இந்திய பாரம்பரிய இடங்கள் 11: கஜுராஹோ கலைக் கோயில்கள் - காதல், காமம், ஆன்மீகம்!

இந்திய பாரம்பரிய இடங்கள் 11: கஜுராஹோ கலைக் கோயில்கள் - காதல், காமம், ஆன்மீகம்!
கஜுராஹோ கலைக் கோயில்கள்
கஜுராஹோ கலைக் கோயில்கள்கஜுராஹோ கலைக் கோயில்கள்

"கஜுராஹோ கனவில் ஓர் சிற்பம் கண்ணில் மிதக்குதே..." என்ற பாடல் வரிகள்போல் கஜுராஹோ சிற்பங்களை நிஜத்தில் கண்டால், நாமே மெய்மறந்து அந்த அழகிலே மிதக்கத்தான் செய்வோம். கற்கள் தோறும் காவியங்கள் ஓடும் ஒரு கலையோடை என்றே கஜுராஹோவை வர்ணித்தாலும் மிகையாகாது. புகழ்பெற்ற இந்தியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கஜுராஹோவில் மத்திய கால இந்து மற்றும் சமணக் கோயில்கள் அதிக அளவில் உள்ளன. உலகத்தின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக தாஜ்மகால் மதிக்கப்படுவதைப் போல, இந்தியாவின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக கஜுராஹோ கோயில் போற்றப்படுகிறது.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் புந்தேல்கண்ட் பகுதியில் அமைந்துள்ள சட்டர்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம்தான் கஜுராஹோ. இந்தப் பகுதிக்கு அருகில் அழகிய பின்னணியாக விந்திய மலைத்தொடர் அமைந்துள்ளது. மலைத்தொடரிலிருந்து வரும் சிப் சாகர், கஜூர் சாகர் (நினோரா தால்) மற்றும் குதர் நதி ஆகிய நதிகள் இந்தப் பகுதிக்கு வளம் சேர்க்கின்றன.

நதிகளின் கரையோரங்களில் மணற்கற்களால் அமைந்துள்ள நகரமே கஜுராஹோ. சுமார் 20 சதுர கி.மீ பரப்பளவில், சிற்ப பூமியாகத் திகழும் கஜுராஹோவில் 85 கோயில்கள் இருந்ததாகவும், பின், வெள்ளத்தில் சிதைந்த காரணத்தால் தற்போது 25-க்கும் குறைவான கோயில்களே எஞ்சியிருப்பதாகவும் வரலாறுகள் கூறுகின்றன. காதலையும், காமத்தையும் கொண்டாடுபவர்கள் வாழ்ந்த பகுதிக்கு ஆதாரமாக, இங்குள்ள கலை சிற்பங்கள் உள்ளன. பலரும் காதலர்கள் தினத்தையே எதிர்த்துக்கொண்டிருக்கும்போது, இங்கு காமன் விழா, இந்திர விழா எனக் காதலுக்கும் காமத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடியிருக்கின்றனர்.

காதலுக்கும், காமத்துக்கும் ஆதாரமாகத் திகழும் இந்தக் கலைக் கோயில்களை 1986-ஆம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில், சிறந்த கட்டடக்கலை, சிற்பக் கலை, கலாசாரம், நாகரிகம், தனித்துவம் என்ற பட்டியலின் அடிப்படையில் யுனெஸ்கோவின் 1 மற்றும் 3-வது விதியின் கீழ் உலக பாரம்பரிய இடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட இடங்களின் பட்டியலில் கஜுராஹோ கோயில்கள் சேர்க்கப்பட்டன. 

 கஜுராஹோ வரலாறு:

 மத்திய இந்தியாவில் உள்ள கலிஞ்சர் பகுதியை கி.பி 950 முதல் 1050 வரையிலான காலகட்டத்தில் சந்தேலர் (சான்டெலா) வம்சத்தினர் ஆட்சி புரிந்து வந்தனர். சந்தேலர் எனும் சொல்லிற்கு சந்திர குலத்தவர்கள் என்று பொருள். இவர்களின் ஆட்சியில் முதல் தலைநகரமாக அமைந்தது கஜுராஹோ. ஆனால், சில ஆண்டுகளில் தங்கள் தலைநகரை 35 மைல் தொலையில் உள்ள மகோபாவிற்கு மாற்றினர். இவர்களின் ஆட்சிக் காலத்தில் கஜுராஹோவில் கோயில்களைக் கட்டும் பணியைத் தொடங்கினர். இங்கு இந்து, சமணம் என்று இரண்டு மதங்களைச் சார்ந்த சிற்பங்களும், கட்டிட அமைப்புகளும் அதிகம் காணப்படுகின்றன. கஜுராஹோ கோயில்கள் 950-ம் ஆண்டு முதல் 1150-ம் ஆண்டு வரையிலான 200 ஆண்டு கால கட்டத்தில் சந்தேல வம்சத்தைச் சேர்ந்த முடியரசர்களின் ஆட்சிக் காலங்களில் கட்டப்பட்டவை.

