இந்திய பாரம்பரிய இடங்கள் 13: ஹம்பி நினைவுச்சின்னங்கள்- அக்காலத்தைக் காட்டும் கலைக்கண்ணாடி!

இந்திய பாரம்பரிய இடங்கள் 13: ஹம்பி நினைவுச்சின்னங்கள்- அக்காலத்தைக் காட்டும் கலைக்கண்ணாடி!
ஹம்பி நினைவுச்சின்னங்கள்
ஹம்பி நினைவுச்சின்னங்கள்ஹம்பி நினைவுச்சின்னங்கள்

நம் முன்னோர்களின் சரித்திரங்களும், சாதனைகளும் காலத்தோடு உறைந்துவிட்டாலும், அவர்கள் விட்டுச்சென்ற தடயங்களும், கலைப் பொக்கிஷங்களும் கட்டடங்களாக, கோவில்களாக, அணைகளாக, கலைப்பொருள்களாக, இலக்கியங்களாக நம்முடன் இருக்கின்றன. இந்திய மண்ணின் சிற்பக் கலையையும், கட்டடக் கலையையும் வெளிநாட்டினர் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள். ஆயிரமாயிரம் ஆண்டுகளைக் கடந்தாலும், இன்று வரை அஜந்தா, எல்லோரா முதல் தஞ்சைப் பெரியகோயில் வரை அவர்களின் ஆச்சர்யத்துக்கு சான்றாக உள்ளன. முற்காலத்தில் கோவிலுக்குச் செல்வது என்று புறப்பட்டால், அதை யாத்திரை என்றார்கள். இன்று யாத்திரையை இன்பச் சுற்றுலா ஆக்கிவிட்டார்கள்.

உயிர்ப்புடன் காணப்படும் கோவில்களாகவும், உடைந்த நிலையில் உள்ள வரலாற்றுச் சின்னங்களாகவும் திகழும் கோவில்களும் சூழ்ந்த பெருநிலப் பள்ளத்தாக்குதான் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஹம்பி. ஹம்பி என்பது ஓர் சின்னஞ்சிறிய ஊர். ஆனால், அங்கே மிஞ்சியிருக்கும் நூற்றுக்கணக்கான வரலாற்றுச் சின்னங்களின் பட்டியலைப் பார்த்தால் மயக்கமே வந்து விடும். அங்கே சிறியதும், பெரியதுமாய் அறுபது கோவில்களுக்கு மேல் இருக்கும். நூற்றுக்கணக்கான கடைகள் வரிசையாக இருப்பதைப்போல, ஹம்பியில் மிகப்பெரிய கோவில்கள் பார்க்கும் இடமெல்லாம் அமைந்திருக்கின்றன.

தென்னிந்தியாவை மூன்று நூற்றாண்டுகளாக ஆட்சி செய்து வந்த விஜயநகரப் பேரரசர்கள் கோவில்களையும், வானுயர்ந்த கோபுரங்களையும் அமைத்து வரலாற்றில் அசைக்க முடியாத கட்டடங்களை அமைத்தனர். பழைய கோவில்களையும் புதிதாக மாற்றி மண்டபங்களையும் கட்டினர். விஜயநகரப் பேரரசு அழிக்கப்பட்டு எதிரிகளால் சூறையாடப்பட்டது. அப்படிச் சூறையாடியதுபோக மிஞ்சியவை மட்டுமே இந்த ஹம்பி. அழகான கற்கோவில்களும், அதில் நுட்பமான கலை நேர்த்தியோடு செதுக்கப்பட்ட சிற்பங்களும், அதைச் சுற்றியுள்ள மலைகளும் காண்போரைப் பிரமிக்கவைப்பவை. பல படையெடுப்புகளைக் கண்டுள்ள ஹம்பி, அத்தனைக்குப் பிறகும் சிற்பங்கள் சிதிலமடைந்தபோதும், அதன் அழகும் கலைநுட்பமும் இன்றும் வியப்பை அளிப்பவை. ஹம்பியை கோபுரம் இல்லாத கோயில் என்றும் சிலர் கூறுவர்.

