இந்திய பாரம்பரிய இடங்கள் 7: மாமல்லபுர சிற்பங்கள் - வியக்கவைக்கும் தமிழர்களின் பெருமை!

இந்திய பாரம்பரிய இடங்கள் 7: மாமல்லபுர சிற்பங்கள் - வியக்கவைக்கும் தமிழர்களின் பெருமை!
மாமல்லபுர சிற்பங்கள்
மாமல்லபுர சிற்பங்கள்மாமல்லபுர சிற்பங்கள்

பல்லவ மன்னர்கள்... கண்களுக்கு தெரிந்த கற்களையெல்லாம் கவின்மிகு கலைகளாக மாற்றி, தமிழர்களின் பெருமைகளையும், கலாசாரத்தையும், புகழையும் உலகுக்கு உணர்த்தியவர்கள். அப்படி, கலைக் கருவூலங்களாக விளங்கும் மாமல்லபுர கோயில்கள் நம்முடைய பண்பாட்டுச் சின்னங்களாக உள்ளன. பல்லவர்கள் காலம் கட்டடக்கலைக்கு உலகப் புகழ் தேடித்தந்த காலமாகும். சிற்பக் கலையும், ஓவியக் கலையும் தமிழகத்தில் ஓங்கி வளரச் செய்தது பல்லவ சாம்ராஜ்ஜியம் என்றால் அது மிகையாகாது. காணக்கிடைக்காத சிற்பங்களை வடித்தவர்கள் பல்லவர்கள். மாமல்லபுரம் குடைவரை சிற்பங்களே இதற்குச் சாட்சி.

காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்தவர்கள். பல்லவர்கள் அளித்த பட்டயங்களை ஆய்வு செய்தே பல்லவ மன்னர்கள் யார், எவர் என இனங்கண்டுள்ளனர் ஆய்வாளர்கள். பிராகிருதப் பட்டயங்களை வெளியிட்டவர்கள் முற்காலப் பல்லவர்கள். சமஸ்கிருதப் பட்டயங்களை வெளியிட்டவர்கள் இடைக்காலப் பல்லவர்கள். கிரந்தத் தமிழில் பட்டயங்களை வெளியிட்டவர்கள் பிற்காலப் பல்லவர்கள் என்கின்றனர் வரலாற்று அறிஞர்கள். தொடக்கத்தில் சமண மதத்தினைப் பின்பற்றிய மகேந்திர வர்ம பல்லவன் சைவ மதத்திற்கு மாறினார் என்கிறது பெரியபுராணம். இதன் காரணமாக சமணப் பள்ளிகள் இடிக்கப்பட்டு சைவத் திருக்கோயில்களைக் கட்டினான் மகேந்திர வர்மன். இவன் காலத்தில்தான் பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் நாணயங்களில் தமிழ் கிரந்தக எழுத்துப் பொறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

இவையனைத்தும் சாத்தியமா என்று வியக்கவைக்கும் அளவுக்கு பல சாதனைகளைப் புரிந்துள்ளனர் பல்லவ மன்னர்கள். இவர்களின் சிற்பத்திறமைகள் அனைத்தும், பல நூற்றாண்டுகள் கடந்தும், கம்பீரமாய் காட்சியளிக்கிறது. குடைவரைக் கோயில்கள், மண்டபங்கள், ரதங்கள், கட்டுமானக் கோயில்கள், கடற்கரைக் கோயில்கள், சிற்பங்கள், ஒற்றைக்கல் கோயில்கள் மற்றும் புடைப்புச் சிற்பங்கள் என தமிழர்களின் கலைப் பெருமைகள் அனைத்தும் காணப்படும் ஒரே இடம் மாமல்லபுரம். புராணக் கதைகள், காவிய போர்கள், பேய்கள், கடவுள்கள், விலங்கினங்கள் போன்ற அனைத்து உருவங்களும் தெளிவாக சுவர்களில் வரையப்பட்டுள்ளது. கல்லில் கலைவண்ணம் கண்டவர்களின் வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ளலாம், வாருங்கள்.