சந்தேல வம்சத்தை நன்னூகா என்பவர் நிறுவியிருந்தாலும், இந்த வம்சத்தில் வந்த யசோவர்மன் மற்றும் தங்கா ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் ஏராளமான இந்துக் கோயில்கள் கட்டப்பட்டன. அதில், 925 முதல் 950 வரையிலான யசோவர்மன் ஆட்சியில் கட்டப்பட்ட லட்சுமணர் கோயில், சதுர்புஜர் கோயிலும், 950 முதல் 1008 வரை தங்கா ஆட்சியில் கட்டப்பட்ட பார்சுவநாதர் கோயில் மற்றும் விஸ்வநாதர் கோயில் போன்றவை மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும். இவர்களையடுத்து 1017 முதல் 1029 வரை கஜுராஹோ பகுதியை ஆட்சி செய்த வித்தியாதரன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கந்தாரிய மகாதேவர் கோயில் தற்போது எஞ்சியிருக்கும் கோயில்களில் மிகவும் பெரியதாகவும், கம்பீரமான கோயில்களில் பிரபலமானதாகவும் உள்ளன.

வித்தியாதரனின் ஆட்சியில் 1019 மற்றும் 1022-ஆம் ஆண்டுகளில் கஜினி முகமது இந்தியாவின் மீது படையெடுத்து கஜுராஹோ அருகில் பாந்தா மாவட்டத்தில் உள்ள கருங்கற்களாலான கலிஞ்சர் கோட்டையைத் தாக்கி தோல்வியடைந்தான். 13-ஆம் நூற்றாண்டில் டெல்லி சுல்தானியர்களால் இப்பகுதி கைப்பற்றப்பட்டது. அதுவரை கஜுராஹோவில் இருந்த கோவில்கள் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வந்தன. 1526-ஆம் ஆண்டில் முகலாய மன்னர் பாபர் கலிஞ்சர் கோட்டையைக் கைப்பற்றினார். இதனால், இக்கோயில்கள் கடுமையாக சேதமாக்கப்பட்டன. 1812-ல் பிரித்தானிய இந்தியப் பேரரசால் கலிஞ்சர் கோட்டை கைப்பற்றப்பட்டது. பலருக்கும் கோட்டையின் மீதே காதல் இருந்ததால் அருகிலிருந்த கஜுராஹோ பகுதிகளும், அங்கிருந்த கலைப் பொக்கிஷங்களும், பார்ப்பார் இன்றி சிதிலடையத் தொடங்கியது. கோயில் பராமரிக்கப்படாததால், கட்டடங்களில் மரங்களும் புதர்களும் மண்டி, ஒரு அடர்ந்த வனப்பகுதியாக மாறிவிட்டன.

1838-ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் ராணுவப் பொறியாளர், டி.எஸ். பர்ட் இந்த கோயில்களைக் கண்டுபிடித்தார். அந்த நேரத்தில் 85 கோயில்களில் 22 மட்டுமே எஞ்சியிருந்தன. 1850 மற்றும் 1860-ம் ஆண்டுகளில் அங்குள்ள கோயில்களைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று மேற்கு, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதி கோயில்கள் என மூன்று தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. மேற்குப் பகுதியில் முழுக்க முழுக்க இந்து தெய்வங்களுக்கான கோயில்கள் உள்ளன. கஜுராஹோ கிழக்குப் பகுதி கோயில்களில் இந்துக் கோயில்களும் ஜைனக்கோயில்களும் அடங்கியுள்ளன. சிவன் சார்ந்த 6 ஆலயங்களும், 8 விஷ்ணு ஆலயங்களும், விநாயகர் கோயில் ஒன்றும், ஒரு சூரிய கோயிலும், 3 சமணர் கோயில்களும் இருக்கின்றன. ஒட்டுமொத்த கோயில்களும் 970-ம் ஆண்டிலிருந்து 1050-க்குள் கட்டப்பட்டவையாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அங்கே யோகிகள் பலர் தங்கியிருந்து யோகா, தியானம் உள்ளிட்டவற்றை பக்தர்களுக்குக் கற்றுக்கொடுத்து வந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.

