8 ஆண்டுகள்... 5 லட்சம்+ எழுத்தாளர்கள்... யார் இந்த டிஜிட்டல் கதைசொல்லி பிரதிலிபி?!

8 ஆண்டுகள்... 5 லட்சம்+ எழுத்தாளர்கள்... யார் இந்த டிஜிட்டல் கதைசொல்லி பிரதிலிபி?!
பிரதிலிபி
பிரதிலிபிபிரதிலிபி

கதை கேட்க விரும்பாத குழந்தைகள் உலகில் எங்குமே இல்லை எனலாம். சுவாரஸ்யமான, பிடித்தமான கதையை திரும்பத் திரும்ப எத்தனை முறை சொன்னாலும் முதல் தடவை கேட்பது போலவே அதே ஆர்வத்துடனும், ஆச்சரியத்துடனும் கேட்பவர்கள் குழந்தைகள். ஒரு நல்ல கதை ஒரு வேளை உணவை விட மேலானது என்பார்கள். இந்த உலகில் எவ்வளவு மனிதர்கள் வாழ்கிறார்களோ, அவ்வளவு கதைகள் இருக்கின்றன. மனிதன் குகையில் வாழ்ந்த காலத்திலே கதை சொல்லத் துவங்கிவிட்டான்.

இதிகாசங்கள், காவியங்கள், புராணக்கதைகள் ஆகியவை எல்லா நாடுகளிலும் இருக்கின்றன. அரசர் காலத்துக் கதைகளில் தொடங்கி விஞ்ஞான கதை வரை ஒவ்வொன்றிலும் ஒருவித சுவாரஸ்யங்கள் நிறைந்திருக்கும். கதைகள் கேட்பதால், படிப்பதால், நம் படைப்புத் திறனும், கற்பனை ஆற்றலும் தூண்டப்படுகின்றன. கதை சொல்பவர்களை எல்லாருக்குமே பிடிக்கும். அவர்களுக்கு நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள்.

நண்பர்களைக் கொண்டு உருவானது தான் இந்த பிரதிலிபி. ஒவ்வொரு வாசகர்களையும் எழுத்தாளர்களாகவும், எழுத்தாளர்களை வாசகர்களாகவும் மாற்றும் சூழல் இங்கு உள்ளது. தமிழ் கதைகளைப் பலவகைகளில் புதுமையான கதைக் களங்களோடு எளிதாகப் படிக்க உதவியாக இருக்கிறது. எழுத்து சுதந்திரத்தை வழங்கும் இந்த பிரதிலிபியின் முயற்சியால் 8 ஆண்டுகளில் சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான புதிய எழுத்தாளர்கள் உருவாகியுள்ளனர்.

5 பொறியாளர்கள் கொண்ட குழுவினால் உருவாக்கப்பட்ட இந்த தளம், தற்போது 12க்கும் அதிகமான மொழிகளில், கோடிக்கணக்கான கதைகளை தன்னகத்தே வைத்திருக்கிறது. இன்றுடன் தன்னுடைய 8வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் பிரதிலிபியின் கதையைப் பற்றி பிரதிலிபி தமிழுக்கான ஒருங்கிணைப்பாளர் ப.திலீபன் கூறுகையில்...

