ஒரு முத்தத்துக்கு இத்தனை சக்தியா? - சர்வதேச முத்த தினம்!

ஒரு முத்தத்துக்கு இத்தனை சக்தியா? - சர்வதேச முத்த தினம்!
Kiss Day
Kiss DayKiss Day

ஜூலை 6-ஆம் தேதியான இன்று, `சர்வதேச முத்த தினம்’ கொண்டாடப்படுகிறது. `அம்மா இங்கே வா வா, ஆசை முத்தம் தா தா...’ என நமது கலாசாரத்திலேயே முத்தம் இருக்கிறது. அன்பின் வெளிப்பாடு', `ஆபாசம்'... இப்படி இருவேறு எல்லைகள் முத்தத்துக்கு உண்டு. உதாரணத்துக்கு பள்ளிக்குச் செல்லும் குழந்தையிடம் `ஒண்ணு கொடுக்க மறந்துட்டியே செல்லம்...’ என்று முத்தத்தைக் கேட்கும் அதே அப்பாக்கள்தான், வீட்டின் நடு ஹாலிஸ் தொலைக்காட்சியில் ஒரு முத்தக்காட்சி வந்தால் பதறிப்போய் சேனலை மாற்றுவர்!

அன்போ, ஆபாசமோ... முத்தம் நம் வாழ்க்கையோடு இணைந்த ஒன்றாகவே இருக்கிறது. அது ஏன், முத்தத்தில் எத்தனை வகைகள் உள்ளன, முத்தம் கொடுக்கும் விதங்கள், அது தரும் நன்மைகள் என முத்தத்தைப் பற்றி சொல்லிக் கொண்டேபோக கதைகளும் தகவல்களும் ஆயிரம் ஆயிரம் உண்டு. அவற்றில் சிலவற்றை, இக்கட்டுரை வழியாக உங்களிடம் சொல்ல விரும்புகிறோம். வாருங்கள், தெரிந்துக்கொள்வோம்!

அன்பை, காதலை, பரிவை, காமத்தை வெளிப்படுத்தும் ஒரு வடிவம்தான் முத்தம். அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட சில நாடுகளில் நடு ரோட்டில் யாரென்றே தெரியாத ஒருவருக்கு முத்தம் கொடுப்பதுகூட சகஜமான ஒன்று. ஒருவரை வரவேற்கும்விதமாக, நட்பை வெளிப்படுத்துவதற்காக, மரியாதை கொடுப்பதற்காக இப்படிச் செய்வார்கள். சில நாடுகளில் ஒரு முறை, சில நாடுகளில் இரு முறை, ஃபிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகளில் மூன்று முறை முத்தம் கொடுப்பதெல்லாம் வழக்கம். முத்தத்தை எதற்காக இப்படி எல்லோருக்கும் மரியாதை நிமித்தமாகவும், அன்பின் பரிமாற்றமாகவும் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று கேட்டால் அது தரும் மருத்துவப் பலன்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஒரு முத்தம்... என்னவெல்லாம் செய்யும்?

ஒரு முத்தத்தில் குறைந்தது 12 கலோரிகள் எரிக்கப்படுகின்றன.

ஒரு சிறிய முத்தத்தில் உதடுகளுக்கு அருகேயிருக்கும் இரண்டு தசைகள் உள்பட, முகத்திலிருக்கும் 12 தசைகளுக்கு வேலை கொடுக்கிறோம். ஆழமான முத்தத்தில் 34 முகத்தசைகள் தூண்டப்படுகின்றன.

முத்தம் முகத்திலிருக்கும் 34 தசைகளை இயங்கவைத்து, அவற்றை ஆரோக்கியமாக்கி, முகப்பொலிவுக்கு வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது.

உணர்ச்சிகள் தூண்டப்பட்டு கிளர்ச்சி கிடைக்கும்; ரத்தநாளங்கள் விரிந்து கொடுக்கும்; இதயத் துடிப்பு 58% அதிகரிக்கும்.

முத்தம் கொடுக்கும்போது பரிமாறப்படும் உமிழ்நீரில் புரதம் : 0.7 மி.கிராம் இருக்கிறது, கொழுப்பு 0.71 மி.கிராம் இருக்கிறது, உப்பு : 0.45 மி.கிராம் இருக்கிறது, நீர் : 60. மி.கி இருக்கிறது.

