இந்திய பாரம்பரிய இடங்கள் 14: ஃபதேபூர் சிக்ரி - மகனுக்காக அக்பர் உருவாக்கிய நகரம்!

இந்திய பாரம்பரிய இடங்கள் 14: ஃபதேபூர் சிக்ரி - மகனுக்காக அக்பர் உருவாக்கிய நகரம்!
ஃபதேபூர் சிக்ரி
ஃபதேபூர் சிக்ரிஃபதேபூர் சிக்ரி

ஆக்ரா என்று சொன்னதும் தாஜ்மஹாலும், கோட்டைகளும் தான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், ஆக்ராவிலிருந்து சற்று தொலையில் முகலாய மன்னர்களின் கட்டட கலைக்குச் சான்றாக அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த ஒரு நகரமும் அமைந்துள்ளது. அங்குள்ள கட்டடங்கள் ஒவ்வொன்றும் வரலாற்றில் சிறப்பு வாய்ந்தவையாகவும், முகலாய மன்னர்களின் சிறப்புகளையும் விளக்குகின்றன. ஆக்ராவிலிருந்து 37 கிமீ தொலைவிலும், டெல்லியிலிருந்து 223 கிமீ தொலைவிலும், ஜெய்ப்பூரிலிருந்து 209 கிமீ தொலைவிலும் அமைந்துள்ள இந்த நகரம் வெறிச்சோடிய கோட்டை நகரமாகும்.

1569-ஆம் ஆண்டு முகலாய மன்னர் அக்பரால் உருவாக்கப்பட்ட நகரமான ஃபதேபூர் சிக்ரி-க்கு சென்றால் அவ்விடத்தை ரசிப்பதற்கு ஒருநாள் போதாது. செல்லும் வழியெங்கும், ஏராளமான நினைவுச் சின்னங்களும், முகலாய மன்னர்களின் வாழ்விடங்களும், தொடர்ச்சியான நுழைவாயில்கள் என நகரம் முழுவதுமே வரலாற்றின் எச்சங்களை வெளிப்படுத்துகின்றன. கைவிடப்பட்ட நகரமாக இருந்தாலும், அங்கே எஞ்சியிருக்கும் அரண்மனையும், மசூதியும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருவதோடு யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடங்களிலும் இடம் பிடித்துள்ளது.

ஃபதேபூர் சிக்ரி உருவான வரலாறு: கி.பி 1500-ம் ஆண்டுகளில் முகலாய பேரரசு இந்தியாவில் தனது ஆட்சியைத் தொடங்கியது. அவர்களின் ஆட்சியில் பல்வேறு சிறப்பு மிக்க கட்டடங்கள் கட்டப்பட்டு, வரலாற்றில் தனிச்சிறப்பைப் பெற்றன. ஆக்ரா கோட்டையில் முடிசூட்டப்பட்ட முகலாய பேரரசான ஹுமாயூனுக்கு பின், கி.பி. 1556-ம் ஆண்டு ஹுமாயூனின் மகன் ஜலாலுதீன் முகமது அக்பர் அரியணையில் ஏறினார். இதையடுத்து அக்பரின் தலைநகரமாக ஆக்ரா அமைக்கப்பட்டது. மேலும், சரித்திரத்தில் இடம்பெற்ற ஆக்ரா கோட்டையைப் புதுப்பிக்கவும் உத்தரவிட்டார் அக்பர்.

அக்பரின் மனைவியான மரியம்-உஸ்-சமானி மூலமாக முதலில் ஒரு மகனும், அடுத்ததாக இரட்டை குழந்தைகளும் பிறந்தன. துரதிர்ஷ்டவசமாக அந்த இரட்டை குழந்தைகளும் இறந்து விட்டதால், அக்பருக்கு சூஃபியாக இருந்த ஷேக் சலிம் சிஸ்டியின் (அவரது காலங்களில் ஞானிகளில் ஒருவராகப் போற்றப்பட்டவர்) என்பவரிடம் ஆலோசனையை மேற்கொண்டார்.