ஆய்வின்படி, கேதார்நாத், கயா, காசி வரிசையில் சிவபெருமானுக்கு உகந்த இடமாக கஜுராஹோ பார்க்கப்பட்டுள்ளது. சிவபெருமானுக்குத் திருமணம் நடந்த இடமே இதுதான் எனவும் பலரால் கூறப்படுகிறது. பாலியல் ரீதியான சிற்பங்களுக்கு இக்கோயில் பெயர் பெற்றிருந்தாலும், அங்கே 10 சதவிகித சிற்பங்கள் மட்டுமே காமம் சார்ந்த சிற்பங்களாக உள்ளன. பாலியல் சார்ந்த பாடல்களும் அங்கே பொறிக்கப்பட்டுள்ளன. ஐந்து கோயில்களில் மட்டுமே பாலியல் சம்பந்தமான சிற்பங்களைக் காண முடியும். இந்த காமச் சிற்பங்கள், அக்காலத்தில் பாலியல் தொழில்களில் ஈடுபட்டிருந்த பெண்களைப் பற்றிக் கூறுவதாக தொல்லியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பெண்கள்  நீராடுதல், ஒப்பனை செய்துகொள்ளல், ஆடைகள் மாற்றுவது போன்ற வகையில் ஏராளமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மற்ற சிற்பங்கள் தெய்வங்களையும் பலதரப்பட்ட மக்களின் அன்றாட வாழ்வியல் முறைகளையும் குறிப்பிடுபவையாக உள்ளன. அரிதாரம் பூசும் பெண்கள், இசையமைப்பாளர்கள், குயவர்கள், விவசாயிகள், மற்றும் நாட்டுப்புற நிகழ்வுகளை எடுத்துக் காட்டும் வகையில் சிற்பங்கள் அமைந்திருக்கின்றன. பெரும்பாலும் சுற்றுப்புறச் சுவர்களிலும் ஆங்காங்கு உள்ள அடிப்பகுதி கற்களிலும்தான் புடைப்புச் சிற்பங்களாக பாலியல் சிற்பங்கள் உள்ளன.

கஜுராஹோ பெயர்க்காரணம்:

சந்தேல வம்சத்தினரால் கோயில்கள் கட்டும் பணி தொடங்கப்படுவதற்கு முன், அப்பகுதிகளைச் சுற்றி சுவர் எழுப்பினர். ஒட்டுமொத்தப் பகுதியும் எட்டு வாயில்களைக் கொண்ட மதிற்சுவரால் சூழப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாயிலின் இருபுறமும் அதிகளவில் பேரீச்சை மரங்கள் வளர்க்கப்பட்டது. கஜுராஹோ என்ற பெயர், 'கர்ஜுராவாஹகா' என்ற பெயரிலிருந்து மருவியதாகும். இது சமஸ்கிருத சொல்லான 'கர்ஜூர்' என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது. கர்ஜுரா என்றால் பேரீச்சம்பழம் என்று பொருள்.

கஜுராஹோ கோயிலின் கட்டடக் கலை:

இந்தியர்களின் மிகச் சிறந்த கட்டடக் கலைக்கும், சிற்பக் கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் கஜுராஹோ கோவில்கள் அனைத்தும் கிட்டத்தட்ட இந்து கோயில் வடிவமைப்புகளைக் கொண்டது. பஞ்சயாதன முறைப்படி கட்டப்பட்ட இக்கோயிலின் நான்கு மூலையிலும் நான்கு துணைக் கோயில்களையும் அவற்றின் அடித்தளமாக இருக்கும் மேடையின் நடுவில் முக்கிய கோயிலையும் கொண்டிருக்கிறது. இந்த அமைப்பே `பஞ்சயாதனம்' எனப்படும். இந்த கோயில்கள் அனைத்தும் மணற்பாறைகளால் ஆனவை. கோயில்களில் சில சமணக் கோயிலாகவும், இதர கோயில்கள் இந்து கடவுள்கள் - மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவனுடன், துர்கை போன்ற பல்வேறு பெண் தெய்வங்களுடன் காணப்படுகிறது. மிகவும் புகழ்பெற்ற கோயிலான கந்தாரிய மகாதேவர் கோயில் 84 விமானங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

மேற்குப் பகுதி கோயில்கள்!

