இந்திய பாரம்பரிய இடங்கள் 23: பேரின்பத்தை அள்ளித் தரும் மலை ரயில் பயணம்

இந்திய பாரம்பரிய இடங்கள் 23: பேரின்பத்தை அள்ளித் தரும் மலை ரயில் பயணம்
மலை ரயில் பயணம்
மலை ரயில் பயணம்மலை ரயில் பயணம்

ரயில்கள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? ஒரு நடுத்தர குடும்பத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை எப்போது எங்கே போக வேண்டும் என்றாலும் அவர்களது முதல் தேர்வு பெரும்பாலும் ரயிலாகத்தான் இருக்கும். புது புது அனுபவங்களை விரும்பும் மக்களுக்கு அதை வாரிக் கொடுக்கும் ஒரு பயணம் ரயில் பயணமாக இருக்கும். ரயில் ஸ்நேகம், ரயிலிலிருந்து எழுந்த காதல்கள், நீண்ட கவிதைகள், தொடர் காவியங்கள், படங்கள் என்று ரயில் கொடுக்கும் அனுபவங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அதிலும் மலைப்பகுதியில் உள்ள ரயில்கள் என்றால் சொல்லவா வேண்டும்? மலை என்றாலே அழகு. ஒரு பசுமை, ஒரு குளிர்ச்சி அதனுடன் சேர்ந்து ஒரு ரயில் பயணம் செல்வது என்றால் அது சொர்க்கத்தின் வழி போலத்தான் தோன்றும். அப்படிப்பட்ட இந்தியாவின் சிறந்த மலை ரயில் வழித்தடங்கள் யுனெஸ்கோ நிறுவனத்தால் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த தலங்களைப் பார்க்கப் போகலாமா? ரயில் விடப் போவோமா..!

தண்டவாளம் பிறந்த கதை: மனித இனத்தின் பெரிய வளர்ச்சியாகக் கருதப்படுவது அவனது கண்டுபிடிப்புகள்தான். நெருப்பால் அவன் உணவை சமைத்தான். சக்கரத்தால் அவன் இடப்பெயர்ச்சி பழகினான். நாடோடியாக வாழ்ந்த அவன் கால்நடையாகவே ஊர்களை அளந்து கொண்டிருந்தான். பின்னர் தனக்குத் தேவையான பொருட்களோடு நகர முயல்கையில் வண்டிகள் உருவானது. வண்டி கட்டி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து அவன் பொருட்களை எல்லாம் சுமந்து சென்றான். பொருட்கள் அதிகமாக அதிகமாக, வண்டியின் அளவும், அதன் தேவையும் அதிகமானது. அப்பொழுது பிறந்தது தான் இந்த ரயில்.

ஆரம்பத்தில் பல்வேறு பெட்டிகளைக் கோர்த்தும், ஒன்றின்மீது ஒன்றும் அடுக்கி வைத்து அதை இழுத்துச்சென்றான். இதையே ஆரம்பமாகக் கொண்டு, 1515 ஆம் ஆண்டு மரத்தாலான பெட்டிகள் அடுக்கிய முதல் ரயில் உருவானது. ஆஸ்திரிய நாட்டில் விலங்குகளையும், மனிதர்களின் சக்தியையும் பயன்படுத்தி முதல் ரயில் ஓடியது. ஸ்காட்லாந்தில், 1769 ஆம் ஆண்டில், 'ஜேம்ஸ் வாட்' என்பவர் ஸ்டீம் என்ஜின் ('Steam Engine') எனப்படும் நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். அதன் பின்னர் 1825-ம் ஆண்டில்தான் பிரிட்டனில் முதல் ரயில் பாதை (Stockton & Darlington Railroad) போடப்பட்டது. உலகின் முதல் பயணிகள் ரயில் இங்குதான் சென்றது. 1837ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து நாட்டில் மின்சாரத்தைப் பயன்படுத்தி ரயிலை இயக்கத் தொடங்கினர்.