ஷேக் சலிம் சிஸ்டி ஆக்ராவுக்கு அருகில் உள்ள சிக்ரி என்னும் சிறிய நகரில் வசித்து வந்தார். ஆலோசனையில், அக்பருக்கு மீண்டும் ஒரு மகன் பிறப்பான். மக்களின் மனங்களை வெல்லும் அவனின் ஆட்சி சிறப்பாக அமையும் என்று கூறினார். அவர் கூறியபடியே 1569-ம் ஆண்டில் சிக்ரியில் அக்பருக்கு ஒரு மகன் பிறந்தான். அவனே பிற்காலத்தில் முகலாய மன்னர்களுள் ஒருவரான நூருத்தீன் சலீம் ஜஹாங்கிர்.

ஷேக் சலிம் சிஸ்டியை கௌரவிக்கும் விதமாக அவரின் பெயரையே தன் மகனுக்கு வைத்தார் அக்பர். மேலும், ஷேக் சலிமுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஷேக் சலீமின் மகளை தன் மகனின் வளர்ப்புத்தாயாக மாற்றினார். குழந்தை பிறந்த இடமான சிக்ரியில் ஒரு அரண்மனையையும், அரச நகரத்தையும் அமைக்க எண்ணினார். இதையடுத்து அரண்மனை அமைக்கப்பட்டு, அவ்விடத்துக்கு ஃபதேபூர் சிக்ரி என்று பெயரும் மாற்றப்பட்டது. இதற்கு "வெற்றியின் நகரம்" என்று பொருள். இதையடுத்து அக்பரின் புதிய தலைநகரம் ஃபதேபூர் சிக்ரியில் உருவானது.

அக்பர் மிகவும் உயர்வாக மதித்து வந்த சூஃபி துறவி ஷேக் சலீம் சிஸ்டியின் நினைவாக அங்கு ஒரு மசூதியை அமைத்தார். 1803-ம் ஆண்டுகளில், ஆங்கிலேயர்கள் ஆக்ராவை ஆக்கிரமித்த பிறகு, இதனை நிர்வகிக்க ஒரு மையத்தை நிறுவினர். 1815 ஆம் ஆண்டில், மார்க்வெஸ் ஆஃப் ஹேஸ்டிங்ஸ் சிக்ரியில் உள்ள நினைவுச்சின்னங்களைச் சீரமைக்க உத்தரவிட்டு அன்றுமுதல் தற்போது வரை இந்த இடங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

கட்டடக்கலையிலும், அதன் சிறப்புகளிலும் வரலாற்றில் தனி இடத்தைப் பிடித்த ஃபதேபூர் சிக்ரியை, 1986-ஆம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில், சிறந்த கட்டடக்கலை, தனித்துவம், நாகரிகம் என்ற பட்டியலின் அடிப்படையில் யுனெஸ்கோவின் 2, 3 மற்றும் 4-வது விதியின் கீழ் உலக பாரம்பரிய இடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட இடங்களின் பட்டியலில் ஃபதேபூர் சிக்ரி சேர்க்கப்பட்டது.

ஃபதேபூர் சிக்ரி கட்டடக்கலை சிறப்புகள்: ஃபதேபூர் சிக்ரியின் கட்டடக்கலை தைமுரிட் வடிவங்கள் மற்றும் பாணிகளை மாதிரியாகக் கொண்டது. இந்திய, பாரசீக மற்றும் இஸ்லாமியக் கட்டடக்கலைகளின் கலவையுடன் முகலாய கட்டடக்கலையின்படி வடிவமைக்கப்பட்ட இந்த நகரம் 3 கிமீ நீளமும் 1 கிமீ அகலமும் கொண்ட பாறை முகடுகளைக் கொண்டுள்ளது.

