இந்திய பாரம்பரிய இடங்கள் 25: பீம்பேட்கா - உறங்கிக் கொண்டிருக்கும் வரலாற்றுச் சான்றுகள்!
பூமி, இதில் வாழும் உயிரினங்கள், அவற்றின் வரலாறு, மனித இனம் வளர்ந்த விதங்கள், அதன் சாத்தியக்கூறுகளை எல்லாம், இந்த பூமியில் கிடைக்கும் படிமங்களையும், தொல்பொருட்களையும் கொண்டே யூகிக்கிறோம். அதன் மூலம் உறுதியும் செய்கிறோம். ஒரு செல் உயிரினங்கள் தோன்றி, அந்த செல்கள் இரட்டித்து பன்மடங்காகப் பெருகி ஒவ்வொரு உயிரினங்களும் உருவாகின. ஹோமோ எரெக்டஸ் (Homo Erectus) என்ற கீழைக் கற்காலத்தில் வாழ்ந்த மனித இனத்தின் முன்னோர்கள் முதல் ஹோமோ சேப்பியன்ஸ் (Homo Sapiens) எனும் நிகழ்கால மனிதர்கள் வரை எல்லா பரிணாமங்களையும் படிமங்கள்தான் உறுதிப்படுத்துகிறது. அப்படி பழங்கற்காலம் முதல் சரித்திர இடைக்காலம் வரையிலான நீண்ட நெடிய வரலாற்றுச் சான்றுகளை ஒரே இடத்தில் பார்க்க வேண்டாமா…? அப்படிப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தைப் பற்றித்தான் இப்போது நாம் காண இருக்கிறோம்.
'இந்தியாவின் இதயம்' ( The Heart of India) என்று சொல்லப்படும் மத்தியப்பிரதேசத்தின் தலைநகரான போபாலிலிருந்து 48 கிமீ தொலைவில் உள்ளது ராய்சன் மாவட்டம். இங்குள்ள விந்திய மலைத்தொடரில் அமைந்துள்ள 7 மலைகளின் அடிவாரங்களில் சுமார் 750 மலை வாழிடங்கள் அமைந்துள்ளன. இங்குதான் அமைந்துள்ளன பீம்பேட்கா குகைகள் (பீம்பேட்கா பாறை வாழ்விடங்கள்). வரலாற்றுக்கு முந்தைய கால இந்தியாவில் மனித வாழ்க்கையை அறிய உதவும் தடயங்களாக இவை அமைந்துள்ளது. 243 இடங்கள் பீம்பேட்காவிலும், 178 இடங்கள் லாக்கா ஜுவாரிலும் உள்ளன. இதில் 400 வாழ்விடங்களில் ஓவிய படிமங்கள் உள்ளன.
பீம்பேட்கா பாறை வாழிடங்கள் பெரும்பாலும் மணல் கற்களால் ஆனவை. இதன் மொத்த பரப்பளவு 1,892 ஹெக்டர். இதில் பழங்கால மனிதர்கள் வரைந்த ஓவியங்கள் அதிகம் காணப்படுகின்றன. ஏறத்தாழ 30,000 ஆண்டுகள் பழமையான கற்கால (பாலியோலித்திக் காலம்) பாறை ஓவியங்களும் கண்டறியப்பட்டுள்ளன. வரலாற்றுக்கு முந்தைய கால மக்களின் நடனம் மற்றும் வேட்டையாடுதல் முதலிய வாழ்க்கை முறையை அறிய இவ்வோவியங்கள் உதவுகின்றன. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான பாறை ஓவியம் இதுதான். உலகில் உள்ள பழமையான பாறை ஓவியங்களில் ஒன்றாகவும் இது திகழ்கிறது. உலகின் பழமையான கல் சுவர்கள் மற்றும் பல்வேறு தளங்களும் இங்கு உள்ளன.
பீம்பேட்கா… பீமனின் ஓய்விடம்: பீம்பேட்கா என்ற வார்த்தைக்கு 'பீமனின் ஓய்விடம்', 'பீமன் அமர்ந்த இடம்' என்று பொருள். மகாபாரதத்தில் சொல்லப்படும் பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான பீமன் தன் வனவாச காலத்தின் போது ஓய்வெடுக்கப் பயன்படுத்திய பாறை, வாழிடம் என்ற நம்பிக்கையின் பேரில் இவ்விடத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதைச் சுற்றி மற்ற பாண்டவர்களுக்கும் உறைவிடம் இருந்ததாக நம்பப்படுகிறது.
