இந்திய பாரம்பரிய இடங்கள் 24: புத்த கயா - சித்தார்த்த கௌதமர் புத்தரான கதை?

இந்திய பாரம்பரிய இடங்கள் 24: புத்த கயா - சித்தார்த்த கௌதமர் புத்தரான கதை?
புத்த கயா
புத்த கயாபுத்த கயா

இந்திய வரலாறு என்று எடுத்துக்கொண்டால் சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து தொடங்குகிறது. ஆதிகாலம் தொட்டு இயற்கையை வழிபட்டு அதையே தெய்வங்களாக உருவகித்து வணங்கி வந்தனர். பின்னர் ஆரியர்கள் இந்தியப் பகுதிகளுக்குள் வந்த பின்னர் இந்து என்ற உருவ வழிபாட்டு முறையும், சமஸ்கிருத வேதங்களும், வர்க்க முறைகளும் உருவானது. பிராமணர்கள், ஷத்ரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்று சமூகம் நான்காகப் பிரிக்கப்பட்டது. இதில், சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும் சமூகத்தில் பெரிய இடம் கொடுக்கப்படவில்லை. அவர்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்டனர். சமூக கூட்டங்கள், கோவில்கள் போன்ற இடங்களில் இவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், தங்களையும் மதித்து, சமமாக நடத்தும் ஒரு சமூகத்தை எதிர்நோக்கி காத்திருந்தனர். அப்பொழுது பிறந்ததுதான் புத்த மதமும், சமண சமயமும். கிமு மூன்றாம் நூற்றாண்டில் உதயமான இந்த சமயங்கள் தங்கள் எச்சங்களாக விட்டுச் சென்றது அவர்களது கொள்கைகளையும், சில நினைவுச் சின்னங்களையும் தான். புத்த மதத்தைப் பொருத்தவரை கோவில்கள் என்பது மிகக் குறைவானதே. புத்த விஹாரங்களும் ஸ்தூபிகளும் எஞ்சியுள்ள சில மடங்களும், இலக்கியங்களும் தான் புத்த மதத்தின் நினைவுகளாக தற்போது உலாவி வருகின்றன.

புத்தர் ஞானம்: 

"ஆசை, கோபம், களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்; அன்பு, நன்றி, கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்" என்ற பாடலுக்கு வடிவம் கொடுக்கும் வகையில் கருணையை உருவானவர் புத்தர். இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள நேபாளத்தில், தலைநகர் கபிலவஸ்தில் உள்ள லும்பினி என்னும் நகரில் கி.மு. 563-ம் ஆண்டு, கபிலவஸ்து பேரரசரான சுத்தோணருக்கும் அரசி மகா மாயா தேவிக்கும் மகனாகப் பிறந்தார். குலப்பெயர் கௌதமர் இணைத்து சித்தார்த்த கௌதமர் என்று அக்குழந்தைக்குப் பெயர் சூட்டப்பட்டது. குழந்தை பிறந்த 7 ஆம் நாள் அவரின் தாய் மாயா தேவி நோய்வாய்ப்பட்டு இயற்கை எய்தினார். இதனால், தன் தாயின் தங்கையான மகா பிரஜாபதி கௌதமியின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். 16 வயதில் யசோதரையுடன் திருமணம். அடுத்த ஒரு வருடத்தில் மகன் ராகுலன் என வாழ்ந்து வந்த புத்தருக்கு, அவருடைய 29வது வயதில் தான் வாழ்க்கையைப் பற்றி யோசிக்கும் தருணம் கிடைத்தது. அதற்கு காரணம் அவர் கண்ட மூன்று காட்சிகள்... ஒரு வயதானவர், ஒரு நோயாளி, ஒரு சவ ஊர்வலம். மக்களின் வறுமையையும், இதனால் படும் துன்பங்களையும் கண்டு, தன் மனைவி, குழந்தை, ராஜ வாழ்க்கை என தன் இல்வாழ்க்கையை துறந்து தியானம் மேற்கொள்ளச் சென்றார். ஏழு ஆண்டுகள் அலைந்து திரிந்து கடைசியாக அவர் தேர்ந்தெடுத்த இடம், பீகாரில், கயா என்னும் பகுதியில் அமைந்துள்ள பால்கு நதிக்கரை (Falgu River). அப்போதைய வழக்கப்படி, உணவு உண்ணாமல், குளிக்காமல் அரச மரத்தின் அடியில் அமர்ந்து (தியானம்) தவத்தை ஆரம்பித்தார்.

