"பெரியார்தான் இதை சாத்தியப்படுத்தினார்"- மகன் கையால் தாலி வாங்கி மறுமணம் செய்த பெண் பேட்டி

"பெரியார்தான் இதை சாத்தியப்படுத்தினார்"- மகன் கையால் தாலி வாங்கி மறுமணம் செய்த பெண் பேட்டி

"பெரியார்தான் இதை சாத்தியப்படுத்தினார்"- மகன் கையால் தாலி வாங்கி மறுமணம் செய்த பெண் பேட்டி

தென்காசியைச் சேர்ந்தவர் சுபாஷினி ராஜேந்திரன். ஆங்கிலத்துறை பேராசிரியையான இவர், ஓவியர் ஆதிஸ் என்பவரை அண்மையில் மறுமணம் செய்துகொண்டார். மதுரையில் நடந்த இவர்கள் திருமணத்தில் சுபாஷினியின் 9வயதான மகன் தர்ஷன் தாலியை எடுத்துக்கொடுத்த புகைப்படம் பெரிய அளவில் வைரலானது. பலரும் இதற்கு வரவேற்பு தெரிவித்தனர். இந்நிலையில் அவரிடம் பேசினோம்.

உங்களைப்பற்றி சொல்லுங்க

''என் சொந்த ஊர் தென்காசி. படிச்சது எல்லாமே இங்கேதான். யூஜி படிக்கும்போதே எனக்கு திருமணம் நடந்துவிட்டது. காதல் திருமணம்தான். பல்வேறு பிரச்னைகள் காரணமாக அவரிடமிருந்து பிரிந்து வந்துவிட்டேன். பிறகு, என்னுடைய மேற்படிப்பை தொடர முடிவெடுத்தேன். அதன்படி எம்.ஏ, பி.எல் படித்தேன். எனக்கு படிப்பதில் மிகுந்த ஆர்வம்; நன்றாகவே படிப்பேன். யூஜியில் ரேங்க் ஹோல்டர். அப்போது என்னைச் சுற்றி ஒரு பாதுகாப்பற்ற ஒரு சூழலை உணர்ந்தேன். யாரிடமும் பேச பிடிக்கவில்லை. வீட்டிலேயே அடைந்துகிடப்பது. பகலிலே அறையை இருட்டாக்கிக்கொள்வது.. இப்படித்தான் என்னுடைய ஆரம்ப நாட்கள் கழிந்தது. ஒரு கட்டத்துக்கு பிறகு, 'நாம இப்படியே இருக்க கூடாது' என முடிவு செய்தேன். வேலைக்கு போக முடிவு செய்தேன். இருந்தாலும் படிப்பை விடவில்லை. பி.எச்.டி படிக்க வேண்டும் என்பது எனது கனவு. இதனிடையே விவாகரத்தும் கிடைத்துவிட்டது. தற்போது பி.எச். படித்துக்கொண்டிருக்கிறேன்.

முதல் கணவரை பிரிந்து வந்தபோது உங்கள் வீட்டில் உங்களை ஏற்றுக்கொண்டார்களா? அவர்களின் மனநிலை என்னவாக இருந்தது?

என்னுடைய பெற்றோர் மிகவும் மகிழ்ந்தனர். அப்பாடா! நம்ம பொண்ணு நம்ம கிட்ட வந்துட்டா என அவர்கள் சந்தோஷப்பட்டனர். காரணம், காதலித்து வீட்டை எதிர்த்து தான் திருமணம் செய்துகொண்டேன். வீட்டில் யாருக்கும் விருப்பமில்லை. அதனால் நான் திரும்பி வரும்போது அவர்கள் என்னை எளிதில் ஏற்றுக்கொண்டார்கள். ஒருவேளை வீட்டில் பார்த்து திருமணம் நடந்திருந்து, கணவரை பிரிந்து வந்திருந்தால் அவர்கள் எந்த அளவுக்கு என்னை ஏற்றுக்கொள்ள முன்வந்திருப்பார்கள் என்பது சந்தேகம் தான்.