கி.பி. 575 முதல் கி.பி. 900 காலத்தில் பெரும்பாலான நாயன்மாரும், ஆழ்வாரும் வாழ்ந்தனர். சமணரோடு போரிட்டு சைவ, வைணவ சமயங்களைப் பரப்பினர். பேரரசர்களையும் சமயம் மாறும்படி செய்தனர். தமிழ் மக்களும் சமயப்பற்றுடையோர் ஆகினர். மக்களின் மனப்போக்கை உணர்ந்த அரசர், மக்களின் மகிழ்ச்சிக்காக கோயில்களைக் கட்டினார். இவற்றை ஆழ்வார்களும், நாயன்மார்களும் பாடிய நாலாயிர திவ்யப் பிரபந்த பாடல்களும், தேவாரப் பாடல்களும் நன்கு விளக்குகின்றன. பல்லவர்கள் தெற்கே காவிரியாறு வரையும், வடக்கே கிருஷ்ணையாறு வரை தங்களின் பேரரசை விரிவுபடுத்தினர். இந்த காலத்தில் வரலாற்றுப் புகழ்பெற்ற சாளுக்கியர் - பல்லவர் போர்களும், இராட்டிர கூடர் - பல்லவர் போர்களும், இன்ன பிற போர்களும் நடந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழிக்கு இவர்கள் கொடுத்த முக்கியத்துவமே தமிழ்நாடெங்கும் செப்புப் பட்டயங்களாகவும், கல்வெட்டுகளாகவும் பரந்து கிடக்கின்றன.

கி.பி.600 முதல் கி.பி. 900 வரை இந்தியாவின் தென்பகுதிகளை ஆண்டுவந்த பல்லவ வம்சத்தினர் ஏராளமான, கம்பீரமான கட்டிடங்களை உருவாக்கினர். ஏறத்தாழ 700 ஆண்டுகள் தென்னிந்தியாவை ஆட்சி செய்த பல்லவர்களுக்கு, முக்கிய துறைமுகமாக மகாபலிபுரம் விளங்கியது. பல்லவ மன்னன் நரசிம்ம வர்மன் சிறிய வயதாக இருக்கும்போது, தன் தந்தை மகேந்திர வர்மனுடன் மகாபலிபுர கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு பாறையின் நிழலானது யானையைப் போலவும், குன்றின் நிழலானது கோயில் போலவும் காட்சியளித்ததைக் கண்டு வியப்புற்று தந்தையிடம் கூற, மகனின் ஆசையின்படியே அங்குள்ள அனைத்து பாறைகளையும் நந்தி, சிங்கம், யானை என சிற்பமாக மாற்ற உத்தரவிட்டார். மகேந்திர வர்மன் ஆட்சியின்போது மகாபலிபுரம் கலை மற்றும் கலாசாரத்தின் மையமாக வளர்ச்சியடைந்தது. மகாபலிபுர கடற்கரையையே ஒரு சிற்பக்கலைக் கூடமாக மாற்றியதற்கு முக்கிய காரணமானார். போரிலும் சிறந்து விளங்கிய நரசிம்ம வர்மனுக்கு மாமல்லன் என்ற சிறப்புப் பெயரும் இருந்தது. சிற்பக்கலை கூடத்தை உருவாக்கிய பின், அந்த இடத்திற்கு மாமல்லபுரம் என்று பெயரும் சூட்டப்பட்டது. மாமல்லபுரம், மகாபலிபுரம் அல்லது ஏழு பகோடாக்கள் என்றும் அழைக்கப்படுகிறது.

 முதலாம் மகேந்திர வர்மனின் ஆட்சிக்கால கல்வெட்டுகளைப் பொறுத்தவரை மிகவும் பழமையானவை. இவை, தென்ஆர்க்காடு, திருச்சி. செங்கல்பட்டு குகைக்கோயில்களிலும், மாமல்லபுர மலைக்கோயில்களிலும், காஞ்சி கைலாசநாதர் கோயில்களிலும் பாதுகாக்கப்படுகின்றன. சாளுக்கியருடன் நடந்த போரில், மகேந்திர வர்மன் இறந்ததால், பழி வாங்கும் பொருட்டு நரசிம்ம வர்மன் கி.பி.642-ம் ஆண்டு வாதாபி நகர் மீது படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்குப் பிறகு நரசிம்ம வர்மன் வாதாபி கொண்டான் என்ற பெயரால் அழைக்கப்பட்டார்.