டிக்கின்சோனியா (Dickinsonia) முதல் இடைக்கால இந்தியா வரை: பீம்பேட்காவில் அமைந்துள்ள மண்டப குகை என்னும் இடத்தில் தரையிலிருந்து சில அடிகள் உயரத்தில், பிப்ரவரி 2021 ஆம் ஆண்டு இலை வடிவிலான ஒரு படிமம் கண்டுபிடிக்கப்பட்டது. இதை ஆராய்ச்சி செய்து பார்க்கும் பொழுது இரு சமநிலை உடல் அமைப்பைக் கொண்டுள்ள, டிக்கின்சோனியா எனும் 570 மில்லியன் ஆண்டுகள் பழமையான உயிரினத்தின் படிமம் என்று தெரியவந்துள்ளது. இதுவரை மனிதன் கண்டுபிடித்த மிகப் பழமையான உயிரினம் என்றால் அது இந்த டிக்கின்சோனியா தான். சில ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவில் கண்டெடுக்கப்பட்ட இவ்வுயிரினம் 4 அடி வரை வளரும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் பீம்பேட்காவில் கிடைத்துள்ள எச்சம் 17 இன்ச் நீளம் கொண்டது.
கற்காலம்: ஒவ்வொரு நாட்டிலும் எந்த காலகட்டத்திலிருந்து மனிதர்கள் வாழ்ந்தனர் என்ற சான்றுகளின் அடிப்படையிலேயே அந்த நாட்டின் வரலாறும் பழமைத்தன்மையும் கணிக்கப்படுகிறது. அப்படி இந்திய வரலாற்றின் பக்கங்களைப் புரட்டும்பொழுது பழைய கற்காலத்திலிருந்து இங்கு மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் பீம்பேட்கா வாழிடங்களில் ஓவியங்கள் மூலம் கிடைத்துள்ளன. பல அடுக்குகளாகவும், பல்வேறு கட்டங்களாகவும் இங்குள்ள ஓவியங்களைப் பிரிக்கலாம். முதலில் பழைய கற்காலத்தைச் சேர்ந்த நடனமாடும் மனிதர்கள் மற்றும் வேட்டையாடும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலும் இயற்கையாக இலைகளிலிருந்து எடுக்கப்பட்ட பச்சை நிறம் காணப்படுகிறது. இந்த ஓவியங்கள் அளவில் கொஞ்சம் பெரியதாகவும் காணப்படுகிறது.
அடுத்தாற்போல் கொஞ்சம் வளர்ந்த இடைக் கற்காலத்தைச் சேர்ந்த அடுத்த கட்ட ஓவியங்கள். பழைய காலத்தைப் போன்று பெரிதாக அல்லாமல் அளவில் சிறியதாக இருந்துள்ளன. இந்த ஓவியத்தில் மனித உடலமைப்பில் நேரியல் அலங்காரங்கள் காணப்படுகின்றன. மனிதர்கள் போக விலங்குகளின் உருவங்களும் உள்ளன. வேட்டையாடுவதற்கு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் இதன்மூலம் நமக்குக் கிடைக்கின்றன. நடனம், அதற்குப் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகள், அக்கால பறவைகள், தாய்மார்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், ஆண்கள் இறந்த விலங்குகளைச் சுமந்து செல்வது, குடிப்பது, மனிதர்களைப் புதைக்கும் வழக்கங்கள், அதற்குச் செய்யப்பட்ட சடங்குகள் முதலானவை இந்த ஓவியங்களில் காணப்படுகின்றன. அந்த காலத்திய பழங்குடி மக்களுக்கு இடையே நடந்த போர் ஓவியங்களும் இங்கு சிறப்பாக வரையப்பட்டுள்ளது.
