'கிரிக்'கெத்து 17: சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சி வரும் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா
இந்திய கிரிக்கெட் என்றாலே கபில்தேவ், சச்சின், கங்குலி, டிராவிட், தோனி, கோலி மாதிரியான நட்சத்திர வீரர்களின் பெயர்கள்தான் பெரும்பாலான கிரிக்கெட் ஆர்வலர்களின் மனதில் வந்து செல்லும். அந்த லிஸ்டில் தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் தன் பெயரையும் சேர்த்தவர் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து பார்மேட் கிரிக்கெட்டிலும் பட்டையை கிளப்பி வருபவர் அவர்.
25 வயதான அவர் இந்திய அணிக்காக 62 சர்வதேச ஒருநாள் போட்டிகள், 84 டி20 போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் மொத்தம் 4673 ரன்களை சேர்த்துள்ளார். அதுமட்டுமல்லாது மகளிர் பிக் பேஷ் லீக் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.
ஸ்மிருதிக்கு ரத்தத்தில் கலந்தது கிரிக்கெட்!
மகாராஷ்டிராவை சேர்ந்தவர் ஸ்மிருதி. அவரது வீடு முழுவதும் கிரிக்கெட் வீரர்களால் நிரம்பியுள்ளது. அவரது அப்பா ஸ்ரீனிவாஸ், அண்ணன் ஷ்ரவன் என இருவருமே மஹாராஷ்டிராவில் உள்ள சங்கிலி மாவட்டத்திற்காக கிரிக்கெட் விளையாடியவர்கள். அதோடு அவரது சொந்த பந்தங்களில் சிலரும் கிரிக்கெட் வீரர்களாக டிவிஷினல் கிரிக்கெட் விளையாடியுள்ளனர். அதை பார்த்து வளர்ந்த ஸ்மிருதிக்கு இயல்பாகவே கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆர்வம் வந்துள்ளது. அதன் காரணமாக நடைவண்டிக்கு மாற்றாக கிரிக்கெட் பேட்டின் துணையோடு நடைப்போட்டு பழகியுள்ளார்.
“என் கிரிக்கெட் பயணத்தை நான் வெற்றிகரமாக அமைத்துக் கொள்ள காரணமே என் குடும்பம் தான். அப்பாவும், அண்ணனும் என் பயிற்சியை பார்த்து கொள்ள, அம்மா என் உணவு மற்றும் டயட் விஷயங்களை கவனித்து கொள்கிறார்” என இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட தேர்வான போது சொல்லியிருந்தார் ஸ்மிருதி.
‘இந்த ஏரியா, அந்த ஏரியா, அந்த இடம், இந்த இடம், எங்கேயுமே எனக்கு, பயம் கிடையாது…ஏன்னா ஆல் ஏரியாலயும் நான் கில்லி’ என கில்லி திரைப்படத்தின் வசனம் கச்சிதமாக இவருக்கு பொருந்திப் போகும். அதற்கு ஒரு காரணமும் உண்டு. சர்வதேச கிரிக்கெட் களத்தில் இதுநாள் வரையில் ஸ்மிருதி பதிவு செய்துள்ள ஐந்து சதங்களும் வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்டவை. SENA என சொல்லப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில்தான் இந்த ஐந்து சதங்களையும் அவர் பதிவு செய்துள்ளார்.
இந்த ஐந்தில் நான்கு சதங்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் பதிவு செய்யப்பட்டவை. மற்றொரு சதம் கிரிக்கெட்டின் அசல் வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பதிவு செய்யப்பட்டது. அந்த இன்னிங்ஸ் குறித்து பார்க்கலாம்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் சதம்!
ஸ்மிருதி, இந்திய அணிக்காக மொத்தம் நான்கு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். அதில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதங்கள் அடங்கும். ஆஸ்திரேலிய மண்ணில் அந்த நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்திருந்தார்.
அதன் மூலம் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சார்பில் முதல் சதம் பதிவு செய்தவர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். அதற்காக களத்தில் மொத்தம் 245 நிமிடங்கள் பேட் செய்தார் ஸ்மிருதி. 216 பந்துகளில் 127 ரன்களை எடுத்திருந்தார். அதில் 22 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடங்கும். அந்த சிக்ஸரை ஆஸ்திரேலிய அணியின் பவுலர் Tahlia McGrath-க்கு எதிராக டீப் ஸ்கொயர் லெக் திசையில் விளாசி இருந்தார் ஸ்மிருதி.
இரண்டாம் நாள் ஆட்டம் ஆரம்பித்த போது ஆடுகளத்தில் இருந்த புற்களை பயன்படுத்தி ஸ்மிருதியின் ரன் குவிப்பை தடுக்க முயன்றது ஆஸ்திரேலிய அணி. ஆனால் இரண்டாம் நாள் ஆட்டத்தின் முதல் ஒரு மணி நேரம் நேர்த்தியுடன் விளையாடி தனது சதத்தை பதிவு செய்திருந்தார். இந்த போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது அவர் 144 பந்துகளில் 80 ரன்கள் எடுத்திருந்தார்.
ஆஸ்திரேலிய அணியின் சவாலான வேகப்பந்து வீச்சை சமாளித்து ஆடியிருந்தார் ஸ்மிருதி. அவரது ஆட்டத்தை பார்த்து அசந்து போன சச்சின் கூட ‘KEEP SCORING. KEEP INSPIRING’ என ட்வீட் செய்திருந்தார்.
இருப்பினும் இந்த போட்டி சமனில் முடிந்தது. கடந்த 2021-இல் மட்டும் இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் படைத்த சாதனைகளில் ஸ்மிருதியின் பங்கு சற்று அதிகம் எனவும் சொல்லலாம். மகளிர் பிக் பேஷ் லீக்கில் 64 பந்துகளில் 114* (நாட் அவுட்) ரன்கள் குவித்தார். அதோடு The Hundred கிரிக்கெட் தொடரில் Southern Brave அணியில் இடம் பெற்றுள்ளார் அவர். மேலும் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஷபாலியுடன் 167 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார் ஸ்மிருதி.
2021 சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கான ரேஸிலும் ஸ்மிருதி இடம் பெற்றுள்ளார். சச்சின் சொன்னதை போல தனது ஆட்டத்தின் மூலம் பலரையும் இன்ஸ்பையர் செய்து வருகிறார் ஸ்மிருதி.
சென்ற வார அத்தியாயம்: 'கிரிக்'கெத்து 16: இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகர் ‘சுதிர் குமார் சவுத்ரி’!

