"சென்னை பஸ், ஷேர் ஆட்டோக்கள்தான் எனக்கு துணைபுரிந்தன"- பவானி தேவி பகிர்வு | #MadrasDay2021

"சென்னை பஸ், ஷேர் ஆட்டோக்கள்தான் எனக்கு துணைபுரிந்தன"- பவானி தேவி பகிர்வு | #MadrasDay2021
"சென்னை பஸ், ஷேர் ஆட்டோக்கள்தான் எனக்கு துணைபுரிந்தன"- பவானி தேவி பகிர்வு | #MadrasDay2021

ஒலிம்பிக் வாள்சண்டைக்கு தகுதிபெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமை நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை பவானி தேவியையேச் சேரும். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு இன்று 382-ஆவது பிறந்தநாள். சென்னையைச் சேர்ந்த பவானிதேவியிடம் ‘சென்னை தினம்’ குறித்து கேட்காமல் இருக்க முடியுமா? பேசினோம், உற்சாகமுடன் வார்த்தைகளை சுழற்றுகிறார்.

“நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை தண்டையார்பேட்டை. அதனால், என்னையும் சென்னையையும் பிரித்துப் பார்க்க முடியாது. முதல்முறையாக வாள்சண்டைப் பயிற்சியை சென்னை நேரு ஸ்டேடியத்தில்தான் தொடங்கினேன். தினமும் காலையில் நேரு ஸ்டேடியம் சென்று பயிற்சி முடித்துவிட்டு ஷேர் ஆட்டோவிலோ, பஸ்ஸிலோ ஸ்கூலுக்கு போவோம். மாலை ஸ்கூல் முடிந்ததும் மறுபடியும் நேரு ஸ்டேடியம் சென்று பயிற்சி முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்ல இரவு 9 மணி ஆகிவிடும். வாள்சண்டை கற்றுக்கொள்ளத் தொடங்கிய ஐந்து வருடங்கள் இப்படியேத்தான் தொடர்ந்தது. நேரு ஸ்டேடியத்தில் பயிற்சி எடுத்ததே, வாள்சண்டையில் மேலும் பல கடினமான பயிற்சிகளை ஈஸியாக பழகிக்கொள்ள வைத்து, என்னை ஒலிம்பிக் வரையும் கொண்டு வந்தது.

இதுவே, நான் மற்ற மாவட்டத்தில் பிறந்திருந்தால், இந்த வசதி வாய்ப்புகள் கிடைத்திருக்குமா என்பது தெரியாது. எங்கள் காலத்தில் வீட்டிற்கு 9 மணிக்கு செல்வது என்பது ரொம்ப தாமதம். பஸ், ஷேர் ஆட்டோ போன்ற வசதி வாய்ப்புகள் சென்னையில் இருந்ததால், என்னைப்போன்ற வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயிற்சியை தொய்வில்லாமல் தொடர முடிந்தது. நேரு ஸ்டேடியமும் பெரிய ஸ்டேடியமாக இருந்ததால் நன்கு பயிற்சி எடுக்கவும் முடிந்தது. இதுபோன்ற வசதிகள் மற்ற மாவட்டங்களிலும் இருந்திருந்தால், வாள் சண்டையில் இன்னும் பலர் வந்து சாதித்திருப்பார்கள்.

அதேபோல, வெளி மாநிலங்களுக்குச் செல்லும்போது போக்குவரத்து மற்றும் ஃபிட்னஸ் மையங்களின் வசதிகள் குறைவு. ஆனால், சென்னையில் நிறைய இருக்கிறது. இந்த மாதிரி விஷயங்களும் சென்னைக்கு வரும்போது ஈஸியா கிடைக்கும். மற்ற மாநிலங்களைவிட நாம் வாள்சண்டை விளையாட்டை தமிழகத்தில் தாமதமாகத்தான் தொடங்கினோம். லேட்டா தொடங்கினாலும், இப்போ லேட்டஸ்டா வந்துட்டோம்; இன்னும் வருவோம். அதற்கேற்றார்போல், தமிழ்நாடு முதல்வரும் ‘வாள்சண்டை வீராங்கனைகளுக்கு நிதி பிரச்னை மட்டுமல்ல. வேறு நிறைய பிரச்னைகளும் இருக்கிறது. என்னால், முடிந்தவரை நிதி பிரச்னை மட்டுமல்லாமல் மற்ற பிரச்னைகளையும் சரி செய்து தருவேன்’ என்றிருக்கிறார். இதுபோன்று, நான் யார் சொல்லியும் கேட்டதில்லை” என்கிற பவானிதேவி, சென்னையில் பிடித்த விஷயத்தையும் பகிர்ந்துகொண்டார்.