செம்புகாலம்(செப்புக் காலம்): மூன்றாம் கட்டமாக இங்குக் காணப்படும் ஓவியங்கள் செப்புக் காலத்தைச் சேர்ந்தவை. தொடக்கக்கால உலோகக் கருவிகள் தோன்றிய ஒரு கால கட்டம் ஆகும். கற்களிலிருந்து உலோகங்களைக் கண்டறிந்து பயன்படுத்தக் கற்றுக்கொண்ட காலமும் இதுவே. இதில் மனிதனின் நாகரீக வளர்ச்சியில் ஒன்றாகக் கருதப்படும் விவசாயம், அதிலிருந்து அவர்கள் பயிர் செய்து, அதை மற்ற இடங்களில் உள்ள மக்களோடு பண்ட மாற்றம் செய்த காட்சிகளும் ஓவியங்களாக வடிக்கப்பட்டுள்ளது. மனிதனின் முக்கிய வளர்ச்சிக் காலத்தின் சின்னங்கள் இவை.
வரலாற்று காலம்: நான்காம் கட்டமாக பண்டைய வரலாற்றுக் கால படிமங்கள் கிடைத்துள்ளன. இந்த காலத்தில் பூக்கள், பட்டைகள், போன்ற இயற்கையின் பொருட்களிலிருந்து உருவாக்கப்பட்ட சிவப்பு, வெள்ளை, மஞ்சள் போன்ற நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. திட்டவட்டமான, தெளிவான அலங்கார அமைப்புகள் இந்த கால ஓவியங்களுடன் கைகோர்த்துள்ளன. இந்த ஓவியங்களில் மத ரீதியிலான காட்சிகள் அதிகம் காணப்படுகின்றன. தெய்வங்கள், அவற்றைக் காக்கும் யக்ஷர்கள் போன்ற உருவங்களில் இந்த ஓவியங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இடைக்காலம்: ஐந்தாம் கட்டமானது, இடைக்கால வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்த ஓவியங்கள். தெளிவான வடிவியல் அமைப்பு ஓவியங்கள் இங்கே சிறப்புப் பெற்று விளங்குகிறது. சிவப்பு நிறம் ஹேமடைட் (Hematite) என்ற மூலக்கூறில் இருந்தும், கருப்பு நிறம் மெக்னீசியம் ஆக்சைடு மற்றும் நிலக்கரியிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு காலங்களைச் சேர்ந்த ஓவியங்களைப் பொக்கிஷமான கொண்டுள்ள இந்த பாறை வாழிடங்கள் கற்கால மனிதர்களின் உறைவிடங்களாகவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரலாறு எழுதப்பட்ட காலம் தொடங்கிய பின்னர் இதில் பெரும்பாலும் சமண பௌத்த சாதுக்கள் வாழும் பகுதிகளாக அமைந்துள்ளது. அவர்கள் விட்டுச்சென்ற ஓவியங்களும் சிறப்பு பெற்று விளங்குகிறது.
மண்டபக் குகை: பீம்பேட்காவின் பிரதானமாக மற்றும் பெரியதாக அமைந்துள்ள குகை என்றால் அது மண்டப குகைதான். இதன் பிரதான நுழைவு வாயில் கிழக்கு நோக்கி உள்ளது. இந்த நுழைவுவாயிலின் வழியே உள்ளே சென்றால், ஒரு பெரிய பாறாங்கல் உள்ளது. இதைத் 'தலைவன் பாறை' அல்லது 'ராஜா பாறை' என்று அழைக்கின்றனர். இங்கு சடங்குகள் ஏதும் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. இந்தக் கல்லிலிருந்து மூன்று பக்கங்களுக்கும் பாதைகள் பிரிகின்றன. ஆங்கிலேயர்களின் கிறிஸ்துவ கத்தீட்ரல் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளதால் இதனை 'கத்தீட்ரல் போன்ற குகை' என்று அழைத்து வந்தனர்.
