இந்திய பாரம்பரிய இடங்கள் 21: ஹுமாயூன் கல்லறை - நாட்டின் முதல் தோட்டக் கல்லறை
இந்தியாவின் தலைநகரம் டெல்லி. டெல்லி என்றதுமே செங்கோட்டை, இந்தியா கேட், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் என்று எல்லாம் நினைவுக்கு வரும். இந்தியச் சரித்திரத்தில் தனக்கென அடையாளம் பதித்து, இன்று இந்தியா என்றதும் சொல்லும் பெரும்பாலான அடையாளங்களான கட்டடங்களை நமக்கு விட்டுச்சென்றவர்கள் முகலாயர்கள். ஏராளமான கட்டடங்களையும், வரலாற்றில் சிறப்புமிக்க இடத்தையும் பிடித்த பல்வேறு கோட்டைகளையும் விட்டுச் சென்றவர்கள், நமக்கு கல்லறையும் விட்டுச் சென்றுள்ளார்கள்.
அதிலும், சிகப்பு மணற்கற்களாலும், மார்பில் கற்களாலும் அமைக்கப்பட்டுள்ள இந்த கல்லறை, முகலாயர்களின் வரலாற்றில் சிறப்பு மிக்க ஒரு இடத்தை பிடித்துள்ளது. சுமார் 27 ஹெக்டேர் பரப்பளவில் டெல்லி - மதுரா சாலையில் பசுமையான பூங்காவோடு சிகப்பு மணற்கற்களாலும் மார்பில் கற்களாலும் அமைந்துள்ள ஹுமாயூன் கல்லறை தான் இன்று நாம் பார்க்க இருக்கும் அற்புதம். இந்திய பெர்சிய கலப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கட்டிடம் சரித்திரத்தில் முன்னர் இல்லாத ஒரு தனித்துவ கட்டிட அமைப்பைக் கொண்டதனாலும், அந்த காலத்தின் கண்ணாடியாக இருப்பதனாலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
வரலாற்றின் பக்கங்களில்: இந்தியாவின் சரித்திரத்தில் தென் இந்தியா அதிகம் பார்த்திராத ஒரு விஷயம் என்னவென்றால் அது தொடர் படை எடுப்பு தான். சிந்து சமவெளி நாகரீகம் தொடங்கி துருக்கியர்கள், அரேபியர்கள், மங்கோலியர்கள், ஐரோப்பியர்கள் என்று வரிசையாக வண்டி எடுத்துக்கொண்டு படையெடுத்து வந்தனர். இந்தியாவின் வளத்தையும் செல்வத்தையும் பற்றி வெளிநாட்டுப் பயணிகள் எழுதிய குறிப்புகளால் ஈர்க்கப்பட்டு வந்தவர்கள் இங்கிருந்த செல்வங்களைச் சூறையாடிச் சென்றனர். ஒரு சில மன்னர்கள் அவர்கள் வென்ற தேசங்களில் தங்கள் தளபதிகளை விட்டுச்சென்று, அவர்கள் மூலம் இந்தியாவை ஆட்சி செய்து வந்தனர். இப்படி தொடங்கிய அரேபிய, துருக்கிய வம்சங்களின், டெல்லி சுல்தானியர்கள் ஆட்சிக்கு பிறகு, துருக்கிய மங்கோலிய கலப்பில் பிறந்த வம்சமான முகலாயர்கள் இந்திய மண்ணில் உதித்தார்கள்.
கி.பி. 1526 இல் பாபர் இன்றைய உஸ்பேகிஸ்தானின் சமர்கண்ட் என்ற இடத்திலிருந்து இந்தியா நோக்கி படையெடுத்து வந்தார். அன்றைய நாளில் இந்தியாவில் ஆட்சியிலிருந்தது டெல்லி சுல்தானியர்களின் லோடி வம்சம். லோடி வம்சத்தின் கடைசி வலிமையான மன்னனான இப்ராஹிம் லோடியை எதிர்த்து பாபர் பானிபட் போரை நிகழ்த்தினார். போரில் லோடியை கொன்ற பாபர், ஆக்ரா கோட்டையையும், பெருமளவு செல்வத்தையும் கொள்ளையடித்தார். இதையடுத்து டெல்லியில் தன் முகலாய சாம்ராஜ்யத்தை நிறுவினார். இவருக்குப் பின், கி.பி. 1530 இல் அவரது மகனான ஹுமாயூனுக்கு முடிசூட்டப்பட்டது. சுமார் 45 வயதில் ஆட்சியைப் பிடித்த ஹுமாயூன், இன்றைய மதுரா சாலையில், புராணா குயிலா என்ற புது தலைநகரத்தை உருவாக்கினார். அங்கு ஒரு கோட்டையையும் நிறுவி ஆட்சி புரிந்து வந்தார். அந்த கோட்டை இன்று புராணா குயிலா (புராணா கிலா) என்றும் அழைக்கப்படுகிறது.