வரலாற்றின் நினைவுகளுக்குள் சென்று வரும் வகையில் ஹம்பியில் அமைந்துள்ள நினைவுச்சின்னங்களை 1986-ஆம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில், திட்டமிடப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட நகரம், சிறந்த கட்டடக்கலை, கண்கவர் இயற்கை அமைப்பு, தனித்துவம், நாகரிகம் என்ற பட்டியலின் அடிப்படையில் யுனெஸ்கோவின் 1, 3 மற்றும் 4-வது விதியின் கீழ் உலக பாரம்பரிய இடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட இடங்களின் பட்டியலில் ஹம்பி நினைவுச்சின்னங்கள் சேர்க்கப்பட்டன.



ஹம்பி வரலாறு: 41.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள இந்த நகரத்தின் ஹம்பி என்னும் பெயர் பம்பா என்னும் கன்னடப் பெயரிலிருந்து மருவி வந்தது. முற்காலத்தில் துங்கபத்ரா ஆற்றங்கரையில் அமைந்திருந்த இடம் பம்பக்‌ஷேத்ரம். மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகும் துங்கை, பத்திரை ஆகிய இரண்டு ஆறுகளும் சேர்ந்ததுதான் துங்கபத்திரை ஆறு. புராணத்தின்படி, சிவன் பூமியில் தியானத்தில் இருக்கும்போது, அவரை மணக்க எண்ணி பம்பா என்ற பெயரில் பூமிக்கு வரும் பார்வதி, சிவனின் தியானத்தைக் கலைக்கப் பல முயற்சிகள் மேற்கொள்கிறார். முயற்சிகள் தோல்வியடைந்ததால், இந்திரனிடம் முறையிட்டு காமதேவனை அழைத்துவருகிறார். சிவன் மீது காமதேவன் காதல் அம்பை வீச, சிவன் நெற்றிக்கண்ணைத் திறந்து காமதேவனை எரித்துவிடுகிறார். தளராத பார்வதி யோகினியாக கோலம் தரித்து சிவனை திருமணத்திற்குச் சம்மதிக்க வைக்கிறார். அவர்களது திருமணம் ஹம்பி பகுதியில் நடக்கிறது. அவளை மணந்ததால் சிவன் பம்பா பதி என்றழைக்கப்படுகிறார். இதன்பின், காமதேவனும் மீண்டும் உயிர்பெறுகிறான். இந்த இடத்திற்கு பார்வதியின் பெயரே சூட்டப்பட்டது. கன்னட மொழிக்கேற்ப ஹம்பா என்று மாறி ஹம்பி என்றானது.

அசோகர் கல்வெட்டுகளிலும், 6-8 நூற்றாண்டுகளில் ஆட்சி செய்த பாதாமி சாளுக்கியர் குறிப்பிலும் இந்நகரம் பம்பபுரா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 11-ஆம் நூற்றாண்டு முதல் 13-ஆம் நூற்றாண்டு வரையிலான பல கல்வெட்டுகள், ஹம்பா-தேவி கோவிலுக்கு வழங்கப்பட்ட பரிசுகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

12 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில், தென்னிந்தியாவின் ஹொய்சாளப் பேரரசின் இந்து மன்னர்கள் துர்கா, ஹம்பாதேவி மற்றும் சிவன் கோயில்களைக் கட்டியதாக கி.பி 1,199 தேதியிட்ட கல்வெட்டு கூறுகிறது. கி.பி.1323-ல் தெலங்கானாவில் இருந்த வாரங்கல் பகுதியை முகமது பின் துக்ளக்கின் படைகள் கைப்பற்றின. கி.பி 1327-ல் தென்கன்னடப் பேரரசான ஹொய்சாள அரசாங்கத்தின் செல்வங்களும் துக்ளக்கின் ராணுவத்தால் கொள்ளையடிக்கப்பட்டுச் சூறையாடப்பட்டன. அப்போது ஹம்பி கட்டடங்களும் பெருமளவில் சேதப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் கபிலி வம்சம் உருவானது. அதுவும் நீண்ட நாட்கள் ஆட்சியில் இல்லை. கி.பி.1336-ல் ஹரிஹரா மற்றும் புக்கா எனும் சங்கம மரபு சகோதரர்களால் துங்கபத்திரை நதிக்கரையோரம் ஒரு ராஜ்ஜியம் உருவாக்கப்பட்டது. மொத்தம் நான்கு அரச வம்சங்கள் அங்கே உருவாகின்றன. அவை, சங்கம வம்சம், சாளுவ சம்சம், துளு வம்சம், அரவீடு வம்சம். அதற்கு விஜயநகரம் என்று பெயரிட்டனர். இன்றைய ஹம்பிதான் அன்றைய விஜயநகரம்.