மேற்குப் பகுதிகளில் உள்ள கோவில்களைக் காண தாஜ்மஹாலில் வாங்கிய டிக்கெட் இருந்தால் அதையே இங்குப் பயன்படுத்தலாம். இல்லையெனில் இந்தியர்கள் 40 ரூபாயும், வெளிநாட்டினர் 600 ரூபாயும் செலுத்தி நுழைவுக் கட்டணம் பெறலாம். இங்குள்ள கோயில்கள் அனைத்தும், காலை முதல் மாலை வரை திறந்திருக்கும். இங்குள்ள சில முக்கியமான கோயில்கள்.

1. லட்சுமணர் கோயில் 

மேற்குப்பகுதிகளில் உள்ள கோவில்களில் மிகவும் பழமையானது. இந்த கோயிலைக் கட்டிய ஆட்சியாளரின் பெயரால் பெயரிடப்பட்டது. அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த வைஷ்ணவக் கோயிலின் நுழைவாயிலில் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளுடன், லட்சுமி, விஷ்ணுவின் துணைவிகள் ஆகியோரின் சிற்பங்களும் காட்சியளிக்கின்றன.

2. கந்தாரிய மகாதேவர் கோயில்

 தற்போது எஞ்சியிருக்கும் கோயில்களில் மிகவும் பெரியதாகவும், கம்பீரமான அமைப்புகளுடன் காணப்படும் கோயில்களில் மிகவும் பிரபலமானதாகவும் உள்ள இந்தக் கோயில், இந்தியக் கலைகளில் 870-க்கும் மேற்பட்ட தலைசிறந்த சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதில் 10 சதவிகிதத்துக்கும் அதிகமான சிற்பங்கள் பல்வேறு பாலியல் தோற்றங்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும்.

 இங்கிருக்கும் மாதங்கேஸ்வரர் ஆலயத்தின் உள்ளே 8 அடி உயர பிரமாண்ட லிங்கத் திருமேனியராக அருள்பாலிக்கிறார் ஈசன். இது தவிர, பெண் தெய்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தேவி ஜக்தம்பா கோயில், சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட விஸ்வநாத் கோயில் மற்றும் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட வராஹா கோயிலும் சிறந்த சிற்பங்களுடன் காணப்படுகின்றன. சூரிய கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சித்ரகுப்தர் கோயில் வித்தியாசமான கட்டுமானத்துடன் திகழ்கிறது. எண்கோணக் குவிமாடம் கொண்ட மகாமண்டபத்தைக் கொண்டது இந்தக் கோயில். இங்குள்ள பிரம்மா - சரஸ்வதி சிற்பம் மிகவும் புகழ்பெற்றது.

 கிழக்குப் பகுதி கோயில்கள்!

1. பார்ஷ்வநாத் கோயில்

 கிழக்குப் பகுதி கோயில்களில் பெரிதான பார்ஷ்வநாத் கோயில், 1860-இல் நிறுவப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் கூரைகளில், இந்து, புத்த, முஸ்லிம் மதத்தினரின் அடையாளங்களைச் சித்தரித்து வடிவமைக்கப்பட்டுள்ளன.

 2. கண்டாய் கோயில்

கண்டாய் எனும் சொல் கோயில் மணியைக் குறிக்கிறது. ஜெயின் கோயிலான கண்டாய் கோயிலில் மகாவீரரின் தாயார் கண்ட 16 கனவுக்காட்சிகள் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கின்றன. கருடனின் மீது சவாரி செய்யும் பல கைகள் கொண்ட ஜெயின் கடவுள் உருவத்தையும் இங்குப் பார்க்கலாம். ஜெயின் பக்தர்கள் மகாவீரரைக் கடைசி தீர்த்தங்கரராக வணங்கி வருகின்றனர். எனவே ஜெயின் ஆன்மீக யாத்திரிகர்கள் மத்தியில் இந்தக் கோயில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக விளங்குகிறது. இதைத் தவிர்த்து, விஷ்ணுவின் குள்ள வடிவமான வாமன கோயில், அனுமன் கோவில், பிரம்மா கோயில், ஜவரி கோயிலும் இங்குக் காணப்படுகின்றன.