ஜூ பாறை (Zoo Rock): பீம்பேட்காவின் பாறைகளை 'உயிரியல் பூங்கா பாறை' 'ஜூ ராக்' (Zoo Rock) என்று அழைக்கின்றனர். இதற்குக் காரணம் வரலாற்றுக்கு முந்தைய, வரலாற்றுக் கால மற்றும் தற்காலத்தில் வாழ்ந்த, வாழும் உயிரினங்களின் ஓவியங்களும், படிமங்களும் இங்கு அதிகம் காணப்படுகின்றன. இலக்கியங்களில் மட்டும் காணப்படும் கற்பனை விலங்குகளின் ஓவியங்கள் கூட இக்குகைகளின் பாறைகளில் ஓவியங்களாக அமைந்துள்ளன. இங்கு, நான்காம் எண்ணிட்ட குகையில் அதிகப்படியான விலங்குகளின் ஓவியங்கள் காணப்படுகின்றன. மொத்த மலை குகையில் 16 வகையில் அமைந்த 252 விலங்குகளின் ஓவியங்களும், 90 மனித உருவங்களும் காணப்படுகின்றன. யானை, காட்டெருமை, சாம்பார் மான், மயில், பாம்பு, சூரியன் அம்பு, வாள், கேடயம் போன்ற ஏராளமான ஓவியங்களும் இதில் அடங்கும்.
வைஷ்ணோ தேவி கோவில் (Kuldevi Temple): பீம்பேட்கா மலைக் குகைக்கு அருகில் ஒரு குல்தேவி கோவிலும் (Kuldevi Temple) அமைந்துள்ளது. வைஷ்ணவோ தேவி குகை கோவிலுக்கு ஒரு வரலாற்றுக் குறிப்பு உள்ளது. பாண்டவர்கள் வனவாசத்திலிருந்த போது தங்களது குல தெய்வமான வைஷ்ணோ தேவிக்காக இக்கோவிலை அமைத்ததாகக் கூறுகின்றனர். கோவிலுக்கு வெளியே ஒரு பெரிய பாறை இருக்கை உள்ளது. அதில் அமர்ந்து பார்த்தால் விந்திய மலையின் முழு பள்ளத்தாக்கும் தெரியும். 'பீம் கி பைதக்' ('Bheem ki baithak') என்று சொல்லப்படும் இந்தப் பாறை பீமன் வனவாசத்தின்போது பயன்படுத்தப்பட்ட இருக்கையாகச் சொல்லப்படுகிறது. ஹோலி பண்டிகையின்போது இந்த வைஷ்ணோ தேவி கோயிலில் முதலில் விளக்கு ஏற்றி, அந்த ஒளியைப் பார்த்த பின்பே இந்த சுற்று வட்டாரத்தில் ஹோலிப்பண்டிகை கொண்டாடப்படுவதாக ஒரு நம்பிக்கை உள்ளது. ராம நவமி விழாவின் ( Ram Navami fair) போது, இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
ஆமை பாறை (Turtle Rock): பீம்பேட்கா பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில், ஆமை பாறை என்ற ஒரு இடம் உள்ளது. இது குகையோ அல்லது குகையில் உள்ள ஓவியமோ அல்ல. இது ஆமை வடிவில் உள்ள இயற்கையான பாறை அமைப்பாகும். வனவிலங்கு சரணாலயத்தின் நடுவில் அமைந்திருக்கும் இந்த பாறையிலிருந்து, வனவிலங்கு சரணாலயத்தின் பரந்த பகுதிகளைப் பார்க்க முடியும். இதனைச் சுற்றியுள்ள வனப்பகுதி மிகவும் அடர்ந்த வனமாகும்.
பீம்பேட்கா மீட்கப்பட்டது எப்படி?: விந்திய மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள பீம்பேட்கா பாறை வாழ்விடங்கள், ரதாபானி வனவிலங்கு சரணாலயத்தில் (Ratapani Wildlife Sanctuary) அமைந்துள்ளது. வரலாற்றின் இடைக்காலமான கி.பி. 2ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு ஆட்கள் கவனிப்பாரின்றி காடுகளுக்குள் புதைந்து போனது. கி.பி.1888ம் ஆண்டுகளில் கின்கெய்ட் (W.Kincaid) என்ற ஆங்கிலேய அலுவலர், அப்பகுதிகளில் வசித்து வந்த பழங்குடியின மக்களிடம் சேகரித்த தகவல்களைக் கொண்டு, பீம்பேட்காவைப் பற்றி முதன்முதலில் குறிப்புகள் எழுதினார். மேலும் அப்பகுதி பௌத்த தளம் எனவும் குறிப்பிட்டார். அவர் எழுதிச்சென்ற குறிப்புகள் கொண்டு வி.எஸ்.வாகங்கர் (V.S.Wakankar) எனும் இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் 1957ஆம் ஆண்டு இக்குகைகளை ஆய்வு செய்தார். ஆய்வின் முடிவில், இவை ஸ்பெயின் மற்றும் பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்ட மலை வாழிடங்கள் போன்று இருப்பதை அறிந்து, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழுவுடன் அந்தப் பகுதியைப் பார்வையிட்டு இது தொடர்பான தகவலை வெளியிட்டார்.
