ஸ்டார்ட் அப் இளவரசிகள் 7: கேண்டைஸ் கார்பென்டர் - இணையத்தில் பெண்களின் சாம்ராஜ்ஜியம்!

ஸ்டார்ட் அப் இளவரசிகள் 7: கேண்டைஸ் கார்பென்டர் - இணையத்தில் பெண்களின் சாம்ராஜ்ஜியம்!
ஸ்டார்ட் அப் இளவரசிகள் 7: கேண்டைஸ் கார்பென்டர் - இணையத்தில் பெண்களின் சாம்ராஜ்ஜியம்!

இணைய வரலாற்றில் மறக்கப்பட்டுவிட்ட எத்தனையோ வலைதளங்களில் ஒன்றாக 'ஐவில்லேஜ்' (iVillage) மாறிவிட்டது. இந்த தளம் பல ஆண்டுகளுக்கு முன்னரே மூடப்பட்டுவிட்டது எனும்போது, இதில் எந்த வியப்பும் இல்லைதான். ஆனால், இணைய வரலாற்றை திரும்பிப் பார்க்கும்போது 'ஐவில்லேஜ்' மைல்கல் தளங்களில் ஒன்றாக மின்னிக் கொண்டிருப்பதை உணரலாம்.

ஒரு கட்டத்தில் 'ஐவில்லேஜ்' தளத்தின் ஒளி குறையத் துவங்கி பின்னர் மெள்ள இருளில் மூழ்கினாலும், 'ஐவில்லேஜ்' பிரகாசமாக மின்னிக்கொண்டிருந்த காலத்தில், அது இணையத்தின் வெற்றிக்கதைகளில் ஒன்றாக கொண்டாடப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் 'ஐவில்லேஜ்' ஏற்படுத்திய ஈர்ப்பையும், உண்டாக்கிய உற்சாகத்தையும் இப்போது நினைத்துப் பார்ப்பது கடினமானதுதான்.

தோல்வியின் வெளிச்சத்தில் ஆய்வு செய்யப்படும்போது, 'ஐவில்லேஜ்' ஊதிப் பெரிதாக்கப்பட்ட மிகை வெற்றிக்கதையாக தோன்றினாலும், 'ஐவில்லேஜ்' டாட் காம் யுகம் உருவாக்கிய நட்சத்திரங்களில் ஒன்றாக திகழ்வதை மறுப்பதற்கில்லை. அதுமட்டும் அல்ல, டாட் காம் யுகத்தை உருவாக்கிய நிறுவனங்களில் ஒன்றாகவும் ஐவில்லேஜை கருதலாம் எனும்போது அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம்.

இவை எல்லாவற்றையும் விட 'ஐவில்லேஜ்' தளத்திற்கு இன்னொரு முக்கிய சிறப்பு இருக்கிறது. இணையத்தில் பெண்களுக்காக உருவாக்கப்பட்ட இணைய நிறுவனங்களில் ஒன்று என்பதுதான் அது.

ஆம், வைய விரிவு வலையாக (WWW) இணையம் வேகமாக வளரத் துவங்கிய காலத்தில், பெண்களுக்கான அடையாளங்களில் ஒன்றாக 'ஐவில்லேஜ்' உருவானதோடு, பெண்கள் இணையத்தின் மீது ஆர்வம் கொள்வதற்கான காரணங்களில் ஒன்றாகவும் அமைந்தது. இணையம் நமக்கான இடம் எனும் ஆர்வத்தை பெண்கள் மத்தியில் உண்டாக்கியதை ஐவில்லேஜின் சாதனையாக கருதப்படுகிறது.

இந்த சாதனைக்கு சொந்தக்காரரான கேண்டைஸ் கார்பென்டர் (Candice Carpenter) பற்றிதான் இந்த வாரம் பார்க்கப் போகிறோம். 'நான்ஸி ஈவன்ஸ்' எனும் பத்திரிகையாளர் மற்றும் ராபர்ட் லெவிட்டன் எனும் மார்க்கெட்டிங் அதிகாரியுடன் இணைந்து இவர் 'ஐவில்லேஜ்' நிறுவனத்தை பெண்களுக்கான மாபெரும் இணைய சாம்ராஜ்ஜியமாக உருவாக்கிக் காட்டினார்.

