இந்திய பாரம்பரிய இடங்கள் 8: காசிரங்கா தேசிய பூங்கா - இயற்கை எழிலும் அரிய விலங்குகளும்!

இந்திய பாரம்பரிய இடங்கள் 8: காசிரங்கா தேசிய பூங்கா - இயற்கை எழிலும் அரிய விலங்குகளும்!
காசிரங்கா தேசிய பூங்கா
காசிரங்கா தேசிய பூங்காகாசிரங்கா தேசிய பூங்கா

வட இந்திய, மத்திய இந்தியப் பாரம்பரிய இடங்களைப் பார்த்து வந்த வாசகர்களாகிய உங்களை இன்று ஒரு பசும் போர்வைப் போர்த்திய கிழக்கு இமாலய மலைப்பகுதிக்கு அழைத்து செல்கிறேன். இயற்கை எழிலும், கொஞ்சும் பசுமையும் கொட்டிக்கிடக்கும் வடகிழக்கு இந்திய மாநிலங்களில் பெரிய மாநிலமாக அறியப்படுவது அசாம். இயற்கைக்கு மட்டுமில்லாமல், தேயிலை உற்பத்திக்கும் பட்டு உற்பத்திக்கும் பிரபலமானது. உலகில் வேறெங்கும் காணக் கிடைக்காத பல அரிய விலங்கினங்களையும், தாவர வகைகளையும் கொண்டுள்ளன அசாம் காடுகள். இங்குள்ள காடுகளில், ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம், புலி, ஆசிய யானை என அரியவகை விலங்குகளும் வாழ்ந்து வருகின்றன. உலகில் அதிக மழைபெய்யும் இடங்களில் அசாம் மாநிலமும் ஒன்று. அசாமிற்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக, ஆசியாவின் பெரிய ஆறுகளில் ஒன்றான பிரம்ம புத்திரா ஆறு இங்குள்ளது.

வடகிழக்கு இந்தியாவில் இருக்கும் ஏழு சகோதரிகளில் ஆறு பேரைத் தன்னை சுற்றி வைத்துக்கொண்டு பறந்து கிடக்கும் அசாம், கோலாகாட், நகாமோ மாவட்டங்களில் பரவியுள்ள கிழக்கு கீழ் இமாலய மலைத்தொடர் பகுதியை உள்ளடக்கி அமைந்துள்ள ஒரு மலைத்தொடர்தான் காசிரங்கா தேசியப் பூங்கா. இந்த மலைத்தொடர், காட்டுப்பகுதி எப்படி தேசிய பூங்காவானது? எப்படி பாரம்பரிய இடமானது? - வாங்க... இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் உலாவச் செல்லலாம்.

இந்த மலைத்தொடர் பகுதிக்கு 'காசிரங்கா' என்று பெயர் வந்தது தொடர்பாக ஏராளமான கதைகள் சொல்லப்படுகிறது. வேற்று பிரிவு சமூகத்தின் காஜி, ராவ்ன என்ற காதலர்கள் இக்காட்டில் தொலைந்ததனால் அவர்கள் நினைவாக இந்தப் பெயர் வந்து என்று ஒரு கதை சொல்கிறது. காசி, ரங்கா என்ற இணையர் தங்களுக்கு பிள்ளைகள் இல்லாததால் இவ்விடத்தில் ஒரு குளம் கட்டி புண்ணியம் தேடினர்; அதன் நினைவாக இப்பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

வரலாற்று ஆசிரியர்களைப் பொறுத்தவரை, அதன் பெயர் கர்பி வார்த்தையான கஜிர்-அ-ரங் என்பதிலிருந்து வந்ததாக நம்புகிறார்கள். அதாவது 'கஜிர் கிராமம்'. கஜிர் என்பது பெண் குழந்தைகளுக்கான பொதுவான பெயர். அதே பெயரில் ஒரு பெண் இந்தப் பகுதியை ஆட்சி செய்ததாக பரவலாக நம்பப்படுகிறது. அசாம் கர்பி, அங்கலாங் பகுதியில் வாழும் பழங்குடிகளில் ஒன்று கர்பி இனம். அவர்கள் மொழியில் காசி என்றால் 'ஆடு'. ரங்காய் என்றால் 'சிவப்பு' காசிரங்கா என்றால் சிவப்பு ஆடு என்று அழைக்கப்படும் சதுப்புநில 'செம்மான்கள் பூமி' என்று பொருள். அதன்படியே இங்கு சதுப்புநில மான்கள் அதிகம் காணப்படுகிறது.