 நரசிம்ம வர்மன் தன் தந்தையைப் போலவே கோயில்கள் அமைப்பதில் பேரார்வம் கொண்டவர். முதலில் தந்தையைப் பின்பற்றி குகைக்கோயில்களை அமைத்தார். தன் பெயரை நிலைநாட்ட ஒரு கல்லையே கோயிலாக அமைத்து வெற்றி கண்டார். சிங்கங்கள் இருக்கும் வகையில் சிங்கத்தூண்களை அமைத்து தனித்துவம் கண்டார்.

மகாபலிபுரத்தில் தன் தந்தை தொடங்கிவிட்ட சிற்ப ஓவியக் கலைகளைத் தொடரச் செய்து, ஓவியக்கலைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். உயிரோட்டத்துடன் கூடிய நினைவுச் சின்னங்கள், புனிதத் தன்மை மிக்க அழகிய சிற்பங்களையும் அமைத்தார். மாமல்லபுரத்தில் அமைந்துள்ள பெரும்பாலான கோயில்கள் பல்லவ மன்னர்களில் முதலாம் நரசிம்ம வர்ம பல்லவர் மற்றும் இரண்டாம் நரசிம்ம வர்ம பல்லவர் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் முழுமை பெற்றது.

 மாமல்லபுரத்தில் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த நினைவுச்சின்னங்கள்!

 மாமல்லபுரத்தில் ஒன்பது குகைக் கோயில்கள் அமைந்துள்ளன. இவை இந்து மத புராணத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்த கல்வெட்டுக்களுக்கு சிறப்புப் பெற்றது. சாளுவன் குப்பம் புலிக்குகையானது தமிழகக் குடைவரைக் கோயில்களில் வேறுபட்ட அமைப்பைக் கொண்டது. `புலிக்குகை’ என்று அழைக்கப்பட்டாலும், 16 யாளித் தலைகளுடன் காணப்படும் இந்த யாளிக் குடைவரை கொற்றவைக்காக அமைக்கப்பட்டது.

ராஜசிம்ம பல்லவன் மூலம் எழுப்பப்பட்டது அதிரணசண்ட பல்லவேஸ்வர கிருஹம். இந்த மண்டபத்தில் காணப்படும் கல்வெட்டில், `சிவன் உமையோடும் குகனோடும் எப்பொழுதும் இங்கு தங்கியிருக்கட்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சங்க காலத்தில் முருகனுக்காகக் கட்டப்பட்ட பழைமையான கோயில் சாளுவன் குப்ப முருகன் கோயில். பல வருடங்களுக்கு முன்னர் மண்ணுக்குள் புதைந்து போயிருந்த இது, 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது வெளிப்பட்டது. சங்ககால செங்கல் அடித்தளம் மட்டுமே இப்போது எஞ்சியிருக்கிறது. 90 அடி பாறையில் அமைந்திருக்கும் உன்னதமான கலைப்படைப்பு `அர்ச்சுனன் தபஸ்’ என்ற இந்தப் பாறைச் சிற்பம். கோடைக்கால உச்சிப்பொழுதில் பாசுபத அஸ்திரத்துக்காக அர்ச்சுனன் சிவபெருமானை நோக்கித் தவம் இருந்த காட்சி காண்பவர்களை வியப்பில் ஆழ்த்தும். அர்ச்சுனன் தபஸ் பாறைச் சிற்பத்துக்கு அருகில் காணப்படுகிறது கிருஷ்ணன் மண்டபம். `இந்திரன் ஏவிய மழை, புயலிலிருந்து கோகுல ஆயர்களையும், ஆடு, மாடுகளையும் கண்ணன் கோவர்த்தன மலையைக் குடையாகத் தூக்கிக் காத்தான்’ என்கிறது புராணம். பல்லவர்கள், இதையே சிற்பமாக வடித்துள்ளார்கள். ஆதி வராகப் பெருமாள் குகைக் கோயில், மகாபலிபுரத்தில் உள்ள பல்லவக் கட்டிடங்களில் மிகவும் பழமையானது.