சுமார் 9 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை கொடுத்து வந்த ஹுமாயூனுக்கு எதிரியாக அவதரித்தார் ஆப்கன் சூர் வம்சத்தை சேர்ந்த ஷேர் ஷா. கி.பி.1539 ம் ஆண்டுகளில் இன்றைய பீகார் பகுதியை ஆட்சியை செய்து வந்த அரேபிய சுல்தான் ஷேர் ஷா டெல்லியை நோக்கி படையெடுத்து வந்தார். பீகாரில் 1539 ஜூன் 26ம் தேதி பக்ஸருக்கு தென்மேற்கே 10 மைல் தொலைவில் உள்ள சௌசாவில் ஹுமாயூனுக்கும் ஷேர் ஷா சூரிக்கும் இடையே சண்டை நடந்தது. போரில் ஹுமாயூன் தோல்வியுற்று பெர்சியாவிக்கு ஓடிவிட முகலாயர்களின் பகுதிகளையும், ஆக்ரா கோட்டையையும் ஆக்கிரமித்தார் ஷேர் ஷா. கி.பி. காலிஞ்சர் கோட்டை முற்றுகையின் போது நடந்த குண்டு வெடிப்பினால் ஷேர் ஷா இறக்க, அவருக்கு பின் அவரின் மகன் இஸ்லாம் ஷா அரியணை ஏறினார்.
அவரின் ஆட்சியில் பல்வேறு குழப்பங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில். அந்த குழப்பங்களைப் பயன்படுத்திக் கொண்ட ஹுமாயூன், பாரசீகத்தில் படைபலத்தையும், அவரின் மகன் ஜலாலுதீன் முகமது அக்பரின் திறமையையும் கொண்டு 1556-ல் மீண்டும் டெல்லியைக் கைப்பற்றினார். இதனால் மீண்டும் முகலாயர்களின் பிடியில் வந்தது டெல்லி. அதே ஆண்டில், தொழுகைக் குரல் கேட்டு மாடியிலிருந்து விரைந்து இறங்கும் போது கீழே விழுந்து இறந்தார் ஹுமாயூன். எனவே,கி.பி. 1556 பிப்ரவரி 14 இல் உமாயூனுக்கு பிறகு அவரின் மகனான ஜலாலுதீன் முகமது அக்பர் அரியணை ஏறினார்.
இடமாற்றங்களில் இறுதியாய் கல்லறை: முதலில் ஹுமாயூனின் உடல் புராணா குயிலாவில் உள்ள அவரது அரண்மனையில் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் ஹெமு, ஆதில் ஷா சூரி படையெடுப்புகளால் அவரது உடலை தோண்டி எடுக்கப்பட்டு, இன்றைய பஞ்சாபில் உள்ள சிர்ஹிந்தில் புதைக்கப்பட்டது. ஹுமாயூனின் முதல் மனைவியான அமீதா ஹாஜி பானு பேகம் தன் ஹஜ் பயணம் முடித்து வந்த பின், ஹுமாயூன் இறந்து 9 ஆண்டுகள் கழித்து, அவருக்குக் கல்லறை எழுப்ப திட்டமிட்டு பணியைத் தொடங்கினார். இந்தியாவில் அன்றைய காலத்தில் அதுவரை இல்லாத அளவு பிரமாண்டமான, தனித்துவமான ஒரு கட்டிடத்தை எழுப்ப விரும்பினார். இதற்காக தங்கள் தாய்நாடான பெர்சியாவில் இருந்து, கட்டிடக் கலையில் சிறந்து விளங்கிய மிராக் மிர்சா கியாத் என்பவரை வரவழைத்தார்.