காசிரங்கா தேசிய பூங்கா கடந்து வந்த வரலாறு:

1900-ன் ஆரம்பங்களில் இந்தியாவை ஆட்சி செய்து வந்த ஆங்கிலேயர்களின் ஆளுநராக இருந்தவர் கர்சன் பிரபு. அவரின் மனைவி மேரி விக்டோரியா 1904-ல் அசாம் பகுதியைச் சுற்றிப்பார்க்கச் சென்றிருந்தார். அப்போது உலகில் வாழும் 3 வகை காண்டாமிருக்கம் அதிகம் வசிக்கும் காசிரங்கா பகுதிக்கும் சென்றிருக்கிறார். பயணம் முடியும் வரை ஒரு காண்டாமிருகத்தைக் கூட அவரால் பார்க்க முடியவில்லை. இதனால் வருத்தமடைந்த அவர், அவரது கணவரிடம் அந்த இடத்தையும், அந்த இடத்தில் வாழும் உயிரினங்களையும் பாதுகாக்க வழி செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார். எனவே, 232 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பகுதி 1905-ம் ஆண்டில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது.

மூன்று வருடங்களில் அதன் பரப்பு 152 சதுர கிலோமீட்டர் விரிவாக்கம் செய்யப்பட்டு 1908-ல் அதிகாரபூர்வமாகக் காப்புக்காடாக (Reserve forest) அறிவிக்கப்பட்டது. பின்னர் 1916-ல் காசிரங்கா சரணாலயமாக (Sanctuary) மாற்றியமைக்கப்பட்டது. 1938-ம் ஆண்டு அசாம் அரசு வெளியிட்ட சட்டத்தின்படி, விலங்குகளை வேட்டையாடத் தடை விதிக்கப்பட்டது. காசிரங்கா சரணாலயத்தைச் சுற்றிப்பார்க்கப் பார்வையாளர்களுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டது. 1950-ல் பி.டி.ஸ்ட்ராசி என்ற வனப்பாதுகாவலரின் முயற்சியால் காசிரங்கா வனவிலங்கு சரணாலயமாக (Wildlife sanctuary) உயர்வுபெற்றது. 1954-ல் அசாம் அரசு, அசாம் காண்டமிருக மசோதாவை முன்மொழிந்தது. 14 ஆண்டுகள் கழித்து 1968-ல் அசாம் காசிரங்கா தேசிய பூங்கா சட்டம் இயற்றியது. அதன்படி 430 சதுர கி.மீ பரப்பு கொண்ட காசிரங்கா காட்டுப்பகுதியை தேசியப் பூங்காவாக அறிவித்தது. அதன் பின்னர் 1974-ம் ஆண்டில் மத்திய அரசு பரிசீலனை செய்ததால் தேசியப் பூங்காவாக மாற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து, சிறந்த இயற்கை எழிலும், உயிரினங்களின் வாழ்விடமாகவும் உள்ள பூங்காவை, 1985-ம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில், யுனெஸ்கோவின் 9 மற்றும் 10-வது விதியின் கீழ் உலக பாரம்பரிய இடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட இடங்களின் பட்டியலில் காசிரங்கா தேசிய பூங்கா சேர்க்கப்பட்டது. 2006-ம் ஆண்டு, இந்தப் பூங்கா புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. அதோடு, இந்தப் பூங்கா ஒரு முக்கியமான பறவை பாதுகாப்பு பகுதியாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