ஒரு கேப்டனின், ஆளுமையால் மட்டுமே கவனத்தை ஈர்க்கும் கிரிக்கெட் அணியைப் போல, கேண்டைஸ் தனது வசீகரத் தன்மையாலும், தலைமைப் பண்பாலும் 'ஐவில்லேஜ்' நிறுவனத்தை பெரும் உயரத்திற்கு கொண்டு சென்றார். இந்த வர்த்தக வெற்றிக்கான லாபகரமான அடித்தளத்தை அமைக்காமல், ஆகாயத்தில் வளர்ச்சிக் கோட்டையை உருவாக்கியவராக அவர் பின்னாளில் விமர்சிக்கப்பட்டாலும், இதை அவர் திட்டமிட்டு செய்தார் என்று சொல்வதிற்கில்லை.

மேலும், டாட் காம் அலையில் மேலெழுந்த பெரும்பாலான இணைய நிறுவனங்கள் மீது முன்வைக்கப்படும் பொதுவான விமர்சனமாகவே இது அமைவதையும் மனதில் கொள்ள வேண்டும்.

இணைய வரலாற்றில் 'ஐவில்லேஜ்' இடத்தை சரியாகப் புரிந்துகொள்ள, அந்தத் தளம் உருவான காலத்தையும், பின்னணியையும் கவனத்தில் கொள்வதும் அவசியம். இணையம் வரத்தகமயமான ஆண்டாக கருதப்படும் 1995-ம் ஆண்டுதான் 'ஐவில்லேஜ்' நிறுவனம் உருவானது. இ-காமர்ஸ் துறையில் பெரும் நிறுவனமாக எழுச்சி பெற்ற அமேசான் இணையதளம் இதே ஆண்டுதான் அறிமுகமானது என்பதும் இங்கே நினைவுகூர வேண்டியது அவசியம்.

இணைய யுகத்தில் லாபத்தைவிட வளர்ச்சியே முக்கியம் என அமேசானை இயக்கியே அதே கருத்தாக்கத்தின் அடிப்படையில்தான் 'ஐவில்லேஜ்' உருவாகி வளர்ந்தது என்பது மட்டும் அல்ல, ஒரு கட்டத்தில் அமேசானுக்கு போட்டி நிறுவனமாகவும் கருதப்பட்டது. குழந்தைகளுக்கான பொருள்களை விற்பனை செய்யும் ஐபேபி.காம் தளத்தை ஐவில்லேஜ் கையகப்படுத்தியபோது இவ்வாறு கருதப்பட்டது. அமேசான் எப்படி புத்தகங்களுக்கான இணைய சாம்ராஜ்ஜியயமாக இருக்கிறதோ, அதேபோல, ஐபேபியை வாங்கிய ஐவில்லேஜ் குழந்தைகள் பொருட்களுக்கான அமேசனாக வளரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இத்தகைய எதிர்பார்ப்பு ஏற்படுவதற்கான காரணம், 'ஐவில்லேஜ்' ஏதோ ஒரு வலைதளமாக இல்லாமல், பெண்களுக்கான முன்னணி வலைதளமாக உருவானதுதான். இந்த பரப்பில் 'ஐவில்லேஜ்' தனித்து விளங்கினாலும் போட்டி இல்லாமல் இல்லை. ஆக்ஸிஜன் மீடியா மற்றும் வுமன்.காம் ஆகிய பெண்களை மையமாக கொண்ட இணைய நிறுவனங்கள் ஐவில்லேஜுக்கு நிகராக வளர்ந்து கொண்டிருந்தன. மேலும் பல பெண்கள் இணைய நிறுவனங்கள் செயல்பட்டுக்கொண்டிருந்தன.

ஒரு பக்கம் இ-காமர்ஸ், இன்னொரு பக்கம் யாஹு போன்ற இணைய வலைவாசல்கள், மற்றொரு பக்கம் ஏல தளமான இபே, வேலைவாய்ப்பு தளமான மான்ஸ்டர், வரிவிளம்பர தளமான கிரேக்லிஸ்ட் உள்ளிட்ட இணைய நிறுவனங்கள் வேகமாக வளர்ச்சி பெற்றுக்கொண்டிருந்த நிலையில், பெண்களுக்கான இணைய பரப்பின் முக்கியத்துவத்தை 'ஐவில்லேஜ்' உணர்த்தியது.