ஹுமாயூன் உருவாக்கிய நகரத்தில் இந்திய பெர்சிய கூட்டுப் பாணியில் ஹுமாயூனுக்கு கல்லறை எழுப்பப்பட்டது. கி.பி. 1565 ல் கட்டுமான பணி தொடங்கப்பட்டு நிலையில், 7 ஆண்டுகள் நடைபெற்ற பணி கி.பி. 1572 இல் நிறைவுபெற்றது. இவ்வளவு பெரிய கட்டிடத்தில் சிவப்பு மணற்கற்கள் பயன்படுத்தப்பட்டதும் இதுவே முதல் தடவை ஆகும். பின்னர் சிர்ஹிந்தில் இருந்து அவரது உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு ஹுமாயூன் கல்லறைக் கட்டிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
கல்லறையின் அமைப்பு: அன்றைய காலகட்டத்தில் சூபி ஞானிகள் கல்லறைக்கு அருகில் புதைக்கப்படுவது பெரும் புண்ணியமாகக் கருதப்பட்டது. 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சூஃபி ஞானி ஹஜ்ரத் நிஜாமுதீன் அவுலியாவின் கல்லறை டெல்லியின் அன்றைய மத்தியப்பகுதியில் அமைந்திருந்தது. ஹுமாயூனுக்கு கல்லறை அமைக்க வேண்டும் என்ற யோசனை எழும்போதே நிஜாமுதீன் கல்லறை ஒட்டியே கட்ட வேண்டும் என்று திட்டமிட்டனர். ஹுமாயூன் கல்லறை வளாகத்தின் நடுப்பகுதில் நிஜாமுதீன் கல்லறை அமைத்திருக்கும். அதற்கு அருகில் 8 மீட்டர் உயரத்திற்கு வெற்று அறைகள், தூண் மண்டபங்கள் கொண்ட தளத்தின் மீது 47 மீட்டர் உயரத்தில் ஹுமாயூன் கல்லறை அமைக்கப்பட்டுள்ளது.
டெல்லி சுல்தானியர்கள் காலத்திலும் கல்லறைகள், குவிமாடம் கொண்டு, அழகிய அலங்காரங்களோடு அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் முகலாயர்கள், பெர்சியாவின் இரண்டடுக்கு குவிமாட முறையை முதன் முதலாக இந்தியாவில் இக்கட்டிடம் மூலம் அறிமுகம் செய்தனர். 9 அடுக்கு கட்டிட அமைப்பைக்கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. நடுவில் உள்ள பெரிய விசாலமான மண்டபத்திலிருந்து 8 அறைகளுக்கு படி எண்கோண அமைப்பு இருந்தது. ஒவ்வொரு பக்க அறையினுள்ளும் உப பக்க அறைகள் என்று அடுக்குகளாக அமைந்திருக்கும். ஒவ்வொரு அறையும் எண்கோணத்தில் இருக்கும். 8 பக்கங்களுக்கு பாதை விரியும். ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் செல்ல இணைப்புத் தாழ்வார அமைப்பு இருக்கும். நடுவில் உள்ள பிரதான குவிமாட அமைப்பு மட்டும் சுமார் 42.5 மீட்டர் உயரம் கொண்டது. அதற்கு மேல் 6 மீட்டர் உயரமான பித்தளை கலசம் அமைக்கப்பட்டிருக்கும். அதன் மீது முகலாயர்கர், இஸ்லாமியர்களின் வழக்கப்படி பிறை அமைப்பு சேர்க்கப்பட்டிருக்கும்.
கல்லறையில் வெளி பக்கம் முழுவதும் சிவப்பு மணற்கற்களால் அமைக்கப்பட்டிருக்கும். உள்ளே வெள்ளை பளீங்கு கற்களைக் கொண்டும், சிவப்பு, நீல நிறம் கொண்ட வழுவழுப்பான பளிங்கு மற்றும் ரத்ன கற்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இந்த கல்லறை கட்டுவதற்காக ஆக்ரா தான்புரில் இருந்து சிவப்பு மணற்கற்களும், ராஜஸ்தான் மக்கரானா பகுதில் இருந்து வெள்ளைப் பளிங்குக் கற்களும் கொண்டுவரப்பட்டதாக வரலாறு கூறுகிறது. தாஜ்மஹாலில் காணப்படும் பியூட்டிரா டூரா எனப்படும் பூக்கள், செடிகள் கொண்டு அலங்கரிக்கும் முறை தான் இங்கும் பயன்படுத்தப்பட்டிருக்கும். அது தவிர்த்து குரான் வாசகங்கள் காலிக்ராப் முறையில் பொறிக்கப்பட்டிருக்கும். ஹுமாயூன் கல்லறையிலேயே அவரது மற்ற மனைவிகள், சேவகர்கள் கல்லறைகளும் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அதனை சுற்றி ஏராளமான சிறிய பல கல்லறைகள் அமைக்கப்பட்டிருக்கும். நீலக் கற்களால் மட்டுமே அலங்கரிக்கப்பட்ட ஒரு கல்லறையும் நம் கவனத்தை ஈர்க்கும்.