சுமார் 49 நாட்கள் தியானத்திலிருந்த அவர், முக்தி நிலையை அடைந்து ஞானம் பெற்று புத்தனாக மாறினார். இதையடுத்து தான் பெற்றுக்கொண்ட ஞானத்தை அருகிலிருந்த மக்களுக்கும் போதிக்கத் தொடங்கினார். அரச மரத்தின் கீழ் புத்தருக்கு ஞானம் கிடைத்ததால், இதை 'போதி கயா’என்றும் அழைப்பார்கள். அதுமட்டுமின்றி பௌத்தர்கள் பெரிதாக மதித்து வணங்கும் மரமாக மாறியது. இலங்கையில் புத்த மதம் செழித்து வளர்ந்த காலத்தில் அசோகரின் மகன் மூலமாக போதி மரத்தின் கிளை இலங்கையில் நடப்பட்டு போற்றப்பட்டதாக மஹாவம்சம் குறிப்பிடுகிறது. புத்த மதத்தின் கொள்கைகளைப் பரப்ப போதிசத்துவர்கள் உதித்தனர். இவர்களின் மூலமாக இந்தியா, இலங்கை, வங்காளம், மியான்மர், நேபாளம்,வியட்நாம், தாய்லாந்து, மலேசியா, சீனா, ஜப்பான் என்று ஆசியாவின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் உள்ள நாடுகள் முழுவதிலும் புத்த மதம் பரவியது.

புத்த கயா: புத்தர் ஞானம் பெற்றதாகச் சொல்லப்படும் போதி மரத்தை கௌரவிக்கும் வகையில் கி-மு மூன்றாம் நூற்றாண்டு காலகட்டத்தில் ஆட்சி புரிந்த மௌரியப் பேரரசர் அசோகர் (புத்த சமயத்தைத் தழுவியவர்) அங்கே ஒரு மடாலயத்தை உருவாக்கினார். கி-மு 260 இல் போதி மரத்தடியில், வச்சிராசனம் என்று சொல்லப்படும் ஒரு கல் இருக்கையை, புத்தர் அமர்ந்து தன் ஞானத்தை போதித்த இடத்தில் உருவாக்கினார். அழகிய வேலைப்பாடுகள் அமைந்த இந்த ஆசன வடிவம் இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதுதான் புத்தருக்கு அமைக்கப்பட்ட முதல் சிறப்பு சின்னமாகும். இதைச் சுற்றி கிமு ஒன்றாம் நூற்றாண்டில் பானை வடிவ அடிப்பகுதி கொண்ட தூண்கள் சுங்கர் காலத்தில் சேர்க்கப்பட்டது. இவர்களுக்குப் பின் வந்த குப்தர்களின் காலத்தில் அமைக்கப்பட்டதுதான் இன்று நாம் காணும் புத்த கயா கோவில். அதன் பின்னர் ஹுனா வம்சம், சேனா வம்சம், சுல்தானியர்கள், ஆங்கிலேயர்கள் என்று காலங்கள் கடந்து இன்று நம் கண்முன் புத்தமதத்தின் பிறப்பிடமாக நிலைத்து நிற்கிறது இக்கோயில்.