இந்திய ரயிலின் வரலாறு: 1600களில் வணிகத்திற்காக இந்தியா வந்த ஆங்கிலேயர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்சியைப் பிடித்து கோலோச்சி வந்தனர். 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், பிரிட்டிஷ்காரர்கள் தங்களது பருத்தித் தேவைக்கு அமெரிக்காவை நம்பி இருந்த காலம். பல்வேறு அரசியல் காரணங்களாலும், தொழிற்புரட்சியின் காரணங்களாலும் பிரிட்டனின் பருத்தித் தேவையை அமெரிக்காவால் பூர்த்திசெய்ய முடியவில்லை. இதனால் பருத்திக்காக இந்தியாவை பயன்படுத்தத் தொடங்கினர். தேவையை விட அதிகளவு பருத்தியை இந்தியாவில் உற்பத்தி செய்யத்தொடங்கினர். ஆனால், அதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டது. வெறும் மாட்டு வண்டிகளையும், குதிரை வண்டிகளையும் மட்டுமே வைத்துக் கொண்டு, பருத்தி விளையும் இடங்களிலிருந்து அதனை ஏற்றுமதி செய்யக்கூடிய துறைமுகங்களுக்கு விரைவாக கொண்டுவர இயலவில்லை. எனவே வாகன வசதியைக் கொண்டுவர வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். இதையடுத்து இந்தியாவில் ஆங்காங்கே தண்டவாளங்கள் முளைக்கத் தொடங்கின.

1849-ம் ஆண்டில் இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த டல்ஹௌசியின் ஆலோசனைகளின்படி, ஹௌரா – ஹூக்ளி மற்றும் தானே – பம்பாய் என இரண்டு மார்க்கங்கள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு, வேலைகள் தொடங்கப்பட்டன. ஆரம்பத்தில், வணிகத்திற்காக மட்டும் ரயில் பயணத்தைப் பயன்படுத்தி வந்த நிலையில், பயணிகள் ரயிலைக் கல்கத்தாவிலிருந்தும் பம்பாயிலிருந்தும் இயக்க பிரிட்டிஷார் திட்டமிட்டிருந்தனர்.கல்கத்தாப் பிரிவுக்கான பெயர், East Indian Railway. பம்பாய்ப் பிரிவுக்குப் பெயர், The Great Indian Peninsula Railway.

இதையடுத்து 1853ம் ஆண்டு, இந்தியாவின் (ஆசியாவின்) முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. அப்படி உருவாக்கப்பட்ட ரயில் பாதை கொஞ்சம் கொஞ்சமாக, இந்தியா முழுவதும் பரவி உலகத்தின் பெரிய ரயில்வே பாதையைக் கொண்டுள்ள முக்கிய பத்து நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. அதேபோல், அதிக ஊழியர்களைக் கொண்ட நிறுவனமாகவும் ரயில்வே விளங்குகிறது.

மலை ரயில்: மலை ரயில் என்று எடுத்துக்கொண்டால் அதற்கும் ஒரு சுவாரசிய கதை உண்டு. ஆங்கிலேயர்கள் இருந்த நாடுகள் பெரும்பாலும் குளிர்பிரதேசங்களாகவே இருந்தது. அந்த காலநிலையிலிருந்து வெப்பமண்டலமான நம் நாட்டிற்கு வந்து வாழும் போது, பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வந்தனர். ஒரு சிலகாலங்களில் நம் நாட்டிலிருந்தாலும், வருடம் முழுவதும் அவர்களால் இந்தியாவின் வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு இருக்க முடியவில்லை. குறிப்பாக, கோடைக்காலங்களில். இதனால் வெயில் காலம் ஆரம்பம் ஆனதும், குளிர் பிரதேச பகுதிகளைத் தேடி ஓடினர். அவர்களின் பயணங்களுக்காக ரயில் பயணத்தையே தேர்ந்தெடுத்தனர். அப்படிப் பிறந்ததுதான் இந்த மலைப்பிரதேசம் நோக்கிய பாதைகள் என்றால் நம்ப முடிகிறதா? பாம்பே, வங்காளம், மதராஸ் மாகாணங்களில், மாகாணத்திற்கு ஒரு மலைப் பிரதேசத்தை அவர்கள் தங்கள் வெயில் கால தலைமையிடமாகக் கொண்டு இருந்தனர். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பகுதிக்குச் சென்று தங்கள் கோடைக்காலத்தைக் கழித்தனர்.