ஹரிஹரர், புக்கரின் சங்கம வம்ச ஆட்சியிலிருந்து விஜயநகரம் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டியெழுப்பப்பட்டது. சுமார் ஒரு லட்சம் வீடுகளில், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்தனர். துங்கபத்திரை ஆற்றிலிருந்து கால்வாய் வெட்டி நகரத்துக்கு நீர் வசதி செய்தனர். அவர்களின் ஆட்சியில், அரண்மனைகளும், ஆட்சியர்களுக்கு அலுவலகங்களும், படைகளுக்குக் கொட்டில்களும், குடியிருப்புகளும், கடைவீதிகளும், கோயில் வளாகங்களும் ஏராளமாக எழுப்பப்பட்டன. அவர்கள் உருவாக்கிய ஹம்பியே இன்று பாழடைந்த கற்கோயில்களாய், கைவிடப்பட்ட கடைத்தெருக்களாய், தரைமட்டமாக்கப்பட்ட அரண்மனைகளாய், சுடர்விளக்கற்ற கருவறைகளாய், உடைந்த கோபுரங்களாய், விஜயநகரம் என்ற பெயரை இழந்து ஹம்பியாய் விளங்குகிறது அந்த வரலாற்றின் மிச்ச மீதங்கள்.

ஹம்பி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளை ஆட்சி செய்வதற்காக உள்ளூர் தலைவர்கள், ஹைதராபாத் முஸ்லிம் நிஜாம்கள், மராட்டிய இந்து மன்னர்கள், ஹைதர் அலி மற்றும் அவரது மகன் திப்பு சுல்தான் ஆகியோரால் 18-ஆம் நூற்றாண்டு வரை போர்கள் தொடர்ந்துள்ளன. 1799-இல், ஆங்கிலேயர் படைகளும், வாடியார் வம்சமும் இணைந்து திப்பு சுல்தானை தோற்கடித்ததால், இப்பகுதி பிரிட்டிஷ் ஆட்சிக்கு வந்தது. இன்றளவும் இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனம் இப்பகுதிகளின் எச்சங்களை ஆய்வு செய்து வருகிறது.

ஹம்பியின் சிறப்பம்சங்கள்! கோட்டைகள், ஆற்றங்கரைப் பகுதிகள், அரச வளாகங்கள், கோவில்கள், ஆலயங்கள், தூண் மண்டபங்கள், மண்டபங்கள், நினைவுக் கட்டடங்கள், நுழைவாயில்கள், பாதுகாப்புச் சோதனைச் சாவடிகள், தொழுவங்கள், நீர் கட்டமைப்புகள் உள்ளிட்ட 1600-க்கும் மேற்பட்ட பகுதிகள் ஆய்வின் மூலம் கிடைத்துள்ளன. இங்கு, சிறப்பான அரண் அமைப்புகள், தனித்துவமான ஹைட்ராலிக் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தியதற்கான தடயங்கள் உள்ளன. இவை அனைத்தும் அந்த நிலப்பரப்பில் அந்த காலகட்டத்திலிருந்த பொருளாதார வளம், அரசியல் நிலை, மிகவும் வளர்ந்த சமுதாயத்தைச் சிறப்பாகக் குறிக்கின்றன.

கட்டட அமைப்பு: தென்னிந்தியக் கோவில்கள் வட இந்தியக் கோவில்களைவிடவும் தனித்தன்மையானவை, வேறுபட்டவை. ஒவ்வொரு பேரரசுக் காலத்திலும் கோவில் கட்டுமானக் கலை முன்பிருந்ததைவிட வளர்ச்சியடைந்து வந்தது. தென்னிந்தியாவின் பேரரசுகளால் வளர்த்தெடுக்கப்பட்ட அக்கலை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்கும் பரவியது. தமிழகத்தில் பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள். தமிழகத்துக்கு வடக்கேயுள்ள பகுதிகளில் சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்கள், ஹொய்சாளர்கள், காகதீயர்கள் எனப் பல அரசர்களின் கட்டுமான கலைகள் விஜயநகர அரசர்களின் கட்டுமானங்களில் தழுவிவந்தன. பல்லவர்களின் குடைவு வகைகளும், சோழர்களுடைய கோபுர அமைப்பு முறைகளும் விஜயநகர கட்டுமானங்களில் பிரதிபலித்தன. அவற்றின் பரிமாணங்கள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட தூண்களால் சூழப்பட்ட நுழைவாயில்களுக்கு மேல் உயர்ந்த கோபுரங்கள் போன்ற அமைப்புகள் சிறப்புகள் சேர்க்கின்றன.