ஐ.டி துறையில் பொறியாளர்களாக வேலை செய்து வந்த நண்பர்கள் ரஞ்சித் பிரதாப் சிங், சங்கர நாராயணன் (அம்பாசமுத்திரம்), ஷைலி (குஜராத்), ராகுல் (பீகார்), பிரஷாந்த் ஆகிய 5 பேர் சேர்ந்து 2014ம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி உருவாக்கியது தான் இந்த பிரதிலிபி. ரஞ்சித் அதிகம் படிக்கக் கூடியவர். இவர் படித்த காலத்தில் ஆங்கில கதைகள் மட்டுமே அதிகளவில் கிடைத்தன. அவருடைய சொந்த மொழிகளில் குறைந்த பட்ச கதைகளே கிடைத்து வந்தன. இது போன்ற ஏராளமான கதைகள் அனைத்தும் ஒவ்வொருவரின் தாய்மொழிகளிலும் அதிகளவில் இருக்கவேண்டும் என்பது இவரின் கனவாக இருந்தது. இதற்கான முயற்சியை ஆரம்பிக்கலாம் என நினைத்து 5 நண்பர்களும் சேர்ந்து தங்களுடைய வேலையை விட்டு விட்டு, தங்களிடம் இருந்த சிறிய தொகையை வைத்து இதனை உருவாக்கினார்கள். பல்வேறு மாதங்களாக, வருடங்களாக ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள எழுத்தாளர்களைக் கண்டறிந்து, அவர்களை தங்களுடைய வலைதளத்தில் எழுத வைத்து ஊக்கப்படுத்தினர். இதன் மூலம் ஒவ்வொருவரும் தங்களின் சொந்த இலக்கியங்களையும், கதைகளையும், எந்த வடிவத்திலும் வெளியிடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கியது.

2015ம் ஆண்டு தான் நான் பிரதிலிபியில் இணைந்தேன். தற்போது சுமார் 300க்கும் அதிகமான உறுப்பினர்களுடன் இயங்கிவரும் பிரதிலிபியின் மூலம் கடந்த 8 ஆண்டுகளில் சுமார் 5,10,468 எழுத்தாளர்கள் உருவாகியுள்ளனர். 12 மொழிகளில் சுமார் 80 லட்சத்துக்கும் அதிகமான கதைகள், கட்டுரைகள், கவிதைகள், தொடர்கதைகள் என எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர். அதிலும் தமிழில் மட்டும் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகம்.

ஒரு எழுத்தாளருக்கான எழுத்துரிமை இங்கு முழுவதுமாக கொடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு வகையான கட்டுரை, தொடர்கதை போட்டிகள் வைத்து சிறப்புப் பரிசுகள் கொடுக்கப்பட்டு ஊக்கப்படுத்தியும் வருகிறோம் என்கிறார் திலீபன்.

மேலும் தொடர்ந்த அவர், இங்கு எழுதும் எழுத்தாளர்களில் 70% பேர் பெண்கள், இல்லத்தரசிகள் தான். எழுதுவதின் மூலமாக மட்டும் ஒவ்வொரு மாதமும் லட்சத்துக்கும் அதிகமாகச் சம்பாதிக்கிறார்கள். இதனால் ஏராளமான பெண்களை சிறந்த எழுத்தாளர்களாகவும் அங்கீகரித்து வருகின்றோம். சிறந்த படைப்புகளை ஆடியோ வடிவில் பிரதிலிபி FM ஆகவும், காமிக்ஸ் வடிவிலும் வெளியிட்டு அங்கீகாரம் கொடுத்து வருகிறது பிரதிலிபி. இனி வரும் காலங்களில் இங்கிருந்து வெப்சீரிஸ் போன்றவை அதிகம் வெளிவருவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம்.

எழுவதற்கான முயற்சி எடுக்கும் ஒவ்வொரு எழுத்தாளர்களும் தங்களின் எழுத்துத் திறனை வெளிப்படுத்த வேண்டும். மனதில் தோன்றுவதை எழுத வேண்டும். நாம் எழுதும் அந்த ஒரு தொடரோ, கதையோ, கவிதையோ எப்போது வேண்டுமானாலும் வைரல் ஆக வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் நாம் எழுதக்கூடிய படைப்புகள் ஆடியோவாகவோ, காமிக்ஸ் வடிவிலோ, வெப்சீரிஸ் வடிவிலோ பலரையும் சென்றடைவதற்கான வாய்ப்புகளை பிரதிலிபி உருவாக்கிக் கொடுக்கிறது. அந்த வாய்ப்பை தவற விட வேண்டாம். மகிழ்வுடன் வாசியுங்கள்... மகிழ்வுடன் எழுதுங்கள் என்கிறார் திலீபன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com