புத்த கயா வளாகம்: இன்றைய பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவிலிருந்து 96 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கயா என்ற ஊர். 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த புத்த கயா கோவிலானது, 5 சிறப்பு கட்டிடங்களை தன்னுள் கொண்டுள்ளது. புத்த கயாவில் உள்ள முதன்மையான துறவி மடம், போதி மண்டா விகார். இதை மகா போதி கோயில் என்கின்றனர். இதனை, போதி மண்டா என்றும், விகாரை போதி மண்டா விகார் என்றும் குறிப்பிடுகின்றன நூல்கள். சுமார் 300 அடி உயரம் கொண்ட புத்தரின் சிலையை இங்கே காணலாம். மகா போதி கோயிலின் கோபுரம், சுமார் 55 மீட்ட உயரம் கொண்டது. கோயிலின் நாலாபுறமும் இரண்டு மீட்டர் உயரம் கொண்ட கல்லாலான தடுப்பு அமைப்புகள் அழகுறக் காட்சி தருகின்றன. இந்தத் தடுப்பு அமைப்புகளில், இரண்டு புறம் யானை பூஜை செய்கிற கஜலட்சுமியின் சிற்பமும், குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் வருவது போன்ற சிற்பமும் இடம் பெற்றுள்ளன. குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயில், செங்கற்களை அடுக்கி அதன்மேல் ஸ்டூக்கோ(Stucco) எனப்படும் சுண்ணாம்பு, மணல் கலந்த சாந்தை பூசி அமைக்கப்பட்டுள்ளது. படிக்கட்டு அடுக்குகளைக் கொண்ட பிரமிடு வடிவ கோபுர அமைப்பைக் கொண்டுள்ள இது இன்றைய பாகிஸ்தான் பகுதியில் உள்ள காந்தாரம் என்ற இடத்தில் துவங்கப்பட்ட ஒரு கட்டிட முறையாகும். அதனோடு கிரேக்க-ரோமானிய கட்டட கலை நுட்பங்களையும் உள்ளெடுத்து இந்த கோபுரம் அமைக்கப்பட்டது. கோபுரத்தின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்தூபி 'ஜாலியன்' என்ற முறையில் அமைந்துள்ளது. அரைக்கோள வடிவத்தின் மீது இந்த ஸ்தூபி நிலைநிறுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பெளத்தர்கள், புத்த கயாவை புனிதத் தலமாகப் போற்றி வழிபடுகின்றனர். கோயிலின் மேற்குத் திசையில் அமைந்துள்ளது புத்தர் ஞானம் பெற்ற போதி மரம்.

வாரம் தோறும் வருணனை: புத்தர் ஞானம் பெற்றபின் ஏழு வாரங்கள் தான் பெற்ற ஞானத்தை மக்களுக்கு எடுத்துரைத்தார். அதில்,
முதல் வாரம்: போதி மரத்தின் அடியிலிருந்து மக்களுக்கு எடுத்துரைத்தார்.
இரண்டாம் வாரம்: போதி மரத்திற்கு மேற்கில் அனிமேசலோசனா (Animisalocana) என்ற இடத்திலிருந்து பரப்புரை செய்தார். அந்த இடத்தில் ஒரு ஸ்தூபி நடப்பட்டுள்ளது.
மூன்றாம் வாரம்: போதி மரத்தில் வடக்கே உள்ள ஒரு வெளிச்சுற்று பாதை வரையில் நடந்துகொண்டே பிரசங்கம் செய்துள்ளார். அந்தப் பாதைக்கு ரத்னசர்க்கிரமா (Ratnachakrama)என்று பெயர். புத்தர் நடந்த பாதையில் கற்களால் தாமரை மலர் போன்ற அமைப்புகள் அமைத்து வழிபட்டு வருகின்றனர்.
நான்காம் வாரம்: போதி மரத்தில் தென் கிழக்கே உள்ள ரத்னகார் (Ratnaghar) என்ற பகுதியில் ஞான உரையை நிகழ்த்தினார். இன்று அங்கே ஒரு சைத்திய மடம் அமைக்கப்பட்டுள்ளது.
ஐந்தாம் வாரம்: அஜபால நிக்ரோத் (Ajapala Nigrodh) மரத்தின் அடியில் உரையாற்றினார். இது போதி மரத்தின் கிழக்கு திசையில் அமைந்துள்ளது.
ஆறாவது வாரம்: போதி மரத்தின் தெற்கே அமைந்துள்ள தாமரை குளத்தின் கரைகளிலிருந்து புத்தர் பேசினார்.
ஏழாவது வாரம்: தென் கிழக்கே அமைந்துள்ள ராஜயதன மரத்தினடியில் (Rajyatana Tree) உரை மேற்கொண்டார்.