டார்ஜிலிங் மலை ரயில்: முதலில் நாம் பார்க்க இருப்பது மேற்கு வங்கத்தில் உள்ள டார்ஜிலிங் மலை ரயில் பாதைகளைப் பற்றி தான். 1879 ஆம் ஆண்டு முதல் 1881ஆம் ஆண்டு வரை சர் ஆஷ்லி ஏடென் (Sir Ashley Eden) என்பவரால் பரிந்துரைக்கப்பட்டு உருவாக்கப்பட்டதுதான் இந்த டார்ஜிலிங் மலை ரயில் பாதை. மேற்கு வங்கத்தின் சிலிகுரி (Siliguri) பகுதியிலிருந்து டார்ஜிலிங் வரை செல்லும் இந்த ரயில் பாதையானது 88 கிலோமீட்டர் தூரம் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 100 மீட்டர் உயரத்திலிருந்து ஆரம்பிக்கும் இந்த ரயில் 2,200 மீட்டர் அடி உயரமுள்ள டார்ஜிலிங் வரை செல்கிறது. இந்த பாதையில் உச்சிப் புள்ளியாக இருப்பது கூம் ரயில் நிலையம் (Ghum railway station). இது கடல் மட்டத்திலிருந்து 2100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த ரயில் பாதையில் மொத்தம் 4 லூப் வளைவுகள், நான்கு 'Z' வடிவ வளைவுகள் உள்ளன. நேரோ காஜ் எனப்படும் 2 அடி அகலம் கொண்ட குறுகிய தண்டவாள அமைப்பால் உருவாக்கப்பட்டது.

வங்காளத்தில் வில்லியம் கோட்டை(Fort William) அமைத்து ஆட்சி செய்து வந்த ஆங்கிலேயர்கள் கோடைக்காலத்தில் தங்களைக் குளிர்வித்துக் கொள்ள அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட இடம் டார்ஜிலிங். கோடைக்காலத்தில் அங்கு பொருட்களை எடுத்துச் செல்லவும், மக்கள் செல்வதற்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், இந்த மலை ரயில் பாதை உருவாக்கப்பட்டது. 1807 ஆம் ஆண்டு நிகழ்ந்த நிலநடுக்கத்தால் இந்த மலை ரயில் பாதை சேதமடைந்தது. ஆனால் அதை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. முதலில் இங்கு நீராவி இன்ஜினால் மட்டுமே இங்கு ரயில் ஓடிவந்த நிலையில் இப்பொழுது டீசலிலும் ஓடுகிறது. சரக்கு ரயில்கள், மெயில் ரயில்கள் டீசல் இன்ஜினாலும், பயணிகள் ரயில் நீரவியாலும் ஓடுகிறது. டார்ஜிலிங்கிற்கும், கூமிற்கும் இடையே ஆன சுழல் பாதையில் பயணிக்க நீராவி வண்டிக்கு ஒருவருக்கு 1,165 ரூபாயும், டீசல் வண்டிக்கு ஒருவருக்கு 695 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

நீலகிரி மலை ரயில்: அடுத்து நாம் பார்க்க இருப்பது நம்ம ஊரில் உள்ள மலை ரயில். அது தாங்க... நம்ம நீலகிரி மலை ரயில். 46 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த ரயில்பாதை, மேட்டுப்பாளையத்தில் இருந்து தொடங்கி உதகமண்டலம் வரை ஒற்றை வழி ரயில் பாதையாக உள்ளது.

1854-ஆம் ஆண்டு எழுத்துக்களில் எழுந்த இந்த மலை ரயில் 45 ஆண்டுகள் உழைப்பிற்குப் பிறகு, 1899 ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது. 1908ஆம் ஆண்டு செப்டம்பரில் குன்னூர் வரை சென்ற இந்த ரயில் பாதையானது ஊட்டி வரை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன் பின்னர் மேலும் விரிவாக்கப்பட்டு உதகமண்டலம் வரை இன்று ஓடிக்கொண்டிருக்கிறது. பல் சக்கர தண்டவாள அமைப்பைக் கொண்ட மலை ரயில் இன்று ஓடிக் கொண்டிருக்கிறது என்றால் அது நீலகிரி மலை ரயில் தான். சாதாரண தண்டவாளத்தில் ஓடும் அமைப்புகளைக் கொண்டிருக்கும். உயரம் கூடும்போது பற்சக்கரத்தில் தொற்றிக்கொள்ளும் இந்த ரயில் பற்களுக்கு இடையே தாவித் தாவி மையில் ஏறும். அப்ட்ராக் முறையைப் பயன்படுத்தி இந்த ரயில் இயங்கும். அந்தக்காலத்திலேயே இதற்கென்று ஆப்கானிஸ்தானில் தனித்துவமான நீராவி இன்ஜின்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதையானது மொத்தம் 208 வளைவுகள், 250 பாலங்கள், 16 சுரங்கப்பாதைகள் என்று ஆச்சரியங்களை தன்னுள் வைத்துள்ளது.

