃபண்ட்களில் முதலீடு செய்வது சரியான தேர்வா?
என்னிடம் இருக்கும் தொகையை எடுத்துக்கொள்ளாமால் ஏன் அதை அடமானம் வைத்து கடன் வாங்க வேண்டும் என நினைக்கலாம். உங்கள் தொகையை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள முடியும். ஆனால் உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் பங்குச்சந்தை மதிப்பு எப்படி இருக்கும் என தெரியாது. அதனால் போர்ட்போலியோவை அடமானம் வைத்து தேவைப்படும் தொகையை மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.
உதாரணத்துக்கு ரூ.5 லட்சம் தேவைப்படுகிறது என வைத்துகொள்வோம். இந்த தொகையை மட்டும் அடமானம் வைத்துக்கொள்ளலாம். ஒரு லட்ச ரூபாய்க்கு மாதம் அதிகபட்சம் ரூ.1,000 மட்டுமே செலுத்த வேண்டி இருக்கும். அப்படியானால் மாதம் ரூ.5,000 மட்டுமே வட்டி (மாதத்துக்கு) செலுத்தினால் போதும். அவசர தேவைக்கு பயன்படுத்திவிட்டு பணத்தை திருப்பி செலுத்த முடிந்தால் சந்தோஷம். இல்லை, உங்களின் முதலீட்டு மதிப்பு போதுமான அளவுக்கு உயர்ந்திருக்கிறது என்னும் பட்சத்தில் நிதானமாக, யோசித்து அதன் பிறகு விற்று கடனை அடைக்கலாம். பதற்றத்தில் விற்கும்போதுதான் தவறு செய்கிறோம்.
2020-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் பங்குச்சந்தை மற்றும் பங்குச்சந்தை மியூச்சுவல் பண்ட்களில் இருந்து பலர் வெளியேறினார்கள். அப்போது பலரும் சொன்ன காரணம், பயம், அவசர தேவை, வேலையின்மை என பல காரணங்களுக்காக பங்குச்சந்தை முதலீட்டில் இருந்து நஷ்டத்துடன் வெளியேறினார்கள். ஒரு வேளை அவர்கள் அப்போது தேவைக்கு மட்டுமே அடமானமாக வைத்திருந்தால் இந்த நேரத்தில் சிறப்பான ஏற்றம் அடைந்திருக்கும்.
சந்தையில் மோசமாக செயல்படும் பண்ட்களை எடுத்துக்கொண்டால் கூட அவை சிறப்பான வருமானத்தை கொடுத்திருக்கிறது. பல முதலீட்டாளர்கள் லாபத்துக்கான பெரிய வாய்ப்பை இழந்துவிட்டார்கள். அதனால் நீண்ட கால முதலீட்டாளர்கள் அடமானம் என்னும் வாய்ப்பை சரியான பயன்படுத்திக்கொண்டால் அவசர காலத்துக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். அதே சமயம் சந்தையையும் சரியாக பயன்படுத்தி பெரிய வருமானமும் அடையலாம் என பத்மநாபன் தெரிவித்தார். முதலீட்டாளர்கள் அடமானம் என்னும் வாய்ப்பினை பரிசீலனை செய்யலாம்.
முந்தைய அத்தியாயம்: பணம் பண்ண ப்ளான் B -19: கார் வாங்க போகிறீர்களா...? இதையும் கவனிங்க