10 விநாடி கொடுக்கப்படும் முத்தத்தின் மூலமாக 9 மி.லி உமிழ்நீர் பரிமாற்றம் செய்யப்படுகிறது.

உணர்ச்சிகளுக்குக் காரணமாகும் அட்ரினலின் ஹார்மோன்(Adrenaline Hormone) சுரப்பது அதிகமாகும். மகிழ்ச்சிக்குக் காரணமான செரோட்டோனின் ( Serotonin) சுரப்பு அதிகரிக்கும்.

மன அமைதிக்கு உதவும் ஆக்ஸிடோசின் ஹார்மோன் ( Oxytocin Hormone) சுரப்பு அதிகமாகும்.

கோபம், உடல் பருமன், கொழுப்பு ஆகியவற்றுக்குக் காரணமாகும் கார்ட்டிசால் ஹார்மோன் (Cortisol Hormone) சுரப்பு குறையும்.

எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக முத்தமிடுகிறோமோ அதற்குச் சமமாக, முதுமையால் நமது முகத்தில் சுருக்கம் விழுவது குறையும்.

66% பேர் முத்தமிடுகையில் தங்கள் கண்களை இறுக மூடிக்கொள்கின்றனர். மீதிப் பேர் மட்டுமே கண்களைத் திறந்த படி, தனது பார்ட்னரை பார்த்த படி முத்தமிடுகின்றனர்.

ஒரு மனிதன் தனது வாழ்நாளில் முத்தத்துக்காகச் செலவிடுவது 306 மணி நேரம். நம் உதடுகளின் SENSITIVITY-யானது நம் விரல்களை விட 200 மடங்கு அதிகமானது.


மிக அதிக உணர்ச்சியுடன் 90 விநாடிகள் வரை முத்தமிட்டுக் கொள்பவர்களின் இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் மிக அதிக அளவிற்குச் செல்வதால் அவர்களது வாழ்நாளில் ஒரு நிமிடம் குறைகிறதாம்.

முத்தமிடுதல் பெண்களின் மன அழுத்தத்தைப் பெருமளவில் குறைக்கும். அதேநேரம் ஆண்களுக்கு மனஅழுத்தத்தை அதிகமாக்கும் அப்படினு சொல்லப்படுகிறது.

உடல் பருமனாக இருப்பவர்கள் தொடர்ந்து ஒரு நிமிடம் வரை முத்தமிடுவதால் தனது உடலின் 26 கலோரிகளை குறைக்க இயலும் . இதனால் தொப்பை குறைகிறதாம்.

முத்தமிடுதல் மற்றும் முத்தம் குறித்த ஆராய்ச்சிக்கு PHILEMOTOLOGY (பிலிமடாலஜி) என்று பெயர்.

தொடர்ந்து 1 நிமிடத்துக்கு மேல் முத்தம் கொடுக்கும் போது 26 கலோரிகள் வரை எரிக்கப்படுகின்றன.

முத்தமிடுகையில் பெரும்பாலும் நாம் வலது புறமாகவே முத்தமிடுகிறோம். அதற்கு காரணம், நமது மூளையில் நமது உணர்ச்சிகள் வலது பக்கமே கட்டுப்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களை விட வீட்டில் பார்த்து முடிக்கப்படும் திருமணம் செய்து கொண்டவர்கள் அதிகம் முத்தமிட்டு கொள்வதாக ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது.

இப்படி முத்தம் பற்றி பகிர, ஏராளமான தகவல்களும் தரவுகளும் உள்ளன. அவற்றில் ஒருசிலவற்றையே நாங்கள் உங்களுக்கு கூறியுள்ளோம். உங்களுக்கும் கூட வேறு சில தகவல்கள் தெரிந்திருக்கக்கூடும். ஆனால் அந்தத் தகவலை பகிரும்முன், உங்கள் அன்பின் உரியவருக்கு, ஒரு முத்தம் கொடுத்து, நீங்களும் எல்லா பலனையும் பெற்றிடுங்க...!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com