ஹம்பியின் பெரும்பாலான கட்டடங்கள் கிரானைட் கல்லால் கட்டப்பட்டவை. கல்லை வெட்ட பிரத்யேகமான ஓர் உத்தியைக் கையாண்டுள்ளனர். வெட்ட வேண்டிய இடங்களில் சிறிய துளைகளிட்டு, அதில் மரசீவல்களைச் செருகி, நீர் ஊற்றி விடுவர். மரம் நீரில் ஊறி அதன் கனத்தால், அழுத்தத்தால் கல்லில் விரிசல் ஏற்பட்டு துண்டாகும். இப்படித்தான் கற்கள் உடைக்கப்பட்டு கோவில்கள் எழுப்பப்பட்டுள்ளது. இந்து மற்றும் சமணம் சார்ந்த கட்டடங்கள் இங்கு அமைந்துள்ளது. ராணியின் குளியல் குளம், யானைத்தொழுவம் என ஆங்காங்கே இஸ்லாமியக் கட்டிடக் கலையின் சாயல்களையும் காணலாம். இதன்மூலம் அந்த சமூகம் பல்வேறு மதங்களையும், கலாசாரங்களையும் போற்றிய பண்பைக் காணமுடிகிறது.

ஹம்பியிலுள்ள எல்லாக் கோவில்களைவிடவும் சற்றே பெரியது என்று கிருஷ்ணர் கோவிலைச் சொல்லலாம். கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்கு வந்தவுடன் நெல்லூர் மாவட்டத்தின் உதயகிரிக் கோட்டையின்மீதும் உத்கலம் எனப்படும் வடகிழக்குப் பகுதியின்மீதும் படையெடுத்தார். அப்படையெடுப்பு ஒடியா வரையிலும் வெற்றிகரமாய் முடிந்தது. அவ்வெற்றிகளின் நினைவாக எழுப்பப்பட்ட ஆலயம்தான் கிருஷ்ணர் கோவில். கி.பி 1513-ல் இக்கோவில் கட்டப்பட்டது.

அச்சுதராயர் கோவிலிருந்து நடனமாதர் தெரு வழியாக துங்கபத்திரை நதி அருகே நடந்தால் பல்வேறு கோவில்களைக் காணலாம். ஒவ்வொன்றும் கற்களால் ஆன மேடைகளையும், உள் மண்டபங்களையும், கருவறையையும் கொண்டிருக்கின்றன. அளவில் சிறிதும் பெரிதுமான அக்கோவில்களில் சிதைந்தது போக மீதமுள்ள அழகினை ரசிக்க முடியும். அச்சிறு கோவில்களைத் தாண்டிவந்ததும் ஆற்றுப் பள்ளத்தாக்கு அருகே, ஆற்றங்கரையை ஒட்டி ஓர் அழகிய கல்மண்டபமும் அமைந்துள்ளது. மேலும், இப்பகுதியில் மிகப்பெரிய கல் தராசு ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. இப்போது தராசுத் தட்டுகளும் அவற்றைத் தாங்கும் சங்கிலிகளும் இல்லாமல் சிதைந்துள்ளது.


நாம் இதுவரை பார்த்துவந்த கோவில்களெல்லாம் தரை மட்டத்திலிருந்து மேடையிட்டு மேலே எழுப்பிக் கட்டப்பட்டவை. ஆனால், கமலாபுரத்திலிருந்து ஹம்பியை நோக்கிச் செல்லும் வழியில் இருப்பது பாதாளச் சிவலிங்கக் கோவில். பாதாளக் கோவிலின் சிறப்பு என்னவென்றால், முழுக்க முழுக்க நிலத்தடியில் கட்டப்பட்டதுதான். அதாவது தரைமட்டத்துக்குக் கீழே அந்தக் கோவில் உள்ளது.

