இந்தியா படுதோல்வி : ட்விட்டரில் எதிரொலிக்கும் Ban IPL முழக்கம்! அது தான் காரணமா? ஓர் அலசல்

இந்தியா படுதோல்வி : ட்விட்டரில் எதிரொலிக்கும் Ban IPL முழக்கம்! அது தான் காரணமா? ஓர் அலசல்
இந்தியா படுதோல்வி : ட்விட்டரில் எதிரொலிக்கும் Ban IPL முழக்கம்! அது தான் காரணமா? ஓர் அலசல்

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து என அடுத்தடுத்த போட்டிகளில் இரண்டு படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்வியினால் இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதே கிட்டத்தட்ட முற்றுப் பெற்று விட்டதாக பார்க்கப்படுகிறது. இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேற எதிர்வரும் மூன்று போட்டிகளில் வெற்றி பெறுவதோடு ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முடிவை பொறுத்து தான் அமையும்.

இந்நிலையில் ‘Ban IPL’ என்ற முழக்கம் ட்விட்டர் தளத்தில் எதிரொலித்து வருகிறது. பெரும்பாலானவர்கள் இந்தியாவின் இந்த படுதோல்விக்கு ஐபிஎல் கிரிக்கெட் தான் காரணம் என பழித்து வருகின்றனர். 

இந்தியாவின் தோல்வியை ஜீரணிக்க முடியாத ரசிகர்கள் இந்த முழக்கத்தை முன்னெடுத்துள்ளனர். அவர்கள் அதை செய்ய ஒரு காரணமும் உள்ளது. நடப்பு டி20 உலகக் கோப்பையில் இந்தியா கோப்பை வெல்லும் அணிகளில் முதன்மையான அணியாக பார்க்கப்பட்டது. பயிற்சி போட்டிகளிலும் இந்தியாவின் ஆட்டம் அப்படி தான் இருந்தது. ஆனால் சூப்பர் 12 சுற்றில் நடந்துள்ளதோ வேறு. இந்தியா இதுவரை விளையாடி உள்ள இரண்டு சூப்பர் 12 ஆட்டத்திலும் டாஸ் தொடங்கி முடிவு வரையில் சாதகமானதாக அமையவில்லை. 

#BanIPL ரசிகர்களின் ரியாக்ஷன்ஸ் இங்கே!

“காசுக்காக விளையாடாதீர்கள், நாட்டுக்காக விளையாடுங்கள்”, “விளம்பரப் படங்களில் பயில்வான் போலவும், அதுவே விளையாடும் போது களத்தில் நோஞ்சானை போலவும் செயல்படுகிறீர்கள்”, “ஐபிஎல் கிரிக்கெட்டை தடை செய்யுங்கள். அது இந்திய கிரிக்கெட்டை பாழாக்கி விட்டது”, “இந்த தோல்விக்கு வீரர்கள் மட்டுமல்ல பயிற்சியாளர், வழிகாட்டி, தேர்வுக் குழுவினர் என அனைவரும் காரணம்”, “நோட்டீஸ் பீரியடில் வேலை செய்யும் ஊழியர்களை போல தான் உள்ளது கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் அணுகுமுறை. ஏனெனில் அவர்கள் இருவருக்கும் அந்த பொறுப்பில் கடைசி தொடர்” என ரசிகர்கள் தங்கள் கருத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர். 

பெட்ரோல் விலையையும், இந்தியாவின் ரன்களையும் ஒப்பிடும் மீம், அமீரகத்தில் இருந்து இந்தியா திரும்பும் கிரிக்கெட் வீரர்களை வரவேற்க விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் நிற்கும் ரசிகர்கள் மாதிரியான மீம்களை கூட பார்க்க முடிகிறது. இப்படி நிறைய வேற லெவல் விமர்சனங்களை இந்தியா மீது #BanIPL மூலம் வைக்கப்பட்டு வருகிறது.   

ஐபிஎல் சிக்கலா?

இந்தியன் பிரிமியர் லீக் என சொல்லப்படும் ஐபிஎல் தொடர் இந்திய கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட்டில் கோளோச்சும் வீரர்களை கொடுத்துள்ளது. ஜடேஜா, பும்ரா, ஹர்திக் பாண்டியா என பல வீரர்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம். இப்படி இந்திய அணிக்கு ஹீரோவாக இருந்த ஐபிஎல் இப்போது எப்படி வில்லனாக மாறியது?