புத்தர் தியானத்தில் இருக்கும் பொழுது, பெரும் இடியுடன் கூடிய மழை பொழிந்ததாகவும் முகலிந்தா (mukhalinda) என்ற பாம்புகளின் தலைவன் படம் எடுத்து மழையிலிருந்து புத்தரை பாதுகாத்து பின்னர் அவர் விழித்ததும் மனித உருவம் எடுத்து ஆசி பெற்றுச் சென்றதாகவும் ஒரு கதை உண்டு. அதனால் இந்த இடத்தில் அமைந்துள்ள ஏரிக்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படி புத்தர் இருந்த பல இடங்களில் நினைவுச்சின்னங்கள் அமைத்து, அனைத்து பகுதியையும் உள்ளடக்கிய ஒரு புத்த கயா வளாகம் அமைக்கப்பட்டது.

கைகள் மாறி கையில் கிடைத்த கயா: அசோகர் காலத்தில் உருவாக்கப்பட்ட மடாலயம் அழிக்கப்பட்ட பின்னர், சுங்கர்கள் காலத்தில் தூண்கள் அமைத்து மண்டபமாக மாறியது. குப்தர்கள் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டதாக ஒரு சரித்திரம் கூறுகிறது. ஆனால் கிபி 150 முதல் 200 வரையிலான காலத்தில், கரோஷ்டி கல்வெட்டுக்கள், ஹுவிஷ்கா நாணயம் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்கள் கொண்டு பார்க்கும்போது மௌரியர்கள் காலத்தில் ஒரு கோவில் கட்டப்பட்டு, அது சிதிலமடைந்து, அதே உருவ அமைப்பை பிரதிபலிக்கும் வகையில் தான் இன்றைய கோவில் கட்டப்பட்டதாக ஒரு கதையும் உள்ளது. எது எப்படியானாலும், தற்போதுள்ள கோவில் இந்தியாவின் பொற்காலம் என்று சொல்லப்படும் குப்தர்கள் ஆட்சியில் கட்டப்பட்டதே. பின்னர் வந்த ஹூணர்கள் படையெடுப்பில் இக்கோவில் சிதிலமடைந்தது. பின்னர் இந்த இடத்தை பாலர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். மகாயான புத்த மதம் மேலோங்கி கொண்டிருந்த இந்த இடம் முகமது பின் காசிம் கைக்கு மாறியது. அடுத்து வந்த சேனா மன்னர்கள் காலத்தில் புத்த மதம் அழிய தொடங்கியது. 12ஆம் நூற்றாண்டில் டெல்லி சுல்தானியர் குத்புதீன் ஐபக் ஆட்சியில் இந்த இடம் மீண்டும் வந்தது. 13 நூற்றாண்டில் பர்மாவிலிருந்து வந்த சில புத்த மதத்தினர் இந்த இடத்தை மீட்டெடுக்க முயன்றனர். அதைத்தொடர்ந்து 15ஆம் நூற்றாண்டில் நேபாள இனத்தின் சற்புத்திரர் இந்த இடத்தை ஆக்கிரமித்து இக்கோவிலை பாதுகாத்து வந்தனர். அதன்பின் வந்த ஆங்கிலேயர்கள் ஆட்சியின் போது இது கேட்பாரற்று கிடந்தது. இதையடுத்து இந்துமத கோவிலாக மாற்றப்பட்டது. புத்த சிலை இந்துமத கடவுளர் சிலையாக மாற்றப்பட்டு, இந்து முறைப்படி பூஜைகள் நிகழ்ந்து வந்தது.