இதையடுத்து 13 ஆண்டுகள் கழித்து 1970ம் ஆண்டுகளில் இந்திய அரசு பீம்பேட்கா பகுதிகளில் உள்ள தங்குமிடங்களின் அளவு மற்றும் அதன் உண்மையான முக்கியத்தைக் கண்டறிந்து அதனைப் பாதுகாக்க முடிவு செய்தனர். 1,892 ஹெக்டேர் கொண்ட இப்பகுதியானது, 1990ம் ஆண்டுகளில் இந்தியத் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, தற்போது வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது. தனித்துவமான புவியியல் அமைப்பையும், கற்காலத்திய மனிதர்களின் கலாச்சாரத்தைப் பயிலும் ஆதாரங்கள் கொண்ட இடமாகவும் இருக்கும் இந்த பீம்பேட்கா ராக் ஷெல்டர்ஸ் பகுதிகளை, 2003-ஆம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில், தனித்துவம், புவியியல் அமைப்பு, பாரம்பரியம், வரலாறு என்ற பட்டியலின் அடிப்படையில் யுனெஸ்கோவின்3 மற்றும் 5-வது விதியின் கீழ் உலக பாரம்பரிய இடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட இடங்களின் பட்டியலில் பீம்பேட்கா ராக் ஷெல்டர்ஸ் சேர்க்கப்பட்டது.
சுற்றுலாப் பயணிகளின் கவனத்திற்கு: நினைவிடங்களின் சங்கமம் என்று சொல்லும் அளவிற்கு பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதிகளை தனக்குள் பொதிந்து வைத்துள்ளது மத்தியப்பிரதேசம். சென்னையிலிருந்து சுமார் 1,436 கி.மீ தொலைவில் உள்ள பீம்பேட்கா ராக் ஷெல்டர்ஸ் பகுதிக்கு விமானம் மூலம் செல்ல விரும்புபவர்களுக்காக மத்தியப்பிரதேசத்தில் இராஜா போஜன் விமான நிலையம் (Raja Bhoj Airport) உள்ளது. அங்கிருந்து, பேருந்து அல்லது வாடகை கார் மூலம் 48 கிலோ மீட்டர் பயணம் செய்தால் வரலாற்றுச் சிறப்புமிக்க குகைகளை அடையலாம். ரயிலில் செல்ல நினைப்பவர்கள் சென்னையிலிருந்து போபாலுக்குச் சென்று அங்கிருந்து ஆட்டோ மூலம் குகைக்கு செல்லலாம். குகைகளுக்கு அருகிலேயே பீம்பேட்கா பேருந்து நிலையம் அமைந்துள்ளது.
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையாளர்களுக்காக அனுமதிக்கப்படும் இப்பகுதிகளைக் காண, ஜூலை மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் சுற்றுலா காணச் செல்வது சிறந்தது. இங்குள்ள பாறை குகை ஓவியங்களைக் கான இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்கு 25 ரூபாயும், வெளி நாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு 500 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இப்பகுதிகளைக் காண இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன வசதியும் உள்ளது. இரு சக்கர வாகனங்களுக்கு 100 ரூபாயும், கார்களுக்கு 300 ரூபாயும் கட்டணம் செலுத்தி வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
(உலா வருவோம்)
முந்தைய அத்தியாயம்: இந்திய பாரம்பரிய இடங்கள் 24: புத்த கயா - சித்தார்த்த கௌதமர் புத்தரான கதை?