காசிரங்கா தேசிய பூங்கா, ஆசியாவின் பெரிய ஆறுகளில் ஒன்றான பிரம்ம புத்திரா ஆற்றின் இருபுறமும் அமைந்துள்ளது. திபெத்திலுள்ள கயிலை மலையில் ஸாங்-போ என்ற பெயரில் புறப்பட்டு, அருணாசலப் பிரதேசத்தில் சியாங் என்கிற பெயரில் நுழைந்து, பின் சமவெளிப்பகுதியில் 'திகாங்' என்று அழைக்கப்படுகிறது. சமவெளிப் பகுதியில் 35 கி.மீ தொலைவு கடந்தபின், திபங் மற்றும் லோகித் என்ற ஆறுகளோடு கூடி, மிகவும் அகன்ற ஆறாக பிரம்மபுத்திரா என்ற பெயரில் அசாம் மாநிலத்தில் பயணிக்கிறது.

காண்டாமிருக சரணாலயம்:

காசிரங்கா தேசியப் பூங்காவில் 2,200-க்கும் மேற்பட்ட அரிய வகை ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் உள்ளன. இது, உலகில் மூன்றில் இரண்டு பங்காகும். 'ஐ.சி.யு.என்' நிறுவனத்தால் வரையறை 2-ல் வைத்துப் பாதுகாக்கப்படும் விலங்காக ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் உள்ளது. அசாம் அரசின் வனத்துறை மற்றும் சில அங்கீகரிக்கப்பட்ட வனவிலங்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து 2018-ல் நடத்திய கணக்கெடுப்பின்படி, காசிரங்கா தேசிய பூங்காவில் 2,413 காண்டாமிருகங்கள் உள்ளன.

புலிகள் காப்பகம்:

21-ம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் உலகில் அதிக புலிகள் வாழும் இடமாக காசிரங்கா கண்டறியப்பட்டது. இதனால் 2006-ல் காசிரங்கா புலிகள் காப்பகமாகவும் அறிவிக்கப்பட்டது (இப்போது அசாமில் உள்ள ஒராங் தேசிய பூங்காவில் அதிக புலிகள் உள்ளன). இந்த பூங்காவில் 86-க்கும் மேற்பட்ட ராயல் பெங்கால் புலிகள், 1,600-க்கும் மேற்பட்ட ஆசிய யானைகள், அழிந்துபோகும் அபாயகர நிலையில் சிகப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆசிய எருமை (Wild water buffalo) 1,431-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இங்குக் காணப்படுகின்றன. அதாவது, உலகிலேயே கிட்டத்தட்ட 4,000 ஆசிய எருமைகள்தான் எஞ்சியுள்ளன. இதில் இந்தியாவில் 3,000-க்கும் அதிகமான காட்டெருமைகள் உள்ளன. இதில் இந்தப் பூங்காவில் மட்டும் 1,600-க்கும் அதிகமான காட்டெருமைகள் உள்ளன. மேலும், 468-க்கும் மேற்பட்ட சதுப்புநில மான்கள் உள்ளன. தேன் கரடி, சிறுத்தை, இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லா குரங்கான ஹுலக் கிப்பான் அல்லது வெள்ளைப் புருவ குரங்கு என 35-க்கும் அதிகமான பாலூட்டிகள் உள்ளன. இவற்றில் 15-க்கும் அதிகமான பாலூட்டிகள் 'ஐ.சி.யு.என்' அமைப்பின் சிவப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள உயிரினங்கள்.

பறவைகள் சரணாலயம்:

ஆஸ்திரேலியா மற்றும் இந்தோ-ஆசிய பறக்கும் பாதை சந்திப்பில் பூங்கா அமைந்துள்ளதால் பூங்காவின் ஈரநிலங்கள் பறவைகள் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. பல அரியவகை பறவை இனங்களும், தாவர வகைகள் அதிகம் காணப்படும் இடமாக உள்ளது. பிரம்ம புத்திரா நதியின் நீர்வளத்தாலும், மழை பொழியும் சதுப்புநிலத்தைக் கொண்டதாலும் இந்த இடத்தைத் தேடி அதிக பறவைகள் வந்து செல்கின்றன. இங்குப் பறவைகள் அதிகம் காணப்படுவதால், பறவைகளின் பாதுகாப்பிற்காக BirdLife International அமைப்பு இந்த பகுதியைப் பறவைகளுக்கான பாதுகாப்பு பகுதியாக அங்கீகரித்துள்ளது.