முகலாய மன்னரான அக்பர் தனது நகரத்தின் பெரும்பாலான கட்டடங்களைச் சிவப்பு மணற்கற்களையும், செங்கற்களையும் கொண்டு உருவாக்கினார். அதில் மிகவும் புகழ்பெற்ற கட்டடங்கள் திவான்-இ-ஆம், திவான்-இ-காஸ், இபாதத் கானா, பாஞ்ச் மஹால், சலீம் சிஸ்டியின் சமாதி, ஜமா மஸ்ஜித், ஜோதா பாய் அரண்மனை, மரியம்-உஸ்-ஜமானி அரண்மனை என 15-க்கும் மேற்பட்டவை.

1571 மற்றும் 1585-இல் உருவாக்கப்பட்ட இந்த நகரத்தைச் சிறந்த இடமாக மாற்ற எண்ணிய அக்பருக்கு சோதனையாக அமைந்தது தண்ணீர் பற்றாக்குறை. சிக்ரியில் தண்ணீர் கிடைப்பதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தபோதும் வறட்சிக் காலத்தில் ஒரு சொட்டு நீர்கூடக் கிடைக்கவில்லை. இதனால், சுமார் 20 ஆண்டுகள் மட்டுமே முகலாயர்கள் இங்கு இருந்தனர். பகைவர்களின் படையெடுப்புகளிலிருந்து தற்காத்துக்கொள்வதற்காகவும், தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாகவும் முகலாயர்களின் தலைநகரம் லாகூருக்கு மாற்றப்பட்டது. இதனால், வாழ்வதற்குத் தகுதியின்றிக் கைவிடப்பட்ட நகரமாக ஆனது ஃபதேபூர் சிக்ரி.

வெறிச்சோடிய நிலையிலிருந்த நகரத்தை தொல்பொருள் துறையினர் ஆய்வு செய்து, பழைய கட்டமைப்புகளை மீட்டனர். முகலாய கட்டடக்கலையின் சிறப்பிற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்ந்துள்ளதால், இடிந்த நிலையிலிருந்தாலும் நகரத்தைப் பராமரித்து வருகின்றனர். ஃபதேபூர் சிக்ரி மசூதி மெக்காவில் உள்ள மசூதியின் நகல் என்றும், பாரசீக மற்றும் இந்து கட்டடக்கலையிலிருந்து பெறப்பட்ட வடிவமைப்புகளைக் கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

திவான்-இ-ஆம்: திவான்-இ-ஆம் 1570 முதல் 1580 வரை முகலாய பேரரசர் அக்பரால் கட்டப்பட்டது. இந்தக் கட்டடம் முக்கியமாக மூன்று பகுதிகளைக் கொண்டது; பொதுமக்களுக்கான முன் இடம், பேரரசருக்கான மைய இடம் மற்றும் அரச பெண்களுக்கான இடம். இவரின் காலத்தில் மக்களின் குறைகளை இந்த இடங்களில் கேட்டறிந்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அமரக்கூடிய வகையில் மூன்று பக்கங்களிலும் தூண்கள் தாழ்வாரங்கள் உள்ளன. 49 தூண்களுடன் காணப்படும் இந்த கட்டடத்தின் தூண்கள் மற்றும் சுவர்களின் பலவகை அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