 ஐந்து பொருள்கள் எங்கு இணைந்து காணப்பட்டாலும் அதைப் பஞ்ச பாண்டவர்களுடன் சேர்த்துக் கூறுவது நம்முடைய மரபாகிவிட்டது. எனவே, இங்குள்ள ஐந்து கோயில்களும் `பஞ்ச பாண்டவ ரதங்கள்’ என அழைக்கப்படுகின்றன. சகாதேவன் ரதம், பீமன் ரதம், அர்ச்சுனன் ரதம், திரெளபதி ரதம், தருமர் ரதம் என 5 ரதங்களில் செதுக்கப்பட்ட பல்வேறு கற்சிற்ப அமைப்புகளும் காணப்படுகின்றன.

ஏழாம் நூற்றாண்டு கால கற்கோயில் ஓலகனேஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் எரிந்த விளக்குதான் பல்லவர்கள் காலத்தில் துறைமுகக் கலங்கரை விளக்கமாக இருந்தது. ஓலகனேஸ்வரர் கோயிலுக்குக் கீழே காணப்படும் குடைவரைக் கோயில் மகிஷாசுரமர்த்தினி குகை. இந்தக் குகையில் மகிஷாசுரனை அழித்த கொற்றவையின் சிற்பம், சோமாஸ்கந்தர் சிற்பம், அனந்தசயனப் பெருமாள் சிற்பம் உள்ளிட்ட தலைசிறந்த சிற்பங்களைக் கண்டு ரசிக்கலாம்.

சிங்கத்தின் மீது அமர்ந்த கொற்றவை, வில் அம்புடன் தனது பத்துக் கரங்களுடன் மகிஷாசுரனுடன் நேருக்கு நேர் ஆக்ரோஷமாகப் போர் புரியும் காட்சி சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கும். வலது காலை தாமரை மலர்ப் பீடத்தின் மீது ஊன்றி, இடது காலை சிம்மத்தின் மேல் வைத்த நிலையில் காணப்படும் கொற்றவை, மகிஷனுடன் போர் புரிகிறாள். மகிஷன் புறமுதுகிட்டு ஓடுகிறான். ஆதிசேஷன்மீது பள்ளிகொண்டிருக்கிறார் பெருமாள். மது, கைடபன் ஆகிய அசுரர்கள் அவரைத் தாக்க வரும் காட்சியையும் சிற்பமாக வடித்திருக்கிறார்கள். சிவனுக்கு உரியதாகக் குடையப்பட்ட குடைவரை ராமாநுஜ மண்டபம். சிவன், பிரம்மா, திருமால் என்று மூன்று கருவறையுடன் குடையப்பட்டது. சிவன் கோயிலான இந்தக் குடைவரை அழிக்கப்பட்டு பின்னாளில் பெருமாள் குடைவரையாக மாற்றப்பட்டுள்ளது.

 விஜயநகரப் பேரரசர்களின் காலத்தில் தொடங்கப்பட்ட கோயில் ராயர் மண்டபம். இது, முற்றுப்பெறாமல் பாதியில் நிற்கிறது. விஜயநகரப் பேரரசு காலத்தில் தொடங்கப்பட்டதால் இது ‘ராயர் மண்டபம்’ எனவும் அழைக்கப்படுகிறது. முற்றுப்பெற்ற அழகான குடைவரைக் கோயில் வராக மண்டபம். இந்தக் குடைவரையின் சுவர்களில் வராக மூர்த்தி, தாமரை மீது அமர்ந்துள்ள திருமகள், கொற்றவை மற்றும் உலகளந்த பெருமாளின் சிற்பங்கள் காணப்படுகின்றன. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சேதமடையாத கோயில் கணேச ரதம். மாமல்லபுரத்தில் உள்ள கற்கோயில்களில் வழிபாட்டில் இருக்கும் ஒரே சிற்பக் கோயில் இதுதான். சிவனுக்காக எழுப்பப்பட்ட கோயில், பிற்காலத்தில் விநாயகர் கோயிலாக மாற்றப்பட்டது.