காசிரங்கா தேசியப் பூங்கா ஒரு காலத்தில் ஏழு வகை கழுகுகளின் இருப்பிடமாக இருந்தது. தற்போது, அவற்றில் நான்கு வகை மட்டுமே உள்ளன. இங்குள்ள 99% கழுகுகள் உயிரிழப்பதற்குக் காரணம், சிறுநீரக செயலிழப்பாகும். மேலும், ஏராளமான நீர்ப்பறவைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக பல்வேறு வகையான வாத்துகள், நாரை இனங்கள் குளிர்காலத்தில் மத்திய ஆசியாவிலிருந்து இந்த பூங்காவிற்கு இடம்பெயர்கின்றன. நதிக்கரையில் வாழும் பறவைகளான கொக்குகள், மீன்கொத்திகள் எனப் பல இன பறவைகள் வாழ்ந்து வருகின்றன.

காசிரங்காவின் 'பிக் ஃபைவ்':

ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம், ராயல் பெங்கால் புலி, ஆசிய யானை, காட்டு நீர் எருமை மற்றும் சதுப்பு மான் ஆகிய 5 வகையான உயிரினங்கள் இங்கு வாழ்ந்து வருவதால், இந்த பகுதி காசிரங்காவின் 'பிக் ஃபைவ்' (Big Five) என்று அழைக்கப்படுகிறது.

பல்லுயிர்களின் ஹாட்ஸ்பாட்:

இந்தியாவில் உள்ள மற்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளுடன் ஒப்பிடும்போது, காசிரங்கா தேசிய பூங்காவானது, வனவிலங்கு பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. இங்குள்ள பூங்காவில் உள்ள பிற முக்கிய ஆறுகள் டிப்லு (Diphlu) மற்றும் மோரா தன்சிரி (Mora Dhansiri) ஆகியவை. பூங்காவில் உள்ள மற்ற குறிப்பிடத்தக்க ஆறுகள் டிப்லு மற்றும் மோரா தன்சிரி. நிலப்பரப்பில் வெளிப்படும் மணல் திட்டுகள், பீல்ஸ் (beels) எனப்படும் ஆற்றங்கரை வெள்ளத்தால் உருவாகும் ஏரிகள் மற்றும் உயரமான பகுதிகள் சாபோரிகள் (Chapories) என அழைக்கப்படுகின்றன. விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்திய ராணுவத்தின் உதவியுடன் பல செயற்கை சாபோரிகள் கட்டப்பட்டுள்ளன. இவை, புயல், மழையின்போது, விலங்குகளுக்குப் பாதுகாப்பான இடமாகவும், தங்கும் இடமாகவும் அமைகிறது. இயற்கை எழிலும், அரியவகை உயிரினங்களும் அதிகளவில் இருப்பதால் இந்த இடம் "பல்லுயிர்களின் ஹாட்ஸ்பாட்" (Biodiversity hotspot) என்று அழைக்கப்படுகிறது.

காசிரங்கா தேசியப் பூங்காவைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், உலகின் மிகப்பெரிய பாம்புகளான ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பு (Reticulated Python), பாறை மலைப்பாம்பு (Rock Python) மற்றும் உலகின் மிக நீளமான விஷப் பாம்பான 'கிங் கோப்ரா' (King Cobra) ஆகியவை இங்கு வாழ்ந்து வருகின்றன.

சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு...

