”தமிழகத்தை தமிழர்தான் ஆளவேண்டும்... முப்பாட்டன் முருகன்”- சீமான் பிறந்த நாள் இன்று!

”தமிழகத்தை தமிழர்தான் ஆளவேண்டும்... முப்பாட்டன் முருகன்”- சீமான் பிறந்த நாள் இன்று!
”தமிழகத்தை தமிழர்தான் ஆளவேண்டும்... முப்பாட்டன் முருகன்”- சீமான் பிறந்த நாள் இன்று!

போட்டியிட தொடங்கிய முதல் தேர்தலில் இருந்து இப்போதுவரை கூட்டணியின்றி தனித்தே களம்காணும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாள் இன்று.

இவரின் மேடைபேச்சுகள் பாசிட்டிவாகவோ அல்லது நெகட்டிவாகவோ எப்போதும் தமிழகத்தின் பேசுபொருளாகவே இருக்கும். அரசியல் அனுபவம், அரசியல் தலைவரின் வாரிசு என்று எந்த பின்புலமுமே இன்றி தனியொருவராக கடந்த பத்து ஆண்டுகளாக அரசியல் களத்தில் சோர்வின்றி நிற்கும் ஆற்றல்தான் சீமானின் பலம்.

2016 ஆம் ஆண்டில் முதன்முதலாக தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 1.1 சதவீத வாக்குகளை பெற்றது, ஆனாலும் விடாமுயற்சியுடன் நின்ற சீமானின் மனஉறுதி 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஓரளவு கைகொடுத்தது. ஆம், 2019 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் 3.9 ஆக உயர்ந்தது, தமிழக அரசியலில் நிச்சயமாக இது குறிப்பிடத்தக்க வாக்குகள்தான்.

2009 ஆம் ஆண்டு ஈழ இனப்படுகொலைக்கு பிறகு, அதனால் பாதிக்கப்பட்ட இளைஞர் பட்டாளத்தின் பெரும்பகுதி சீமானின் பின்னால் திரண்டது. அதன்பின்னர் ஈழப்பிரச்சினையோடு சேர்த்து தமிழக அரசியலிலும் ஆணித்தரமான கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்தார் சீமான். இவர் பேசிய தமிழ்த்தேசிய அரசியல் இவருக்கான ஆதரவுத்தளத்தை தொடர்ந்து விரிவுப்படுத்தியது, தொடர்ந்து இவர் சுற்றுச்சுழல், உயிர்நேயம், முப்பாட்டன் முருகன் என இளைஞர்களை கவரும் பல்வேறு முழக்கங்களையும் முன்வைக்க ஆரம்பித்தார், இதுதான் படிப்படியான சீமானின் வளர்ச்சிக்கு காரணம்.

சீமானின் முதல் முழக்கம் “ தமிழகத்தை தமிழர்தான் ஆளவேண்டும்” என்பது, மாற்றம் வேண்டும் என யோசித்த ஒருதரப்பு இளைஞர்களை சீமானின் பின்னால் அழைத்து சென்றது இந்த முழக்கம்தான். இப்போதுவரையிலும் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை, தேர்தல் 50 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு என்ற இரண்டும் அனைத்து தரப்பாலும் பாராட்டதக்க சீமானின் கொள்கையாக உள்ளது.

இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகளிலேயே முதன்முதலாக 2019 நாடாளுமன்ற தேர்தலில் 50 சதவீத இடங்களில் பெண் வேட்பாளர்களை துணிச்சலுடன் நிறுத்தியவர் சீமான். வரும் 2021 சட்டசபை தேர்தலுக்கும் சரிபாதி பெண் வேட்பாளர்களை நிறுத்துவோம் எனக்கூறி தனித்து களமிறங்கியிருக்கிறார் சீமான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com