 தெற்குப் பகுதி கோயில்கள்!

 1. துல்ஹாதேவ் கோயில் 

கஜுராஹோவில் அமைந்துள்ள கடைசி கோயிலான துல்ஹாதேவ் கோயில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அப்சரா மற்றும் அலங்கார உருவங்கள் கோயிலின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.

2. சதுர்புஜர் கோயில் 

கட்டடக் கலைக்கு நன்கு அறியப்பட்ட கோயிலான இந்த சதுர்புஜர் கோயிலில் மட்டுமே பாலியல் தொடர்பான சிற்பங்கள் இல்லை. இங்கு, நான்கு கரங்களும் மூன்று முகங்களும் கொண்டு பிரமாண்டமான விஷ்ணுவின் சிலை உள்ளது. இதைத் தவிர, மிகவும் பாழடைந்த கோயிலான பீஜமண்டல் கோயிலும் இங்குக் காணப்படுகிறது.

 சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு:

சென்னையிலிருந்து 1,651.6 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கஜுராஹோ கோயிலுக்கு ரயிலில் செல்ல நினைப்பவர்கள், நேரடியாக கஜுராஹோ ரயில் நிலையம் சென்று அங்கிருந்து கோயிலுக்குச் செல்லலாம். மேலும், விமானத்தில் செல்பவர்களுக்கு ஏற்றவாறு கஜுராஹோ விமான நிலையமும் அங்கு உள்ளது. கோயிலிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் விமான நிலையம் அமைந்துள்ளது.

இங்குள்ள கோயில் வளாகத்தில் ஒவ்வொரு நாள் மாலையும், கோயில்களின் வரலாறு, சித்தாந்தம் மற்றும் சிற்பம் வடிக்கும் கலைகளைக் குறித்த இரண்டு ஒலி, ஒளி காட்சியானது நிகழ்த்தப்படுகிறது. முதலில் ஆங்கிலத்திலும், இரண்டாவதாக இந்தியிலும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்தியர்கள் 120 ரூபாயும், வெளிநாட்டினர் 400 ரூபாயும் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

பிப்ரவரி மாதத்தில் சுற்றுலாவுக்குச் சென்றால், நாடு முடிவதிலிருந்து வரும் கலைஞர்களால் நடத்தப்படும் கஜுராஹோ பாரம்பரிய நடன விழாவையும் கண்டு ரசிக்கலாம். செப்டம்பர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் இங்குச் செல்வது சிறந்த சுற்றுலாப் பயணமாக அமையும். மேலும், கடந்த ஆறு ஆண்டுகளாக மத்தியப் பிரதேச அரசால் நடத்தப்படும் சர்வதேச திரைப்பட விழாவான கஜுராஹோ சர்வதேச திரைப்பட விழா (KIFF), இந்த ஆண்டு டிசம்பர் 5 முதல் 11ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இந்தியாவில் உலகப் பாரம்பரியச் சின்னத்தில் நடத்தப்படும் ஒரே திரைப்பட விழா இதுதான்.

இந்தியத் தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலியான AudioCompass என்ற செல்போன் செயலி மூலமாகச் சுற்றுலா தளங்களின் தகவல்களை ஆடியோ வடிவிலும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

கஜுராஹோ கோயில்கள் மட்டுமின்றி அப்பகுதியைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள் சுற்றுலாப் பயணிகளுக்குச் சிறந்த பொழுதுபோக்கு இடங்களாக அமைகிறது. இப்பகுதிகளைச் சுற்றிப் பார்ப்பதற்காக இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிள் ரிக்‌ஷா வாடகைக்கு விடப்படுகிறது. ஒரு நாள் வாடகை கட்டணமாக 20 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதுமானது. 

கஜுராஹோ கோயில்களை சுற்றிப்பார்க்க > VIRTUAL TOUR

கந்தாரிய மகாதேவர் கோயிலை சுற்றிப்பார்க்க > VIRTUAL TOUR

ஜெயின் கோயில்களை சுற்றிப்பார்க்க > VIRTUAL TOUR

(உலா வருவோம்...) 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com