ஆக்ரா கோட்டை
ஆக்ரா கோட்டைஆக்ரா கோட்டை

இந்திய பாரம்பரிய இடங்கள் 2: ஆக்ரா கோட்டை - பேரரசர்களை மயக்கிய கனவுக் கோட்டை!

இந்திய பாரம்பரிய இடங்கள் 2: ஆக்ரா கோட்டை - பேரரசர்களை மயக்கிய கனவுக் கோட்டை!

உலக அரங்கில் இந்தியா என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது தாஜ்மஹால்தான். காதலின் அடையாளமாகச் சொல்லப்படும் தாஜ்மஹால், ஆக்ரா நகரில் அழகிய வெள்ளை பளிங்குக் கற்களால் பல நூறு ஆண்டுகளாக இன்னும் மிளிர்ந்து கொண்டு இருக்கிறது. அதேநேரத்தில் ஆக்ரா என்பது தாஜ்மஹால் என்னும் பொக்கிஷத்தை மட்டும் கொண்டதல்ல. ஆக்ரா எனும் கிரீடத்தில் ஒற்றை ரத்தினம் மட்டும்தான் தாஜ்மஹால். அப்படியான மற்றுமொரு ரத்தினம்தான் 'ஆக்ரா கோட்டை'. இது, உலக பாரம்பரிய இடமாக யுனெஸ்கோவால் தேர்வு செய்யப்பட்ட இடமாகும். இந்த ஆக்ரா கோட்டையின் வரலாறு குறித்தும், அதன் சிறப்புகளையும் இந்த அத்தியாயத்தில் சற்றே விரிவாக அறிவோம் வாருங்கள்.

யமுனோத்திரி பகுதியிலிருந்து வரும் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள ஆக்ரா பகுதியானது மௌரியர்கள், குப்தர்கள், சுல்தான்கள், முகலாயர்கள் என இந்தியாவின் அதிகப்படியான ஆக்கிரமிப்புகளையும், ஆட்சி மாற்றங்களையும், மகுடங்களையும் பார்த்துள்ளது.

காதலுக்கும், கட்டடக் கலைக்கும் அழியாத சான்றாக இருக்கும் தாஜ்மஹாலுக்கு அருகே யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது பிரமாண்டமான 'ஆக்ரா கோட்டை'.

யமுனை நதியின் அலைகள் மதில்களை மோத, சிவப்பு மணற்கற்களால் பல அடுக்கு அறைகள், மஹால்கள், மசூதிகள், மாடங்கள் என்றிருக்கும். குறிப்பாக பசுமையான முகலாய கட்டடங்களுக்கே உரித்தான கம்பீரமும், அழகும், வரலாறும், போர்களைத் தாங்கி நிற்கும் வடுக்களும் கூடிக் குலாவி இக்கோட்டையில் நிற்கும். இக்கோட்டைக்கு 'லா கிலா', 'ஆக்ராவின் செங்கோட்டை' போன்ற வேறு பெயர்களும் உள்ளன.

ஆக்ரா கோட்டைக்குச் சென்றால் அரசவைக் கட்டிடம் என்பதைத் தாண்டி, இதில் எண்ணிலடங்கா கதைகளும், அதில் நிறைந்த போர்களும், வென்ற வீரத்தின் மகுடங்களும், சூழ்ச்சிகளும் இருக்கும். பல மன்னர்களை சந்தித்த கோட்டை என்பதால், இங்கிருந்து சரிந்த ஆட்சிகளும் இங்கு திரையாடிக் கொண்டிருக்கும். முகலாயர்களின் மிக முக்கியமானதும் உறுதியானதுமான கோட்டைகளில் இக்கோட்டை முக்கியமான ஒன்று. அதனாலேயே இது முகலாய பாணியில் உள்ள கலை மற்றும் கட்டடக் கலையின் ஏராளமான கட்டடங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