திவான்-இ-காஸ்

பாரசீக கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டிருக்கும் இந்த கட்டடம் தனியார் பார்வையாளர்களுக்கான இடமாக உள்ளது. அரச உறுப்பினர்கள் மட்டுமே தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி விவாதிக்க இந்த இடத்தை பயன்படுத்தியுள்ளனர். மலர் வடிவிலான அடித்தளமும், தண்டும் கட்டடத்தின் அழகைக் கூட்டுகின்றன. மண்டபத்தின் நடுவில் மன்னரின் முக்கிய இருக்கை அமைந்திருந்தது. அக்பர் இருந்த மேடையிலிருந்து 36 வளைந்த பாதைகள் மேடையிலிருந்து அலங்கரிக்கின்றன. இது நகை வீடு என்றும் அழைக்கப்படுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் இந்த அரண்மனையைச் சுற்றிப்பார்க்க, இந்தியர்களுக்கு 20 ரூபாயும், வெளிநாட்டினருக்கு 260 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஜோதா பாய் அரண்மனை: ஃபதேபூர் சிக்ரி ரயில் நிலையத்திலிருந்து 1 கிமீ தொலைவில் உள்ள, ஜோதா பாய் அரண்மனை மிகப்பெரிய கட்டடங்களில் ஒன்றாகும். இந்த அரண்மனை அக்பரால் ராஜபுத்திர இளவரசியான ஜோதா பாய்க்காக கட்டப்பட்டது. வரலாற்றின் படி, அக்பர் மால்வாவைக் கைப்பற்றிய பிறகு, ராஜ்புத் அரசர்களிடமிருந்து எதிர்ப்பை எதிர்கொண்டார். அக்பர் இராஜபுத்திர குலத்தின் இளவரசியுடன் தங்கள் ராஜ்ஜியங்களைத் தக்கவைத்துக்கொள்ளவும், திருமண உறவுகளில் ஈடுபடவும் அனுமதித்து, இராஜதந்திர ரீதியில் பிரச்னையைச் சமாளித்தார். ஜெய்ப்பூரின் சக்திவாய்ந்த ஆட்சியாளரான மான் சிங்கின் சகோதரி ஜோதா பாயை அவர் மணந்தார். அக்பருக்கு மிகவும் பிடித்த ராணியாக இருந்ததால் அவரது அரண்மனையில் இந்து தெய்வங்களை வழிபடவும் அனுமதித்தார்.

இந்து மற்றும் முஸ்லீம் கட்டடக்கலைகளின் இணைவுக்கு ஜோதா பாய் அரண்மனை ஒரு சிறந்த உதாரணம். ஹாம்ஸ் (ஸ்வான்), கிளி, யானைகள், தாமரை, ஸ்ரீவத்ச முத்திரை, காண்ட் மாலா போன்ற பல இந்து உருவங்கள் உட்புறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

பாஞ்ச் மஹால்: பாஞ்ச் மஹால் என்பது பெயருக்கேற்ற படியே ஐந்து அடுக்குகளைக்கொண்ட மாளிகையாகும். ஃபதேபூர் சிக்ரி ரயில் நிலையத்திலிருந்து 1 கிமீ தொலைவில் உள்ள பாஞ்ச் மஹால், ஜோதா பாயின் அரண்மனையின் வடகிழக்கு திசையில் அமைந்துள்ள ஐந்து மாடி கட்டடக்கலை நினைவுச்சின்னமாகும்.

இந்த மாளிகையில் அக்பரின் மூன்று மனைவியரும் மற்ற அந்தப்புர மகளிரும் வசித்திருந்தனர். மேலும் அக்பரின் மனைவியான ஜோதா பாயின் அரண்மனை மற்றும் மன்னர் அறை ஆகியவற்றோடு இந்த மாளிகை இணைக்கப்பட்டிருக்கிறது. காற்று மாளிகை எனும் சிறப்புப்பெயரையும் இந்த பாஞ்ச் மஹால் மாளிகை பெற்றிருக்கிறது. அதாவது, காற்று நன்றாக இந்த மாளிகையின் உள்ளே பரவி ஆக்ராவின் கடும் வெப்பத்தைத் தணிக்கும் வகையில் இது பாரசீக கட்டிடக்கலை முறைப்படி கட்டப்பட்டிருக்கிறது.மற்றொரு சிறப்பு அம்சமாக இந்த மாளிகையின் ஒவ்வொரு மேல் அடுக்கும் அதன் கீழே உள்ள அடுக்கைவிட அளவில் சிறியதாகக் கட்டப்பட்டிருப்பதாகும்.