இணையம் எனும் மாபெரும் வலைப்பின்னலின் எழுச்சியைக் கோட்டைவிட்டு விட்டோமே என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தை, நெட்ஸ்கேப் இணைய நிறுவனம் பதற வைத்துக்கொண்டிருந்த காலக்கட்டத்தில், ஐவில்லேஜ் அறிமுகமானது. நெட்ஸ்கேப் பிரவுசர் வளர்ச்சியால் மிரண்டுபோன மைக்ரோசாப்ட் அவசரமாக போட்டி பிரவுசர் எக்ஸ்பிளோரரை அறிமுகம் செய்த நிலையில், இணைய சேவை வழங்குவதில் முன்னணி நிறுவனமான ஏ.ஓ.எல் என அழைக்கப்பட்ட அமெரிக்கன் ஆன்லைன் நிறுவனமும், இணையத்தின் வளர்ச்சிக்கு தானும் ஈடுகொடுக்க வேண்டும் எனும் எண்ணத்தைக் கொண்டிருந்தது.

புதிய இணைய நிறுவனங்கள் எங்கிருந்தெல்லாம் முளைக்கின்றன, எப்படி வளர்ச்சி பெறுகின்றன என புரிந்துகொள்வதில் பழைய நிறுவனங்களுக்கு இருந்த குழப்பமும், தடுமாற்றமும் ஏ.ஓ.எல் நிறுவனத்திற்கும் இருந்தது. இந்தப் பின்னணியில்தான் இணைய வளர்ச்சியை சாதகமாக்கி கொள்வதற்காக வழிகாட்ட நிறுவனம் கேண்டைஸ் கார்பென்டரை ஆலோசகராக நியமித்தது. கேண்டைஸ் எம்பிஏ பட்டம் பெற்ற நிர்வாகியாக அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றி இருந்தாலும் கம்ப்யூட்டர், இணையம் ஆகிய விஷயங்களில் அறிமுகமோ, அனுபவமோ இல்லாதவராகவே இருந்தார்.

ஏ.ஓ.எல் நிறுவனத்தில் அலோசகராக சேர்ந்தபோதுதான் அவர் தனது வழங்கப்பட்ட லேப்டாப் மூலம் இணையத்தை அறிமுகம் செய்து கொண்டார். லேப்டாப் வழியே விரிந்த இணைய உலகை கண்டு அவர் உற்சாகம் கொண்டுவிடவில்லை; இது நமக்கு புரியாத இடம் என விலகவும் இல்லை. மாறாக, துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்த இணைய சமூகங்களை பார்த்து வியந்துபோனார். ஒத்த கருத்துள்ள பலரும் இணையம் மூலம் உரையாடி தங்களுக்கான தனி உலகை உருவாக்கி கொள்வதைப் பார்த்தார்.

இப்படி செல்லப் பிராணிகளுக்கான சமூகம், தன்பாலின ஈர்ப்பாளருக்கான சமூகம் என்றெல்லாம் இணைய சமூகங்கள் இருப்பதை கவனித்தவர், மக்கள் தங்கள் வாழ்க்கை பற்றிய துடிப்பான விதத்தில் கருத்துகளை பகிர்ந்துகொள்ளும் இத்தகைய சமூகங்களே இணையத்தின் எதிர்காலமாக இருக்கும் என நினைத்தார். இந்தப் போக்கை வர்த்தகமயமாக்கி ஒரு பிராண்டாக உருவாக்கலாம் எனும் எண்ணமும் அவருக்கு உண்டானது. பத்திரிகையாளராக இருந்த தோழி நான்ஸி ஈவன்ஸ் மற்றும் நண்பர் ஒருவரால் பரிந்துரைக்கப்பட்ட மார்க்கெட்டிங் அதிகாரி ராபர்ட் லெவிட்டன் ஆகியோருடன் இணைந்து குடும்பம், ஆரோக்கியம் மற்றும் பணி வாழ்க்கை ஆகியவற்றுக்கான சமூகங்களாக விளங்கக் கூடிய இணையதளங்களை அமைப்பது என தீர்மானித்தார்.