1983-ஆம் ஆண்டு நடந்த உலகப் பாரம்பரியத்தின் ஏழாவது மாநாட்டில் 'ஆக்ரா கோட்டை' உலக பாரம்பரிய இடமாக ஏற்கப்பட்டு, இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட இடங்களின் பட்டியலில் முதன் முதலாக சேர்க்கப்பட்டது. ஆக்ரா கோட்டையானது கலாச்சாரம், பாரம்பரியம், தனித்துவம், மறைந்து விட்ட ஒரு நாகரிகத்திற்கான அடையாளம் என்ற பட்டியலின் அடிப்படையில் யுனெஸ்கோவின் 3-வது விதியின் கீழ் உலக பாரம்பரிய இடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சரித்திரத்தில் இடம்பிடித்த இந்த ஆக்ரா கோட்டையை விரும்பாத பேரரசர்களே வரலாற்றில் இல்லை எனச் சொல்லலாம். அந்தளவுக்கு இன்றும் அன்றும் அக்கோட்டை அதிசயங்களால் நிரம்பியே இருக்கிறது. அதேநேரத்தில், 'உலகில் எத்தனை எத்தனையோ கோட்டைகள் இருக்க, ஆக்ரா கோட்டையின் மீது மட்டும் பேரரசர்களுக்கு ஏன் இவ்வளவு ஆசை, ஏன் அவர்களுக்கு இந்தக் கோட்டை பிடித்திருந்தது, எது அவர்களைப் பரவசப்படுத்தியது, எது மயக்கியது' போன்ற கேள்விகளும் இங்கே நிச்சயம் எழ வேண்டும். லட்சக்கணக்கான உயிர் பலிகள், அரியணை மாற்றங்கள், போர்கள் என ஆக்ரா கோட்டையைத் தேடி வந்தவர்களைப் பற்றிய ஒரு குட்டி டைம்லைன் உடன் இந்தக் கோட்டையின் சிறப்பம்சங்கள் பற்றிய விவரங்கள் இங்கே: 

வரலாற்றின் ஓட்டத்தில் ஆக்ரா கோட்டை கடந்து வந்த பாதை: 

மௌரியர்கள், தொமாரா மரபினர், ஆஜ்மெர், குலாம் மரபினர், கில்ஜிக்கள், துக்ளக், சய்யித், லோடி எனப் பல பேரரசுகளுக்குப் பின் சுல்தான்களின் வசம் வந்தது டெல்லி.

 * கி.பி 1487-ஆம் ஆண்டில் சிக்கந்தர் லோடி (எ) சுல்தான் தனது தலைநகரை முதன்முதலாக டெல்லியிலிருந்து ஆக்ராவுக்கு மாற்றினார்.

 * சுமார் 30 ஆண்டுகள் இவரின் பிடியிலிருந்த கோட்டை, கி.பி.1517-ல் (சிக்கந்தர் லோடியின் மறைவிற்குப் பின்) அவரின் மகன் இப்ராஹிம் லோடிக்கு கிடைத்தது. 9 ஆண்டுகள் இவரின் கட்டுப்பாட்டில் கோட்டையை வைத்திருந்தார்.

 * பின் கி.பி.1526-ம் ஆண்டு பானிபட் போர் நடந்தது. இதில் இப்ராஹிம் லோடி, முகலாயப் பேரரசர் பாபரால் கொல்லப்பட்டார். அப்போது ஆக்ரா கோட்டையையும், பெருமளவு செல்வத்தையும் அவர் கைப்பற்றினார். பாபரின் மகன் ஹுமாயூன் உலகப் புகழ்பெற்ற 'கோ-இ-நூர்' (கோஹினூர்) வைரத்தைக் கைப்பற்றினார்.

