டி20 உலகக் கோப்பை : நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா!

டி20 உலகக் கோப்பை : நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா!
டி20 உலகக் கோப்பை : நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா!

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் விளையாடுகின்றன. இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியை தழுவிய நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. 

கிட்டத்தட்ட இந்த போட்டியை வெர்ச்சுவல் காலிறுதி போட்டி எனவும் சொல்லலாம். ஏனெனில் சூப்பர் 12 சுற்றுக்கான குரூப் 2-வில் இந்தியா - பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இடையே தான் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிப்பதற்கான போட்டி நிலவியதாக பார்க்கப்பட்டது. பாகிஸ்தான் மூன்று வெற்றிகள் பெற்று, அடுத்த சுற்றுக்கு செல்வதை உறுதி செய்துவிட்டது. இப்போது மீதமுள்ள ஒரு இடத்தை பிடிக்கப்போவது இந்தியாவா? நியூசிலாந்தா? என்ற ஊக்கமான போட்டி நிலவுகிறது. இந்த ரேஸில் ஆப்கானிஸ்தான் அணியும் உள்ளது. இருந்தும் செம வெயிட்டான அணிகளான இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்வது தான் இந்த எதிர்பார்ப்பு எகிற காரணம். 

2019 உலகக் கோப்பை மற்றும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்!

2019 உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதி மற்றும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் என கடந்த இரண்டு ஐசிசி தொடர்களில் கோலி தலைமையிலான இந்தியாவை வீழ்த்தியுள்ளது நியூசிலாந்து அணி. இந்த இரண்டு மோதல்களிலும் அணியை வழிநடத்திய கேப்டன்கள் இந்த போட்டியிலும் கேப்டனாக செயல்படுகின்றனர். நியூசிலாந்து அணியின் கிளாஸான ஆட்டத்தினால் இந்தியாவின் கனவு தகர்க்கப்பட்டுள்ளது. இப்போது மூன்றாவது முறையாக இந்த மோதல் நடைபெறுகிறது.

2007 டி20 உலகக் கோப்பை, 2016 டி20 உலகக் கோப்பை என இதற்கு முந்தைய ஐசிசி தொடர்களில் இந்தியாவை வீழ்த்தியுள்ளது நியூசிலாந்து. 2003 50 ஓவர் உலகக் கோப்பையில் கங்குலி தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்தை வீழ்த்தி இருந்தது. 

இந்தியாவுக்கு வெற்றி முக்கியம்!

சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி, நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் - ஸ்காட்லாந்து - நமீபியா என 4 ஆட்டங்களில் விளையாட உள்ளது. இந்த நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியாவால் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைக்க முடியும். கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட அணி இப்போது கட்டாய வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளது. 

ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் ஃபிட்னெஸ், சூரியகுமார் அல்லது இஷான் கிஷனா என நிலவும் மிடில் ஆர்டர் குழப்பம், புவனேஷ்வர் குமாரின் ஃபார்ம் என பல கேள்விகள் இந்தியா மீது வைக்கப்படுகிறது. சிலர் அணி தேர்வு குறித்து கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை கொடுக்கும் வகையில் இந்தியாவின் இன்றைய ஆட்டம் அமைய வேண்டி உள்ளது. 

ஐசிசி தொடர்களில் நியூசிலாந்து அணிக்கு எதிரான கடந்த இரண்டு போட்டிகளில் இந்தியா தோல்வியை தழுவிய முக்கியக் காரணம் ஆடும் லெவனில் செய்த தவறுகள் தான் என சொல்லப்படுகிறது. 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் நான்காவது பேட்ஸ்மேன் பொசிஷன்  மற்றும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியது நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியை தழுவ முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்த முறை அந்த சிக்கலை எல்லாம் சரி செய்து கொண்டு நியூசிலாந்தை இந்தியா ஜாக்கிரதையாக கையாள வேண்டியுள்ளது. அதை செய்து விட்டால் இந்தியாவின் வெற்றியை தடுக்கவும் முடியாது, தவிர்க்கவும் முடியாது. டாஸ் வென்றாலும், இழந்தாலும் இந்தியா வெற்றி பெறும்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com