உங்கள் மகன் கையால் தாலி எடுத்துக்கொடுத்து திருமணம் நடந்துள்ளது. பலரும் அதை வரவேற்று கொண்டாடினர். சமூக வலைதளங்களில் புகைப்படம் வைரலானது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

நம்மை சுற்றியிருக்கும் சொந்தக்காரர்கள்தான் பெரும் பிரச்னையே. நமக்கு உண்மையாக இருப்பது, 'நம்மை பெற்றவர்களும், நாம் பெற்றவர்களும்' தான். குழந்தைகள் மனது எப்போதும் எந்த கள்ளங்கபடமும் அற்று தூய்மையானது. என்னை அந்த அளவுக்கு அக்கறை எடுத்து பார்த்துக்கொள்பவன் என் மகன் தர்ஷன். நான் எப்பவுமே சிரிச்சுகிட்டே சந்தோஷமா இருக்கணும்னு நினைப்பான். சமயத்து நான் அவனுக்கு அம்மாவா, இல்ல அவன் எனக்கு தாயானு நினைக்க தோணும். அம்மா, அப்பாவுக்கு அப்றம் நான் சந்தோஷமாக இருக்கணும்னு யோசிக்கிற ஜீவன். அவன் இந்த திருமணத்த வேணாம்னு சொல்லியிருந்தா, கண்டிப்பா இந்த கல்யாணம் நடந்திருக்காது. அவன் ஓகே சொன்னான். அவன் கையால தாலி எடுத்துக்கொடுத்த நல்லாருக்கும்னு தான் அப்படி முடிவு செஞ்சோம். அது இந்த அளவுக்கு வைரலாகும்னு நெனைச்சுக்கூட பாக்கல. இது ஒருவகையில் எங்களுக்கு சந்தோஷம் தான். காரணம், ஏதோ ஒரு இடத்தில் மறுமணம் செய்ய தயங்கி கொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்கு இந்த சம்பவம் இன்ஸ்பிரேஷனாக இருக்கும். மறுமணம் செய்ய இங்கே பல தடைகள் இருக்கிறது. பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என சமூகம் ஒன்றை விதைத்திருக்கிறது. இவையெல்லாம் இந்த நிகழ்வு மூலம் உடையுமானால் அது மகிழ்ச்சியே!

மறுமணம் குறித்த முடிவை உங்கள் பெற்றோரிடம் கூறும்போது அவர்களின் மனநிலை என்ன?

அவர்கள் தொடக்கத்திலிருந்தே மறுமணத்தை வலியுறுத்திக்கொண்டிருந்தார்கள். உன் வாழ்க்கைய பாரு என சொல்லிக்கொண்டிருந்தார்கள். மீண்டும் திருமண பந்தத்தில் நுழைவது எனக்கு பெரும் தயக்கமாகவும், பயமாகவும் இருந்தது. நான் சந்தோஷமாக இருப்பதைவிட, நிம்மதியாக இருக்க விரும்பினேன். சரி எனக்கு பிடித்த ஒருவரை பார்த்தால் சொல்கிறேன் என்றேன். அதன்படி ஆதியை சந்தித்தேன். வீட்டில் கூறினேன். அவர்கள் தொடக்கத்தில் தயங்கினாலும் பிறகு ஏற்றுக்கொண்டார்கள். இப்போது எனது பெற்றோர்கள் கணவர் ஆதியுடன் அத்தனை நெருக்கமாக இருக்கின்றனர்.

சமூகத்தில் பெண் ஒருவர் மறுமணம் செய்வது குதிரை கொம்பாக இன்றளவும் நீடிக்கிறது. கணவரை விட்டு பிரிவது அவ்வளவு பெரிய குற்றமாக சமூகம் கருதுகிறது. தொடர்ந்து பெண்ணுரிமைக்காக போராடிய பெரியார் இதை உடைக்க முயற்சித்தார். அது இன்று உங்களுக்கும் கைகொடுத்திருக்கிறது. பெரியாரின் தேவை இன்றும் இருக்கா?

பெரியார் வெறுமனே சாதி ஒழிப்பை மட்டும் பேசவில்லை. சமூகத்தில் நிலவும் பொதுப்புத்தியை உடைத்தவர். 'நான் சொல்றதையும் நீ கேட்காதே; உன் அறிவு தான் உனக்கு பெரிது' என்று அவர் சொன்னது என்னை ஈர்த்தது. அதேபோல நமக்கான அங்கீகாரம் கிடைக்காத போது கருணாநிதி சொன்னதுதான் நினைவுக்கு வரும். 'அடிக்கிற காற்றில் குப்பையும் பறக்கும்; காகிதமும் பறக்கும்' இது எனக்கு உந்துசக்தியாக இருந்தது. நமக்கான நேரம் வரும்போது அங்கீகாரம் கிடைக்கும் என்பது உண்மைதான். பெரியாரை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முக்கியமான வேலை நமக்கு இருக்கிறது. பேராசிரியையாக இருக்கும் நான் எனது மாணவர்களிடம் கிடைக்கும் நேரத்தில் பெரியாரை பற்றி சொல்லிக்கொடுப்பேன். பின்தங்கிய கிராமத்திலிருக்கும் மாணவர்களிடம் பெரியார் பற்றி ஒன்றுமே தெரியவில்லை. அவரைப்பற்றி தெரிந்துகொள்ளும்போது நமக்குள் புதிய தெளிவு ஏற்படும். அது நம்மை சரியான பாதைக்கு அழைத்து செல்ல உதவும். பெரியார் குறித்து நிறைய பேச வேண்டிய தேவை இருக்கிறது. இன்றளைவும் அவருடைய தேவை இருந்துகொண்டுதான் இருக்கிறது.