 * பாபருக்குப் பின் கி.பி.1530-ம் ஆண்டு ஆக்ரா கோட்டையில் ஹுமாயூனுக்கு முடிசூட்டப்பட்டது. பானிபட் போரில் பாபரால் இப்ராஹிம் லோடி தோற்கடிக்கப்பட்டு கொல்லப்படுவதற்கு முன்பு வரை, அவர் இங்கு பல்வேறு அரண்மனைகளையும், கிணறுகளையும், மசூதிகளையும் எழுப்பியிருந்தார்.

 * இதற்குப் பின் கி.பி.1540-ம் ஆண்டில், ஆப்கன் சூர் வம்சத்தை சேர்ந்த ஷேர் ஷாவிடம் ஹுமாயூன் தோல்வியடைந்ததால், ஆக்ரா கோட்டையை ஆக்கிரமித்து, அதனை பாதுகாக்கவும் உத்தரவிட்டார் ஷேர் ஷா.

 * ஆறு ஆண்டுகள் ஷேர் ஷா-வின் பாதுகாப்பிலிருந்த இந்தக் கோட்டையை, கி.பி. 1556-ம் ஆண்டு ஹுமாயூனின் மகன் ஜலாலுதீன் முகமது அக்பர் கைப்பற்றினார். இதனால் கோட்டையானது மீண்டும் முகலாயர்களின் பிடியில் வந்தது.

 * ஆக்ராவின் அமைவிட முக்கியத்துவத்தை உணர்ந்த அக்பர், கி.பி.1558-ல் அந்த இடத்தை அவரின் தலைநகரமாக்கினார்.

 * பின், கி.பி.1565-ல் சிதைவடையும் நிலையில் செங்கற்களால் ஆன கோட்டையை சிவப்பு மணற்கற்களால் புதுப்பிக்கவும் உத்தரவிட்டார் அக்பர். இதையடுத்து, உட்பகுதி செங்கற்களாலும், வெளி மேற்பரப்புக்கள் சிவப்பு மணற்கற்களாலும் புதுப்பிக்கப்பட்டது. தினமும் 4,000 வேலையாட்கள் என சுமார் 8 ஆண்டுகள் வேலையில் ஈடுபட்டு, கி.பி.1573-ம் ஆண்டில் சிவப்பு மணற்கற்களால் புதுப்பிக்கப்பட்ட கோட்டையை கட்டி முடித்தனர்.

 ஆக்ரா கோட்டையின் சிறப்பம்சங்கள்:

 அரை வட்ட வடிவில் உள்ள இந்தக் கோட்டையை 21.4 மீட்டர் உயரமுள்ள சுவர் சூழ்ந்துள்ளது. இந்த அரை வட்டம், நாண் ஆற்றுக்கு இணையாக இருக்குமாறு அமைந்துள்ளது. 94 ஏக்கர் நிலப்பரப்பில் பரவியுள்ள இந்தக் கோட்டையின் மதில் சுவர் 70 அடி உயரமானது. சீரான இடைவெளியில், கோட்டையைச் சுற்றி இரட்டை அரண்கள் அமைந்துள்ளன.

 கோட்டையின் நான்கு பக்கங்களிலும் நான்கு வாயில்கள் உள்ளன. இதில் யமுனை ஆற்றின் முன்பு இருக்கும் வாயில் 'கிஸ்ரி-கேட்' (தண்ணீர் கேட்) என்று அழைக்கப்படுகிறது. அடுத்தடுத்த வாயில்கள், 'டெல்லி வாயில்', 'லாகூர் வாயில்', என அழைக்கப்படுகிறது. இதில் லாகூர் வாயிலை, அமர்சிங் ராத்தோரின் பெயரைத் தழுவி 'அமர்சிங் வாயில்' எனவும் அழைப்பதுண்டு. இதற்கு முன், 'அக்பர் வாயில்' என அது அழைக்கப்பட்டது. பிரிட்டிஷாரின் ஆட்சியில்தான் இதை 'அமர்சிங் வாயில்' என மாற்றினர். இவையன்றி டெல்லி வாயிலுக்கு உட்புறமாக அமைந்த இன்னொரு வாயில் 'யானை வாயில்' என அழைக்கப்படுகின்றது.