1880களில் ஆங்கில அரசில் பணியாற்றி வந்த அலெக்சாண்டர் கன்னிங்காம் மற்றும் ஜோசப் என்பவர் பார்வைக்கு இக்கோவில் வந்தது. 1884 ஆம் ஆண்டு இதன் சரித்திரங்களைப் புரட்டி, பாலர்கள் காலத்திய புத்தர் சிலை இங்கே மீட்டு நிறுவப்பட்டது. 1891ஆம் ஆண்டு சிங்களத்திலிருந்து அனகாரிக தர்மபால (Anagarika Dharmapala) என்ற புத்த சமயத்தினர் கயாவிற்கு வருகை தந்தார். புத்த கோவில் இந்துக் கோவிலாக மாற்றப்பட்டு வந்ததை கண்டு வருந்தி மகாபோதி அமைப்பை கொழும்புவில் நிறுவினார். 1892 ஆம் ஆண்டு அந்த அமைப்பின் தலைநகரம் கல்கத்தாவுக்கு மாற்றப்பட்டது. பல வருடங்கள் போராடி, 1949ஆம் ஆண்டு புத்த கயா கோவில் சட்டம் இயற்றப்பட்டு கோவில் புத்தமதத்தின் சின்னமாக மாற்றப்பட்டது. 9 நபர்கள் கொண்ட புத்த கயா மேலாண்மை குழு அமைக்கப்பட்டது. புத்தமதத்தின் நபர்கள் தலைவர்களாக விளங்கி வந்தனர். பின்னர் அது மாற்றப்பட்டு கயா மாவட்டத்தின் ஆட்சியர் அக்குழுவின் தலைவர் ஆனார். 2013ஆம் ஆண்டு தாய்லாந்து அரசு புத்தர் ஞானம் பெற்ற இவ்விடத்தை சிறப்பிக்கும் வண்ணம் இக்கோவிலின் கோபுரத்திற்கு தங்க முலாம் பூச 289 கிலோ தங்கம் வழங்கியது. அதே ஆண்டு இக்கோவில் வளாகத்தில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. ஆனால், அப்போது இக்கோவில் பெரிய பாதிப்புகள் ஏதுமின்றி தப்பியது. இன்றளவும் புத்தகயா கோவில் வளாகம் புத்தர் ஞானம் பெற்ற சிறப்பிடத்தைத் தாங்கி, புத்த மதத்தின் சிறப்பு சின்னமாக அமைந்துள்ளது. கிழக்கு இந்தியாவில் அமைந்துள்ள மிகப் பழமையான செங்கற்களால் ஆன கோவில் என்ற பெருமையை கயா கோவில் தன்னகத்தேக் கொண்டுள்ளது. இந்த பகோடா வகைக் கோவில் வடிவமானது லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா, மலேசியா ஆகிய நாடுகள் வரை பரவியுள்ளது காணலாம்.

புத்த மத அடையாளங்களுக்கு எடுத்துக்காட்டாவும், சிறந்த சுற்றுலாத்தளமாகவும் இருக்கும் இந்த புத்த கயா கோயில் வளாகப் பகுதிகளை, 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில், சிறந்த கலை, கட்டடக்கலை, கட்டுமானம், நினைவுச்சின்னம், சிற்பக்கலை என்ற பட்டியலின் அடிப்படையில் யுனெஸ்கோவின் 1,2,3,4 மற்றும் 6-வது விதியின் கீழ் உலக பாரம்பரிய இடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட இடங்களின் பட்டியலில் இந்தியாவில் புத்த கயா கோயில் வளாகங்கள் சேர்க்கப்பட்டது.

சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு: சென்னையிலிருந்து 2,095 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த மகாபோதி கோவிலுக்கு செல்ல விரும்பினால், சென்னையிலிருந்து விமானம் மூலம் கயா சென்று அங்கிருந்து, பேருந்து அல்லது வாடகை கார் மூலம் 17 கிலோ மீட்டர் தொலையில் உள்ள கோவிலை அடையலாம். ரயில் வழியில் செல்ல விரும்பினால் கயா ரயில் நிலையத்திலிருந்து 16 கி.மீ பயணம் செய்து கோவிலை அடையலாம். நவம்பர் முதல் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் எப்போது வேண்டுமானாலும் புத்த கயா செல்ல திட்டமிடலாம்.

நவம்பர் மாதம் சாஞ்சியில் சேத்தியகிரி விகாரை திருவிழா கொண்டாடப்படுகிறது. விழாவின் சடங்குகளின் ஒரு பகுதியாக, கௌதம புத்தரின் ஆரம்பக்கால சீடர்களின் இரண்டு நினைவுச்சின்னங்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. இப்பகுதிகளை சுற்றிப்பார்பதற்கு, நுழைவுக் கட்டணம் எதுவுமில்லை. ஆனால், புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். புத்த கயாவிற்கு சுற்றுலா செல்ல நினைப்பவர்கள், தினமும் காலை 5.30 முதல் 6.00 மணி வரை நடைபெறும் தியானத்தில் கலந்துக் கொள்ளலாம்.

(உலா வருவோம்)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com