இந்த நீலகிரி மலை ரயில் பயணத்தில் சுமார் 97 மீட்டர் தூரத்திற்கு மிக நீண்ட சுரங்கப் பாதை அமைந்துள்ளது. மலையில் ஏற 290 நிமிடங்களும், மலையிலிருந்து இறங்க 215 நிமிடங்களும் ஆகும். இந்த மலை ரயில் நம்மை கடலுக்கு மேல் 2203 அடி உயரம் வரை கொண்டு செல்லும். காலை 7:10 க்கு மேட்டுப்பாளையத்தில் தொடங்கும் முதல் ரயில் 12 மணிக்கு உதகமண்டலத்தை சென்றடையும். அங்கிருந்து மதியம் 2 மணிக்கு கிளம்பி மேட்டுப்பாளையத்தை 18:35 (6.35)க்கு சென்றடையும். இந்த பயணத்திற்கு முதல் வகுப்பில் ஒரு நபருக்கு 545 ரூபாயும், இரண்டாம் வகுப்புக்கு ரூபாய் 270 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சிம்லா மலை ரயில்: டெல்லியில் முகலாயர்களிடமிருந்து செங்கோட்டையைப் பிடித்து, அங்கிருந்து ஆட்சி செய்து வந்த ஆங்கிலேயப் படைக்கு ஒரு குளிர்ப்பிரதேசம் தேவைப்பட்டது. அப்போது அவர்கள் தேர்வு செய்தது ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சிம்லா. சிம்லா என்றால் நமக்கு ஞாபகம் வருவது முதலில் ஆப்பிள். அடுத்து அதன் சிறப்பான இந்த மலை ரயில் தான்.

முதல் கூர்கா போருக்குப் பிறகு ஆக்கிரமிக்கப்பட்ட சிம்லா ஆங்கிலேயர்களின் கோடைகாலத் தலைநகரமாக மாறியது. 1891 இல், டெல்லி முதல் அம்பாலா வழியாக சிம்லா அருகில் அமைந்துள்ள கல்கா எனும் பகுதி வரை பொருட்களையும், நபர்களையும் கொண்டுசெல்ல, ஆங்கிலேயர்கள் ஒரு ரயில் பாதையை அமைத்தனர். பின்னர் 1898ஆம் ஆண்டு ஹெர்பர்ட் செப்டிமஸ் ஹாரிங்டன் (Herbert Septimus Harington) தலைமையில் கல்கா முதல் சிம்லா வரையான பாதை அமைக்கும் பணி தொடங்கியது.

1903ஆம் ஆண்டு கர்சன் காலத்தில் இப்பணி நிறைவடைந்தது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 650 மீட்டர் உயரத்திலிருந்து தொடங்கும் இந்த ரயில் பாதையானது 2,076 மீட்டர் உயரத்திற்கு நம்மைக் கூட்டிச் செல்லும். இதன் நடுவில் சிம்லா தான் இதன் உச்ச வரம்பு. 2205 மீட்டர் உயரம் கொண்டது. 2 அடி அகலம் கொண்ட குறுகிய தண்டவாள அமைப்பால் 95.66 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த மலை ரயில் பாதையில், 103 சுரங்கப்பாதைகள், 919 வளைவுகள், 864 பாலங்களைக் கடந்து நம்மை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லும்.

