Instagram
InstagramInstagram

ஒவ்வொரு போஸ்டுக்கும் குவியும் கோடிகள்: இன்ஸ்டாவில் அதிக வருவாய் ஈட்டும் டாப் 10 பிரபலங்கள்

ஒவ்வொரு போஸ்டுக்கும் குவியும் கோடிகள்: இன்ஸ்டாவில் அதிக வருவாய் ஈட்டும் டாப் 10 பிரபலங்கள்
அதிகரித்து வரும் செல்போன் பயன்பாட்டால் சமூக வலைதளங்களின் பயன்பாடும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போதைய பொது முடக்கக் காலத்தில் சமூக வலைத்தளங்களே அனைவருக்கும் பொழுதுபோக்காக மாறிவிட்டது. சாமானியர்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என அனைவரும் தொடர்ந்து சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பல்வேறு நிறுவனங்கள், அதிக  தங்கள் நிறுவனங்களின் விளம்பரங்களை பிறரின் மூலமாகப் பகிரவும் தொடங்கியது. இதனால் பகிர்வோருக்குப் பணமும் கொடுக்கப்பட்டது.
இப்படி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்வதன் மூலம் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை Hopper HQ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முக்கியமான சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் என இந்தியாவின் பிரபலங்களின் பெயர்களும் இடம் பிடித்துள்ளது.
இந்தப் பட்டியலின் அடிப்படையில் விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார். இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் ஒரு ஸ்பான்ஸர் பதிவுக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் கிடைக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் 11.99 கோடி ரூபாய்.  
சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்றவற்றில் சுமார் 50 கோடிக்கும் அதிகமானோர் ரொனால்டோவை பின்தொடர்கின்றனர். இவர் கூகுள் டியோ (Google Duo), கிளியர் <ஹேர்கேர் (Clear Haircare), நைக் கால்பந்து (Nike Football), சிக்ஸ் பேட் யூரோப் (Six Pad Europe) என பலவற்றை இன்ஸ்டாகிராமில் விளம்பரப்படுத்துகிறார்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையின்படி, ரொனால்டோவின் பதிவுகளால் 2020-ல் மட்டும் 75 மில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் கிடைத்துள்ளது. இதே 2021-ம் ஆண்டு முடிவுக்குள் 100 மில்லியன் டாலராக உயரலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இரண்டாவது இடத்தில் மல்யுத்த வீரரும், ஹாலிவுட் நடிகருமான டுவைன் டக்ளஸ் ஜான்சன் (ராக்) 11.38 கோடி ரூபாய் வருமானம் பெறுகிறார். மூன்றாவது இடத்தில் இருக்கும் பாப் பாடகர் அரியானா கிராண்டே 11.28 கோடி ரூபாய் வருமானமாகப் பெறுகிறார். இவர்களைத் தொடர்ந்து கெய்லே ஜென்னர் 11.17 கோடியும், செலினா கோம்ஸ் 10.97 கோடியும் பெறுகின்றனர். 
இந்தியாவைப் பொருத்தவரை விராட் கோலி, பிரியங்கா சோப்ரா ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இதில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி 19 வது இடத்தில் உள்ளார்.  இவர் பதிவிடும் ஒரு பதிவிற்கு 5.08 கோடி ரூபாய் வருமானம் பெறுகிறார். அதேபோல், 27-வது இடத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா ஒரு விளம்பர பதிவிற்கு 3 கோடி ரூபாய் வருமானமாகப் பெறுகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com