 தற்போது, 'டெல்லி வாயில்' இந்திய அரசால் பயன்படுத்தப்பட்டு வருவதால், கோட்டையை பார்வையிடச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், லூகூர் வாயில் வழியாகவே செல்கின்றனர்.

 இந்தியாவின் கட்டடக் கலையைப் பொறுத்தவரை ஆக்ரா கோட்டை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், பல்வேறு வகையான கட்டடக் கலையின் பாணியில் கட்டப்பட்ட 500-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் கோட்டையில் இருந்தன. ஆனால், அவற்றுள் பெரும்பாலான கட்டடங்கள் வெள்ளைப் பளிங்கு அரண்மனைகளைக் கட்டுவதற்காகவும், பாசறைகளை அமைப்பதற்காகவும் இடிக்கப்பட்டன. தற்போது 30-க்கும் குறைவான கட்டடங்களே எஞ்சியுள்ளன. இவற்றில், டெல்லி-கேட், அக்பரி-கேட் மற்றும் 'பெங்காலி-மஹால்', அக்பரின் ஆட்சியில் எழுப்பப்பட்ட கட்டடங்கள்.

 அக்பரின் மகனான ஜஹாங்கீர் பெரும்பாலும் லாகூர் மற்றும் காஷ்மீரில் வசித்தார். இருப்பினும் அவர் தொடர்ந்து ஆக்ராவிற்கு சென்று கோட்டையில் தன் நாள்களை செலவழித்தார். அவருக்குப்பின், கி.பி.1628-ல் ஆக்ராவை ஆட்சி செய்த ஷாஜகான், இங்கு வெள்ளைப் பளிங்கு அரண்மனைகளை எழுப்பினார். அதில், மோதி-மசூதி, நாகினா-மசூதி மற்றும் மீனா-மசூதி ஆகிய மூன்று வெள்ளைப் பளிங்கு மசூதிகளையும் கட்டினார். இவரின் ஆட்சியை முகலாய மன்னர்களிலேயே பொற்கால ஆட்சி என குறிக்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். இங்குதான் ஷாஜகானின் மகனான ஒளரங்கசீப், தனது சொந்த தந்தையையே 8 ஆண்டுகள் கோட்டையின் சிறையில் அடைத்தார்.

 கி.பி.1666-ல் ஷாஜகான் இறந்தபின், தாஜ்மஹாலில் அவர் அடக்கம் செய்யப்பட்டார். இவரின் இறப்பிற்குப் பின்பு, ஆக்ரா தன் பிரமாண்டத்தை இழந்தது. 49 ஆண்டுகள் ஆக்ராவை ஒளரங்கசீப் ஆட்சி செய்தார். இவர் காபூலில் தொடங்கி, தமிழ்நாடு வரை முகலாயப் பேரரசை விரிவுபடுத்தினார். அவரின் ஆட்சியில் 25 ஆண்டுகளுக்கும் மேல் போரிலேயே சென்றது.

கி.பி.1666-ல் சிவாஜி ஆக்ராவிற்கு வந்து ஒளரங்கசீப்பை சந்தித்தார். கி.பி.1707-ல் ஒளரங்கசீப் மறைவுக்குப் பிறகு, ஆக்ரா கோட்டை ஜாட் மற்றும் மராட்டியர்களால் கைப்பற்றப்பட்டது. இறுதியாக 1803-ம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்கள் அதைக் கைப்பற்றினர்.

 தற்போது...