விருபாக்‌ஷா கோயில்: இங்குள்ள விருபாக்‌ஷா கோவில், சிவன் - பம்பை தேவி சேர்ந்து உள்ள சிலைகள், ராமாயணக் கதைகள் சொல்லும் சிற்பங்கள், ஆத்வைத்த நம்பிக்களைச் சொல்லும் சுவரோவியங்கள், சிற்பங்கள் போற்றவற்றை பிரதிபலிக்கின்றது. ஆதி சங்கரர் மடாலயமாக விருபாக்‌ஷா திகழ்கிறது. நூறுகால் மண்டபம், சமுதாயக் கூடம், அன்னதான சாலை ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப் பழமையான கட்டடமாக உள்ளது.

விட்டலர் கோவில்: மிக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட அமைப்பு மற்றும் விஜயநகர கோவில் கட்டடக்கலையின் சிறப்பை இக்கோவில் பிரதிபலிக்கிறது. இது மூன்று நுழைவு கோபுரங்களுடன் துளையிடப்பட்ட உறைக்குள் கல்யாண மண்டபம், உற்சவ மண்டபம் போன்ற கட்டடங்களுடன் முழுமையாக வளர்ச்சியடைந்து கட்டப்பட்டவை. ஒரு கிரானைட் ரதமாக வடிவமைக்கப்பட்டுள்ள இதைச் சுற்றி ஒரு பெரிய பஜார் போன்ற தெருவே அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் ஒரு பெரிய புஷ்கரணி (படி தொட்டி), வசந்தோத்ஸவ மண்டபம் (மையத்தில் சடங்கு பந்தல்), கிணறுகள் மற்றும் நீர் வழித்தடங்கள் உள்ளது. இன்னொரு முக்கியமான சிறப்பம்சம், 56 மெல்லிசை நெடுவரிசை இசைத் தூண்கள் இந்த கோவிலில் அமைந்துள்ளது. இந்த தூண்களைத் தட்டும்போது சரிகமப என்று மெல்லிசை ஒலிகளை உருவாக்குகின்றன. ஏராளமாக வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகளை ஈர்த்த இந்த விட்டலர் கோவில், ஹம்பி இடிபாடுகளில் அழிந்தும் அழகில் குன்றாத ஆலயமாகத் திகழ்கிறது.

விஜயநகர பேரரசில் தலைநகராக விளங்கிய ஹம்பிக்கு மரியாதை கொடுக்கும் வகையிலும், நாட்டின் கலாசார பாரம்பரியத்தை மதிக்கும் வகையிலும் இந்திய அரசு புதிய 50 ரூபாய் நோட்டின் பின்புறத்தில் ஹம்பி நகரத்து இடிபாடுகளில் இருந்து கண்டறியப்பட்ட விட்டலர் கோவில் கல்ரதத்தினை இடம்பெற செய்துள்ளது.

இந்தக் கோவிலைச் சுற்றிப் பார்க்க இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்கு 30 ரூபாயும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு 500 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஹசாரா ராமர் கோவில்: ராமர் மற்றும் கிருஷ்ணரின் காலத்தில் இருந்ததாகக் கூறப்படும் வரலாற்றுப் பொருள்கள் மற்றும் புதைபடிமங்கள் இந்தக் கோவிலில் இருப்பதால் மிகவும் புகழ் பெற்றது. கோவிலின் வெளிப்புறச் சுவர்கள் இந்து மகாநவமி (தசரா) மற்றும் வசந்த ஹோலி திருவிழா ஊர்வலம் மற்றும் கொண்டாட்டங்களைக் கலைப்படைப்புகளாகச் சித்தரிக்கின்றன. கோவிலின் உள்ளே ராமாயண நிகழ்வுகள், விஷ்ணுவின் அவதாரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஹேமகுட்டா மலைக்கோவில்கள்: ஒரு தட்டையான குன்றின் மேற்பரப்பில், 30 சிறிய கோவில்கள், குளம், நீரோடைகள் அமைந்துள்ளன. ஒரே மாதிரியான 3 அடுக்கு கோபுரங்களைக் கொண்ட இரு கோவில்கள் உள்ளன. சிவனின் யோகக் கலைப்பு, காமதேவன் வதம், சிவன் - பார்வதி திருமணம் இங்கேதான் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. 3 அடுக்கு சிவலிங்கம், 4.5 மீட்டர் உயர விநாயகர் சிலை உள்ளிட்டவையும் இங்குள்ளது. காலை மற்றும் மாலை நேரத்தில் செல்லும் சுற்றுலாப் பயணிகள், இந்நகரத்தின் அழகை மட்டுமல்லாமல், சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமத்தின் எழிலையும் கண்டு ரசிக்கலாம். மேலும், விநாயகரின் கடுக்காய் வடிவ வயிற்றின் பெயரால் சாசிவேகாலு விநாயகர், 2.4 மீட்டர் உயரமான ஒற்றைக்கல் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் சாசிவேகாலு விநாயகர், அவரது தாயார் பார்வதியின் மடியில் அமர்ந்துள்ளவாறு இருக்கும். ஆனால் பார்வதியின் சிலை பின்புறம் இருந்து பார்த்தால் மட்டுமே தெரியும்.

