அதிக வசதிகளுக்கு கட்டணம் வசூலிக்க வாட்ஸ்அப் முடிவு! சாமானியனுக்கு எட்டாக்கனியாகி விடுமா?

அதிக வசதிகளுக்கு கட்டணம் வசூலிக்க வாட்ஸ்அப் முடிவு! சாமானியனுக்கு எட்டாக்கனியாகி விடுமா?
அதிக வசதிகளுக்கு கட்டணம் வசூலிக்க வாட்ஸ்அப் முடிவு! சாமானியனுக்கு எட்டாக்கனியாகி விடுமா?

வாட்ஸ்அப் செயலியில் தங்கள் கணக்கை 10 வெவ்வேறு சாதனங்களில் பயன்படுத்துவது, 32 பேருடன் ஒரே நேரத்தில் வீடியோ காலில் பேசுவது உள்ளிட்ட பல வசதிகளை உள்ளடக்கிய பிரீமியம் சந்தா அதன் பீட்டா வெர்ஷனில் அறிமுகமாகியுள்ளது.

மெட்டா நிறுவனம் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடக தளங்கள் மூலம் பெருமளவு வருமானத்தை ஈட்டி வரும் நிலையில் அந்நிறுவனத்தின் மற்றொரு சமூக ஊடக தளமான வாட்ஸ்அப் தளம் விளம்பரங்கள் இல்லாமலும், சந்தா திட்டங்கள் இல்லாமலும் இதுநாள் வரை பயனர்களுக்கு இலவசமாகவே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப்பின் போட்டியாளரான டெலிகிராம் செயலியில் அறிமுகமானது போலவே அதிக மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகளை பெறுவதற்கு பயனர்களிடம் சந்தா வசூலிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த வாட்ஸ்அப் தளம் முடிவு செய்துள்ளது.

ஆனால், அறிமுகமாகும் இந்த வாட்ஸ்அப் ப்ரீமியம் சந்தா வசதி, இந்த தளத்தைப் பயன்படுத்தும் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படாது என்றும், வாட்ஸ்அப் பிசினஸ் கணக்கு பயனர்களுக்கு (Whatsapp Business Account Users) மட்டுமே வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்தாவை செலுத்துவதன் மூலம் பிசினஸ் கணக்கு பயனர்கள் தங்கள் வணிகப் பக்கத்தை (Business page having domain like .com) தங்கள் வாட்ஸ்அப் கணக்குடன் இணைக்க முடியும். மொபைல் எண் இல்லாமல் தங்கள் நிறுவனத்தின் வணிகப் பெயர் கொண்டு இயங்கும் வசதியும் இச்சந்தாவில் வழங்கப்பட உள்ளது.

தற்போது வாட்ஸ்அப் செயலியில் ஒரு பயனரின் கணக்கை 4 வெவ்வேறு சாதனங்களில் பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டு வரும் நிலையில் 10 வெவ்வேறு சாதனங்களில் தங்கள் கணக்கை ஒரே நேரத்தில் பார்வையிட பயன்படுத்தும் வசதி இந்த பிரீமியம் சந்தாவில் வழங்கப்பட உள்ளது. மேலும் பிரீமியம் சந்தா செலுத்துவதால் 32 பங்கேற்பாளர்களுடன் வீடியோ காலில் பேசவும் முடியும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அதே வேளையில் இந்த சந்தா வசதி அனைத்து வாட்ஸ்அப் பிசினஸ் கணக்கு பயனர்களுக்கும் கட்டாயமானதல்ல என்றும், அனைத்து பயனர்களும் கூடுதல் வசதிகள் இல்லாமல் பிற வசதிகளை வழக்கம்போல பயன்படுத்தலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இந்த சந்தா வசதி வாட்ஸ் அப்பின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பதிப்புகளில் பீட்டா வெர்ஷன்களில் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இந்த சந்தா வசதி அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்தாவின் விலை விவரங்கள் வெவ்வேறு பிராந்தியங்களுக்கு வித்தியாசமாக இருக்கும் என கூறப்படும் நிலையில் இந்தியாவில் இதன் விலை என்ன என்பது அந்நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக 700 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட டெலிகிராம் செயலியில் இந்தாண்டு ஜூன் மாதம் வரை அனைத்து வசதிகளும் பயனர்களுக்கு இலவசமாகவே வழங்கப்பட்டு வந்த நிலையில், சில மேம்படுத்தப்பட்ட சிறப்பு வசதிகளை பயன்படுத்துவதற்கு பயனர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க அந்நிறுவனம் முடிவு செய்தது. இதற்காக ப்ரீமியம் பிளான் என்ற புதிய சந்தா செலுத்தும் திட்டத்தை அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாவெல் துரோவ் அறிமுகப்படுத்தினார். அடிப்படை டெலிகிராம் பிரீமியம் திட்டத்திற்கு மாதத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.179 வசூலிக்கப்பட்டு வருகிறது.

தற்போது ட்விட்டர் புளூ டிக் பயனர்களுக்கான கூடுதல் வசதிகள் மூலம் இதே பாணியிலான சந்தா சேவை வழங்கி வருகிறது. இன்று கூடுதல் சேவைகளுக்கு மட்டும் கட்டணம் என சொல்லும் இதே தளங்கள், செயலியை பயன்படுத்தவே குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் என்று அறிவிக்க வெகு நேரம் ஆகாது என்பதையும் தொழில்நுட்ப வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். டெலிகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட நிறுவனங்கள் முழு சேவைக்கும் கட்டாய சந்தா திட்டத்தை கொண்டு வர மாட்டோம் என விளக்கம் அளித்துள்ள போதிலும், தொடர்ச்சியான பல அப்டேட்களை சந்தா செலுத்தும் பயனர்களுக்கு மட்டுமே வழங்கி மற்ற பயனர்களையும் சந்தா செலுத்தும் பக்கம் நகர்த்திச் செல்ல இயலும் என்பதையும் நாம் மறுக்க இயலாது.

ஒரு கற்பனைக்கு வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட தளங்கள் முழு சந்தாவுக்கு மாறிவிட்டால், நாம் அவையல்லாது எந்தச் செயலை வழக்கம்போல செய்ய முடியும், நமக்கு விருப்பமானவர்களுடன் உரையாட, விவாதிக்க, சண்டைபோட முடியும், புதிய விஷயங்களையும் அறிந்துகொள்ள முடியும் என்பதை சிந்தித்தால் இந்த பண உலகின் பயங்கரத்தை சற்று தெளிவாக உணர முடியும்.

காசு! பணம்! துட்டு! மணி! மணி! என்று அவர்கள் நகர்ந்துவிட்டால், நீங்கள்..? நான்? நாம்..?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com