“சென்னை மொழி எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்த ஸ்லாங்கை கேட்பதே அலாதியானது. உற்சாகத்தைக் கொடுக்கும். போட்டிக்காக வெளி மாநிலங்களுக்குச் சென்றாலும் எப்போது சென்னை வருவோம் என்றே இருக்கும். சென்னை வந்தவுடன் சுற்றியும் சென்னை ஸ்லாங் கேட்கும்போது ஆட்டோமேட்டிக்கா ஒரு ஃபீல் ஆகும். கேரளாவில் வாள்சண்டை பயிற்சி எடுக்கச் சென்றிருக்கிறேன். அப்போல்லாம் சென்னையை ரொம்ப மிஸ் பண்ணி, பொய் சொல்லிட்டெல்லாம் ஓடி வந்திருக்கேன்.

வாழ்க்கை என்றால் என்னவென்றும், வாழ்க்கையில் லட்சியத்தை எப்படி அடைய வேண்டும் என்ற தன்னம்பிக்கையும் வாள்சண்டைதான் கத்துக்கொடுத்திருக்கு. அதற்கு, நான் சென்னையில் பிறந்ததுதான் காரணம். என் அம்மா ரமணியும் சென்னையில் பிறந்ததுதான் காரணம். வாள்சண்டை விளையாட்டு புதிதாக வரும்போது எல்லா பள்ளிகளிலும் தொடங்கினார்கள். நானும் போய் ஆர்வமாக கற்றுக்கொண்டேன். நான் சோர்ந்து போனாலும், என் அம்மா உறுதியாக இருந்ததால்தான் என்னால் இந்த விளையாட்டை தொடர முடிந்தது. இதுவே, மற்ற இடங்களில் இருந்திருந்தால் ஃபேமிலி சப்போர்ட் இல்லாமல் பாதியிலேயே பயத்தில் விட்டிருக்கும் சூழல் ஏற்பட்டிருக்கும். ஆனா, என் அம்மா ’எல்லாத்தையும் தகர்த்து முன்னாடிப்போ.. அச்சிவ் பண்ணு’ என்ற தைரியத்தைக் தொடர்ந்து கொடுத்தாங்க. அவங்களுக்கும் அந்தத் தைரியத்தை சென்னைதான் கொடுத்திருக்கு. நானும் முன்னாடி போய்ட்டிருக்கேன். தமிழ் பெண் எப்படி பெருமையோ, அதேபோல, சென்னை பெண் என்பது கெத்துதான்” என்ற பவானி தேவியிடம், ”சென்னையில் பிடித்த இடம் எது?” என்று கேட்டோம்...

“நான் வாள்சண்டை தொடங்கிய இடம் என்பதால் பிடித்த இடம், அதிகம் சென்ற இடம் நேரு ஸ்டேடியம்தான். போட்டிகளுக்காக வெளி நாடுகளுக்குச் சென்று வந்தாலும், இப்போதும் வாரம்தோறும் கட்டாயம் நேரு ஸ்டேடியம் சென்று ஒருநாள் பயிற்சி எடுத்துவிட்டுத்தான் வருவேன். சிறு வயதில் நேரு ஸ்டேடியத்தில் பயிற்சி முடித்துவிட்டு தோழிகளுடன் ஆட்டோவில் இடம் இல்லாமல் இறுக்கமாக உட்கார்ந்துகொண்டு சென்றதெல்லாம் மறக்க முடியாத நினைவுகள். நேரு ஸ்டேடியத்துக்கு அடுத்ததாக திருவொற்றியூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் சென்று விடுவேன். அதேபோல, நான் ரொம்ப மிஸ் பண்ற விஷயம்னா அது சென்னை உணவுதான். எத்தனையோ இடங்களுக்குச் சென்றிருக்கிறேன், சென்னை உணவு மாதிரி வரவே வராது. விளையாடச் செல்லும்போது இதனை ரொம்பவே மிஸ் பண்ணுவேன்” என்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com