இது முகலாயர்களின் குழுமம் என்றே அழைக்கப்படும். ஏனெனில் முகலாய வம்சத்தைச் சேர்ந்த சுமார் 150 பேரின் உடல்கள் இங்கே புதைக்கப்பட்டுள்ளது. அது போக ஹுமாயூனின் பொருட்களான தலைப்பாகை, வாள், காலணி அடங்கிய அருங்காட்சியகமும் அருகே அமைக்கப்பட்டுள்ளது. 1611 இல் கல்லறையைப் பார்வையிட்ட ஆங்கிலேய வணிகரான வில்லியம் பின்ச் தன் நூலில் இதைக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் காலப்போக்கில் அது களவாடப்பட்டது. நாட்டின் முதல் தோட்டக் கல்லறையும் இதுவே.
சார் பாக் (Charbagh) (நான்கு தோட்டங்கள்): முகலாயக் கட்டிடங்கள் என்று ஒரு கட்டிடத்தை அடையாளப் படுத்துவதே அதன் தோட்ட அமைப்பைக் கொண்டுதான். சார் பாக் என்பது பாரசீக மற்றும் இந்தோ-பாரசீகத் தோட்டத்தின் நான்கு பாராட்ரைஸ் தோட்டத்தின் அடிப்படையில் குறிப்பிடப்பட்ட நான்கு தோட்டங்கள் ஆகும். சார் பாக் என்றால் சரியாக 90° இல் 4 கால்வாய்கள் அமைத்து, ஒரு தோட்டத்தை அமைக்கும் முறையாகும். நான்கு சதுரங்களில் ஒவ்வொன்றும் பாதைகளுடன் 8 சிறிய தோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, மொத்தத்தில் 32 மினியேச்சர் தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி இங்கு தோட்டம் அமைக்கப்பட்டு, மண்ணால் செய்யப்பட்ட குழாய்களை தரைக்கு அடியில் பதித்து, அருகில் உள்ள யமுனை ஆற்றிலிருந்து இந்த தோட்டத்திற்கு தண்ணீர் கொண்டுவரப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது தான் இந்தியாவின் முதல் தோட்ட அமைப்பு கொண்ட கட்டிடம். இதன் பிறகு வந்து முகலாயக் கட்டிடங்கள் அனைத்திற்கும் இதுபோன்ற முறையையே பயன்படுத்தி வந்தனர். தாஜ்மகால் தோட்டம் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். தாஜ்மஹாலில் உள்ள சார் பாக்கில், நான்கு பகுதிகளிலும் பதினாறு மலர் படுக்கைகள் உள்ளன.
கால ஓட்டத்தில் உருண்ட கல்லறை: முகலாயர் ஆட்சியில் பெரிதும் பாதுகாக்கப்பட்ட இடமாக ஹுமாயூன் கல்லறை இருந்தது. ஆனால் கி.பி.1857 இல் ஏற்பட்ட சிப்பாய் கழகத்தின் போது இது பொதுமக்களின் தஞ்சம் புகும் இடமாக மாறியது. டெல்லியை சுற்றி இருந்த மக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக இங்கே குடியேறினர். அதனால் இந்த கல்லறை மிகவும் மோசமான வகையில் சேதப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் ஏற்பட்ட போரில் அன்றைய முகலாயப் பேரரசர் பகதூர் ஷா தோற்கடிக்கப்பட்டு செங்கோட்டையில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் வேறு வழியின்றி, ஹுமாயூன் கல்லறையிலிருந்து பொதுமக்களை வெளியேற்றி தன் மனைவி, 3 மகன்கள் என குடும்பத்துடன் இங்குக் குடியேறினார்.