இதற்கு இரண்டு காரணங்களை சொல்லலாம். ஒன்று ஓய்வில்லாமல் வீரர்கள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பது. கடந்த 2020 ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடியது. நவம்பர் முதல் ஜனவரி 2021 வரை இந்தியா, ஆஸ்திரேலியாவில் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தது. அது முடிந்த கையோடு இங்கிலாந்து அணியுடன் இந்தியாவில் கிரிக்கெட் தொடர். அது முடிந்த கையோடு ஐபிஎல் 2021 முதல் பாதி ஆட்டங்கள். பின்னர் ஜூன் மாதம் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி. இடையில் ஜூலை மாதம் இந்திய ‘B’ டீம் இலங்கை சுற்றுப்பயணம். ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையில் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர். பின்னர் ஐபிஎல் 2021 (இரண்டாவது பாதி ஆட்டங்கள்). தற்போது டி20 உலகக் கோப்பை தொடர் என இந்திய வீரர்கள் கடந்த ஒரு வருடமாக பயோ-பபூளில் விளையாட்டுக்காக இருந்து வருகின்றனர். 

மறுபக்கம் இந்திய கிரிக்கெட்டின் பிரதான அணி டி20 கிரிக்கெட்டில் ஒரு அணியாக கடந்த மார்ச் மாதம் தான் விளையாடி இருந்தது. இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட அந்த தொடரில் இந்தியா 3 - 2 என தொடரை கைப்பற்றியது. அதன் பிறகு இந்தியா கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் அணியாக இணைந்து விளையாடியது. அதுவும் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக. இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிக்கு இடையிலான இடைப்பட்ட 218 நாட்கள் (7 மாதங்கள் மற்றும் 4 நாட்கள்) தான் இந்தியா தற்போது இந்த தோல்விகளை சந்திக்க முக்கியக் காரணம்.  இதில் பயிற்சி ஆட்டங்கள் சேராது. ஏனெனில் அதில் அணியில் இடம் பெற்றுள்ள 15 வீரர்களில் 11 பேர் சுழற்சி முறையில் பேட் செய்யலாம் மற்றும் பந்து வீசலாம். அதனால் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இடையில் நடந்த இலங்கை தொடரில் இந்திய 'B' டீம் பங்கேற்றது கணக்கில் சேராது. 

எப்படி பார்த்தாலும் ஒரே ஆண்டில் இரண்டு பாதிகளாக ஐபிஎல் விளையாடியது வீரர்களுக்கு சில பின்னடவை கொடுத்திருக்கலாம். 

இந்தியா ஒரு அணியாக இணைந்து டி20 கிரிக்கெட் விளையாடாமல் இருந்தது இந்த சிக்கலுக்கு காரணமா?

இதற்கு பதில் ‘ஆமாம்’ என்பது மட்டுமே இருக்க முடியும். அமீரகத்தில் டாஸ் ஃபேக்டர் இருப்பது உண்மைதான். அதனால் ஆட்டத்தின் முடிவுகள் பாதிக்கப்படுவதும் பார்க்க முடிகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா டாஸ் வென்றிருந்தால் ஆட்டத்தை கூட வென்றிருக்கலாம். இருந்தாலும் அணியில் இடம் பிடித்துள்ள 15 வீரர்களில் யாருக்கு எந்த ரோல் என்பதில் இந்தியா தெளிவுடன் இருப்பதாக தெரியவில்லை. ‘ரோகித் - ராகுல்’ இணையர் 2019 50-ஓவர் உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக தொடக்க வீரர்களாக களம் கண்டவர்கள். நியூசிலாந்து அணிக்கு எதிராக கடந்த 2020 தொடக்கத்தில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மூன்று முறை இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கியுள்ளனர். அந்த தொடரில் மூன்றாவது போட்டியில் 89 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். இப்படி அவர்களது ஸ்டேட்ஸ் இருக்க நடப்பு டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் அணுகுமுறை வேறாக இருந்தது. ராகுலுடன், இஷான் கிஷன் இறங்கியிருந்தார். இதில் ராகுலை பின் வரிசையிலும், ரோகித்தை முன்னதாகவும் அனுப்பி இருக்கலாம். அது நிச்சயம் இந்தியாவுக்கு பலன் கொடுத்திருக்கும். மறுபக்கம் பாண்டியாவின் உடற்தகுதி குறித்த கேள்விகளும் எழுப்பப்படுகிறது. அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீசி இருந்தாலும் ஃபிட்டாக இருக்கிறாரா என்பதில் சந்தேகம் உள்ளது. இப்படி அணிக்குள் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. இது தான் இந்தியாவை தோல்வி பாதைக்கு அழைத்து சென்றுள்ளது. அதே நேரத்தில் இந்தியா ஆட்டத்தை துணிச்சலாக அணுகாததும் மற்றொரு காரணம். இதனை கேப்டன் கோலியும் சொல்லி இருந்தார். 