பெண்ணுக்கு மறுமணம் ஏன் தேவை?

கட்டாயமாக மறுமணம் செய்ய வேண்டும் என்று நான் சொல்லமாட்டேன். அது அந்த பெண்ணின் மனநிலையைப் பொறுத்தது. 2 வருடத்திற்கு முன்னாடி வரை எனக்கு அது தேவைப்படவில்லை. இப்போது மறுமணம் பற்றி யோசிக்கிறேன். சட்டப்படியான உரிமைதானே அது.

பெண்கள் விவாகரத்து செய்யவே யோசிக்கிறார்கள். சமூகத்துக்கு பயந்து பிடிக்காத கணவருடன், பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வாழ்ந்துவருகிறார்கள். இதை நீங்கள் எப்படி எதிர்கொண்டீர்கள்? அப்படியான பெண்களுக்கு நீங்கள் சொல்வது என்ன?

பெண்களுக்கு கல்வி முக்கியமான தேவை. பொருளாதார சுதந்திரம் தேவை. இவை இரண்டும் கட்டாயமான ஒன்று. எப்போது ஒரு பெண் தயங்குகிறாள் என்றால், ஒரு பெண் பிறக்கும்போதே, அவளுக்கு தந்தை துணை தேவை, பிறகு சகோதரன் துணை, பிறகு கணவன் துணை என யாரோ ஒருவரை நம்பியே அவள் வாழ வேண்டும் என கட்டமைத்துவிட்டார்கள். அதனால் இந்த சமூக கட்டமைப்பிலிருந்து வெளியேற ஒரு பெண் தயங்குகிறார்கள். இந்த உலகம் ஆணுக்கு ஒருமாதிரியாகவும், பெண்ணுக்கு ஒருமாதிரியாகவும் உள்ளது. இதிலிருந்து பெண்கள் வெளியேற வேண்டுமானால் கல்வி தான் ஒரே வழி. 'பிடிக்கவில்லையா போ. எனக்கு என் கல்வி இருக்கிறது. அதை வைத்து என்னால் வாழமுடியும்' என்ற துணிவு வேண்டும். 'போக போக எல்லாம் சரியாகிடும்' என்று சொல்லி சொல்லியே பிடிக்காத ஒருவருடன் பெண்கள் வாழ கட்டாயப்படுத்துகிறார்கள். பொருளாதார ரீதியில் யாரையும் சார்ந்து இருக்காத ஒரு வாழ்க்கையை வாழந்தால் மட்டுமே அந்த துணிவு வரும். அதுக்கு படிக்கணும்.

கல்லூரியில் படிக்கும்போதே திருமணம் செய்து பெண்ணோட கல்விக்கு முற்றுபெறுகிறது. பிறகு அந்த கணவன், மாமியார் என்ன கொடுமை செய்தாலும் வேறு வழியில்லாமல் அந்த பெண் தாங்கிகொள்ள வேண்டியிருக்கிறது. பெண்கள் இன்னொன்றை புரிந்துகொள்ள வேண்டும். 'நான் தண்டமா உனக்கு சாப்பாடு போட்றேன்' என ஒரு கணவர் பாவம் புண்ணியம் போல சொல்லிவிட முடியாது. அது அவரது கடமை. செய்துதான் ஆக வேண்டும். அதேபோல, 'என்னோட வீட்ல நீ இருக்க' என சொல்லமுடியாது. இந்திய திருமணச்சட்டப்படி, கணவர் வீட்டில் பெண்ணுக்கும் சம உரிமை உண்டு. இதை பெண்கள் உணர வேண்டும். தங்கள் உரிமை குறித்து விழிப்புணர்வு வேண்டும். தாய் வீட்டுக்கு வரும்போது, அப்பா அம்மாவுக்கு பாதிப்பு ஏற்படும் என நினைக்காமலிருக்க தான் படிப்பு. அது தான் எப்போதும் ஒரு பெண்ணுக்கு துணை நிற்கும்!

-கலிலுல்லா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com