கி.பி.1903-09 கர்சன் காலத்தில் இக்கல்லறையை மீட்டமைக்கும் பணி முழு வீச்சில் நடந்தது. அதைத் தொடர்ந்து இந்திய தொல்லியல் துறை இக்கட்டிடத்தைப் பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. அகாக் கான் தொண்டு நிறுவனம் இங்குள்ள தோட்டங்களைப் பராமரிக்கும் பணியைச் செய்து வருகிறது. வரலாற்றில் இடம் பிடித்த இந்த இடங்களை, 1993-ஆம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில், சிறந்த கலை, கட்டடக்கலை, பிரம்மாண்டம், வரலாற்று நினைவுகள், நினைவுச்சின்னம் என்ற பட்டியலின் அடிப்படையில் யுனெஸ்கோவின் 2 மற்றும் 4-வது விதியின் கீழ் உலக பாரம்பரிய இடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட இடங்களின் பட்டியலில் ஹுமாயூன் கல்லறை சேர்க்கப்பட்டன.
ஹுமாயூனின் கல்லறை வளாகத்தில் உள்ள மற்ற நினைவுச்சின்னங்கள்: ஹுமாயூன் கல்லறைக்குச் செல்லும்போது, இருபுறமும் ஏராளமான நினைவுச்சின்னங்களைக் காண முடியும். இதில், ஷேர் ஷா சூரியின் அரசவையிலிருந்த ஆப்கானிய பிரபு இஸ்லா கானின் கல்லறை மற்றும் மசூதியானது மிகவும் புகழ்பெற்றது. ஷேர்ஷா சூரியின் மகன் இஸ்லாம் ஷா சூரியின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. அதேபோல் வளாகத்தின் அருகே அமைந்துள்ள நிலா கும்பத் கல்லறை, அக்பரின் அரசவையில், அவரது வேலைக்காரன் மியான் ஃபாஹிமுக்காக கட்டப்பட்டது. மேலும், 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சூஃபி ஞானி ஹஜ்ரத் நிஜாமுதீன் அவுலியாவின் கல்லறை சிறந்த நினைவுச் சின்னங்களாக உள்ளன. கி.பி.1590ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட நை-கா-கும்பத் அல்லது முடிதிருத்தும் கல்லறை என அழைக்கப்படும் ஒரு கல்லறை உள்ளது. இந்த கல்லறை ஹுமாயூனின் அரசவையில் உள்ளவர்களுக்கு முடிதிருத்தும் வேலை செய்தவருக்குச் சொந்தமானது.
சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு: டெல்லியின் மத்திய பகுதியில் மதுரா சாலையில் அமைந்துள்ள ஹுமாயூன் கல்லறைக்குச் செல்ல ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து சிறந்தது. சென்னையிலிருந்து சுமார் 2,181 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த இடத்திற்கு, தென்தமிழகத்திலிருந்து மதுரை - சண்டிகர் விரைவு ரயில், திருக்குறள் சிறப்பு ரயில் மூலமும், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலிருந்து சென்றால் ஹஸ்ரத் நிஜாமுதீன் ஸ்வர்ணா ஜெயந்தி அதிவிரைவு சிறப்பு ரயில் மூலமும் ஆக்ராவை அடையலாம். அங்கிருந்து பேருந்து மற்றும் ஆட்டோ வழியாக ஹுமாயூன் கல்லறையை அடையலாம். மேலும், ஹுமாயூன் கல்லறையிலிருந்து 2 கி.மீ தொலைவில் ஜோர் பாக் மெட்ரோ நிலையம் உள்ளது. விமான பயணத்தை மேற்கொள்பவர்களுக்காக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் 15 கிமீ தொலைவில் உள்ளது. வாரத்தின் 7 நாட்களும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும்.
கட்டணம்: ஹுமாயூன் கல்லறையைச் சுற்றிப்பார்க்க இந்திய சுற்றுலா பயணிகளுக்கு 30 ரூபாய் கட்டணமும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு 500 ரூபாய் நுழைவுக் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. 15 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். இங்கு புகைப்படம் எடுக்க இலவசம் ஆனால் வீடியோ எடுக்க நினைத்தால் தனியாக 25 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். சுற்றுலாவுக்குச் செல்பவர்கள், இதனோடு சேர்த்து குதுப் மினார், இந்தியா கேட் , புராணா குயிலா ஆகியவற்றையும் பார்க்க மறந்துவிடாதீர்கள்.
(உலா வருவோம்)