இந்தத் திட்டம் ஏ.ஓ.எல் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட பேரன்ட் சூப் எனும் பெற்றோர்களுக்கான வலைதளம் முதலில் துவங்கப்பட்டது. பெற்றோர்களுக்கான செய்திகள், அரட்டை அறை வசதி, ஆலோசனைகள் உள்ளிட்ட அம்சங்களை இந்தத் தளம் கொண்டிருந்தது. 'ஐவில்லேஜ்' எனும் நிறுவனத்தின் கீழ் இந்தத் தளம் அறிமுகமானது. தொடர்ந்து கார்டன்வெப் உள்ளிட்ட தளங்களும் அறிமுகம் செய்யப்பட்டன.

'ஐவில்லேஜ்' அறிமுகம் செய்த இணையதளங்களும், அவற்றின் உள்ளடக்கமும் பெண்களை மையமாக கொண்டதாக அமைந்திருந்தன. இணையத்தை அறிமுகம் செய்துகொண்ட பெண்கள், இயல்பாக 'ஐவில்லேஜ்' தளங்கள் நோக்கி ஈர்க்கப்பட்டனர். பெண்கள் தொடர்பான செய்திகள், தகவல்களை தெரிந்துகொள்வதற்கான இடமாக, இவை தொடர்பாக உரையாடுவதற்கான இடமாக 'ஐவில்லேஜ்' அறியப்பட்டது.

இந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கான சிறிய வலைதளங்கள் பல உருவாகியிருந்தன. ஆனால், துவக்கம் முதலே ஐவில்லேஜை கேண்டைஸ் பெரிய அளவில் திட்டமிட்டு வளர்த்தெடுத்தார்.

இணைய பரப்பில் டாட் காம் நிறுவனங்கள் தனி செல்வாக்குடன் வளரத் துவங்கியுருந்த நிலையில், ஐவில்லேஜ் நிறுவனமும் பெண்களுக்கான டாட் காம் நிறுவனமாக வேகமாக வளர்ச்சி பெற்றது. நிறுவனம் வளர்ந்த அளவுக்கு அதன் வருவாய் வளரவில்லை என்றாலும் கேண்டைஸ் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி வாய்ப்பு பற்றிய எதிர்பார்ப்பை உருவாக்கி கொண்டிருந்தார். டாட் காம் யுகத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் இத்தகைய மாயமான் வேட்டையில்தான் ஈடுபட்டிருந்தன.

பெரிய அளவில் வருவாய் ஆதாரம் இல்லாத நிலையில், வளர்ச்சி எனும் பிம்பத்தை நோக்கில் டாட் காம் நிறுவனங்கள் ஓடிக்கொண்டிருந்தன. கேண்டைஸ் இந்தக் கலையின் மகாராணியாக இருந்தார். அவரால், 'ஐவில்லேஜ்' வெற்றிக்கதை பற்றிய நம்பிக்கையை முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்த முடிந்தது.

ஆரம்ப முதலீடு கரைந்து, அடுத்தக் கட்ட முதலீடுகளையும் நிறுவனம் விழுங்கி கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் மில்லியன் கணக்கில் நஷ்ட கணக்கு சேர்ந்து கொண்டிருந்தத நிலையிலும், கேவண்டைஸ் புதிய முதலீடுகளை கொண்டு வந்து கொட்டினார். 'ஐவில்லேஜ்' பெண்களுக்கான இணைய பரப்பாக விளங்கியதும், பெண்கள் மத்தியில் வளர்ந்து வந்த செல்வாக்குமே இதற்கு அடிப்படையாக இருந்தது.