தங்காய் முதல் சோலன் வரை உள்ள பராக் சுரங்கப்பாதை 1,144 மீட்டர் நீளம் கொண்டது. பின் நாட்களில் இந்திய ராணுவத்தின் பயன்பாட்டிலிருந்தபோது இதன் அகலம் 2 அடியிலிருந்து 2.6 அடியாக மாற்றப்பட்டது. இந்த ரயிலில் பயணிக்க பெரியவர்களுக்கு 370 ரூபாயும் குழந்தைகளுக்கு 120 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கல்கா - சிம்லா இடையே ஒரு நாளைக்கு 3 ரயில்கள் இயக்கப்படுகிறது. மே முதல் ஜூலை வரையிலான காலத்தில் இங்கு சிறப்பு சேவைகள் வழங்கப்படுகிறது. டெல்லியிலிருந்து சதாப்தி ரயிலில் நான்கு மணி நேரம் பயணித்தால் கல்காவை அடையலாம். இதுபோக மஹாரத்தியத்தில் உள்ள மத்தியரன் மலை ரயில் பாதை பாரம்பரிய தளத்தின் அங்கீகாரத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.

இயற்கை சார்ந்த பகுதிகளாகவும், சிறந்த சுற்றுலாத்தலமாகவும் இருக்கும் இந்த மலை ரயில்வே பகுதிகளை, 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி, கலாசாரம், தொழில்நுட்ப பரிமாற்றம், வளர்ச்சி, கடுமையான புவியியல் அமைப்பில் ஏற்படுத்தப்பட்ட சிறந்த பொறியியல் அமைப்பு என்ற பட்டியலின் அடிப்படையில் யுனெஸ்கோவின் 2 மற்றும் 4-வது விதியின் கீழ் உலக பாரம்பரிய இடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட இடங்களின் பட்டியலில் இந்தியாவில் மலை ரயில்வே சேர்க்கப்பட்டது.

பிற எல்லா ஜன்னலோர பயணத்தையும்விட ரயில் பயணங்கள், ரொம்பவே சுவாரஸ்யமானவை. “Wind on my Face” என்று சொல்வார்களே... அது நிஜமாகவே ரயில் பயணத்தில்தான் செம எக்ஸ்பீரியன்ஸாக இருக்கும். காற்றைக் கிழித்துக்கொண்டு போக நினைப்பவர்களுக்கு, ரயில் பிரியப்பட்ட ஒரு சிநேகிதி. ரயிலில் பயணத்தைவிடவும் சுவாரஸ்யமானது, ரயில் சிநேகிதம். அதிலும் அலாதியானது, ரயிலில் குழந்தைகளுடன் கிடைக்கும் நட்பு. இன்றைய தேதிக்கு பெரியவர்கள் பலரும் ரயிலில் ஏறியவுடன் ஹெட்செட் போட்டுக்கொண்டு மொபைலை கையிலெடுத்து விடுகின்றனர். ஆனால் குழந்தைகள் அப்படியல்ல. லக்கேஜ் சீட்டில் ஏறி உட்கார்ந்துகொண்டு, கண்ணையும் கையையும் நீட்டியே அந்த பெட்டி முழுக்க உள்ள முக்கால்வாசி பெரியவர்களை நண்பர்களாக்கிக் கொள்வார்கள். அல்லது அந்தப் பெட்டி முழுக்க இங்கேயும் அங்கேயுமாக ஓடி ஓடி, எல்லோரின் கவனத்தையும் தன் மேல் கொண்டுவந்துவிடுவார்கள். அந்தக் குழந்தைக்கு பயணத்தின் மேல் இருக்கும் காதலைவிட, ரயிலின் மேலுள்ள காதல் அதிகம். ரயில் பயணத்தின் இடையே வரும் சிறு சிறு மலைக்குகைகள், சிறு சிறு பாலம் போன்றவற்றுக்காக விரியும் குழந்தையின் கண்களே அதற்குச் சாட்சி. அடுத்தமுறை நீங்கள் ரயிலில் பயணிக்கையில், கொஞ்சம் உங்க ஹெட்செட்டை கழற்றிவிட்டு, உங்கள் ரயில் பெட்டியிலுள்ள ஒரு குழந்தையின் குறும்புத்தனத்தை மட்டும் பார்த்து, அவர்களின் மனதை உங்களுக்குள் கடத்துங்கள். நிஜமாகவே உங்களுக்குள் `பறவையே எங்கு இருக்கிறாய், பறக்கவே என்னை அழைக்கிறாய்’ என ஒலிக்கும். ட்ரை பண்ணிதான் பாருங்களேன்!

(உலா வருவோம்)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com