மகாநவமி திப்பா: நகரின் மையப்பகுதியில், 19 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது மகாநவமி திப்பா. சிலர் இதை வெற்றியின் வீடு என்றும் அழைக்கின்றனர். ஏறுவரிசையில் மூன்று சதுர நிலைகளையும், பெரிய சதுர மேடைகளையும் கொண்டுள்ள இப்பகுதியின் மேல் ஒரு மர மண்டபம் இருந்ததாகவும், ஹம்பியின் அழிவின்போது எரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கனிகிட்டி ஜெயின் கோவில்: ஹம்பியின் நகர்ப்புற மையப் பகுதியின் தென்கிழக்கில் கனிகிட்டி ஜெயின் கோவில் உள்ளது. அதன் முன் ஓர் ஒற்றைக்கல் விளக்குத் தூண் உள்ளது. இது கி.பி 1,385-ம் ஆண்டில் ஹரிஹரரின் ஆட்சியின்போது, தீர்த்தங்கரர் குந்துநாதருக்கு அர்ப்பணிக்க கட்டப்பட்டது. ஒரு தூண் மண்டபமும், ஒரு சதுர சன்னதியையும் கொண்டுள்ளது. அதில் இன்று சிலை ஏதுமில்லை. தூண்களில் மூலதனங்களும், கதவுகள் அலங்கரிக்கப்பட்டும் காணப்படுகின்றன. மேலும் கிருஷ்ணர் கோவில் வளாகம், நரசிம்மர், அச்சுதராய கோவில் வளாகம், பட்டாபிராம கோவில் வளாகம், தாமரை மஹால் வளாகம், ஆகியவை இங்கு சிறப்பு பெற்றவை.



சுற்றுலாப் பயணிகளின் கவனத்திற்கு...

சென்னையிலிருந்து சுமார் 700 கி.மீ தொலையில் அமைந்துள்ள ஹம்பிக்கு ரயில் மூலம் செல்ல நினைப்பவர்கள் ஹோசப்பேட்டை ரயில் (Hosapete Junction) நிலையத்தை அடைந்து அங்கிருந்து 13 கி.மீ பேருந்து அல்லது ஆட்டோவில் சென்று ரசிக்கலாம். விமானத்தில் செல்ல நினைப்பவர்கள் ஜிண்டால் விஜயநகர் விமான நிலையம் சென்றால் அங்கிருந்து 32 கி.மீ பயணம் செய்து ஹம்பியை அடையலாம்.

வாடகைக்கு இரண்டு சக்கர வாகனம் எடுத்துக் கொண்டு ஹம்பியை நாமே சுற்றுப் பார்க்கும் வசதியும் இங்கு உள்ளது. அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை இங்கு சுற்றுலா செல்வது சிறப்பான அனுபவமாக அமையும். இங்குள்ள ஹம்பி அருங்காட்சியகம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். இங்குள்ள கமலாபுர அருங்காட்சியகம் மட்டும் வெள்ளிக்கிழமைகளில் மூடியிருக்கும். சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், ஆண்டுதோறும் கர்நாடக சுற்றுலாத் துறை சார்பில், ‍‌'ஹம்பி விழா' நடத்தப்படுகிறது.

(உலா வருவோம்...)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com