அதற்கேற்ப ஐவில்லேஜ் கீழ் செயல்பட்டு வந்த அனைத்து இணையதளங்களையும் ஒருங்கிணைத்து ஐவில்லேஜ்.காம் எனும் ஒற்றை தளத்தின் கீழ் கொண்டு வந்து, அதன் பிராண்ட் மதிப்பை உயர்த்தினார். இன்னொரு பக்கம் அதன் உள்ளடக்கத்தை உருவாக்கத்திலும் புதுமையை புகுத்தினார். பெண்களை ஈர்த்ததோடு, வருவாய் ஆதாரத்திற்காக ஒருங்கிணைந்த விளம்பர யுக்தியையும் தீவிரமாக்கினார். அதாவது தனியே விளம்பரங்களை நாடாமல், வர்த்தக நிறுவனங்களை இணைத்துக்கொண்டு, அவர்கள் விரும்பும் உள்ளடக்கத்தை வழங்கி வருவாயை கொண்டுவந்தார். நிறுவனம் விழுங்கி கொண்டிருந்த முதலீட்டிடன் ஒப்பிடும்போது இந்த வருவாய் சொற்பமாக இருந்தாலும் நிறுவன வளர்ச்சிக்கான கனவை கட்டியெழுப்ப இது போதுமானதாக இருந்தது.

பெண்கள் இணையதள பரப்பில், ஆக்ஸிஜன் மீடியா மற்றும் வுமன்.காம் ஆகிய போட்டி நிறுவனங்கள் வளர்ச்சியும் இந்தப் பிரிவின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியது. இந்த அம்சங்களை எல்லாம் சாத்தியமாக்கி கொண்டு, 1999-ல் 'ஐவில்லேஜ்' நிறுவனத்தை பங்குச்சந்தைக்கு கொண்டு வந்தார். தொடர் நஷ்டத்தை எதிர்கொள்ள வளர்ச்சியை குறிவைத்து, நிறுவன உத்திகளை தயங்காமல் மாற்றினார். செயல்படாத பழைய அதிகாரிகளை நீக்கிவிட்டு அவர்கள் இடத்தில் புதியவர்களை நியமித்து அனைவரையும் முடுக்கிவிட்டார்.

நிறுவனத்தை முன்னிறுத்தும் கலையிலும் கேண்டைஸ் தேர்ச்சி பெற்றிருந்தார். பங்கு வெளியீட்டை முன்னிட்டு பம்பரமாக சுற்றியவர், வர்த்தக காய்களை திறம்பட நகர்த்தி, பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கினார். இதன் பயனாக நிறுவன பங்குகள் பட்டியலிடப்பட்டபோது, 24 டாலர் எனும் அறிமுக விலையில் இருந்து முதல் நாள் வர்த்தகத்தில் உச்சம் தொட்டு, 2 பில்லியன் டாலர் மதிப்பை தொட்டது. இதனால் நிறுவன சி.இ.ஓ கேண்டைஸ் உள்ளிட்டவர்கள் கோடீஸ்வரர்களாக மதிப்பு பெற்றதோடு, அடுத்த ஒரு மாதத்தில் நிறுவன பங்கு 134 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படும் நிலை வந்தது.

ஆனால், அடுத்த சில மாதங்களில் நிறுவன பங்குகள் விலை வேகமாக சரிந்து ஒரு டாலருக்கு பரிவர்த்தனை செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில், ஐவில்லேஜின் வளர்ச்சி ஊதி பெரிதாக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு, அதன் கடந்த செயல்பாடுகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

வலுவான வர்த்தக அடிப்படை இல்லாத நிலையிலும் பிரமாண்டமான வளர்ச்சிக்கான தோற்றத்தை கேண்டைஸ் தனது வசீகரத்தாலும், இன்னும் பிற நிர்வாக உத்திகளால் உருவாக்கியதாக விமர்சிக்கப்பட்டார். இந்த விமர்சனங்களை அவருக்கான பாராட்டாகவும் கொள்ளலாம்.

புத்தாயிரமாண்டு பிறந்தபோது டாட் காம் அலை ஓய்ந்து, டாட் காம் குமிழ் வெடித்துச் சிதறிய நிலையில் 'ஐவில்லேஜ்' தட்டுத்தடுமாறி தாக்குப் பிடித்திருந்தது. என்பிசி டுடே நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டு, பின்னர் அந்நிறுவனத்திலேயே ஐக்கியமானது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com