‘இருக்கு ஆனா இல்லை’ : இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புள்ளதா? - ஓர் அலசல்

‘இருக்கு ஆனா இல்லை’ : இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புள்ளதா? - ஓர் அலசல்

‘இருக்கு ஆனா இல்லை’ : இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புள்ளதா? - ஓர் அலசல்
Published on

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் 50 ஓவர் மகளிர் உலகக் கோப்பை தொடரில் இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் இரண்டில் வெற்றியும், மூன்றில் தோல்வியும் தழுவியுள்ளது. வரும் 22 மற்றும் 27 ஆகிய தேதிகளில் வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது இந்தியா. இந்நிலையில் இந்த தொடரின் நாக்-அவுட் சுற்றான அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேற வாய்ப்பு உள்ளதா என்பதை பார்ப்போம். 

இந்த தொடரில் இந்தியா இதுவரை?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தி வரும் இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அதில் இந்திய அணி விளையாடியுள்ள முதல் ஐந்து போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை வென்றுள்ளது. அதே நேரத்தில் நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளிடம் தோல்வியடைந்துள்ளது. 

இருந்தாலும் புள்ளிப்பட்டியலில் இப்போதைக்கு இந்தியா டாப் 4 அணிகளில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. புள்ளிகளில் டாப் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகளே அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு எப்படி?

இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு என்பது இப்போதைக்கு ‘இருக்கு ஆனா இல்லை’ என்ற நிலையில் தான் உள்ளது. அதாவது முதல் சுற்றில் இந்திய அணி விளையாட உள்ள இரண்டு போட்டிகளிலும் வென்றாக வேண்டும். அதே நேரத்தில் இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளை காட்டிலும் இந்திய அணியின் நெட் ரன் ரேட் கூடுதலாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த இரண்டு அணிகளும் 8 புள்ளிகள் வரை பெற வாய்ப்புகள் உள்ளது. அதனால் நெட் ரன் ரேட்டை கூடுதலாக வைத்திருப்பது இந்தியாவுக்கு மிகவும் அவசியம். 

இப்போதைக்கு ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வமாக அடுத்து சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அடுத்ததாக தென்னாப்பிரிக்க அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும் என தெரிகிறது. அதே போல வெஸ்ட் இண்டீஸ் அணி நாளை பாகிஸ்தான் உடன் விளையாடுகிறது. அந்த ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெறுவது அவசியம். பின்னர் தென்னாப்பிரிக்காவுடன் விளையாடுகிறது அந்த அணி. 

இப்போதைக்கு இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்காவை வீழத்தியாக வேண்டும். இதில் தென்னாப்பிரிக்க அணி இதுவரை இந்த உலகக் கோப்பை தொடரில் வீழ்த்த முடியாத அணியாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது. அடுத்த இரண்டு ஆட்டத்தில் மிதாலி ராஜ் மற்றும் குழுவினர் வெற்றிவாகை சூடுகிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற இந்தியாவுக்கு கடுமையான போட்டியாளராக இருக்கும் என்றே தெரிகிறது. மொத்தம் இந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி அடுத்தடுத்து 2 போட்டிகளில் வென்றுள்ளது. அதுவும் இந்தியா மற்றும் நியூசிலாந்தை அந்த அணி வீழ்த்தி உள்ளது. மேலும் புள்ளிப்பட்டியலில் மிகவும் கடைசி இரண்டு இடத்தை பிடித்துள்ள வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானை தான் அந்த அணி கடைசி இரண்டு போட்டிகளில் சந்திக்கிறது. அதனால் இப்போது நான்காவது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் தான் கடுமையான போட்டி நிலவுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com