 ஐந்து கருவறைகள் கொண்ட குடைவரைக் கோயில் கோனேரி மண்டபம். மாமல்லபுரத்தில் கோனேரி குளத்தின் கரையில் காணப்படுவதால், `கோனேரி மண்டபம்’ என அழைக்கப்படுகிறது. கோனேரி குப்பத்திலிருந்து சற்றுத் தள்ளி மேற்கே காணப்படும் முற்றுப் பெறாத இரண்டு கற்கோயில்கள் `பிடாரி ரதம்’ என அழைக்கப்படுகின்றன. கணேச ரதத்தைப்போலவே ஒரே கல்லில் செதுக்க நினைத்த பல்லவர்களின் முயற்சியை வெளிப்படுத்தும் காட்சி. இரண்டாம் நரசிம்ம வர்மன் ராஜசிம்மன் ஆட்சியின் போது கிபி 700 மற்றும் 728-க்கு இடையில் கட்டப்பட்ட புகழ்பெற்ற கோயில் கடற்கரைக் கோயில். ஒரு காலத்தில் மூன்று விமானங்களுடன் இருந்த இந்தக் கோயில் இப்போது இரண்டு விமானங்களுடன் மட்டுமே காணப்படுகிறது.

 தமிழர்களின் பெருமைகளையும், கலாசாரத்தையும் உலகுக்கு உணர்த்திய மாமல்லபுரத்தின் பொக்கிஷங்களை 1984-ஆம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில் கலாசாரம், நாகரிகம், பாரம்பரியம், தனித்துவமான கலை சாதனை என்ற பட்டியலின் அடிப்படையில் யுனெஸ்கோவின் 1,2,3 மற்றும் 4-வது விதியின் கீழ் உலக பாரம்பரிய இடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட இடங்களின் பட்டியலில் மாமல்லபுர நினைவுச் சின்னங்கள் சேர்க்கப்பட்டது.

 சுற்றுலாப் பயணிகளின் கவனத்திற்கு... 

சென்னையிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவிலும், பாண்டிச்சேரியிலிருந்து 120 கி.மீ. தொலைவிலும், திருச்சியிலிருந்து 285 கி.மீ தொலைவிலும் மாமல்லபுரம் அமைந்துள்ளது. சென்னையின் பல இடங்களிலிருந்து மாமல்லபுரத்திற்கு பேருந்துகள் உள்ளன. சென்னை, திருச்சியில் சர்வதேச விமானநிலையங்கள் உள்ளன. ரயிலில் செல்பவர்கள் சென்னையிலிருந்து செங்கல்பட்டு சென்று, அங்கிருந்து பேருந்து, ஆட்டோவில் செல்லலாம்.

சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதத்தில் நாட்டிய விழாவும், ஜனவரி மாதத்தில் பொங்கல் விழாவும் மாமல்லபுரத்தில் நடத்தப்படுகிறது. மாமல்லபுர கோயில்களையும், சிற்பங்களையும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கண்டு ரசிக்கலாம். 

கட்டணம்: மாமல்லபுரத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் பல்வேறு வகையான கட்டணங்கள் உள்ளன. பஞ்ச ரதங்களை சுற்றிப் பார்க்க இந்தியப் பயணிகளுக்கு 10 ரூபாயும், பிற நாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு 250 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. கடற்கரை கோயிலைச் சுற்றிப் பார்க்க விரும்பும் இந்தியப் பயணிகளுக்கு 10 ரூபாய் கட்டணமும், பிற நாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு 340 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது. இங்குள்ள கோயிலை வீடியோ எடுக்க, கூடுதலாக 25 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். குகைக்கோயில்களைச் சுற்றிப்பார்க்க எந்தவித கட்டணமும் இல்லை.

சுற்றுலாவிற்குச் செல்ல விரும்புபவர்கள் https://asi.payumoney.com/tickets என்ற இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

தமிழர்களின் பெருமைகளையும், கலாசாரத்தையும் பறைசாற்றி வியக்கவைக்கும் மகாபலிபுரத்திற்கு ஒரு முறையாவது விசிட் அடிப்பது சிறந்தது. ஏற்கெனவே விசிட் செய்தவர்கள், மாமல்லபுரத்தின் மேற்கண்ட பின்புலத்தைத் தெரிந்துகொண்ட பிறகு மீண்டும் ஒருமுறை விசிட் அடித்து சிலிர்ப்பின்பம் பெறுக.

 (உலா வருவோம்...)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com