பஞ்ச் மஹாலின் மேல் ஏறும்போது, அளவு சிறியதாகி, மேல் தளத்தைத் தாங்கும் தூண்களின் எண்ணிக்கை குறைகிறது. முதல் தளத்தில் 56 தூண்களும், இரண்டாவது தளத்தில் 20 தூண்களும், மூன்றாவது தளத்தில் 12 தூண்களும், நான்காவது மட்டத்தில் 4 தூண்களும் உள்ளன. தரைதளம் 130 அடிக்கு 40 அடி என்ற அளவிலும் ஐந்தாவது தளம் 10 அடிக்கு 10 அடி என்ற அளவிலும் காணப்படுகிறது. மேல் தளம் ஒரு குவி மாடத்தைக் கொண்டுள்ளது. அதன் மேல் மலர் வடிவங்கள் உள்ளன. இந்த மாளிகையின் ஒவ்வொரு தளமும் கலை நுணுக்கம் கொண்ட அலங்காரத் தூண்களோடு காணப்படுக்கின்றன. காற்று நன்றாக உள் நுழையும் வகையில் ஒவ்வொரு தளமும் நாலாபுறமும் திறந்த நிலையில் உள்ளது.

ஷேக் சலீம் சிஸ்டியின் சமாதி: சூஃபி துறவியான சலீம் சிஸ்டியின் அடக்கம் செய்யப்பட்ட சமாதி முகலாய கட்டடக்கலைக்கு மிக அழகான எடுத்துக்காட்டு. அக்பரின் வாரிசான ஜஹாங்கீரின் பிறப்பை முன்னறிவித்த சலீம் சிஸ்டிக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த சமாதி கட்டப்பட்டது.

முதலில் இது சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்டது, பின்னர் ஜஹாங்கீரின் உத்தரவின் பேரில் சுமார் 1 மீ உயரத்தில் மேடையின் மீது வெள்ளை பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இந்த சமாதியின் முக்கிய கட்டடத்தின் அனைத்து பக்கங்களிலும் பளிங்குக் கற்கள் சூழப்பட்டுள்ளது. முக்கிய அறையின் கதவானது குரானின் வடிவங்கள் மற்றும் கல்வெட்டுகளுடன் அழகாக செதுக்கப்பட்டுள்ளது. பளிங்குக் கல்லால் செய்யப்பட்ட தரையின் மேல் பல வண்ணக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. கல்லறையின் உள் அறை ஒரு மரத்தினாலும், மொசைக் கற்களாலும் பதிக்கப்பட்டுள்ளது. இந்த சமாதி குழந்தை பிறப்பதற்கு ஆசீர்வாதமான இடமாகக் கருதப்படுகிறது. மேலும், தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் பலரும் இந்த சமாதிக்கு வந்து, தங்களின் வேண்டுதலாக நூல்களைக் கட்டிவிட்டுச் செல்கின்றனர்.

மரியம்-உஸ்-ஜமானி அரண்மனை: ஹர்கபாய் அல்லது ஜோதாபாய் என்றும் அழைக்கப்படும் மரியம்-உஸ்-ஜமானி, அக்பரின் அரண்மனைக்கு மனைவி ஆவார். இந்த அரண்மனை ராஜ்புத் மற்றும் முகலாய கட்டடக்கலையின் சிறப்பை தெளிவாகக் காட்டும். இந்த இடம் அக்பரின் ராணிகள் மற்றும் அந்தப்புற பெண்களின் வசிப்பிடமாகவும் இருந்துள்ளது. அக்பர் மிகவும் விரும்பிய சலீம் என்ற மகனை இந்த மரியம் ராணி பெற்றபின்னர் இவருக்கு மரியம் உஸ்ஜமானி என்ற பட்டப்பெயரை அக்பர் அளித்துள்ளார்.

உலகை நேசிப்பவர் என்பது இப்பெயரின் பொருளாகும். 1622-ம் மரியம் இறந்த பின், தன் தாயாரின் பெயரை, இந்த அரண்மனைக்கு வைத்தார் ஜஹாங்கீர். இந்த அரண்மனை ஜோதி நகரிலுள்ள தந்த்பூர் சாலையில் அக்பர் சமாதிக்கு அருகில் உள்ளது. இதன் உள்ளேயே தனிப்பட்ட வீடு போன்ற அமைப்புகளும் ஒரு பொதுவான கூடமும் உள்ளன. இதன் வடக்குப் பகுதியில் பூங்காவும் அமைந்துள்ளது.