சென்னையிலிருந்து சுமார் 2,805 கி.மீ தொலையில் காசிரங்கா தேசிய பூங்கா அமைந்துள்ளது. விமானம் மூலம் செல்ல விரும்புபவர்கள் சென்னையிலிருந்து அசாமில் உள்ள ஜோர்ஹாட் விமான நிலையத்தை அடைந்து, அங்கிருந்து பேருந்து மூலம் காசிரங்காவை அடையலாம். ரயிலில் செல்ல விரும்புபவர்கள், அசாமில் உள்ள பக்கிராம் ஜங்ஷன் (Fakiragram Junction) ரயில் நிலையம் அடைந்து, அங்கிருந்து பேருந்தில் செல்லலாம். பக்கிராம் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து 75 கி.மீ தொலையில் காசிரங்கா தேசிய பூங்கா அமைந்துள்ளது.

ஜூன் முதல் செப்டம்பர் வரை இப்பகுதியில் கனமழை பெய்வதால், பிரம்ம புத்திரா ஆற்றில் ஏற்படும் வெள்ளப் பெருக்கு எச்சரிக்கை காரணமாக மே முதல் அக்டோபர் வரை காசிரங்கா பூங்காவில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை. எனவே, நவம்பர் முதல் ஏப்ரல் வரை காசிரங்கா தேசிய பூங்காவிற்குச் செல்வது சிறந்தது. ஏப்ரல் மாதங்களில் வறண்ட காலநிலை காரணமாக, நீர்நிலைகளைச் சுற்றி விலங்குகள் அதிகம் காணப்படும். அப்போது சுற்றுலா செல்வது மனதுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நவம்பர் முதல் பிப்ரவரி வரை மிதமான மற்றும் வறண்ட காலநிலை என்பதால் காண்டாமிருகங்களைக் கண்டறிவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

வனவிலங்குகளைப் பார்ப்பதற்காக பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அசாமில் வனவிலங்கு சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, காசிரங்கா பூங்கா அதிகாரிகள் ஜீப் மற்றும் யானை சஃபாரி வசதியை ஏற்பாடு செய்துள்ளனர். காலை 8 மணி முதல் 10 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரையும் ஜீப் சஃபாரி உள்ளது. அதேபோல் காலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை யானை சஃபாரி வசதியும் செய்து தரப்படுகிறது.

சுற்றுலாவிற்குச் செல்ல விரும்புபவர்கள் https://www.kaziranganationalpark-india.com/ என்ற இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

கட்டணம்: ஜீப் சஃபாரிக்கு இந்தியர்களுக்கு ₹3,700 முதல் ₹4,800 வரை வசூலிக்கப்படுகிறது. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு ₹7,500 முதல் ₹8,500 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. யானை சஃபாரிக்கு இந்தியர்களுக்கு ₹1,450 என்றும், வெளிநாட்டினர்களுக்கு ₹3,200 என்றும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கான டிக்கெட்டுகளை இணையதளங்களிலும் பெறலாம். 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சஃபாரி செய்ய கட்டணம் இல்லை.



பயணம் செய்ய யாருக்குத்தான் பிடிக்காது? குடும்பத்தினரோடு சுற்றுலா, நண்பர்களோடு ஜாலி ட்ரிப், தனிமை விரும்பிகளின் சோலோ ட்ராவல் என அவரவர்க்கு விருப்பமான ஒரு டூர் பிளான் செய்யும்போது, மறக்காமல் காசிரங்கா தேசியப் பூங்காவையும் லிஸ்ட்ல சேர்த்துக்கோங்க. கொரோனா ஊரடங்கால் மக்கள் சாதாரணமாக வீட்டை விட்டு வெளிவருவதே இயலாமல் போனது. லாக்டவுன் முடிந்து அன்லாக் செயல்முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்படுகிறது. தமிழகம் முழுக்க சுற்றுலா தளங்கள் மீண்டும் பொதுமக்களின் மகிழ்விற்காகத் திறக்கப்படுகின்றன. இதனால் பணிச்சூழல், நோய் பயம் என இறுக்கமான மனநிலையுடன் இருக்கும் பலருக்கும் இந்தப் பயணங்கள் புத்துணர்வு அளிக்கும். சற்று ஜாக்கிரதையாக நாம் பயணிக்க வேண்டும் அவ்வளவே.

(உலா வருவோம்...)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com