தாஜ்மஹாலில் இருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ஆக்ரா கோட்டையின் ஒரு பகுதி இந்திய ராணுவத்தால் தற்போது பயன்படுத்தப்படுகிறது. அந்தப் பகுதிக்கு பொதுமக்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. அதனால், அந்தப் பகுதியைப் பார்க்க முடியாது. இருப்பினும் இந்தக் கோட்டையின் பிற பகுதிகளும் மிகவும் விரிவானது. அவற்றிலும் பார்வையிடத்தக்க வகையில் பல்வேறு கட்டடங்கள் உள்ளது என்பதால், அவற்றை அரசு காட்சிப்படுத்துகிறது.

 இந்த அளவுக்கு வரலாற்றுப் பின்னணி கொண்ட ஆக்ரா கோட்டையை வாழ்வில் ஒருமுறையேனும் எல்லோரும் சுற்றிப்பார்க்க வேண்டும். ஒருவேளை நீங்கள் இதுவரை நீங்கள் இக்கோட்டையைச் சுற்றிப் பார்த்தது இல்லையெனில், கீழ்க்காணும் வழிகளில் சுற்றிப் பாருங்கள்...

 சுற்றுலா பயணிகள் கவனத்துக்கு...

 ஆக்ரா கோட்டையை சுற்றிப் பார்க்க விரும்பும் இந்தியக் குடிமக்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் 40 ரூபாய், மற்ற நாட்களில் 50 ரூபாய் நுழைவுக் கட்டணமும், பிற நாட்டு மக்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் 600 ரூபாய், மற்ற நாட்களில் 650 ரூபாயும் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சுற்றுலாவுக்குச் செல்பவர்கள் தங்களின் அடையாள அட்டையை எடுத்துச்செல்ல வேண்டும். 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது.

ஆக்ரா கான்ட் ரயில் நிலையத்திலிருந்து 5.5 கிமீ தொலைவில் உள்ளது ஆக்ரா கோட்டை. மண்டோலா ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. சென்னையில் இருந்து கிராண்ட் டிரங்க் எஸ்பிரஸ், தமிழ்நாடு சிறப்பு ரயில், ராஜ்தானி சிறப்பு ரயில் மூலம் ஆக்ரா செல்லலாம்.

தென்தமிழகத்தில் இருந்து மதுரை - சண்டிகர் விரைவு ரயில், திருக்குறள் சிறப்பு ரயில் மூலமும், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் இருந்து சென்றால் ஹஸ்ரத் நிஜாமுதீன் ஸ்வர்ணா ஜெயந்தி அதிவிரைவு சிறப்பு ரயில் மூலம் ஆக்ராவை அடையலாம். அங்கிருந்து பேருந்து மற்றும் ஆட்டோ வழியாக கோட்டையை அடையலாம்.

ஆக்ரா கோட்டையின் சிறப்பம்சங்களை இவ்வளவு நேரம் படித்து முடித்த உங்களில் பலரும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சம் காரணமாக வெளிமாநில பயணம், விடுமுறை பயணம் என எல்லாவற்றையும் தவிர்த்திருப்பீர்கள். உங்களுடைய 'எப்போதான் இந்த கொரோனா முடிவுக்கு வருமோ, நம்மளால சந்தோஷமா ஒரு டூர் போக முடியுமோ' என்ற ஏக்கத்துக்குத் தீனி போடும் இடமாக இந்த ஆக்ரா கோட்டை வரலாறு இருக்கும் என நம்புகிறோம்.

 இந்த கொரோனா பொது முடக்கக் கட்டுப்பாடுகளெல்லாம் சற்று தளர்ந்தவுடன் நீங்கள் செல்ல வேண்டிய ஒரு குட்டி ட்ரிப்பை இப்போதே திட்டமிட்டுக்கொள்ளுங்கள். இப்போதைய சூழலில் வெளிநாடு பயணம் சற்றே சிக்கலானது என்பதால், பயணத்தை இந்தியாவுக்குள்ளே திட்டமிடுங்கள். உங்களின் அந்தப் பட்டியலில், ஆக்ரா கோட்டையை முதலிடமாக வைப்பீர்கள் என நம்புகிறோம்!

(உலா வருவோம்...)

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com