ஜமா மஸ்ஜித்: ஃபதேபூர் சிக்ரி ரயில் நிலையத்திலிருந்து 1 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றான ஜமா மஸ்ஜித் கி.பி 1571 இல் கட்டப்பட்டது. இது இந்திய மசூதிகளின் பாணியில் கட்டப்பட்டது.  இதன் உள்ளே, ஒரு பெரிய சபை கூடாரம் உள்ளது. வலதுபுறம், மூலையில், ஜம்மத் கானா மண்டபமும், அதற்கு அடுத்ததாக அரச பெண்களின் சமதிகளும் உள்ளது. ஜமா மஸ்ஜிதின் இடதுபுறத்தில் கல் வெட்டுபவர்களின் மசூதி உள்ளது. இது ஃபதேபூர் சிக்ரியில் உள்ள பழமையான வழிபாட்டுத் தலமாகும். இது வெள்ளிக்கிழமை மசூதி என்றும் அழைக்கப்படுகிறது. புலந்த் தர்வாசா எனப்படும் கிழக்கு நுழைவாயில் வழியாக இது நுழைகிறது.

புலந்த் தர்வாசா: தரையிலிருந்து சுமார் 180 அடி உயரத்தில் உள்ள புலந்த் தர்வாசா நுழைவாயில், கி.பி 1602ல் அக்பரின் குஜராத் வெற்றியின் நினைவாக அமைக்கப்பட்டது. இது சிவப்பு மற்றும் பஃப் மணற்கற்களால் ஆனது, வெள்ளை மற்றும் கருப்பு பளிங்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 40 மீ உயரத்தில் உள்ள நுழைவாயிலை அடைய 42 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இந்த நுழைவாயிலை உருவாக்க கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் ஆனது. இந்தியாவின் மிக உயரமான மற்றும் பிரமாண்டமான நுழைவாயில் ஆகும். அதேபோல் உலகின் மிகப்பெரிய நுழைவாயில்களில் ஒன்றாகவும் இது திகழ்கிறது.

பீர்பாலின் அரண்மனை: பீர்பாலின் அரண்மனை ஃபதேபூர் சிக்ரியில் உள்ள முக்கியமான நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும். இது 1571 இல் கட்டப்பட்டது. அக்பருக்கு மிகவும் பிடித்த அமைச்சரான பீர்பாலின் அரண்மனை, ஜோதாபாய் அரண்மனையின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது. பீர்பால் அரண்மனையின் கட்டடக்கலை முகலாய பாணியை அடிப்படையாகக் கொண்டது. இது இரண்டு அடுக்கு அமைப்பில், தரைதளம் திறந்த கதவுகளுடன் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நான்கு அறைகளைக் கொண்டுள்ளது. மேல் மாடி இரண்டு அறைகள் மற்றும் திறந்த மொட்டை மாடிகளால் ஆனது. மேல் அறைகள் குவிமாடம் போன்ற கோபுரங்களால் கூரையிடப்பட்டுள்ளன, தாழ்வாரங்களில் பிரமிடு கூரைகள் உள்ளன. குவி மாடங்களில் தலைகீழ் தாமரை மற்றும் கலஷ் வடிவமைப்புகள் செதுக்கப்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் இந்த அரண்மனையைச் சுற்றிப்பார்க்க, இந்தியர்களுக்கு 20 ரூபாயும், வெளிநாட்டினருக்கு 260 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஹிரன் மினார்: ஹிரன் மினார், அல்லது யானை கோபுரம் என்று அழைக்கப்படும் இந்த இடத்தில், யானைத் தந்தங்கள் வடிவில் கல் திட்டுகளால் அமைக்கப்பட்ட ஒரு வட்ட கோபுரம் அமைந்துள்ளது. அக்பரின் விருப்பமான யானையின் நினைவாக இந்த நினைவிடம் அமைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்த கோபுரம் இரவு பயணிகளுக்கு ஒரு விளக்கு மாளிகையாகச் செயல்பட்டதாகவும் நம்பப்படுகிறது.

