‘இதெல்லாம் வெறும் பொம்மைகளல்ல.. ஒவ்வொன்னும் ஒரு தலைமுறை பேசும்!’ பொம்மை காதலன் மகாதேவன் கலெக்‌ஷன்ஸ்!

“பார்பவர்களுக்கு இது பொம்மைகளாகத் தெரியலாம். ஆனால் எனக்கு இது பல ஆண்டு கனவு”- மகாதேவன்
பழைய பொருள்
பழைய பொருள்PT

நம் ஒவ்வொருவருக்கும் வரலாற்று ஆய்வு, பயணம், தேடுதல் என ஒவ்வொரு விதமான ஆசை இருக்கும். அப்படி இங்கு, காரைக்குடியைச் சேர்ந்த மகாதேவனுக்கு பழைய பொருட்கள், பொம்மைகள் சேகரிப்பதில் அதீத ஆர்வம் இருக்கிறது. யார் இந்த மகாதேவன்? அவரின் ஆசைதான் என்ன? பார்ப்போம் இங்கே...

மகாதேவனுடன் அவரது மனைவி
மகாதேவனுடன் அவரது மனைவி

மகாதேவன், காரைக்குடியைச் சேர்ந்தவர். இவரை மகாதேவன் என்பதை விட பொம்மைகாதலன் என்று சொன்னால் தான் பலருக்கும் இவரைப்பற்றி தெரிகிறது.

பழைய பொருட்களையும் பழைய பொம்மைகளையும் சேகரிப்பதில் ஆர்வமிக்கவராக இருப்பதால் இவர் பொம்மைகாதலனாக அறியப்படுகிறார்.

அந்த கால குழந்தைகள் விளையாடும் கார், பஸ், ஜீப், ட்ரக், ஏரோபிளேன் போன்றவற்றை தற்காலத்தில் விதவிதமாக சேகரித்து வருகிறார் மகாதேவன்.

அப்படி என்ன பொம்மையின் மேல் உங்களுக்கு காதல்?

என்று அவரிடமே கேட்டோம்! நம்மோடு அவரே பகிர்கிறார்...

“நான் சின்ன வயசுல என் அப்பாவிடம் இந்த மாதிரி பொம்மைகள் வாங்கி தரச்சொல்லி அடம்பிடித்து இருக்கிறேன். என் அப்பா ஒரு சாதாரண மளிகைக்கடையை நடத்தி வந்ததால் நான் கேட்கும் பொருட்களை வாங்கி தரும் அளவுக்கு அவரிடம் பெரியளவு வசதி எல்லாம் இல்லை.

ஆனால் எனக்கு எப்படியாவது அந்த பொம்மைகளை வாங்கியே ஆகணும் என்ற கனவு இருந்தது. அது நாளடைவில் பொம்மைகளின் மீதான காதலாக மாறியது.

நான் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு நான் என்னென்ன பொம்மைகள் ஆசைப்பட்டேனோ அதை எல்லாம் சொந்த காசில் நானே வாங்க ஆரம்பித்தேன்.

பார்பவர்களுக்கு இது பொம்மைகளாகத் தெரியலாம். ஆனால் எனக்கு இவையாவும் என் பல ஆண்டு கனவு”

இத்தனை அழகாக அடுக்கி வைப்பதற்கு நேரம் அதிகமாக செலவழிப்பீர்களா?

“நான் பொருட்களை வாங்கும் முன் அதற்கான இடத்தை தேர்ந்தெடுத்துவிடுவேன். அதனால் தான் என்னால் எல்லாவற்றையும் நேர்த்தியாக வைத்துக்கொள்ள முடிகிறது.

எல்லோரும் மன அழுத்தம் வந்தால் ஏதாவது ஒரு வகையில் அழுத்தத்தை போக்கிக்கொள்ளுவாங்க. அந்த வகையில எனக்கு இந்த பொம்மைகளை பார்த்தாலே போதும்... என் மன அழுத்தம் போய் விடும்!”

இவரது கலெக்‌ஷனில் என்னவெல்லாம் உள்ளது என்று பார்த்தால், பொம்மைகள் மட்டுமன்றி பழைய டால்டா தகர டப்பா, ஹார்லிக்ஸ் டப்பா தொடங்கி, பல சோப் கவர்கள் கூட வைத்திருக்கிறார். எல்லாமே நமக்கு செம நாஸ்டாலஜிக் ஃபீல் கொடுக்கின்றன.

இத்துடன் பழங்கால தினசரி விளம்பரங்கள், பீங்கான் ஜாடிகள், மங்கு சாமான்கள், பழைய மங்கு டிபன் கேரியர்கள், பெயிண்டிங் செய்யப்பட்ட தகர டப்பாக்கள், 1940 முதல் வெளிவந்த குமுதம் அட்டைப்படங்கள், பர்மா தேக்கால் செய்யப்பட்ட பலவகையான பொருட்கள் என்று பலப்பல பள பள பழையப்பொருட்களை வைத்திருக்கிறார் மகாதேவன்!

தனது வீட்டை கல்லூரி மாணவர்கள் பார்வையிடவும் அனுமதிக்கிறார்.

“இந்த பொம்மைகள் மூலம் நீங்க சொல்ல வருவதுதான் என்ன?”

“நம் பாரம்பரியத்தை எடுத்துச்சொல்லும் பொருட்களை பார்த்து பார்த்து சேகரித்து வருகிறேன். இது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் போய்ச் சேரவேண்டும் என்பது என் ஆசை.

நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று வருங்கால சந்ததியும் தெரிந்துக் கொள்ளவேண்டும். அதுக்கு தான் இந்த கலெக்‌ஷன்ஸ்” என்று சொல்லும் மகாதேவன், சொந்தமாக ஆட்டோமோபல் கம்பெனி நடத்தி வருகிறார்.

தன்னுடைய இந்த பொம்மைக் கனவுக்கு, மனைவியும் குழந்தைகளும் பெரும் உதவியாக இருப்பதாக பெருமை பொங்க சொல்கிறார் மகாதேவன்.

தன் குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை முடித்த பின், மலைப்பிரதேசத்தில் ஒரு வீடு வாங்கி அதில் தனது சேகரிப்பை அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும் என்பது இவரது ஆசையாம். எண்ணம் போல வாழ, எங்களின் வாழ்த்துகளையும் கூறினோம்!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com