இப்போது என்ன செய்யலாம்?

இனி வரும் நாட்களில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தனித்தனியாக ஐபிஎல் கிரிக்கெட்டில் வெவ்வேறு அணிக்காக விளையாடுவதை காட்டிலும் அதிகளவில் இந்திய அணிக்காக ஒரு அணியாக இணைந்து விளையாட வேண்டும். அப்படி செய்தால் அதற்கு கைமேல் பலன் கிடைக்கும். இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி Dark Horse பணியை டி20 உலகக் கோப்பையில் செய்து வர காரணம் கொரோனா தொற்று பரவலுக்கு பின்னதாக மட்டும் அந்த அணி சுமார் 25-க்கும் மேற்பட்ட சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ள அனுபவம் தான். பாகிஸ்தானிலும் நம் நாட்டில் நடைபெறும் ஐபிஎல் போல் PSL எனப்படும் பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் நடைபெற்று வருகிறது. அதுவே இந்தியா கொரோனாவுக்கு பின்னதாக விளையாடியுள்ள சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகள் வெறும் 13 தான். அதில் மூன்று போட்டிகளை இந்திய அணியின் ‘B’ டீம் விளையாடியிருந்தது. 

இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் மூத்த துணை ஆசிரியர் (விளையாட்டு) வெங்கட கிருஷ்ணா கூறும்போது  “ஐபிஎல் கிரிக்கெட் தான் இந்தியாவின் இந்த மோசமான செயல்பாட்டுக்கு காரணம் என சொல்ல முடியாது. சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக இந்திய வீரர்கள் எந்தவித இடைவெளியும் இல்லாமல் பயோ-பபூளில் இருந்து வருகின்றனர். கடந்த சில தொடர்களாக தான் வீரர்கள் குடும்பத்தினருடன் பயணம் செய்து வருகின்றனர். இந்தியாவின் இந்த செயல்பாட்டுக்கு உளவியல் ரீதியிலான பாதிப்புகளும் காரணங்களாக இருக்கும். மன ஆரோக்கியத்தை காரணம் சொல்லி இங்கு எந்தவொரு வீரராலும் அவ்வளவு எளிதாக விளையாட்டுக்கு பிரேக் கொடுக்க முடியாது. அதே போல கிரிக்கெட்டின் வெவ்வேறு விதமான பார்மெட்டுக்கு ஏற்ற வகையில் அணியை தேர்வு செய்கிறோமா என்பதையும் தேர்வுக்குழுவினர் பார்க்க வேண்டும். புகழ் கொண்ட வீரர்களை தேர்வு செய்வதை காட்டிலும் அந்தந்த பார்மெட்டுக்கு ஏற்ற வீரர்களை தேர்வு செய்வதும் அவசியமாகும். தற்போது மிடில் ஆர்டரில் சிறப்பாக பேட் செய்யும் வீரர்கள் இல்லை. அதே நேரத்தில் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ஆடுகளத்தையும் பார்க்க வேண்டி உள்ளது. அமீரக மைதானங்கள் ரன் குவிக்க ஏதுவானதாக இல்லை. இருந்தாலும் டி20 கிரிக்கெட்டில் ‘ரிஸ்க்’ எடுக்க வேண்டும். தரையோடு தட்டி ஆடுவதை காட்டிலும் ஆகாயத்தில் பந்தை பறக்க விடும் வீரர்கள் தேவை. ஒரே டைமன்ஷனில் பேட் செய்யக்கூடிய வீரர்கள் சிலர் தற்போதைய அணியில் உள்ளதும் சிக்கலுக்கு காரணம்.  

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் வலுவான அணியை இந்தியாவால் கட்டமைக்க முடியும். அது கோப்பையை வென்று வரும் அணியாக கூட இருக்கலாம். அதற்கான தகுதியும், திறனும் படைத்த வீரர்கள் நம்மிடம் உள்ளனர். அதனை அடுத்ததாக வர உள்ள இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர்கள் செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com