21.34 மீ உயரத்துடன் காணப்படும் ஹிரான் மினார், தரை மட்டத்தில் எண்கோணமாகவும், கோபுரத்தின் மற்ற பகுதிகள் வட்டமாகவும் உள்ளது. ஆறு நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்டு, ஒவ்வொரு நட்சத்திரத்தின் மையத்திலிருந்தும் யானைத் தந்தங்கள் வைக்கப்பட்டன. அவை இப்போது கல் தந்தங்களால் மாற்றப்பட்டுள்ளன. கோபுரத்தின் உள்ளே மேலே செல்ல 53 படிகள் உள்ளன. கோபுரத்தின் உச்சியிலிருந்து ஃபதேபூர் சிக்ரி நகரத்தின் அழகை முழுமையாக காண முடியும். இதன் கீழே மைதானம் இருப்பதால், அதில் நடைபெறும் விளையாட்டுக்கள், மிருக சண்டை மற்றும் மல்யுத்த விளையாட்டுகளைப் பார்க்க பெண்கள் மற்றும் ராணிகள் பயன்படுத்தும் கோபுரமாகவும் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.



சுற்றுலாப் பயணிகளின் கவனத்திற்கு...

சென்னையிலிருந்து சுமார் 2,000 கி.மீ தொலையில் அமைந்துள்ள ஆக்ராவிற்கு சென்று, ஃபதேபூர் சிக்ரியை சுற்றிப் பார்க்க விரும்புவர்கள் விமானம், ரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்யலாம். ஆக்ரா கான்ட் ரயில் நிலையத்திலிருந்து 35 கிமீ தொலைவில் உள்ளது ஃபதேபூர் சிக்ரி. சென்னையிலிருந்து கிராண்ட் டிரங்க் எஸ்பிரஸ், தமிழ்நாடு சிறப்பு ரயில், ராஜ்தானி சிறப்பு ரயில் மூலம் ஆக்ரா செல்லலாம். தென்தமிழகத்திலிருந்து மதுரை - சண்டிகர் விரைவு ரயில், திருக்குறள் சிறப்பு ரயில் மூலமும், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலிருந்து சென்றால் ஹஸ்ரத் நிஜாமுதீன் ஸ்வர்ணா ஜெயந்தி அதிவிரைவு சிறப்பு ரயில் மூலம் ஆக்ராவை அடையலாம். அங்கிருந்து பேருந்து மற்றும் ஆட்டோ வழியாக ஃபதேபூர் சிக்ரியை அடையலாம்.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இங்கு மிதமான வெப்பநிலை நிலவும் காலமான நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை சுற்றுலாவுக்குச் செல்வது சிறந்தது.

கட்டணம்: இந்தியக் குடிமக்களுக்கு 50 ரூபாய் நுழைவுக் கட்டணமும், பிற நாட்டு மக்களுக்கு 610 ரூபாயும் நுழைவுக் கட்டணமாக வாங்கப்படுகிறது. சுற்றுலாவுக்குச் செல்பவர்கள் தங்களின் அடையாள அட்டையை எடுத்துச்செல்ல வேண்டும். 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது. ஆக்ராவிலிருந்து உள்ளூர் மக்களின் பார்வைகளுக்காக உத்தரப் பிரதேச மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பாக, தினசரி சுற்றுப்பயணங்கள் நடத்தப்படுகின்றன. இதற்காக இந்தியர்களிடம், 550 ரூபாய் முதல் 750 ரூபாய் வரையும், வெளிநாட்டினர்களிடம் 550 முதல் 3,600 ரூபாய் வரையும் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

(உலா வருவோம்...)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com